சிறுகதை: தமிழர் திருநாள்
எழுதியவர்: மலர்மதி
அந்த சின்னஞ்சிறு கிராமத்தில் மொத்தம் மூன்றே தெருக்கள்.
விநாயகர் கோவில் தெரு, மசூதி தெரு, சர்ச் தெரு ஆகியவைத்தான் அந்த வீதிகள்.
இந்து, முஸ்லீம், கிருஸ்த்துவ நண்பர்கள் சகோதரப் பாசத்துடன் பழகினர். மத நல்லிணக்கத்துக்கு அந்த அழகிய கிராமம் ஒரு முன்மாதிரி.
தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளில் அதிரசம், கொழுக்கட்டை போன்ற பலகாரங்கள் முஸ்லீம் மற்றும் கிருஸ்த்துவர்களின் இல்லங்களுக்கு வந்து சேர்ந்துவிடும். அதே போன்று ரம்ஜான், பக்ரீத் பெருநாட்களில் பக்கத்து டவுனிலி ருந்து பிரத்தியேகமான சமையல் காரரை வரவழைத்து மட்டன் பிரியாணி சமைத்து கிராமம் முழுக்க விநியோகித்து மகிழ்வர் முஸ்லீம் பெருமக்கள். கிருஸ்த்துவர்களோ அவர்களுடைய பண்டிகையான கிருஸ்த்துமஸ் அன்று ஸ்பெஷல் கேக், சாக்லெட் ஆகியவற்றை எல்லோருக்கும் வழங்குவதோடு, கிருஸ்த்துமஸ் தாத்தாவை அனுப்பி கிராமம் முழுக்க உள்ள குழந்தைகளுக்கு அன்பளிப்புகளை வழங்கி அவர்களை குதூகலமடையவைப்பர்.
ஆக, எந்த ஒரு காழ்ப்புணர்ச்சியுமின்றி அக்கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர். விவசாயமே அவர்களுடைய பிரதான தொழில்.
உழவு மாடுகளைக் குளிப்பாட்டி, அவற்றின் கொம்புகளைச் சீவி ஓட்டிக் கொண்டு விநாயகர் கோவில் தெருவுக்குள் நுழைந்தார் இப்ராஹிம் பாய்.
தெருக்கோடியில் ஒரு சிறு கும்பல்.
மாடுகளின் கொம்புகளுக்கு வித விதமான வர்ணங்கள் பூசுவதில் மும்முர மாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார் பெயின்ட்டர் பொன்னுச்சாமி.
இப்ராஹிம் இரண்டு மாடுகளையும் கம்பத்தில் கட்டிவிட்டு வந்தார்.
“என்ன பாய்… நீங்க எப்படி இங்கே..?” என்று கேட்டார் பொன்னுச்சாமி.
“ஏன், நான் வரக்கூடாதா?” என எதிர் கேள்வியை வீசினார் இப்ராஹிம்.
“அதில்லை பாய். அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம் னுதான் கேட்டேன்.” என்று அவர் சொன்னதும், எல்லோரும் சிரித்தார்கள்.
“இதோ பாருங்க, நான் ஒரு விவசாயி. அதுமட்டுமில்லை. ஒரு பச்சைத் தமிழன். என்னிடம் உழவு மாடுகள் இருக்கு. நானும் மாட்டுப் பொங்கல் கொண்டாடு வதில் என்ன தவறு? பொங்கல் பண்டிகைக்கு ஏன் ‘தமிழர் திருநாள்’ என்று பெயர் வந்தது? தமிழர் அனைவரும் கொண்டாடத்தானே?”
இப்ராஹிம் பாய் சொன்ன விளக்கத்தைக் கேட்டு அனைவரும் அசந்து போயினர்.
“பாய்… என்னை மன்னிச்சிருங்க.” என்ற பொன்னுச்சாமி, பெயின்ட் டப்பா, ப்ரெஷ் சகிதம் மகிழ்ச்சியுடன் இப்ராஹிம் கட்டி வைத்திருந்த மாடுகளை நோக்கிப் போனார்.
@@@@@@@