
காலையில் புறப்படும் போதே அம்மா சொன்னார்கள்! “ அவசரமா வேணும்டா வாங்கி கொடுத்துட்டுப் போ! என்று, நான் தான் கேட்கவில்லை! சாயந்திரம் ஆபீஸில் இருந்து வரும் போது வாங்கிண்டு வந்துடறேன் அம்மா! இப்ப அவசரத்துக்கு உன் சினேகிதிக்கிட்ட வாங்கி சமாளிச்சிக்கோ!”
”இரவல் வாங்கிறதுன்னா எனக்கு பிடிக்காதுன்னு உனக்குத் தெரியும் இல்லையா? அப்புறம் சினேகிதிகிட்ட வாங்குன்னு சொல்றே?”
“ஒரு அவசரத்துக்கு கைமாத்தா வாங்கிறதுலே என்ன தப்பு! நான் வாங்கியாந்ததும் திருப்பிக் கொடுத்துடப் போறே! உன்னை நம்பி கொடுக்க மாட்டாங்களா உங்க சினேகிதி!”
“இப்ப யாருடா? இரவல் கொடுக்கிறா? கைமாத்து கேக்கறா? இருக்கிற விலைவாசியிலே அவனவன் குடும்பம் தள்றதே பெரும்பாடா இருக்கு! சரி எதுக்கும் கேட்டுப்பார்க்கிறேன்! அது இல்லேன்னாலும் நல்லா இருக்காதே!”
“கேட்டுப்பாரு! இல்லேன்னாலும் விட்டுடு! ஒருநாள் தானே! அட்ஜஸ்ட் பண்ணிட்டு போவ வேண்டியதுதான்! ”
“ டேய்! நாடு கெட்டுக் கிடக்கு! நீ ஆபிஸ் விட்டு வரும் போது நாழியாயிடும்! நம்ம வீடு வேற டவுன்லேயிருந்து தள்ளியிருக்கு! தனியா டூ வீலர்லே வரப்போறே! அப்ப போய் எதுக்கு வாங்கி வரனும்? இப்ப ஒரு பத்து நிமிஷம் எனக்கு செலவு பண்ணக் கூடாதா?”
“ஆமா! நா பெரிய தங்கக் கட்டியை வாங்கிவரப்போறேன்! திருடனுங்க மறிச்சு கொள்ளையடிச்சிறப் போறாங்க! போம்மா! போய் வேலையைப் பாரு! ராத்திரி நீ கேட்ட பொருள் இருக்கும்! எதுக்கும் பயப்படாதே! “
“நான் பயப்படறது இருக்கட்டும்டா! பணம் எல்லாம் எடுத்திக்கிட்டியா? கிரெடிட் கார்டும் எடுத்துட்டு போ! அவசரத்துக்கு உதவும்! பொருள் வாங்கினதும் பத்திரமா பைக்குள்ள பை போட்டு எடுத்துட்டுவா! மேல ஏதாவது துணி சுத்தி வை! யார் கண்ணுலயாவது பட்டுச்சோ! அப்புறம் அது நமக்கு இல்லாம போயிரும்!”
இவ்வளவு பில்டப் பண்ணி அனுப்பினார்கள்! நான் தான் அலட்சியமாக இருந்துவிட்டேன்! அலுவலகத்தைவிட்டு வரும்போதே மணி பத்தாகிவிட்டது. அந்த நேரத்திலும் தூரத்தில் தெரிந்த நகைக் கடையில் கூட்டம் அள்ளியது! தமிழர்களின் தங்க மோகம் குறைந்ததா என்ன?
தயங்கியபடியே கடைக்குள் நுழைந்தேன். கேட்டேன்! “ சார்! மெதுவா மெதுவா சொல்லுங்க! நீங்க நம்ம வாடிக்கையாளருன்றதாலேதான் இப்ப கொடுக்கிறேன்! இல்லேன்னா கிடைக்காது. ஆமாம் எவ்வளவு வேணும்?”
சொன்னேன்! “ விலை அதிகமாச்சே சார்! தங்கத்தை விட இதுக்குத்தான் இன்னிக்கு மவுசு அதிகம்! ராத்திரி நேரம் பத்திரமா கொண்டு போவீங்களா காலம் கெட்டுக்கிடக்குது சார்!”
எடைபோட்டு கேரி பேக்கில் கொடுத்ததை ஓரு துணிப்பையில் வைப்பதை அங்கிருந்த ரெண்டு ஜோடிக் கண்கள் கவனித்ததை நான் கவனிக்கவில்லை! வண்டியில் பையை வைத்துவிட்டு ஸ்டார்ட் செய்கையில் அந்த நபர் வேகமாக வந்து வழி மறித்தான்.
“ சார்… நீங்க சங்கர்தானே…!”
“ஆமாம்! நீங்க யாரு… டைமாவது! நான் போகனும்..!”
“இருக்கட்டும் சார்! நானும் உங்க ஏரியாத் தான்! உங்க வண்டியிலே லிப்ட் கேக்கத் தான் வந்தேன். பையிலே என்ன சார்? விலையுயர்ந்த ஐட்டமாட்டும் தெரியுது..!”
“யோவ்! நீ யாருன்னே தெரியாது! வழியை விடறியா? “ கோபமாக கத்தி வண்டியை ஸ்டார்ட் செய்து கிளம்பினேன்! பின்னாடியே யாரோ வருவது போல ஓர் பிரமை. இல்லை இல்லை யாரோ வருகிறார்கள்… வேகமாக செல்.. எச்சரித்தது மூளை.
ஆக்ஸிலேட்டரை முறுக்கினேன். வண்டி வேகமெடுத்து சில விநாடிகளில் நின்றது. பெட்ரோல் இல்லை! காலையிலேயே ரிசர்வில் இருந்தது. இப்போது சுத்தமாக தீர்ந்து போயிருக்கிறது. டென்சனில் கவனிக்கவில்லை! இப்போது லிப்ட் கேட்டவர் எங்கிருந்தோ வந்தார்.
“என்ன சார் கோபப்பட்டீங்க! இப்ப வண்டி ஆப் ஆயிருச்சா! பெட்ரோல் தீர்ந்துடுச்சா!”
“ஹிஹி! ஏதோ டென்ஷன்ல..”
“இருக்கட்டும் பரவாயில்லை! நான் வேணும்னா பெட்ரோல் தரேன்! ஆனா நீங்க உங்க கிட்ட இருக்கிற கடையில வாங்கின அந்த பொருளை தரனும்.”
“ என்னது…!”
“ஆமாம்! மொத்தமா கூட வேணாம்! ஆளுக்குப் பாதி எடுத்துப்போம்!”
“என்னயா பேரம் பேசறே! நான் காசு கொடுத்து வாங்கி வந்திருக்கேன்! திருடிட்டு வரலை!”
“இருக்கட்டுமே! ஆனா இல்லாதவன் இருக்கறவன் கிட்ட பிடுங்கித்தானே ஆகனும்! நானும் சும்மா கேக்கலை! உங்களுக்கு பெட்ரோல் தரேன்னு சொல்றேனே!”
“வழியை விடு! நான் தள்ளிட்டு போனாலும் போவேன்! உன் மிரட்டலுக்கு பயப்படமாட்டேன்!”
”சார் கோபப்படாதீங்க! எங்க வீட்டுல அது இல்லாம இருக்க முடியாது! ஒரு வாரமா சாப்பாடே ருசிக்கலை! ப்ளீஸ் பாதி இல்லாட்டி கூட பரவாயில்லை! ஒரு கால்வாசி … இல்லை ஒரு ரெண்டு…”
அவன் கெஞ்ச.. எனது மனம் கொஞ்சம் இளகியது.
“சரி! சரி அழாதீங்க! ஒரு லிட்டர் பெட்ரோலாவது கையிலே வச்சிருக்கீங்களா? அஞ்சு லிட்டர் தரேன்! சார்! ஆனா ஒரு அரைக்கிலோ வெங்காயமாவது கொடுப்பீங்களா?”
“கண்டிப்பா…” என்று என் பையில் இருந்து சில வெங்காயங்களை எடுத்துக் கொடுக்க அவன்,
இப்போதைக்கு இந்த பெட்ரோலை ஊத்திக்கிட்டு வீட்டுக்கு போங்க! நாளைக்கு அஞ்சு லிட்டர் பெட்ரோல் வீட்டுல கொண்டுவந்து தரேன்.. என்று சரேல் என்று மறைந்தான். அம்மா சொன்ன பேச்சை கேட்காத நான் “உள்ளி” கொள்ளை போனதே என்று தலையிலடித்துக் கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்தேன்!