நரி ருசித்த ஆப்பம்!

 வயலூர் என்ற கிராமத்தின் அருகே ஒரு சின்ன புதர்க் காடு இருந்துச்சு. அந்த புதர்காட்டுல குள்ள நரி ஒண்ணு வசிச்சு வந்தது. புதர்காடுன்னா பெரிய பெரிய மரங்கள் இல்லாம சின்ன சின்ன மரங்களும் செடிகொடிகளும் அடர்த்தியா வளர்ந்து இருக்கிற ஒரு காடு அது. அந்த காட்டின் எல்லையில் வயலூர் இருந்துச்சு. வயலூர் கிராம மக்கள் அந்த காட்டுல போய் சுள்ளி பொறுக்குவாங்க. சில மூலிகைச் செடிகளை பறிச்சு சேகரம் பண்ணி வெளியே நகரத்துக்கு கொண்டுபோய் வித்து காசாக்கிப்பாங்க. சின்ன காடா இருக்கிறதனாலே பெரிய விலங்குங்க நடமாட்டம் இல்லை. அதனால ராத்திரிப் பொழுதிலே கூட பயமில்லாம காட்டுப் பக்கம் போய் வருவாங்க.

ஒரு நாள் மீனாட்சிப் பாட்டி வயலூர் கிராமத்துல இருந்து காட்டுக்கு விறகு சேகரிக்க போனாங்க. அவங்க வயலூர்ல இட்லிகடை வைச்சு பிழைச்சுகிட்டு இருந்தாங்க. அவங்க கை மணத்துக்காகவே நல்லா வியாபாரம் ஆச்சு. விலையும் குறைவு. அதனாலே கடையிலே எப்பவும் கூட்டம் அள்ளும். வழக்கமா அவங்களோட பேரன் குருபரன் தான் சுள்ளிப் பொறுக்க போவான். ஆனா அவனுக்கு திடீர்னு காய்ச்சல் வந்ததாலே அவனாலே சுள்ளி பொறுக்க போக முடியலை. அதனாலே பாட்டியே சுள்ளி பொறுக்க கிளம்பிட்டாங்க. நல்ல பகல் பொழுதுல கிளம்பினாங்க பாட்டி. மதியம் சாப்பிடறதுக்கு காலையில சுட்ட ஆப்பமும் தேங்காய் பாலும் கொஞ்சம் எடுத்துக்கிட்டு காட்டுக்குள்ளே போனவங்க காய்ந்து போன மரங்கள் நிறைய இருக்கிற இடமா பார்த்து கொண்டு போன ஆப்பத்தையும் தேங்காப் பால் பையை ஒரு மரத்து கிளையிலே தொங்க விட்டுட்டு சுள்ளிகளை ஒடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அந்த காய்ந்த புதர்களுக்குள்ளே குள்ள நரி ஒண்ணு ரொம்ப நாளா பசியிலே காய்ஞ்சி கிடந்தது. அதுக்கும் பாவம் வயசாயிருச்சு! முன்ன மாதிரி சின்ன விலங்குகளை வேட்டையாடி பிடிச்சு தின்ன முடியலை. பாட்டி கொண்டு போய் வைச்சிருந்த ஆப்பம் தேங்காய் பால் வாசம் அதன் மூக்கை துளைச்சது. உடனே அது சந்தடி பண்ணாம பாட்டி வைச்சிருந்த பையை தாவி எடுத்துக்கிட்டு வேற ஒரு புதருக்குள்ளே போய் ஒளிஞ்சிகிட்டு சாப்பிட ஆரம்பிச்சது. பாட்டி ஒரு சுமை சுள்ளிகளை கட்டி முடிச்சுட்டு சாப்பிடலாம்னு பையை தேடினா காணோம். சுத்தும் முத்தும் பார்த்தாங்க. அவங்களுக்கு எதுவும் தென்படலை. சரி ஏதோ விலங்கு தூக்கிட்டு போயிருச்சு போலிருக்கு. இன்னிக்கு நம்மளுக்கு மதிய சாப்பாடு இல்லைன்னு முடிவு பண்ணிட்டு விறகு சுமையைத் தூக்கிட்டு நடக்க ஆரம்பிச்சிட்டாங்க. குள்ள நரிக்கு சந்தோஷமா போயிருச்சு! பாட்டி சுட்ட ஆப்பம் சுவையா இருந்ததே! இவங்க பின்னாடியே போய் இவங்க வீட்டுல ஒளிஞ்சிகிட்டு தினமும் சாப்பிடலாம்னு முடிவு பண்ணிட்டு அவங்களுக்கு தெரியாம பின்னாலேயே பின் தொடர்ந்து போய்க் கிட்டு இருந்தது. பாட்டி வீட்டுக்குள்ளே நுழைஞ்சாங்க. அப்ப இருட்டிருச்சு அதனாலே பாட்டியோட வந்த நரியை யாரும் பார்க்க முடியலை. பாட்டி வீட்டோரம் ஓர் வயல் அதுல மறைஞ்சிக்கிட்ட நரி பாட்டி கொல்லைக் கதவை திறந்து முகம் கை கால கழுவ போனதும் நைஸா உள்ளே நுழைஞ்சிருச்சு. சுத்தும் முத்தும் பார்த்தது. அந்த வீட்டுல ஒரு நெல் குதிரு இருந்தது. நெல் குதிர்னா என்னன்னு உங்களுக்குத் தெரியுமா? அது ஒரு பெரிய பானை போல இருக்கும் சுட்ட மண்ணினால் செய்யப்பட்ட ஒரு பெரிய பாத்திரம் அது. அந்த காலத்துல அதில் நெல் அரிசி, தானியங்கள் சேமித்து வைப்பாங்க. ஒரு ஆள் உயரம் அது இருக்கும். அதுக்குள்ளே எட்டி பார்த்தது நரி. அந்த குதிர்ல பாதி அளவு தானியம் இருந்தது. மீதி இடத்துல நாம ஒளிஞ்சிப்போம்னு அதுல “சடார்’னு குதிச்சி ஒளிஞ்சிகிட்டது. பாட்டியோட பேரன் குருபரன் உடம்பு சுகமில்லாம வேற அறையில படுத்துக் கிடந்ததாலே நரிக்கு வேலை சுலபமா ஆயிருச்சு. குதிருக்குள்ளே ஒளிஞ்சிருந்த நரி காலையிலே பாட்டி இட்லி தோசை, ஆப்பம் இதெல்லாம் சுட்டு அடுக்கினதும் நாக்கில நீர் பொங்க பார்த்துக் கிடந்துச்சு. வியாபாரம் அடங்கினதும் பாட்டி மீதி இருந்த பலகாரங்களை மூடி வைச்சிட்டு பொருள் வாங்க சந்தைக்கு புறப்பட்டாங்க. நரி சத்தம் போடாம அந்த பலகாரங்களை திருடி தின்னுட்டு பக்கத்துல இருந்த வயலுக்குள்ளே போய் ஒளிஞ்சிருச்சு. இப்படி ராத்திரியிலே உள்ளே நுழைஞ்சி குதிருக்குள்ளே ஒளிஞ்சிக்கிறதும் காலையில பலகாரத்தை தின்னுட்டு வயலுக்குள்ளே ஒளிஞ்சிக்கிறதுமா இருந்தது நரி. பாட்டிக்கு பலகாரங்கள் காணாம போறது கவலையா இருந்துச்சு. முத முதலே காட்டில பலகாரம் காணாம போச்சு. இப்ப வீட்டுலேயும் நாளைஞ்சு நாளா காணாம போவுதே எப்படி? குருபரா! யாராவது நான் போனதுக்கு அப்புறம் வீட்டுக்குள்ளே வந்தாங்களா?ன்னு கேட்டாங்க. யாரும் வரவே இல்லையே பாட்டி! அப்படி வந்தா நான் படுத்திருக்கிற அறையை தாண்டித்தான் சமையல்கட்டுக்கு போக முடியும். நான் கண்டிப்பா பாத்திருப்பேனே என்றான் பேரன். சரி! இன்னிக்கு எப்படியும் இதை கண்டுபிடிச்சே தீரனும்னு அப்படின்னிட்டு பாட்டி வெளியே போற மாதிரி போய் ஒளிஞ்சி நின்னு ஜன்னல்வழியா என்ன நடக்குதுன்னு கவனிச்சாங்க. நம்ம குள்ள நரியார் குதிருக்குள்ளே இருந்து குதிச்சு வந்து பலகாரங்களை சாப்பிடறதை பார்த்ததும் பாட்டிக்கு பகீர்னு ஆயிருச்சு இதென்ன நம்ம வீட்டுக்குள்ளேயே நரி குடி வந்துருச்சே அதை எப்படியும் விரட்டணும்னு முடிவு பண்ணாங்க.
உடனே நிறைய் வேல முள்ளுங்களை ஒடைச்சு எடுத்து வந்து குதிருக்குள்ளே இருந்த நெல்லை கோணியிலே கட்டி வைச்சுட்டு வைக்கோலை நிரப்பி அதுக்குள்ளே முள்ளுங்களையும் போட்டு வைச்சாங்க. பொழுது சாய்ந்ததும் திறந்திருந்த கொல்லைப்புற கதவுவழியா உள்ளே வந்த நரி குதிருக்குள்ளே குதிச்சது. அடுத்த நிமிடம் “ஆ” ஐயோ!” என்ற வலியால் துடித்தது. பாட்டி போட்டிருந்த வேல முள்ளு அதன் உடம்பெல்லாம் குத்திக் கிழிச்சது. அடடே பாட்டி நம்பளை கண்டுபிடிச்சிட்டாங்க போல! இப்ப கத்தி சத்தம் போட்டா அடி பின்னிருவாங்க! வந்ததுதாம் வந்தோம்! வலியை சகிச்சிட்டு இருந்தோம்னா நாளைக்கு நிறைய ஆப்பத்தை தின்னுட்டு போயிரலாம். அப்புறம் ஒளிய வேற இடம் தேடலாம்னு நரி முடிவு பண்ணி அமைதியா இருந்துச்சு. பாட்டிக்கு நரியோட திட்டம் விளங்கிருச்சு. அது சத்தம் போடாம குதிருலேயே இருந்துட்டு நாளைக்கு பலகாரம் தின்னுட்டு போகப்போவுது போலன்னு நினைச்சிக்கிட்டாங்க. அப்படியா சேதி! உனக்கு நல்லா பாடம் புகட்டறேன்னு சொல்லிகிட்டாங்க. மறுநாள் காலையிலே பலகாரங்களை சுட்டு முடிச்சுட்டு தோசைக் கல்லை நல்லா காய்ச்சி அடுப்பு மேலேயே வைச்சிட்டு கொஞ்சம் எண்ணையையும் காய்ச்சி பக்கத்துலே வச்சிட்டாங்க. மீதி பலகாரங்களை வெளியே எடுத்துட்டு போயிட்டாங்க. ஆப்பம் தின்னற ஆசையிலே நரி பாட்டி அந்த பக்கம் போனதும் குதிருக்குள்ளே இருந்து வெளியே குதிச்சு வந்தது. இது என்னது அடுப்பு மேல கருப்பா இருக்கே! புது பலகாரம் போலன்னு நினைச்சிகிட்டு வேகமா வந்து வாயை வைச்சது. அவ்வளவுதான் தாமதம் வாய் புண்ணாகி வெந்து போயிருச்சு! அதனாலே ஒண்ணும் பண்ண முடியலை! தேங்காய் பால் தின்ன ருசியிலே பக்கத்து சட்டியில இருந்த பாட்டி காச்சி வச்சிருந்த தேங்காய் எண்ணெயில வாய் வைச்சது. இப்ப நாக்கும் கொப்பளமா ஆயிருச்சு! கண்ணு ரெண்டுலேயும் தண்ணி ஊத்த விட்டா போதும்னு வெளியே ஓட பாத்துச்சு! அப்ப குருபரன் ஒரு பெரிய தடியோட வாசல்ல நிக்கவும் ஒரு வாரம் திருடி தின்னதுக்கு நல்ல கூலியை இன்னிக்கு கிடைக்க போவுதுன்னு தீர்மானிச்சு கொல்லை பக்கமாவே ஓட முயற்சி பண்ணுச்சு. அங்க பாட்டி துடைப்ப கட்டையும் கையுமா நின்னாங்க! தடியால அடிவாங்கினா உசுரு மிஞ்சாது! துடைப்ப அடி பரவாயில்லைன்னு புழக்கடை பக்கமா தெறிச்சி ஓடுச்சு நரி! அதுக்கு அப்புறம் அது ஆப்பத்துக்கு ஆசைப்படவே இல்லை
!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: