பாசவலை!

ஒருவாரம் தங்கிப் போகலாம் என்று தான் பெண் கொடுத்த சம்பந்தி வீட்டுக்கு வந்திருந்தாள் பங்கஜம். அங்கு அவள் கண்டது அவளுடைய கண்களாலேயே நம்ப முடியவில்லை. பங்கஜத்தின் சம்பந்தி ரஞ்சிதத்தை அவளுடைய மகனும் மருமகனும் போட்டிப் போட்டுக் கொண்டு தாங்கினார்கள்.

ரஞ்சிதத்தின் பிறந்தநாளுக்கு மகன் ஒரு சேலை வாங்கி வந்து அசத்தினால் மருமகன் ஒரு படி மேலே போய் மோதிரம் வாங்கிக் கொடுத்து அசத்தினான். அன்னைக்கு பிடிக்கும் என்று இவன் ஸ்வீட் வாங்கி வந்து கொடுத்தால் அவர் மருமகனோ அதை ஊட்டி விட்டான்.

” என்னடி இது கூத்து? உம் புருஷன் இப்படி மாறிட்டான்! சதா அம்மா! அம்மான்னு அம்மா பின்னாடியே சுத்திகிட்டு திரியறான்! அது கூட பரவாயில்லை! உன் நாத்தனார் புருஷன் அவன் வீட்டை விட்டு வந்து இங்கேயே தவம் கிடக்கிறான்! உன் மாமியாருக்கு ஓண்ணுன்னா ஓவரா பதறுறான்! என்னடி நடக்குது இங்கே!” பங்கஜம் தன் மகளிடம் கேட்டாள்.

”என் புருஷன் அவங்க அம்மாகிட்டே பாசமா இருந்தா என்ன தப்பு! நான் கூடத்தான் என் மாமியார் மேல பாசமா இருக்கேன்! அவங்களுக்கு பிடிச்சா மாதிரி நடந்துக்கிறேன்!

மாமியார் ஆயிரம் குத்தம் சொல்கிறாள் என்று குறை சொல்லும் தன் மகளா இது? பங்கஜத்தால் நம்பவே முடியவில்லை! இவர்களெல்லாம் இப்படி இருக்கிறார்கள் அங்கே தன் மகனும் மருமகளும் தன்னை ஒரு பொருட்டாகவே மதிப்பது இல்லை.

அவர்கள் உண்டு அவர் வேலை உண்டு என்று இருந்து விடுகிறார்கள். பசிக்கு சோறு போடுகிறார்கள் அவ்வளவுதான். ஒரு பிறந்தநாள் உண்டா? ஒரு பரிசு உண்டா? ஒன்றுமே கிடையாது. மூன்று மருமகன்கள் இருந்து என்ன பிரயோசனம்? மாமியாரின் பிறந்தநாள், திருமண நாளை எவருக்காவது நினைவில் இருக்கிறதா?

மருமகன்களை விடு! சொந்த மகன் அவனுக்காவது என் பிறந்தநாள் ஞாபகம் இருக்க வேண்டாமா? என்று தன் குடும்பத்தை நொந்து கொண்டார்.

பங்கஜம் சோர்வாக இருப்பதையும் தனக்கு நடக்கும் உபசரணைகள் அவருக்கு சங்கடத்தை தருவதையும் புரிந்து கொண்ட ரஞ்சிதம் மெதுவாக அவளருகே வந்து சம்பந்தியம்மா! என்றழைத்தாள்.

பங்கஜம் மெதுவாக முறுவலிக்க, ”சம்பந்தியம்மா! ஏதோ பெரிசா யோசனையிலே இருக்கீங்க போலிருக்கே!”

”அதெல்லாம் ஒண்ணுமில்லே சம்பந்தியம்மா!”

”நீங்க வாய்விட்டு அப்படி சொன்னாலும் உங்க முகம் உங்க கவலையை காட்டிக்கொடுக்குது!”

”கவலையா? எனக்கா? அப்படி என்ன கவலை எனக்கு?”

”மழுப்பாதீங்கம்மா! இங்க என் மகன், மருமகன், மருமக என் கிட்டே பழகிறதும் எனக்கு உபசரணைகள் பண்றதும் உங்களுக்கு ஒரு ஏக்கத்தை உருவாக்கியிருக்கு! அங்க உங்க மகன், மருமகன், மருமக இப்படி இல்லையேன்னு ஒரு ஆதங்கம் உங்க முகத்துல எட்டிப்பார்க்குது! என்ன நான் சொல்றது சரிதானே!”

தன் முகவாட்டத்தை வைத்தே தன்னை சரியாக எடைபோட்ட சம்பந்தியம்மாவை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் பங்கஜம். அவள் கண் கலங்கியது.

”ச்சூ! என்ன இது! இதுக்கு போய் கண் கலங்கறீங்க! இங்கே நீங்க பாக்கிறது உண்மையான பாசம் இல்லை! இது ஒரு பாசவலை! என் தாய் வீட்டு சொத்து ஒண்ணு 50 லட்சம் மதிப்பில ஒரு வீடு எனக்கு கிடைச்சிருக்கு! அது என் சொத்து அதை என் கிட்டே இருந்து மொத்தமா வாங்கிடனும்னு மகனுக்கும் மருமகனுக்கும் போட்டி! அதான் இப்படி தூக்கி வைச்சு கொண்டாடறானுங்க! எங்கே பொண்ணுக்கே கொடுத்துடுவேணோன்னு பையனும் பையனுக்கு கொடுத்துட்டா எப்படின்னு மருமகனும் மாத்தி மாத்தி பாசமழை பொழியறாங்க! அது என்கிட்டே இருக்கிற வரைக்கும் எனக்கு ராஜ உபசாரம்தான்.

” உங்க வீட்டுல அப்படியா? நீங்க தனியா பொழுதை கழிக்கணுமேன்னு நிறைய புத்தகங்களும் உங்களுக்கு தனி டீவி கனெக்‌ஷனும் கொடுத்திருக்காங்க! உங்களுக்கு சுகர் இருக்குன்னு உங்க பையனும் மருமகளும் ஸ்விட் நிறைய சாப்பிடறதே இல்லை! மாசம் ஒரு தடவை ஹெல்த் செக்கப்புக்கு கூட்டி போறாங்க! பேரப்பசங்களை உங்க கூட விளையாட விட்டு ஒரு ஒட்டுறவை ஏற்படுத்தி இருக்காங்க! விழா கொண்டாட்டம்னு எதுவும் செய்யலைன்னு வருத்தப்படறீங்களே! அவங்க நீங்க வந்ததுலே இருந்து எத்தனை தடவை போன் பண்ணி உங்களை விசாரிச்சாங்க! நீங்க ஒரு தரம் போன் பண்ணி இருப்பீங்களா? பேர பசங்க ரொம்ப ஆசைப்படுது சீக்கிரம் வந்திருன்னு உங்க பையன் கூப்பிட்டப்ப கூட இன்னும் நாலு நாள் கழிச்சு வரேன்னு சொன்னீங்க! இதுவே நான் என் மக வீட்டுக்கு போனா எப்ப துரத்தலாம்னு அவளும் இன்னும் ஒரு வாரம் கழிச்சு வந்தா தேவலைன்னு இவங்களும் இருப்பாங்க!”

” உங்க வீட்டுல காட்டுறதுதான் பாசமழை! இந்த வீட்டுல நடக்கிறது வெறும் பாச வலை! நீங்க கொடுத்து வைச்சவங்க!” என்று கண்கலங்க சொன்ன ரஞ்சிதத்தை ஆறுதலாக தட்டிக் கொடுத்து சம்பந்தியம்மா! என் கண்ணை திறந்திட்டீங்க! வாங்க! நாம் ரெண்டுபேரும் நம்ம வீட்டுக்கு போவோம்! என்றாள். பங்கஜம்.

தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் இட்டு நிரப்புங்கள்! நன்றி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: