
கவிதைத் தாள்களில் விரல் ஸ்பரிசம்
……………………………………………..
நெஞ்சப்பரப்புகளில் நீட்டி நிமிர்ந்து
உருண்டு புரளுவது நீ மட்டும்தானடி
கடந்துபோகின்ற எல்லா உருவங்களிலும்
உன் தலையை ஒட்டிவைத்தமாதிரியே
கண்ணுக்குத்தெரிகிறது.
உன் பெயர்கொண்ட
கடைகள் கண்ணில் பட்டால்
உள்நுழைந்து அள்ளிவருகிறேன்
உன் நினைவுகளையே.
உன் குறுஞ்செய்தி எல்லாமே வாசிக்கிறேன்
நீ வருஞ்செய்தியை மட்டுமே
நேசிக்கிறேன்.
சன்னல் திரையெல்லாம்
நீ உடுத்திவந்த மயில்பச்சை
வண்ணத்திலேயே என்னுள் விரிகிறது.
நீ வாசித்து விட்டு வைத்துப்போன
கவிதைத் தாள்களில்
விரல் ஸ்பரிசம் உணர்ந்து நெகிழ்கிறேன்.
மொட்டைமாடியில் நிலவை
மெல்லத்தழுவும் ஒற்றைமேகம் பார்த்து
பொறாமையில் புழுங்குகிறேன்
நடுச்சாமத் தூக்கத்தில்
கனவுகலைந்து விழித்ததுபோலவே
நீ அருகிலில்லாத நான்.
காசாவயல் கண்ணன்
தேவதைகள்…!?

உடைந்து போன
திருகாணிக்கு பதிலாய்….?
குச்சியை சொருகும்…
பக்குவம்…!
கிழிந்த ஆடையை..
குண்டூசியை வைத்தே
மானம் மறைக்கும்
மகிமை….!?
இருக்கும் கொஞ்சம் மாவில்…
இரண்டு தோசைகள் வார்த்து
எனக்கு தந்துவிட்டு….
தனக்கு பசியில்லை என பொய் சொல்லி..
பட்டினியாய் படுப்பவள்…..!?
தையல் வேலையை
பக்கத்து வீட்டு மாமியிடம் கற்று…
அவளிடமே
வேலை பார்த்து…?
கிடைத்த பணத்தை
யாருக்கும் தெரியாமல்…
என் சட்டை பையில் வைக்கும் முதிர்ச்சி…
எந்த நிலையில் நான் வீடு வந்தாலும் …?
உள்ளச் சிரிப்போடு
எனை எதிர் கொள்ளும் என் மகள்…!?
ஏழைக்கு பிறந்த
மகள்கள்…!
எல்லா அப்பனுக்கும்
தேவதைகளே….!?
– முனைவர் சா சம்பத்
காலமா?..ஞாபகமா?
சூழ்கொண்ட மேகங்கள்
அவிழ்ந்து விழுகையில்
ஓடிவந்த முதல் துளி
எதுவென்றே தெரியாதது போல..
ஓடி வரும் புது வெள்ளத்தில்
முதலில் கால் நனைத்தது
யாரென்றே தெரியாதது போல..
ஒவ்வொரு இரவிலும்
முதலில் முளைத்த வெள்ளி
எதுவென்றே தெரியாதது போல..
வயல் தூவிய விதை நெல்லில்
முதல் நாற்று எதுவென்றே
தெரியாதது போல…
உருண்டோடிய உயிரணுக்களில்
எந்த துளி கருவானதென்றே
அறியாதது போல..
அம்மா சொல்லிக்கொடுத்த வார்த்தைகளில்
உச்சரித்த முதல் வார்த்தை
எதுவென்றே தெரியாதது போல..
இனிமேலும் நடக்கவிருக்கும்
ஏதோ ஒரு முதல் விசயத்தை
தெரியாது போகாமலிருக்க..
எதை பிடித்துவைக்க வேண்டும்!
காலமா?..ஞாபகமா..?
செம்பா
திருச்சி
