
“உண்மை முகம்”
விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் அலாரம் அடித்தது, அன்றாட வேலைகளை சுறுசுறுப்பாக செய்வதற்காக எழுந்தார் சுப்பிரமணி. சமையலறையில் மின்னல் வேகத்தில் நுழைந்து காபி போட்டு சுட சுட ஒரு கப் காபியை கோழி மாதிரி முழுங்கிக் கொண்டே பிரிட்ஜில் இருந்த காய்கறிகளை வெளியே எடுத்து போட்டார் கூடவே இட்லி மாவையும்.
இன்னொரு டம்ளர் காப்பியை பக்குவமாக ஆத்தி மிதமான சூட்டோடு கையில் கொண்டுவந்து எழுப்பினார் மனைவியை…. லட்சுமி எழுந்திரு என்று …..
இடி இடித்தது போல் ஒரு குரல்…. உங்களுக்கு வேற வேலை இல்லையா காலையிலங்காட்டியும் எழுப்பி உயிரை வாங்க வேண்டியது என்று அலுத்துக் கொண்டே எழுந்தாள் மனைவி……
கிடுகிடுவென்று ஓடிவந்து சமையலறைக்குள் புகுந்து காய்கனிகளில் இன்றைய மெனுவுக்கு தகுந்தவாறு வெட்டி வைத்து வெளியேறினார். ஆறரை மணி வரை தூங்கிய மகள் ஆராதனாவை தலையை கோதி எழுந்திரிடா….. காலேஜுக்கு லேட் ஆகுது இல்ல என்றார்….. போங்கடா டாட் … எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு… என்றபடி முணுமுணுத்தாள்.
அவள் அவசரமாக அம்மா கொண்டுவந்த ஹார்லிக்சை மடக்கு மடக்கு என்று குடித்துக்கொண்டே தலைமாட்டில் இருந்த ஸ்மார்ட்போனை தடவி மேலும் கீழும் உருட்டினாள்…. பிறகு குளித்துவிட்டு மேக்கப் போட ஆரம்பித்தாள் …. எட்டரை மணி வரை கடிகார முள் சுழன்று விட்டது … ரூமில் இருந்து வெளியே வரவே இல்லை விதவிதமான அலங்காரங்கள், ஆடை அணிகலன்கள், வண்ணங்களில் ஒத்துப்போகும் டிசைன்களில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அழகு படுத்தி இருந்தார்.
சாப்பிடாமல் போனால் மயக்கம் வந்துவிடும் என்று சொல்லி இரண்டு இட்லியை கொண்டு வந்து அம்மா தட்டில் நீட்ட வேண்டாவெறுப்பாக அதை வாயில் கன்னத்தில் அடக்கிக் கொண்டாள் …
அப்பா இந்த குழந்தையை பத்திரமாக பேருந்தில் ஏற்றி விட்டுதான் அலுவலகம் செல்லவேண்டும். அதற்காக மகளுடைய பொம்மை பையை எடுத்துக்கொண்டு முன்னாடி போய் வண்டியை ஸ்டார்ட் பண்ணினார். வேகமா அம்மா பஸ் சீக்கிரம் போயிட போகுது…. வெளியிலிருந்து கூப்பிட்டார்…. ஓடிவந்து ஏறிய ஆராதனாவை ஆற அமர அழைத்துச் சென்று பேருந்தில் இடம் பிடித்து ஏற்றிவிட்டு பாய் சொன்னார், பதிலுக்கு இந்த பெண்ணும் பாய் சொன்னாள்,,,,,..
அப்பாடா என்கிற நிம்மதி பெருமூச்சு விடும் இவர் வீடு வந்து சேர்வதற்குள், அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கி விட்டார் ஆராதனா. மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்த பாய்பிரெண்ட் அகிலின் பைக் அவளை பிக்கப் செய்தது. தயாராக வைத்திருந்த ஷாலை வைத்து மறைத்துக் கொண்டாள் கேமரா லென்ஸை விட்டு விட்டு செல்போன் மறைக்கும் கவர் போல… பைக் ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றது , அதிவேக பைக் அவ்வப்போது குறுக்கிட்ட பேருந்து நிறுத்தத்தில் மட்டும் சீறிப்பாய்ந்தது யாரும் அடையாளம் காணக் கூடாதென்று …
சட்டென குறுக்கிட்ட சாலையிலிருந்து மெயின் ரோட்டிற்கு ஏறிய இன்னொரு பைக் தீடீரென்று மோதியது …
அகில் இறங்கி சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டான் , அப்போது அந்த பைக்கில் பின்னே அமர்ந்திருந்த பெண்ணின் ஷால் காற்றில் நழுவி விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தான் அகில், எங்கடி காலேஜுக்கு போறேன்ட்டு பொறுக்கி பயலோட ஊர் சுத்திக்கிட்டுருக்க என்று கத்தினான் தனது தங்கையிடம் …. இந்த வார்த்தை சுளீர் என்று ஆராதனாவின் முகத்தில் அறைந்தது போன்று உணர்ந்தாள். நாளை முதல் அப்பா ஏற்றி விடும் பேருந்திலேயே கல்லூரிக்குச் செல்வது என மனதுக்குள் முடிவெடுத்துவிட்டாள் ஆராதனா …..
பா.சக்திவேல்
கோயம்புத்தூர்.
—