புதுசாய் பூத்தவை!

கணக்கு! சிறுகதை

கணக்கு!

காலை பத்துமணி வாக்கில் அந்த சிமெண்ட் கடையில் அத்தனை கூட்டமிருக்கும் என்று நான் நினைத்தும் பார்க்கவில்லை! கடை நண்பருடையதுதான். பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் சிறு கடையாக துவக்கி இரண்டே வருடத்தில்  கொஞ்சம் பெரிய கடையாக உயர்த்தி இருக்கிறார். நாலைந்து நபர்கள் கூட்டி பெருக்க ஓர் பெண்மணி என்று கடையில் பணியில் இருந்தார்கள்.

    நகரில் மட்டுமல்ல கிராமங்களில் கூட எழும்பும் அடுக்குமாடி வீடுகளின் அதிகரிப்பால் அவருக்கு நல்ல வருமானம்தான். “ என்ன ஜகதீசா! காலையிலேயே பிஸியா இருக்க போலிருக்கே! நான் போயிட்டு அப்புறமா வரட்டுமா?” என்றேன்.

   அதெல்லாம் ஒண்ணுமில்லை “ ராமநாதா! இதோ வியாபாரம் முடிஞ்சதும். காலை வேளையிலே கட்டுமான பணிக்கு வருவாங்க இல்லை! அதனால கொஞ்சம் சூடுபிடிச்சிருக்கும் இன்னும் ஒரு அரைமணி நேரம் அப்புறம் சும்மாத்தான் இருப்பேன்!”

      அங்கிருந்த நாற்காலி ஒன்றை இழுத்துப் போட்டு அமர்ந்தேன். சிமெண்ட் மூட்டைகளை குட்டியானை எனப்படும் வண்டிகளில் ஏற்றி அனுப்பிக் கொண்டிருந்தார்கள் பணியாளர்கள். ஜகதீசன் கணக்கு வழக்குகளில் கில்லாடி! கடன் கொடுத்தாலும் அதை திரும்ப பெறுவதில் ஓர் கண்டிப்பு இருக்கும். விற்கும் பொருளும் தரமானது. பணியாளர்களுக்கும் நல்ல சம்பளம் தந்து இருந்ததால் விசுவாசமாக உழைத்தனர்.

     நாமும் ஓய்வு பெற்று வெட்டியாக பொழுதை போக்கிக் கொண்டிருக்கிறோம்!  கொஞ்சமாவது யோசித்து எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. கடையில் கூட்டம் குறைந்தது. லாரிகளில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை இறக்கிய லோட் மேன் ஒருவர் வந்து  “முதலாளி…!  மூட்டையெல்லாம் இறக்கியாச்சு!  கூலி கொடுத்தீங்கன்னா…!”

       “ஏம்பா! நீதான் ஏற்கனவே நிறைய முன்பணம் வாங்கிட்டிருக்கியே! இப்ப ஒண்ணும் இல்லே ..!”

      ” தீபாளி வருது முதலாளி! முன்பணம் கொடுத்ததை அப்புறம் பிடிச்சுக்குங்க! இப்ப கொடுத்துருங்க..! “

      ” எனக்கு மட்டும் தீவாளி இல்லையா? இப்படியே எல்லோருக்கும் கொடுத்துட்டு இருந்தா நான் கடையை இழுத்து மூடிட்டு போவ வேண்டியதுதான். வேணும்னா ஒரு ஐம்பது ரூபா வாங்கிட்டு இடத்தை காலி பண்ணு…!”

       “அவன் சரிங்க முதலாளி.. அப்புறம் உங்க இஷ்டம்” என்றான் தலையை சொரிந்துகொண்டு..   “சரிசரி! இந்தா நூறு… ஏற்கனவே ஆயிரம் வாங்கி இருக்கே.. ஞாபகம் இருக்கா…”

      “இருக்கு முதலாளி! ”அவன் கிளம்பினான்.

     கொஞ்ச நேரம் கழித்து  கடையை கூட்டி பெருக்கும் அஞ்சலை வந்து நின்றாள்.  “ஐயா…! தீபாவளி பண்டிகை! பசங்களுக்கு துணி மணி எடுக்கணும்.. ஸ்கூல் பீஸ் வேற கட்டணும் முன்பணமா ஏதாவது கொடுத்தா நல்லா இருக்கும் “ என்றாள்.

      “சரி முழு சம்பளத்தையும் அட்வான்ஸா கொடுத்திடறேன்! உன் பசங்களுக்கு துணி மணி எடுத்துக்க தனியா ஓர் ஆயிரம் கொடுத்திடறேன் போதுமா?”

      “ நீங்க நல்லா இருப்பீங்க முதலாளி!” அந்த பெண் கை கூப்பினாள்.

 அவள் சென்றதும் கேட்டேன்.  “ஏண்டா ஜகதீசா! கொஞ்ச நேரம் முன்னாடி அந்த லோடு மேனுக்கு ஆயிரம் கணக்கு பார்த்தே… இந்த வேலைக்கார பெண்ணுக்கு உடனே தூக்கிக் கொடுக்கிறே? “

    “இதுல ஒரு கணக்கு இருக்குடா? உனக்கு புரியாது…!”

   “பொண்ணுன்றதாலே இளகிப் போயிருச்சா…!” குதர்க்கமாய் கேட்டேன்.

   “ச்சீச்சீ! வாயை கழுவுடா! அந்த லோடுமேன் மொடாக் குடியன்! தீபாவளிக்குன்னு கேட்டு பணத்தை முழுசும் வாங்கி குடிச்சுருவான்! வீட்டுக்கு பைசா தரமாட்டான். அதனால பணத்தை முழுசா தரலை! மொத்தமா தராவிட்டா சத்தம் போடுவான் வேற கடைக்கு போவான். அதனால அவன் குடிக்கிறதுக்கு மட்டும் பணம் கொடுத்தேன். மீதி பணம் அவன் வீட்டுக்கு போயிரும்.”

   ”இந்த பொண்ணு அப்படி இல்லே! முழு சம்பளம் வாங்கிட்டா இன்னும் கவனமா வேலை செய்வா? தான் படிக்காவிட்டாலும் தன் பிள்ளையை படிக்க வைக்கிறா? அதுக்கு ஏதோ என்னால முடிஞ்ச உதவி! பணம் வாங்கிட்டோமேன்னு நிக்காம வேலைக்கு வருவா ஏமாத்தமாட்டா? இங்க பணம் குடும்பத்துக்கு போவுது! அதனாலே கொடுக்கிறேன்! அங்க குடிக்கு போவுது! அதனால தடுக்கறேன்! அவ்வளவுதான்! ”

   அவரது தெளிவான பதிலில் பிரமித்து நின்றேன் நான்.

(தங்க மங்கை மாத இதழில் பிரசுரமான கதை)

தேன்சிட்டு பொங்கல் மலர்- ஜனவரி 2022

தேன்சிட்டு பொங்கல் மலரை பக்கங்களாக புரட்டி வாசிக்க இங்கே சொடுக்கவும். நன்றி!

https://fliphtml5.com/gtanu/wovz

ஆருத்ரா தரிசனம்!

ஆருத்ரா தரிசனம் 20.12.21 திங்கள் பிறப்பே எடுக்காத ( ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருளுக்கு) சிவபெருமானுக்குஉரிய நட்சத்திரம் #திருவாதிரை என்கிறார்களே எப்படி ?

No photo description available.

தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆர்த்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப் படுகிறது.மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும்

.ராமனுக்கு ஜென்ம நட்சத்திரம் – புனர்பூசம்;கிருஷ்ணனுக்கு – ரோகிணி;முருகனுக்கு – விசாகம்.இவையாவும் இவர்கள் பிறந்த நட்சத்திரங்கள்.ஆனால் பிறப்பே எடுக்காத சிவபெரு மானுக்கு பிறந்த நட்சத்திரம் திருவாதிரை என்கிறார்களே ?

பிறவா யாக்கைப் பெற்றோன் பெரியோன்என்று சங்க இலக்கியமான சிலப்பதிகாரம்சிவ பெருமானைக் குறிக்கிறது.சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனதுபற்றி புராணச் செய்திகள் உள்ளன.

சேந்தனார் ஓர் விளகுவெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஓர் ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தான் உண்டு உணவருந்துவார்ஒரு நாள் அதிகமாக மழைபெய்து விறகுகள் ஈரமாயின அதனால் அன்று அவரால் விறகு விற்க முடியவில்லை.

அதனால் அரிசி வாங்க காசு அவரிடம் இல்லை.எனவே அன்று கேழ்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் தென்படவில்லை. மனம் நொந்த சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பி நடராஜப் பெருமான் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் ஏகினார். சேந்தனார் அகமகிழ்ந்து களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் உண்டதுமல்லாமல் எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார்.

சேந்தனார் வீட்டுக்கு களி யுண்ண நடராஜப் பெருமான் வந்த அந்த தினம்,ஒரு மார்கழி மாத திருவாதிரை நாள் இதை உணர்த்தும் வகையில், இன்றும் ஆதிரை நாளில் தில்லை நடராஜப் பெருமானுக்கு களி படைக்கப் படுகிறது. இதனால் சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆனது

.ஒரு காலத்தில், திரேதாயுகா என்ற பெண் பார்வதி தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள். திரேதாயுகா வுக்குத் திருமணம் நடந்தது. அக்காலத்தில் திருமணமான நான்காவது நாளில்தான் சாந்தி முகூர்த்தம் நடக்கும் ஆனால் திருமணமான மூன்றாவது நாளிலேயே திரேதாயுகாவின் கணவன் இறந்து விட்டான்.திரேதாயுகா அலறித் துடித்து பார்வதிதேவியே உன் பக்தையான என்னை இப்படி சோதிக்கலாமா, உன்னை இவ்வளவு காலம் வணங்கி என்ன பயன் என்று கூறிக் கதறி அழுதாள்.அப்போது கயிலாயத்தில் சிவன் அருகில் அமர்ந்திருந்த பார்வதி ,திரேதாயுகாவின் அலறலைக் கேட்டு அவள் கணவனுக்கு உயிர்ப் பிச்சையளிக்க சபதம் செய்தாள்.

அவளது சபதத்தைக் கேட்டு அதிர்ந்துபோன சிவன் உடனே எமலோகத்தை ஒரு பார்வை பார்த்தார். இதைக் கண்டு பதறிப்போன எமன் திரேதாயுகாவின் கணவ னுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார்.அதன்பின் பார்வதியும் பரமசிவனும் திரேதாயுகா வுக்கும் அவள் கணவனுக்கும் தரிசனகாட்சி கொடுத்து ஆசீர்வதித்தார்கள் இந்த நிகழ்ச்சி ஒரு மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில் நடந்தது.

சேந்தனாருக்கும் , திரேதாயுகாவுக்கும் நேரில் தோன்றி தரிசனம் தந்த அந்த திருவாதிரை நட்சத்திர நாளையே சிவபெருமானாரின் நட்சத்திரமாக அதாவது ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்படுகிறது.சிவபெருமான் நெருப்பு உருவமாக தன்னை வெளிப்படுத்திக் காட்டியது சிவராத்திரி நன்னாள்.

சுவாமி தான் இப்பூமியில் ஆவிர்பரித்து நின்ற (தோற்றுவித்த) நாள் ஆருத்ரா நன்னாள்.சிவராத்திரியன்று அவரை வழிபட்டால் பலன். ஆருத்ராவன்று தரிசித்தாலே பலன் ஆகும்.நமச்சிவாய…

நன்றி: பாலஜோதிடம், முகநூல் பதிவு,

பட்டுச்சேலை பராமரிப்பு முறைகள்!

கடையில் இருந்து பட்டுச்சேலையை எடுத்து வந்ததும், இது அசல் பட்டு சேலைதானா? என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்பட்டு விடும். அதை எளிதான முறையில்**கண்டுபிடிக்க ஒரே ஒரு வழிதான் உள்ளது.

100க்கு 80 புடவைகள் அசல் காஞ்சிபுரம் பட்டுப்புட‍வைகளே அல்ல..! -  AanthaiReporter.Com | Tamil Multimedia News Web

அதாவது சேலையின் ஓரத்தில் தொங்கும் நூலை வெட்டி அதில் தீ வைத்தால், அது நின்று எரியும். அதுதான் அசல்*பட்டு.*ஆனால் கலவையான பட்டு சேலையின் நூலை வெட்டி அதில் தீ வைக்கும்போது, அதன் நூல், தலை முடி எரிவதைபோன்று சுருங்கிக்கொண்டே**செல்லும்.

பொதுவாக சிலர் பட்டு சேலை என்றாலே அதிக எடை கொண்டதாக இருக்கும் என்று எண்ணுகிறார்கள். தற்போது நவீன விசைத்தறிகள் மூலம்**சேலை நெய்யப்படுவதால், அதன் எடை குறைவு.

பட்டுச்சேலை இவற்றின் காரணமாகவே விரைவில் பழுதடைந்து விடுகின்றன!... - Tamil  Beauty Tips

அத்துடன் டிசைன்கள் அதிகம். அசல் பட்டு சேலையின் ஆயுட்காலம் 100 ஆண்டுகளுக்கும் அதிகமாக*இருக்கும்.*பட்டு சேலையை மற்ற துணிகள் போல துவைத்துவிடக் கூடாது. பட்டு சேலையில் அழுக்கு மற்றும் கரையை எடுக்கக் கூடிய திரவங்கள் கிடைக்கிறது. அதை**வாங்கி பயன்படுத்தலாம்

. சிலர் தெரியாமல் பட்டு சேலையை கையாளுவதால் அதன் பளபளப்பு குறைந்துவிடும்.**அத்துடன் குறைந்தது 6 மாதத்துக்கு ஒருமுறை வெயிலில் ஒருமணி நேரம் காய வைக்க வேண்டும்.

மாதத்துக்கு ஒருமுறை சேலையின் மடிப்பை மாற்றி**மடிக்க வேண்டும். சிலர் பட்டு சேலையை உடுத்தி விட்டு கழற்றியதும், அதை மடித்து வைத்து விடுவார்கள்

100க்கு 80 புடவைகள் அசல் காஞ்சிபுரம் பட்டுப்புட‍வைகளே அல்ல..! -  AanthaiReporter.Com | Tamil Multimedia News Web

. அவ்வாறு செய்யக்கூடாது.**உடலில் உள்ள வியர்வை அதன் மீது பட்டு இருக்கும். அதை காயவைத்துவிட்டு வைக்கும்போது எந்த பாதிப்பும் வராது.

குறிப்பாக பட்டு சேலையை சரியான**முறையில் பராமரித்து வந்தால் பல ஆண்டுகள் வரை அதன் பளபளப்பும், மென்மையும் போகாது.*

தொகுப்பு: ஈரோடு அருண்

உண்மையில் நடந்தது என்ன?? விராட்கோலிக்கு பிசிசிஐ பதிலடி!!

இந்திய அணியில் லிமிடெட் ஓவர்கள் கேப்டனாக இருந்து வந்த விராட் கோலியின் கேப்டன் பொறுப்பு விடுவிக்கப்பட்டது. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் விராட் கோலி ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பிறகு கடும் சர்ச்சைகள் நிலவி வருகின்றன.

பிசிசிஐ அவரை நடத்திய விதம் மற்றும் உரிய முறையில் அவருக்கு அறிவிப்புகள் கொடுக்கவில்லை என்று பலரும் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். இந்த குற்றச்சாட்டுகள் உண்மைதான் என்றவாறு சமீபத்திய பேட்டியில் விராட்கோலி தெரிவித்திருந்தார். “கேப்டன் பொறுப்பு மாற்றம் குறித்து என்னிடம் எந்தவித ஆலோசனையும் கேட்கவில்லை.

நேரடியாக முடிவுகளை மட்டும் தெரிவித்தனர். அதே போல் டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து யாரும் என்னை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று கூறவில்லை. கூறினேன் என சொல்வது முற்றிலும் தவறானது. உங்களை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டோம் என்றார்கள். அதற்கு நானும் சரி என்று கூறிவிட்டேன்.” என்றார். 

விராட் கோலியின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள பிசிசிஐ தரப்பு அதிகாரிகள் சிலர், “விராட் கோலிக்கு எங்களது திட்டம் முன்னரே தெரியும். லிமிடெட் ஓவர் போட்டிகளில் இரண்டு கேப்டன்கள் இருந்தால் சரிவராது என்று பலமுறை அவருடன் தெரிவித்துள்ளோம். டி20 போட்டிகளில் ராஜினாமா செய்தபோது அவர் இதைப் பற்றி சிந்தித்திருப்பார்.

ஆகையால் ஒருநாள் போட்டிகளின்  கேப்டன் பொறுப்பில் இருந்து அவரே முன்வந்து விலகுவார் என்று எதிர்பார்த்தோம். செய்யவில்லை. ஆதலால் நாங்கள் அந்த முடிவை எடுக்க நேரிட்டது.” என்றனர். விராட் கோலி தனது பேட்டியில், “பிசிசிஐ எடுக்கும் முடிவிற்கு நான் கட்டுப்படுகிறேன். அதேநேரம் இந்திய அணிக்காகவும் என்னை நான் அர்ப்பணிக்கிறேன்.

இப்போதும் இருக்கிறேன் இனியும் இருப்பேன். எனவே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை யாரும் தெரிவிக்க வேண்டாம். ஒருநாள் போட்டிகளில் நான் எனது சொந்த காரணங்களுக்காக விளையாடவில்லை என்று கூறுவது தவறானது. அப்படி ஒரு முடிவில் நான் இருந்தால், வெளிப்படையாக நானே தெரிவித்து இருப்பேன். இதுபோன்ற வதந்திகளுக்கு இடம் கொடுத்திருக்கமாட்டேன். எனவே ஆதாரமற்ற தகவல்களை பரப்புவது தவறு என்று நினைக்கிறேன்.” என்றார்.

நன்றி:https://tamil.crickopedia.com/

உறங்காத உண்மைகள்! சிறுகதை

உறங்காத உண்மைகள்!

பொன்னேரியின் பஜார் வீதியின் இறுதியில் அமைந்திருந்த அந்த மேன்சனில் பரபரப்புக் கூடியிருந்தது. காரணம் அங்கு நிகழ்ந்துவிட்ட ஓர் மரணம். வாசலில் கூடியிருந்த கூட்டத்தை விலக்கிக் கொண்டு போலீஸ் உள்ளே நுழைந்தது.

    மேன்சனின் நிர்வாகி தனபால் முன்னே வந்து,  ”இன்ஸ்பெக்டர் சார்! நான் தான் இந்த மேன்சன் நிர்வாகி! உங்களுக்கு போன் பண்ணது நான் தான்!” என்றார்.

     மெலிந்த தேகம் கண்களில் பவர் கண்ணாடி முன் வழுக்கையும் பற்களில் வெற்றிலைக்கறையும் படிந்திருந்த அந்த மனிதரை உற்று நோக்கிய இன்ஸ்பெக்டர் பரசுராம்,” நீ  நிர்வாகின்னா ஓனர் யாருய்யா?” என்று ஒருமையில் மரியாதையைக் கைவிட்டார். பதவி தந்த அகங்காரம் அது.

  ”ஓனர் சென்னையிலே இருக்காருங்க!  லஷ்மி மில்ஸ் லஷ்மிநாராயணன் கேள்விப்பட்டிருப்பீங்களே! அவருதான் இந்த மேன்சன். கிட்ட்த்ட்ட ஒரு இருபது வருஷமா நான் தான் நிர்வாகம் பண்ணிக்கிட்டு இருக்கேங்க!”

  ” ஓ… கொலை எந்த ரூம்லயா நடந்திருக்கு!”

  ”பர்ஸ்ட் ப்ளோர் 17ம் நம்பர் ரூமுங்க! செத்துப் போனது ரிப்போர்ட்டர் குமாருங்க!”

   ” ரிப்போர்ட்டரா? எந்த பத்திரிக்கையிலா எழுதறான்? ஏதாவது முன் விரோதம் இருக்குமோ?”

    ”அப்படி பெரிய ரிப்போர்ட்டர் ஒண்ணும் இல்ல சார் அவரு! லோக்கல் பத்திரிக்கையிலே எழுதுவாரு! அப்பப்போ ப்ரிலான்ஸா சில பத்திரிகைகளுக்கு எழுதிட்டிருந்தாரு..”

  ”சரி வாங்க போய் பார்ப்போம்.”

  கொலை நடந்த 17ம் அறை எண் திறந்து கிடக்க வாசல் ஓரம் மூக்கில் ரத்தம் ஒழுக கவிழ்ந்து விழுந்து இறந்து கிடந்தான் குமார். ஒருவித கவுச்சி வாசம் ரத்தத்தில் இருந்து வீச மூக்கைப் பொத்திக்கொண்ட  இன்ஸ்பெக்டர்  உடன் வந்த எஸ்.ஐ யிடம் ”சீன் ஆப் க்ரைம் நோட் பண்ணுங்க! பாரன்சிக் ஆளுங்களை வரச்சொல்லிருங்க. அப்புறம் இவரு இறந்து கிடந்ததை யார் முதலில் பார்த்தது?” என்று கேட்டார்.

    அதுவரை ஓரமாக நின்ற ஓர் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி முன்னே வந்து  ”ஐயா, நான் தானுங்க முதல்லே பார்த்தேன்.” என்றார்.

     ”நீ யாரும்மா?”

  ”இந்த மேன்சன்லே பெருக்கி துடைக்கிற வேலை செய்யறேனுங்க!”

  ”ஓ.. ஸ்விப்பரா..?  சரி என்ன நடந்தது சொல்லு..!”

”காலையிலே வழக்கம் போல ஒவ்வொரு ரூமா கூட்டி பெருக்கிட்டு வருவேனுங்க! எல்லா ரூமும் சார்த்தியிருக்கும் கதவைத் தட்டி எழுப்பி உள்ளே போய் சுத்தம் பண்ணிட்டு வருவேணுங்க! அப்படி வரும்போது இந்த ரூம் கதவு லேசா திறந்து இருந்துச்சுங்க கதவை தள்ளி திறந்த நான் பயந்து போயிட்டேனுங்க!”

     ”ஏம்மா நீ என்ன  கொயம்புத்தூரா? நிமிஷத்துக்கு மூணுவாட்டி “இங்க” போடுற?”

     ”ஆமாமுங்க ஐயா!”

”சரியாப் போச்சு போ! அப்புறம்?”

”அப்புறமுங்க! இந்த குமார் தம்பி கவுந்தடிச்சு விழுந்து கிடந்துதுங்க! சுத்தியிலும் ரத்தம்! ஒரே பயமா போயிருச்சுங்க! “வீல்”னு அலறி அடிச்சுக்கிட்டு வந்து மேனேஜர்கிட்டே வந்து சொல்லிட்டேனுங்க! அவரும் வந்து பார்த்துட்டு  உங்களுக்கு போன் பண்ணிட்டாருங்க!”

  ”ம்.. நீ உள்ளே நுழைஞ்சப்ப உள்ளே புதுசா யாரையாவது பார்த்தியா?”

”யாரும் இல்லேங்க! ரூமுக்குள்ள இவரு மட்டும்தான் இறந்து கிடந்தாரு.”.

”இவர்கூட தங்கியிருக்கிற ரூம் மேட் யாரும் இல்லையா?”

   ”முரளின்னு ஒருத்தன் தங்கியிருக்கான்! எண்ணூர் ப்ளாண்ட்ல வேலை செய்யறான். நைட் ஷிப்ட் போயிருக்கான். இன்னும் கொஞ்சம் நேரத்துலே வந்திருவான்” என்றார் தனபால்.

   ”கிழே விழுந்து இறந்திருக்கான். மூக்குவழியா ரத்தம் வந்திருக்கு! உடம்புலே எந்த காயமும் இல்லே! நெத்தியிலேயும் லேசான சிராய்ப்புதான் இருக்கு! இது கொலையா இல்லே நேச்சுரல் டெத்தா குழப்பமா இருக்கே?  இவனுக்கு ஆகாதவங்க யாராவது கொன்னிருந்தாலும் ஒரு காயமும் இல்லையே!”

 ”பக்கத்து ரூம்லே யார் தங்கியிருக்காங்க விசாரிச்சிட்டீங்களா கணபதி?” என்று எஸ்.ஐ நோக்கி கேட்டார் பரசுராம்.

   ”ரெண்டு இந்திக் கார பசங்க பக்கத்துலே இருக்க ஸ்டீல் பேக்டரிலே வேலை செய்யறானுங்க அவனுங்க 18 ல தங்கியிருக்காங்க சார்..”

”அப்போ 16 லே”

  ”அந்த ரூம்லே யாரும் இல்லீங்க சார். 15லே போஸ்ட் ஆபீஸ்லே ரன்னர் வேலை பாக்கிறவர் தங்கி இருக்கார். வயசான மனுசன்.” எஸ்.ஐ சொல்லி முடிக்கவும் அவர்கள் முன்னே வந்து நின்றார்கள்.

அவர்களைப் பார்த்து ” ராத்திரி இந்த ரூம்லே இருந்து ஏதாவது சத்தம் கேட்டுதா?” என்றார் எஸ்.ஐ.

 ”ராத்திரி பதினோரு மணி வரைக்கும் அந்த ரூம்லே லைட் எரிஞ்சுகிட்டு இருந்தது.. காமன் பாத் ரூம் இந்த லைன்லே கடைசியிலே இருக்கு! எனக்கு சுகர் ப்ராப்ளம் பாத்ரூம் போக அடிக்கடி எழுந்து போவேன். பதினோரு மணிக்கு நான் போகும்போது இந்த ரூம்லே லைட் எரிஞ்சுகிட்டு இருந்தது. ஜன்னல் திறந்து இருந்தது. இவர் ரூம்லே உட்கார்ந்து கம்ப்யூட்டர்லே ஏதோ டைப் பண்ணிக்கிட்டு இருந்தாரு ஜன்னல் திறந்திருந்ததாலே.நான் இத பார்க்க முடிஞ்சது” என்றார் 15ம் அறைக்காரர்.

   ”உங்க பேரு என்ன?”

”வைத்திலிங்கம்”

”மிஸ்டர் வைத்திலிங்கம், பதினோரு மணிக்கு அப்புறம் நீங்க பாத்ரூம் போக எழுந்திருக்கலையா?”

 ”ரெண்டு மணி வாக்கில் எழுந்தேன் சார்! ”

”அப்போ நீங்க எதுவும் இந்த ரூம்லே பார்க்கலையா?”

 ”இல்லே சார்! கதவு ஜன்னல் எல்லாம் அடைச்சிருந்தது. உள்ளே சைலண்டா இருந்தது.”

”ஓக்கே நீங்க போகலாம்! விசாரணைக்கு கூப்பிடும்போது வரவேண்டியிருக்கும்!”

”தேங்க்ஸ் சார்! நான் டூட்டிக்கு போகணும்! இது என் போன் நெம்பர் தேவைப்பட்டா கூப்பிடுங்க!” என்று வாலண்டியராக நம்பரைக் கொடுத்துவிட்டு நகர்ந்தார் வைத்திலிங்கம்.

 “இந்திக்கார பசங்க என்னய்யா சொல்றானுங்க?”

  ”அவனுங்க போதை பார்ட்டீங்க சார்! நேத்து சீக்கிரமே தண்ணி அடிச்சிட்டு தூங்கிட்டானுங்களாம்! காலையிலே சத்தம் கேட்டுத்தான் விழிச்சானுங்களாம்! ரூம்ல செக் பண்ணிட்டேன் ஒரே சரக்கு பாட்டிலும் சிகரெட் துண்டுங்களா இருக்குது!”

 ”ரொம்ப சிக்கலா இருக்குதே…”

இதற்குள் பாரன்சிக் ஆட்கள் வந்து தங்கள் பணிகளை செய்ய ஆரம்பித்தார்கள் . ஆம்புலன்ஸ் வந்து உடலை ஏற்றிச் சென்றது.

  ”யோவ் தனபாலு!  இவன் ரூம் மேட் முரளி வந்தான்னா உடனே ஸ்டேஷணுக்கு வரச்சொல்லி அனுப்பி வை! என்று சொல்லியவர் ரூமை பூட்டி சாவியை அவரிடம் தந்து. கேஸ் முடியறவரைக்கும் இந்த ரூமை யாரும் திறக்க கூடாது. யாருக்கும் வாடகை விடலாம்னு நினைக்காதே! அப்புறம் நான் கூப்பிடறப்ப ஸ்டேசனுக்கு வரனும் தெரியுதா?” என்று மிரட்டலாக கூறிவிட்டு ஜீப்பில் ஏறிப் போக தனபால் தளர்வாய் இருக்கையில் சாய்ந்தார்.

  ”என்னய்யா? கேஸ் ஒரே இழுவையா இருக்கு! அந்த முரளி ஹார்ம்லெஸ்ஸா இருக்கான். நேத்து நைட் எட்டு மணிக்கே ட்யுட்டிக்கு கிளம்பி போயிருக்கான். அவன் போனதுக்கு அப்புறம்தான் குமார் ரூமூக்கே வந்திருக்கான். அவனை மிரட்டிப் பார்த்தாச்சு! அவனுக்கும் குமாருக்கும் எந்த கைகலப்போ சண்டையோ கிடையாது. அவன் வழி வேற என் வழி வேற.. வேற வழி இல்லாம இவன் கூட தங்க வேண்டி வந்துருச்சுன்னு சொல்றான்.”

    ”அதான் சார் குழப்பமா இருக்கு.”

”ஆமாம்! குமார் பத்தி விசாரிக்கச் சொன்னேனே! என்ன ஆச்சு?”

  ”குமார் கொஞ்சம் வில்லங்கமான ஆளுதான்னு விசாரணையிலே தெரிய வருது சார்! ஒரு பெரிய பத்திரிகையிலே ரிப்போர்ட்டரா இருந்து  நியுஸ் போட பணம் வசூல் பண்ணது தெரிஞ்சு வேலையை விட்டு நிறுத்திட்டு இருக்காங்க! அதுக்கப்புறம் லோக்கல் பத்திரிகைகளுக்கு செய்தி சேகரிச்சு கொடுக்கிறதோட விளம்பரமும் கலெக்ட் பண்ணிக் கொடுத்திருக்கான். அப்படி ஆட் கொடுக்க மறுத்த சில கம்பெனிகள்லே நீங்க ஆட் கொடுக்கலைன்னா பத்திரிக்கையிலே உங்களைப் பத்தி தப்பா எழுதுவேன்னு மிரட்டி பணம் பறிச்சிருக்கான். கோயில் விழா அரசியல் கட்சி கூட்டம், அன்னதானம் இப்படி லோக்கல்லே எது நடந்தாலும் அதை பத்திரிக்கையிலே போடறேன்னு சொல்லி காசு பார்த்திருக்கான். செயின் ஸ்மோக்கர் ஆல்க்ஹாலிக்கும் கூட.”

    ”அப்போ அவன் கேரக்டர் சரியில்லை! அப்போ எதிரிங்க நிறைய பேர் இருப்பாங்களே!”

  ”மே..பி.. ஆனா அவங்க அவனை கொலை செய்யற அளவுக்கு போவாங்கன்னு சொல்ல முடியாது. பாரன்சிக் ரிப்போர்ட் வந்தா ஓரளவுக்கு  உண்மை தெரியும் சார்.”

   ”பி,எம் நம்ம ஜி.எச் சிலேதானே நடக்குது டாக்டர் பரிமளாதானே சீப் டாக்டர்”.

  ”ஆமா சார்!”

பரசுராம் தன் செல்போனில் டாக்டர் பரிமளாவுக்கு டயல் செய்தார். இரண்டாவது ரிங்கில் போன் எடுக்கப் பட்டது.” டாக்டர் நான் இன்ஸ்பெக்டர் பரசுராம் பேசறேன். காலையிலே ஒரு பாடி அனுப்பினோமே குமார்னு ஒரு ரிப்போர்ட்டர் அந்த பாடியோட பி.எம் முடிஞ்சுதா? எதாவது சொல்லும்படி அப்நார்மல் நியுஸ் இருக்கா?”

    ”அது அப்பவே முடிஞ்சிருச்சு சார்! நீங்க நினைக்கிறாமாதிரி அது கொலை இல்லை சார். நேச்சுரல் டெத் தான். பீ.பி அதிகமாகி மூளைக்குப் போகிற நரம்புகளிலே பிரஷர் அதிகமாகி வெடிச்சிருக்கு மூக்கு வழியா ரத்தம் வெளியேறி இறந்து போயிருக்கார். வேற எந்த க்ளுவும் இல்லே! கொலை செய்யப்பட்டதற்கான வாய்ப்பே இல்லை!”

  ”டைம் ஆப் டெத் சொல்ல முடியுமா?”

   ”எக்ஸாக்டா சொல்ல முடியாது! நரம்பு வெடிச்சு இந்த ரத்தம் கொட்டி நினைவுகளை இழந்து இறந்திருக்கார். எப்படியும் விடிகாலை மூணு மணிக்கு மேல இறந்திருக்கணும். எங்கிட்டே பாடி வந்த  டைம் வச்சு இதைச் சொல்றேன்.”

    ”அப்போ நேச்சுரல் டெத் தான்!”

 “ஆமாம் சார்!  ஒக்கே தேங்க்ஸ் டாக்டர்.”

 ”தலைவலி ஒழிஞ்சுதுய்யா! அது நேச்சுரல் டெத் தானாம் ஃபைலை க்ளோஸ் பண்ணிட்டு போயிட்டே இருக்கலாம்! தீபாவளி அதுவுமா தலைவலி இல்லாம போயிருச்சு! ஆமாம் அந்த குமார் பேமிலிக்கு இன்ஃபார்ம் பண்ணச் சொன்னேனே பண்ணிட்டியா? இன்னும் யாரும் வரவே இல்லையே!”

  ”இந்த குமார் மதுரைக் காரன் சார்! அப்பா அம்மா இறந்துட்டாங்க! கல்யாணம் ஆகலே! ஒரே ஒரு அண்ணன். அவருக்குத் தகவல் அனுப்பி இருக்கோம். கிளம்பி வருவதா சொல்லியிருக்கார்.”

 ”சரி அவர் வந்தா பாடியை கொடுத்து அனுப்பிட்டு கேஸை க்ளோஸ் பண்ணிடலாம்.”

      அப்போது.. அங்கே அந்த ஸ்விப்பர் பெண்மணி வந்து நின்றாள்.

”என்னம்மா! நீ அந்த மேன்சனோட ஸ்விப்பர்தானே! என்ன விஷயம்மா!”

  ”சார்! நீங்க என்னை அரெஸ்ட் பண்ணணோங்க!”

   ”எதுக்கும்மா?”

”அந்த குமாரை கொலை பண்ணது நான் தானுங்க!”

 “என்னம்மா சொல்றே?”

”ஆமாம் சார்! அந்த பொறுக்கிய நான் தானுங்க கொன்னுப் புட்டேன்..!”

 இன்ஸ்பெக்டர் புருவம் உயர்த்தினார்..

  ”இது என்ன புதுக்கதையா இருக்கே!”

”ஏம்மா! உனக்கு பைத்தியம் ஏதும் பிடிச்சிருக்கா! அந்த குமார் தானா செத்துப் போயிருக்கான்! பி,பி அதிகமாகி ரத்தக்குழாய் வெடிச்சு ரத்தம் அதிகமா வெளியேறி செத்துப் போயிருக்கான்”.

   ”இல்லீங்கோ! நாந்தான் அவனை கொன்னுப்புட்டேனுங்க! பாவிப்பய! அவன் வாழத் தகுதியில்லாதவனுங்கோ! குப்பை! அதான் கூட்டி பெருக்கிட்டேனுங்க!”

      ”விவரமா சொல்லும்மா! ஒண்ணுமே புரியலை!”

”அந்தக் குமார் பய வில்லங்கமானவனுங்க! ரிப்போர்ட்டர்னு சொல்லிக்கிட்டு காசு பிடுங்கிட்டு இருந்தான். அது கிடக்கட்டும். ஆனா அவன் பண்ண சில காரியங்க என்னை கோபப்படுத்திருச்சுங்க!  பக்கத்துலே ஒரு ஸ்கூல் இருக்குதுங்க! அதுல பணக்கார புள்ளைங்களா படிக்குதுங்க! அதுலே சில புள்ளைங்க கூட படிக்கிற பசங்களோட சேர்ந்து சுத்துங்க! அறியாத வயசு! தப்புன்னு தெரிஞ்சாலும் சிலதை பண்ணுங்க!  அப்படி அதுங்க சுத்தும்போது அதுங்களுக்குத் தெரியாம பாலோ பண்ணி வீடியோ எடுப்பாணுங்க இந்த குமாரு பய..

   அந்த வீடியோவைக் காட்டிப்  அந்த பசங்களை பயமுறுத்தி பணம் பறிப்பானுங்க! அதோட விட்டாத்தானே… சில பொண்ணுங்களை தன்னோட ஆசைக்கு பலியாக்கிட்டாங்க!”

   ”இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?”

”நான் இந்த மேன்சனை மட்டும் கூட்டிப் பெருக்கிறதுல்லேங்க! சில வீடுங்கள்ளேயும் வீட்டு வேலைச் செய்யறேன். அப்படி ஒரு வீட்டுலே ஒரு பொண்ணுதான் இந்த விவரம் சொல்லுச்சு! ரெண்டு மூணு நாளா அந்த பொண்ணு ரொம்ப கவலையோட சோர்ந்து போயி இருந்த்தை பார்த்து நானா துறுவித் துறுவி விசாரிச்சேன். அந்த பொண்ணு முதல்லே சொல்ல்லை! அப்புறமா அழுதுகிட்டே விவரம் சொல்லுச்சு! அந்தப் பொண்ணு ஒரு பையனை கிஸ் அடிக்கிற போட்டோ ஒண்ணை எடுத்து வச்சிக்கிட்டு அவ அப்பாகிட்டே சொல்லிருவேன்னு நிறைய பணம் கேட்டிருக்கான். இதுவும் கையிலே இருந்த பணத்தை எல்லாம் கொடுத்திருக்கு அத்தனையும் வாங்கிகிட்டு அந்தப் பொண்ணை படுக்கைக்கு கூப்பிட்டிருக்கான். நேத்துதான் லாஸ்ட் வார்னிங் கொடுத்திருக்கான்.”

  ”அந்தப் பொண்ணை மட்டுமில்லே  பல பொண்ணுங்களை இப்படி மிரட்டி இருக்கான். இந்த குப்பை பய இருக்க கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். ஏன்னா? நானும் இதே மாதிரி ஒரு சம்பவத்துலே பாதிக்கப் பட்டு இருக்கேன். என் பொண்ணு ஒருத்தியை இழந்திருக்கேன். அது மாதிரி யாரையும் இழக்கக் கூடாதுன்னு அவனை கொலை செய்ய முடிவெடுத்தேன்”.

”நான் ஒரு  கெமிக்கல் கம்பெனியிலும் வேலைப் பார்க்கிறேனுங்க. அங்கே இருந்து நைசா கொஞ்சம் பொட்டாசியம் சயனைட் திருடிகிட்டு வந்துட்டேனுங்க. அதை குமார் குடிக்கிற விஸ்கி பாட்டில்லே கலந்துடறதான் திட்டம். ”

  ”நேத்து சாயங்காலம் கூட்டிப் பெருக்க வரும்போது குமார் ப்ரிட்ஜ்லே வச்சிருந்த விஸ்கியிலே கொஞ்சம் சயனைட் தூளை போட்டுட்டேனுங்க…!”

”அதைக்குடிச்ச குமார் இறந்து போயிருக்கணுங்க! காலையிலே அவன் ரத்தம் கக்கி செத்துப் போனதை பார்த்த்தும் அப்படி ஒரு சந்தோஷமுங்க! அத்தனையும் அடக்கிக்கிட்டு  இருந்தேனுங்க! ஆனா மனசாட்சின்னு ஒண்ணு இருக்குதே! அது என்னை தூங்க விடலைங்க! என்னை கைது பண்ணுங்க!”

   ”ஆனா பி.எம் ரிப்போர்ட்ல சயனைட் கலந்திருக்கிறதா எந்த தகவலும் இல்லையே டாக்டர் பரிமளா பொய் சொல்ல மாட்டாங்களே!”

      ”ஒரு நன்மை நடக்கணும்னா பொய் சொன்னாலும் தப்பில்லேன்னு வள்ளுவரே சொல்லியிருக்காருங்க! வள்ளுவரே அப்படி சொல்லியிருக்கும்போது பரிமளா சொல்ல மாட்டாங்களா?”

    ”என்ன சொல்ல வர்றே?”

   ”என்கிட்டே குமார் ப்ளாக் மெயில் பண்றதா சொல்லி அழுதப் பொண்ணு யாரு தெரியுங்களா?”

     ”யாரு…?”

  ”டாக்டர் பரிமளாவோட பொண்ணுதானுங்க…!”

  ”ஓ மைகாட்…!”

 “என்னை கைது பண்ணுங்க இன்ஸ்பெக்டர்…”

”உன் பேரு என்னம்மா? இதுவரைக்கும் கேக்கவே இல்லை! கதையே முடியப் போவுது!”

  ”மாசாணியம்மா சார்!”

 ” மாசாணியம்மா! இது கொங்கு நாட்டு தெய்வப்பெயர்தானே!”

  ”ஆமா சார்! ”

   ”ஒரு குற்றத்துக்கு தெய்வம் தண்டனை தந்தா  அதுக்கு மனுசங்க என்ன பண்ண முடியும்? தெய்வம் தந்த நீதியை ஏத்துக்கத்தானே வேண்டும்.”

  ” ஆமாமுங்க!”

   ”நீயும் ஒரு நீதி தேவதைதான்! அந்த குமார் உயிரோட இருக்க வேண்டியவன் இல்லே! சாக வேண்டியவன் தான்!  நீ செஞ்சதுதான் சரி! கடவுள் உன் ரூபத்திலே அவனுக்குத் தண்டனை கொடுத்திருக்கார்.”

   ”நீ செஞ்ச குற்றத்தை நிரூபிக்க எந்த ஆதாரமும் எங்க கிட்டே இல்லை! இதை இதோட மறந்துடு! நாங்களும் மறந்திடறோம்! உங்களை கை எடுத்து கும்பிட்த்தான் தோணுது கைது பண்ணத் தெரியலை!… ”

  காலையில் தன்னை ஸ்விப்பரா என்று இழிவாக பார்த்த இன்ஸ்பெக்டரின் கண்களில் ஈரம் கசிவதைப் பார்த்தபடி வெளியேறினாள் மாசானியம்மா!

மன்னித்துவிடு மணிமொழி!

மன்னித்துவிடு மணிமொழி!

அவன் அப்படி செய்வான் என்று கொஞ்சம் கூட மணிமொழி நினைத்துக்கூட பார்க்கவில்லை! பரபரவென உள்ளே வந்த்தும் யார் இருக்கிறார்கள் என்ன ஏது என்று ஒன்றைக்கூட பார்க்கவில்லை! என்னை மன்னித்துவிடு மணிமொழி! என்று சாஷ்டாங்கமாக அவள் காலில் விழுந்துவிட்டான்.

  அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டுவரவே ஒருநிமிஷம் ஆகிவிட்ட்து மணிமொழிக்கு. ஆனாலும் சுதாரித்துக் கொண்டாள். “என்ன ..என்னங்க இது! முதல்லே எழுந்திருங்க!” என்றாள்.

பக்கத்து அறையில் அவனது மாமனாரும் மாமியாரும் ஏதோ குசுகுசுவென பேசிக்கொள்வது காதில் விழுந்தது. அதை சிறிதும் லட்சியம் செய்யாமல், ”மணிமொழி முதல்லே நீ என்னை மன்னிச்சேன்னு ஒரு வார்த்தைச் சொல்லு! அப்போதான் எழுந்திருப்பேன்!” என்றான் மகேஷ். மணிமொழியின் கணவன்.

  “உங்களை எதுக்கு மன்னிக்கனும்?” என் பேர் எல்லாம் இன்னும் உங்களுக்கு ஞாபகம் இருக்கா? முதல்லே எழுந்திருங்க! ஏதோ சி எம் கால்லே விழற அமைச்சருங்க மாதிரி என் கால்லே விழுந்திருக்கீங்க என்றாள் மணிமொழி நக்கலாக.

 தடாலடியாக விழுந்தவன் தடாலடியாக எழுந்தான். இ..இந்த நக்கல்தான்  நம்மளை பிரிச்சது… அது மட்டும்..

  அது மட்டும் இல்லேன்னா! என்னை கட்டிக்கிட்டு அவளை வைச்சிக்கிட்டு இருக்க மாட்டீங்களா?

’பளார்” என்று கன்னத்தில் அடிவாங்கியது போல உணர்ந்தான்.

”மணிமொழி! எல்லாத்தையும் மறந்திருவோம்! என்னை மன்னிச்சிடு! நான் அவளை மறந்திட்டேன். இனிமே உன்னோடத்தான் வாழப் போறேன்!”

   ”அதுக்கு நான் ஒத்துக்கணுமே மிஸ்டர் மகேஷ்!”

”ப்ளீஸ் மணிமொழி! நான் திருந்திட்டேன்! எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடு!”

“நிறைய சந்தர்ப்பங்களை உங்களுக்கு கொடுத்து பார்த்திட்டேன்! இனியும் அப்படிக் கொடுத்து ஏமாற நான் தயாரா இல்லை! இப்ப நீங்க எதுக்கு வந்திருக்கீங்க டைரக்டா நீங்க சொல்றீங்களா? இல்லை நானே சொல்லட்டுமா?

மணிமொழியின் இந்த அதிரடியான பேச்சால் அதிர்ந்தான் மகேஷ். ”அ.. அது வந்து..”

 ”போலீஸ்லே உங்க மேல கொடுத்த கம்ப்ளைண்ட வாபஸ் வாங்கனும் அதைத்தானே சொல்ல வர்றீங்க?

அவன் முகம் பேஸ்த் அடித்தாற்போல மாறியது.. அ.. அதேதான்! ப்ளீஸ் மணிமொழி இந்த ஒரு முறை…!

   ”யோவ்! நீ எது வேணுமின்னாலும் செய்வே! தாலிக்கட்டிக்கிட்ட தோஷத்துக்கு நான் மன்னிச்சு விட்டுகிட்டே இருக்கணுமா?”

  “தப்புதான் மணிமொழி!’ நீ மட்டும் டைவர்ஸுக்கு ஒத்துக்கிட்டிருந்தா நான் அப்படியொரு  வேலை செஞ்சிருக்க மாட்டேன்!”

”யோவ்! பொம்பளைங்கன்னா உங்க விளையாட்டுப் பொருளா? நினைச்சா கல்யாணம் பண்ணிப்பீங்க! வேண்டாம்னா டைவர்ஸ் வாங்கிப்பீங்க! நாங்க என்ன யூஸ் அண்ட் த்ரோ மெட்டீரியலா? இந்த நவீன யுகத்திலேயெயும் எங்களை அடிமையாவே  நடத்த பார்க்கிறீங்களே!”

 ”சாரி மணிமொழி! என் விருப்பம் இல்லாமலே வீட்டுலே உன்னை எனக்கு கட்டி வைச்சிட்டாங்க! நான் ஏற்கனவே ஒரு பொண்ணை லவ் பண்ணிக்கிட்டு இருந்தேன். அவளை மறக்க முடியலை! அதான் உன்னை விவாகரத்து பண்ணிட்டு அவளோட வாழனும்னு டைவர்ஸ் கேட்டேன்”.

 ”ஏய்யா! இந்த புத்தி கல்யாணம் செய்யறதுக்கு முன்னாடி வந்திருக்கணும்! நான் ஒரு பொண்ணை காதலிக்கிறேன்! அவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு உங்கப்பா அம்மாகிட்டே சொல்ல வேண்டியதுதானே.. கமுக்கமா இருந்துட்டு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டே! அதோட விட்டியா? ஒரு மாசம் முழுசா என் கூட குடித்தனம் நடத்திட்டு உன் லவ்வர் நெருக்கடி கொடுக்க ஆரம்பிச்சதும் என்னை கழட்டிவிட துணிஞ்சிட்டே!”

 ”உனக்கு அவளைப்பிடிச்சிருந்தா அப்பவே என்கிட்டே சொல்லியிருக்கலாம் இல்லே! நானே என் வீட்டில் சொல்லி கல்யாணத்தை நிறுத்தியிருப்பேன்! ஆனா கடைசி வரைக்கும் கமுக்கமா இருந்திட்டே என்னோட மனசை கலைச்சு என் உடம்பை சுவைச்சு எல்லாத்தையும் முடிச்சுட்டு எப்படிய்யா உனக்கு மனசு வந்த்து டைவர்ஸ் கேட்க.  உன் களவாணித்தனம் எல்லாத்தையும் மன்னிச்சு உன் கூட வாழ நான் தயாரா இருந்த போதும் நீ ருசி கண்ட பூனையா அவ பின்னாடியே சுத்தி வந்து என்னை டார்ச்சர் பண்ணி விவாகரத்து கேட்டே அதுக்கு நான் ஒத்துக்கலை!”

   ”சாரி மணிமொழி! நான் செஞ்சது தப்புத்தான்! ஆனா என்னாலே அவளை மறக்க முடியலை! அவ இல்லாம என்னாலே வாழ முடியாதுன்னு அப்ப தோணுச்சு!”… 

”சபாஷ்! கட்டின பொண்டாட்டிக்கிட்டேயே வைப்பாட்டி இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற தைரியமாவது உனக்கு இருக்கே! இந்த தைரியம் உனக்கு முன்கூட்டியே இருந்திருந்தா என்னோட வாழ்க்கையை நான் இழந்திருக்க மாட்டேன் இல்லே.?”

   ”உனக்கென்ன? தினம் ஒரு பொண்ணோட வாழ்ந்துட்டு போயிருவே! நான் அப்படி இருக்க முடியுமா? சமூகம் என்னைப்பத்தி என்னவெல்லாம் பேசும்? அதை யோசிச்சுப் பார்த்தியா? யோசிச்சு பார்த்திருந்தா அப்படி ஒரு வேலையை நீ பார்த்திருப்பியா?”

   ”இல்லே மணிமொழி! மேட்ரிமோனியல்லே உனக்கு வரன் வேணும்னு அப்ளை பண்ணது என்னோட தப்புத்தான் ஒத்துக்கறேன்! மகா மோசமான செய்கை அது! அதுக்காக நான் வெட்கப்படறேன். ப்ளீஸ் என்னை மன்னிச்சுரு!”

  ”செய்யறதை எல்லாம் செஞ்சிட்டு ஈஸியா மன்னிப்புன்னு கேட்டுட்டா சரியா போயிருமா? புருஷன் ஒருத்தன் இருக்கிறப்ப இன்னொருத்தன் என்னை பெண் கேட்டு வந்தா என் மனசு என்ன பாடுபட்டிருக்கும்? நான் எப்படி தவிச்சுப் போயிருப்பேன்! என் மன உளைச்சளுக்கு அளவே இல்லாம ஒரு நாளைக்கு பத்து இருபது போன் கால்கள்! இந்த கஷ்டத்தை எல்லாம் நான் அனுபவிச்சிட்டு உனக்கு மன்னிப்பு கொடுத்திடனுமா?”

 ”மணிமொழி நான் தப்பை உணர்ந்திட்டேன்! என் வீட்டுலேயே என்னை சேர்க்க மாட்டேன்னுட்டாங்க!  அவளும் என்னை உதாசீனப்படுத்திட்டு வேற ஒருத்தன் கூட கல்யாணம் பண்ணிக்க திட்டம் போட்டு வைச்சிருக்கா! நீயும் என்னை வெறுத்து ஒதுக்காதே…!”

 “பலாக்கா இல்லேன்னுதான் இந்த கலாக்காவைத் தேடி வந்திருக்கியா? உன் புத்தி எப்படி மாறும்?”

  ”எல்லாம் உன்னாலேதான்! நீ மட்டும் சைபர் க்ரைம்லே புகார் பண்ணாம இருந்தா எல்லாம் நல்லபடியா போயிருக்கும்! எனக்கு வெளிநாட்டுலே வேலை கிடைச்சிருக்கும் அவளும் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டிருப்பா! உன்னாலே என் வாய்ப்பெல்லாம் போயிருச்சு! நீயாவது என்னை ஏத்துக்கோ! நடந்ததை மறந்துட்டு நாம நல்லபடியா வாழலாம்!”

  ”உன்னைப் போல ஒரு ஈனபுத்தி உள்ள மனுஷன் கூட நான் வாழத்தயாரா இல்லை! ஒரு காலத்திலே உன் கூட்த்தான் வாழ்க்கைன்னு இருந்தேன். ஆனா அது தப்புன்னு நீ நல்லாவே புரிய வைச்சிட்டே! நீ என்னதான் கால்லே விழுந்து மன்னிப்பு கேட்டாலும் உன்னை மன்னிக்க என் மனசு இடம் கொடுக்கலே! பொண்டாட்டிக்கே நீ புருஷன் தேடினவன் இல்லையா? அதுவும் ஒருவிதத்துலே நல்லதாத்தான் அமைஞ்சிருக்கு. அதுலே வந்த ஒரு வரன் எனக்குப் பிடிச்சுப் போச்சு! என் முழுக்கதையை அவருக்கு சொல்லிட்டேன். உன் கூட டைவர்ஸ் வாங்கிற வரைக்கும் அவர் காத்திருக்கிறதாவும் சொல்லிட்டார். நீ கேட்ட டைவர்ஸ் உனக்கு இப்ப ஈஸியா கிடைச்சிருக்கு வாங்கிட்டுப் போ!” என்று பீரோவைத் திறந்து விவாகரத்து பத்திரத்தை எடுத்து வீசி எறிந்தாள் மணிமொழி.

“அப்போ போலீஸ் கம்ப்ளைண்ட் வாபஸ் வாங்க மாட்டியா?”

”மாட்டேன்! நீ தண்டனை அனுபவிச்சே ஆகனும்! உன் குற்றம் உன்னை உறுத்தனும் ஆனா கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம  என்னை ஏமாத்தி மன்னிப்பு கேட்டு கம்ப்ளைண்ட வாபஸ் வாங்க நினைச்சே இல்லே! அது தப்பு! உன்கிட்டே நான் மட்டும் இல்லே! எந்த பொண்ணுங்களும் இனி சிக்கக் கூடாது! அதுக்கு நீ போலீஸ் கொடுக்கிற தண்டனையை ஏத்துக் கிட்டுதான் ஆகனும்! இனிமே உங்களுக்கு ஜெயில்தான் மாமியார் வீடு மிஸ்டர் மகேஷ்.” மணிமொழி ஆக்ரோஷமாக சொல்ல 

     அதிர்ந்துபோய் பேச வார்த்தைகள் வராமல் தளர்ந்து போய் நடந்தான் மகேஷ்.

 (முற்றும்)

 (சில வாரங்களுக்கு முன் தினமலர் பேப்பரில் படித்த ஒரு செய்தியே இந்தக் கதையின் கரு.   மனைவிக்கு வரன் தேடி மேட்ரிமோனியலில் விளம்பரம் செய்த கணவர் கைது என்பதுதான் அந்த செய்தி>

திண்ணை!

எட்டாப்பு படிக்கையிலே  ஒரு மாச லீவுக்கு ஒடிடுவோம் தாத்தா ஊருக்கு!

தாத்தாவோடு கைப்பிடித்து நடக்கையில் தெருவெல்லாம் வேடிக்கை பார்க்கும்!

திண்ணை வைத்துக் கட்டப்பட்ட  கூடல்வாய் ஓட்டுவீடுகளில் முற்றத்தில்

நிலா முகம் காட்டும்!

 திண்டு வைத்து கட்டப்பட்ட திண்ணை வீடுகள்  தினுசு தினுசாய் அணிவகுக்கும்!

 ஓடி பிடித்து விளையாட, கல்லாங்காய், கண்ணாமூச்சி, எல்லாத்துக்கும் சாட்சியாய்

நிற்கும் திண்ணையில் படுத்திருக்கும் பெரிசுகள்!

மத்தியான போதினிலே திண்ணையிலே சாய்ந்திருக்கும் பாட்டிமார்கள் கதைக்கும் ஊர் கதைக்கு தனிமவுசு!

எப்பொழுதும் கூட்டமிருக்கும் எதிர்வீட்டுத் திண்ணை! முப்பொழுதும் அங்கு நடக்கும் ரம்மி!

முன்னிரவு வேளையிலே சிறுசுகளை சேர்த்து முனியாண்டி கதை சொல்லும் முனியம்மா!

 பாக்கு உரலில் இடித்து வெத்தலை மடித்து மெல்வதோடு ஊர் வம்பை மெல்லும் உலகநாயகி அம்மா!

ஈசிச்சேரில் சாய்ந்து இந்து கிராஸ் வேர்டை நிரப்ப முடியாமல் திணறும்

ஹெட்மாஸ்டர் அங்கிள் என  ஒவ்வோர் வீட்டுத் திண்ணையும் ஒட்டி உறவாடும்!

   எல்லோரும் விடை பெறுகையில்  வழிஅனுப்பிய திண்ணையை

வழி அனுப்பி விட்டார்கள்!

பல ஆண்டுகழித்து பட்டணம் சென்று   திரும்புகையில்

  அடுக்குமாடிகள் ஊரிலே நிறைந்திருக்க அணிவகுத்த திண்ணைவீடுகள் மறைந்துவிட்டன!

 சொந்தங்களையே மறக்கும் நம்மவர்கள்  திண்ணையை மறந்ததில் ஆச்சரியமில்லை!

ஆனாலும் என்னவோ செய்தது திண்ணை இல்லா கிராமங்களை பார்க்கையில்!

நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

சாபம்!       ஒருபக்க கதை          

சாபம்!       ஒருபக்க கதை                     நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.

கணவனை இழந்த விமலா, இருக்கும்  ஒரு ஏக்கர் நிலத்தில் வெண்டை, கத்தரி, தக்காளி என்று கொஞ்சம் கொஞ்சம் பயிரிட்டு இருந்தாள்.

        வெயிலில் செடிகள் வாடும்போது, பக்கத்துக் கழனிக்காரரிடம் கெஞ்சி, வாரம் இரண்டு நாள் நீர் பாய்ச்சினாள். இயற்கை உரங்களையே போட்டாள்.

           ‘காயெல்லாம் தளதளன்னு பசுமையாத்தான் இருக்கு… ஆனாலும் நல்ல விலைக்குப் போகலையே?’ – விமலா வருத்தப்பட்டாள்.  

           “ஏம்மா!காய்கறியெல்லாம் அருமையா இருக்கே! என் கடைக்கு மொத்தமா கொடுத்திடறியா?” – 

பக்கத்து ஊர் சூப்பர் மார்க்கெட் முதலாளியின் கேள்வியால் விமலாவுக்கு ஒரே மகிழ்ச்சி.  ‘இனி தெருத்தெருவா  சுத்த வேணாம். ஒரே இடத்தில் மொத்தமா வித்துடலாம்’ –  

“சரிங்க ஐயா! “ என்று ஒப்புக்கொண்டாள். 

           “நம்ம வேனை அனுப்பி வைக்கறேன்! ஏத்தி விட்டுடு. கடைக்கு வந்து பணத்தை வாங்கிக்க “ என்றபடி முதலாளி சென்றுவிட்டார்.

            மாலையில் அந்த சூப்பர் மார்க்கெட் போய்ப்  பார்த்த விமலாவுக்குப் பகீரென்றது. 

          “அண்ணே! தண்ணி தெளிச்சு வைச்சாலும் எப்படியும் வாடி  வதங்கிடும்! இங்கே எப்படிண்ணே எல்லா காயும் புத்தம் புதுசா இருக்கு?”

              “மருந்து தெளிச்சு,  பாலிஷ் போட்டு, பாலித்தீன் கவர்ல வைச்சிருக்கோமே! ஒரு வாரம் ஆனாலும் வதங்காது!”

            “ஐயோ! சாப்பிடறவங்களுக்குப்  பாதிப்பு வராதா?”

              “வரத்தான் செய்யும்! அதைப்பத்தி  நமக்கென்ன? நாளையிலிருந்து  வேன் வரதுக்குள்ளே சீக்கிரமா காயெல்லாம் பறிச்சு வைச்சிடும்மா”

          “இல்லேண்ணே! நான் என் புள்ளைங்க மாதிரி பாத்துப் பாத்து வளர்த்த காய்கறிங்க! இப்படி மருந்து தெளிச்சு, சாப்பிடறவங்க  வயெறெரிஞ்சு சாபம் விடலாமா? மொத்தமா விற்கலைன்னாலும்  பரவாயில்ல… நாளையிலிருந்து வேன் அனுப்பாதீங்க! “

              லாபத்தைப் பற்றிக் கவலைப்படாமல், சாபத்தைப் பற்றி கவலைப்படும் விமலாவை வியப்புடன் பார்த்தார், கடைச் சிப்பந்தி.         

      ———————————