ஆட்டுவித்தால் யாரொருவர்

முகில் தினகரன்.

(சிறுகதை)

அந்தக் காலை நேரத்தில் கோவிலில் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. அங்கப் பிரதட்சணம் செய்வோர்களும், அடிப் பிரதட்சணம் செய்வோர்களும், பகவானை மனதில் நினைத்துக் கொண்டு, தத்தம் பாதைகளில் முன்னேறிக் கொண்டிருந்தனர்.

ஈரச் சேலையுடன் அங்கப் பிரதட்சணப் பாதையில் உருண்டு கொண்டிருக்கும் தன் மனைவி அலமேலுவின் கூடவே மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தார் ஜெயவேல்.

அவளைப் பார்க்கப் பார்க்க அவர் மனதில் அளவு கடந்த வேதனை பாறாங்கல்லாய்க் கனத்தது. “ஆண்டவா!…தனக்கொரு பிள்ளை வரம் வேண்டும் என்பதற்காக தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமை உன் கோவிலுக்கு வந்து…அங்கப் பிரதட்சணம் செய்யறதா வேண்டிக்கிட்டு…வாராவாரம் இங்க வந்து தன் உடலை வருத்திக்கிட்டு, ஈரச் சேலையோட உருண்டுக்கிட்டிருக்கா இவ!…இது ஒன்பதாவது வாரம்!…எப்படியோ அவ…தன்னோட வேண்டுதலை நிறைவேத்திட்டா…இனி நீ அவளுக்கு பிள்ளை வரத்தைக் குடுக்க வேண்டியதுதான் பாக்கி!…குடுப்பியா?”

ஆண்டவனோடு பேசிக் கொண்டிருந்த ஜெயவேலை அங்கு உண்டான திடீர்ப் பரபரப்பு கலைக்க, கூர்ந்து கவனித்தார்.

வேக, வேகமாய் ஓடி வந்த ஐந்தாறு கோவில் சிப்பந்திகள், “எல்லோரும் உடனே கோயிலுக்கு வெளியே போங்க!…” என்று பொத்தாம் பொதுவாய்க் கத்திக் கொண்டு ஓடினர்.

அதைக் கேட்டதும், என்ன?…ஏது?..என்று விசாரிக்கக் கூடத் தோன்றாமல், பக்தர்கள் கூட்டம் அடுத்த விநாடியே கோவிலுக்கு வெளியே தலை தெறிக்க ஓடியது. அங்கப் பிரதட்சணம் செய்து கொண்டிருந்தவர்களும், அடிப் பிரதட்சணம் செய்து கொண்டிருந்தவர்களும், விஷயம் இன்னதென்று புரியாமல், எழுந்து நின்று யோசிக்க,

பாய்ந்து வந்த போலீஸ்காரர், “எதுக்கு இன்னும் இங்க நின்னுட்டிருக்கீங்க?…அதான் கோவிலுக்கு வெளிய போகச் சொல்லிச் சொன்னாங்கல்ல?..ஓடுங்க…ஓடுங்க…!” என்று அடித் தொண்டையில் அலறினார்.

“சார்…என்ன விஷயம்?…எதுக்கு எல்லோரையும் வெளிய போகச் சொல்லுறீங்க?” யாரோ ஒரு தைரியசாலி பக்தர் சன்னக் குரலில் கேட்க,

“யோவ்…கோவிலுக்குள்ளார பாம் வெச்சிருக்கறதா தகவல் வந்திருக்கய்யா…”

அவ்வளவுதான், கண் மூடிக் கண் திறப்பதற்குள், அங்கப் பிரதட்சணக்காரர்களும், அடிப் பிரதட்சணக்காரர்களும் காணாமல் போயினர்.

ஜெயவேலு குனிந்து அலமேலுவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார். “ஏய்…அலமேலு…கோவிலுக்குள்ளார பாம் வெச்சிருக்காங்களாம்!….எல்லோரும் போயிட்டாங்க!…எழுந்திருச்சு வாடி நாமும் போயிடலாம்…!”

உருண்டு கொண்டிருந்த அலமேலு தன் உருளலைச் சற்றும் நிறுத்தாமல், “ம்ஹூம்…மாட்டேன்!…என்னோட வேண்டுதலை நான் முடிக்கப் போற கடைசி நேரத்துல ஆண்டவன் எனக்கு வெச்சிருக்கற சோதனைதான் இது!…இங்க பாமும் இல்லை…ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை!…நீங்க பொலம்பாம வாங்க!” என்றாள்.

சற்றுத் தொலைவிலிருந்து இவர்களிருவரையும் பார்த்து விட்ட ஒரு போலீஸ் உயர் அதிகாரி “ஏய்…ஏய்!” என்று கத்திக் கொண்டே ஓடி வந்தார். “என்ன ரெண்டு பேரும் சாவு வரம் கேட்டா அங்கப் பிரதட்சணம் பண்ணிட்டிருக்கீங்க?…போங்க வெளிய மொதல்ல!”

“டீ…அலமு…எழுந்திருடி!”

அவள் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாதவளாய், தொடர்ந்து உருண்டு கொண்டேயிருக்க, கடுப்பானார் போலீஸ் அதிகாரி.. “த பாரும்மா….நீயா எந்திரிச்சு ஓடுறியா?..இல்லை ரெண்டு லேடி கான்ஸ்டபிள்ஸை வரச் சொல்லி உன்னையத் தூக்கிட்டுப் போகச் சொல்லட்டா?”

அவள் அதற்கும் அசராது உருள, ஜெயவேலு கெஞ்சினார். போலீஸ் அதிகாரி மிரட்டினார். நேரம் ஓடிக் கொண்டேயிருந்தது. பொறுமையிழந்த அந்த போலீஸ் அதிகாரி, “எக்கேடோ கெட்டுப் போங்க!….” என்றபடி தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கோவிலுக்கு வெளியே ஓடினார்.

எந்த நிமிடமும் பாம் வெடிக்கலாம்!…உடல் சிதறி தானும் அவளும் மரணிக்கலாம், என்று உறுதியாய் முடிவே செய்து விட்ட ஜெயவேலுவுக்கு, அதிலும் ஒரு சிறிய ஆறுதல் என்னவென்றால், இருவரும் ஒரே இடத்தில்…ஒரே நேரத்தில் மரணிப்பது. “ஆண்டவன் இந்தக் கொடுப்பினைதான் உங்களுக்கு என்று தீர்மானித்து விட்டால் அதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே?!”

அடுத்த இருபதாவது நிமிடம் அலமேலு தன் அங்கப் பிரதட்சணத்தை முடித்து விட்டு, குருக்கள் இல்லாத சன்னதியில் தானே சென்று பூஜை செய்து விட்டு, கணவருடன் வெளியேறிய போது… கோவிலுக்கு வெளியே கூடியிருந்த மொத்தக் கூட்டமும் அவர்களிருவரையும் பிரமிப்புடன் பார்த்தது. ஒன்றிரண்டு பத்திரிக்கைக்காரர்கள் ஓடி வந்து அவர்களை புகைப்படம் எடுக்க முனைந்தனர்.

கூட்டத்தில் சலசலப்பு தோன்றியது. “யோவ்..எல்லாம் வெறும் வதந்திய்யா!”

“எவனோ…வெத்து மிரட்டல் விட்டிருக்கான்!”

“இருங்கப்பா…இருங்கப்பா…பாம் ஸ்குவாட் உள்ளார போயிருக்கு…வரட்டும்…வந்தாத்தானே தெரியும்…வதந்தியா?…இல்லையா?ன்னு”

எல்லோரும் காத்திருக்க, பாம் ஸ்குவாட் வெளியே வந்தது, இரண்டு கைகளையும் விரித்துக் கொண்டு.

“அடப் போங்கப்பா…பொழப்புக் கெட்டதுதான் மிச்சம்!”

பாம் ஸ்குவாட் அதிகாரிகள், “கோவிலுக்குள் பாம் இல்லை!” என்று உறுதியளித்த பின், காவல் துறை பக்தர்களை மறுபடியும் கோவிலுக்குள் அனுமதித்தது.

அதே நேரம்,

தீவிரவாதிகளின் பாசறையில், தலைவன் போலிருந்த ஒரு தாடிக்காரன் கத்திக் கொண்டிருந்தான். “ஏன்?…ஏன்?…அந்த பாம் வெடிக்கலை?…எனக்குத் தெரிஞ்சாகணும்!…யாரோ நம்மாளுகதான் டபுள்கேம் ஆடியிருக்காங்க!…உண்மையைச் சொல்லிடுங்க…இல்லாட்டி நாம எல்லோருமே ஒட்டு மொத்தமா பிரச்சினைக்கு ஆளாய்டுவோம்!”

“பாஸ்…பாமை ஃபிக்ஸ் பண்ணினது நாந்தான்!….டைம் செட் பண்ணியதும் நாந்தான்!…அப்ப எல்லாமே சரியாத்தானிருந்தது!” கண்ணாடியை மூக்கின் மீது தொங்க வைத்திருந்தவன் சொல்ல,

“பாமை எந்த இடத்துல ஃபிக்ஸ் பண்ணினே?”

“ம்ம்ம்…அங்கப் பிரதட்சணம் பண்ணுறவங்க உருளுவாங்களே?…அந்தப் பாதையோட முடிவுல…சிமெண்டுத் தரையை லேசாப் பெயர்த்து…அதற்குள் செருகி வெச்சேன்!…ம்.ம்.ம்..பாஸ்….எனக்கொரு சந்தேகம்!”

“என்ன?”

“போலீஸ் வந்து பப்ளிக்கை அலர்ட் பண்ணினப்ப எல்லோரும் வெளிய ஓடி வந்துட்டாங்க!…அப்ப அந்த அங்கப் பிரதட்சணப் பாதை ட்ரை ஆகத்தான் இருந்தது!…ஒரு லேடி மட்டும் பிடிவாதமாய் அங்கப் பிரதட்சணத்தை முடிச்சுட்டுத்தான் வெளிய வருவேன்னு…யார் சொல்லியும் கேட்காம கடைசி வ்ரை உருண்டு முடிச்சுட்டுத்தான் வந்தாங்க!”

“சரி…அதுக்கும் பாம் வெடிக்காததற்கும் என்ன சம்மந்தம்?”

“அனேகமா…அந்த பாம் வெடிக்கப் போற நேரத்துல அந்தப் பொம்பளை ஈரச் சேலையோட அது மேல உருண்டிருக்கணும்…அதனால வாட்டர் பாஸ் ஆகி…பாமோட டைமிங் ஸ்டிரக் ஆகி நின்னிருக்கும்!…அநேகமா வெடிக்கறதுக்கு ரெண்டு…மூணு…விநாடிக்கு முன்னாடிதான் ஸ்டிரக் ஆகியிருக்கும் போலிருக்கு!”

“ச்சே!” என்று தன் வலது கை முஷ்டியால் இடது உள்ளங்கையில் குத்திக் கொண்டான் பாஸ்.

அதே நேரம்,

“டீ…அலமு..என்னடி ஆச்சு உனக்கு?…சொல்லச் சொல்லக் கேட்காம…ஒன்பது வாரம் பிடிவாதமா ஈரச் சேலையோட அங்கப் பிரதட்சணம் பண்ணினியே…இப்ப திடீர்னு மயங்கி விழுந்திட்டியேடி!…அய்யோ…எனக்கு “பட…பட”ன்னு வருதே!” ஜெயவேலு பதட்டமாகிப் புலம்ப,

பக்கத்து வீட்டுத் தாயாரம்மா, சிரித்த முகத்துடன் அவர் காதருகே வந்து, “ஒண்ணும் பதட்டப்படாதீங்க சாமி…நாடி பிடிச்சுப் பார்த்துட்டேன்…எல்லாம் நல்ல விஷயம்தான்…உங்க சம்சாரம் உண்டாகியிருக்கா!” என்றாள்.

“பகவானே….!!” தன்னையுமறியாமல் கூவி விட்டார் ஜெயவேலு.

(முற்றும்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: