ஷிம்லா ஸ்பெஷல்! பகுதி-5

தொடரின் முந்தைய பகுதிகள் வாசிக்க:

ஜாக்கூ மந்திர் சென்று அங்கே 108 அடி உயர ஹனுமனையும் ப்ராச்சீன் ஹனுமனையும் தரிசித்த பிறகு ஓட்டுனர் ரஞ்சித் சிங் எங்களை தங்குமிடத்திற்கு அருகில், எங்கேயிருந்து அழைத்துச் சென்றாரோ அதே இடத்தில் கொண்டு விட்டார். ஒரு நாள் வாடகையாக 1500 ரூபாயும் அவருக்கான ஓட்டுனர் பேட்டாவாக 200 ரூபாயும் கொடுத்து அடுத்த நாள் எங்கே வரவேண்டும் என்பதை பிறகு சொல்கிறோம் என்று சொல்லி வழியனுப்பி வைத்தோம். நாளைக்கு கொஞ்சம் அதிக தூரம் பயணிக்க வேண்டும் என்பதால் வேறு வண்டி எடுத்து வருகிறேன் என்று சொல்லி புறப்பட்டுச் சென்றார். அன்றைக்கு எடுத்து வந்திருந்த வண்டி 4 + 1 – சிறிய வண்டி என்பதால் நான்கு பேர் அமர்ந்து செல்ல கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது – அதுவும் பின் சீட்டில் மூன்று பேர் நெருக்கித் தான் உட்கார முடியும்! நீண்ட தூரப் பயணத்திற்கு அது சரி வராது!

நாள் முழுவதும் சுற்றியதில் கொஞ்சம் அலுப்பு. அறைக்குச் சென்று சற்றே ஓய்வெடுத்த பின்னர் ஷிம்லாவின் மால் ரோடுக்குச் செல்ல வேண்டும். ஆனால் மலைப்பகுதியில் மேல் நோக்கி ஏறிச் சென்று, அதன் பிறகு நான்கு மாடி ஏறிச் செல்ல வேண்டும் என்ற நினைப்பே அலுப்பு தந்தது. ஆனாலும் கொஞ்சம் ஓய்வு தேவையாகவே இருக்க – வேறு வழியில்லை என அறைக்குத் திரும்பினோம். சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டோம். மாலை நேரம் என்பதால் அறைக்குத் தேநீர் வரவழைத்துக் குடித்தோம். கடற்கரையில் சூரிய உதயமும், அஸ்தமனமும் பார்ப்பது எவ்வளவு ஸ்வாரஸ்யமோ அதே அளவு ஸ்வாரஸ்யம் அவற்றை மலைப்பகுதிகளில் பார்ப்பது. நாங்கள் இருந்த அறை சற்றே பெரிய அறை – இரண்டு அறைகள் கொண்டது. வாயிலில் வராண்டா வேறு.

ஷிம்லா மால் ரோடில் 100 அடி கொடிக்கம்பமும் கொடியும்…….

வராண்டாவிலிருந்து பார்த்தால் மலைமுகட்டில் சூரிய அஸ்தமனம் ஆரம்பித்திருந்தது – செக்கச் சிவந்த வானம் – மணிரத்தினம் படம் பற்றி சொல்ல வில்லை! வானத்தின் வர்ணஜாலத்தினைச் சொல்கிறேன்! ஜன்னல்களைத் திறந்து அங்கிருந்தே சூரியனின் அஸ்தமனக் காட்சிகளைக் கேமராக் கண்களில் சிறைபிடித்தோம். நான் ஒரு பக்கத்தில் நின்று எடுக்க, நண்பர் மற்றொரு பக்கத்தில் எடுத்துக் கொண்டிருந்தார். சில நிமிடங்கள் படங்கள் எடுத்த பிறகு மால் ரோடு உலா செல்ல ஒவ்வொருவராக தயாரானோம். ஷிம்லாவின் மால் ரோடு மாலை நேரங்களில் உலா வர ரொம்பவே பிரபலமானது. மொத்த சுற்றுலா பயணிகளும் மாலை நேரத்தில் அங்கே தான் இருப்பார்கள். நாள் முழுவதும் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களுக்குச் சென்ற பிறகு மாலையில் மால் ரோடு உலா தான். ஜகஜ்ஜோதியாக இருக்கும்.

ஆங்கிலேயர்கள் காலத்தில் அமைத்த விளக்குக் கம்பங்கள், கட்டிடங்கள், தேவாலயம், விதம் விதமான கடைகள், மலைப்பகுதிகளில் ஆங்காங்கே ஒளிர்விடும் விளக்குகள் என அனைத்தும் அழகு – புது மணம் புரிந்த ஜோடிகள் கைகளுக்குள் கைகளை பிடித்தபடி வாழ்க்கையை ரசிக்க, பழைய ஜோடிகள் வாரிசுகளை முன்னர் நடக்கவிட்டு கைகளைப் பிடித்துக் கொண்டு பழைய நினைவுகளை மீட்டெடுக்க, அத்தனையும் ரசனை – இதில் எங்கள் போன்று தனிக்கட்டைகளாகச் செல்பவர்கள் – அவர்களைப் பார்த்து – ஆஹா “நல்லா இருங்கடே” என்று வாழ்த்தியபடி காட்சிகளை ரசித்தபடிச் செல்வது ஒரு அழகு! எத்தனை எத்தனை காட்சிகள் அங்கே. பார்க்கப் பார்க்க பரவசம் – சாலையோரக் கடைகளிலிருந்து அழைப்புகள் – அவர்களிடம் இருக்கும் பொருட்களை வாங்கச் சொல்லி அழைப்புகள்.

ஷிம்லா மால் ரோடில் தேவாலயமும் மலையில் ஹனுமனும்…….

குளிர்காலம் என்பதால் தேநீர் எவ்வளவு குடித்தாலும் இன்னும் தேவை என்றே தோன்றும். மால் ரோடு பகுதியில் நடக்கும்போது எங்காவது தேநீர் – கட்டஞ்சாய் [கேரளத்தினருக்கு அது தான் தேவை!] கிடைக்குமா எனக் கேட்டால் எங்களை மேலும் கீழும் பார்த்து இங்கே எல்லாம் கிடைக்காது என்று சொல்லிவிட்டார்கள். நான்கு ஐந்து கடைகளில் கேட்டபிறகு சரி வேறு வழியில்லை என தேநீர் குடித்தோம். ஓகே ரகம் என்றாலும் குளிருக்கு இதமாக இருந்தது. சில கடைகளில் விதம் விதமாக பான் வைத்திருந்தார்கள். இரவு உணவினை முடித்த பிறகு வந்திருந்தால் பான் சுவைத்திருக்கலாம் – சாக்லேட் பான் கூட கிடைத்தது! வடக்கில் கிடைக்கும் பான் வகைகள் நிறையவே – ஃபையர் பான் என்று கூட ஒன்று உண்டு – அப்படியே நெருப்புடன் வாயில் போடுவார்கள்!

இந்த மால் ரோடு பகுதியில் இருக்கும் தேவாலயம் மிகவும் பழமையானது. ஆங்கிலேயர்கள் இந்தப் பகுதியை தங்களது கோடைக்கால தலைநகராக வைத்திருந்ததால், இங்கே தங்களுக்கு ஒரு வழிபாட்டுத் தலம் தேவை என்று உருவாக்கியது அந்த தேவாலயம். 9 செப்டம்பர் 1844 அன்று அடிக்கல் நாட்டப்பட்டாலும், இந்த தேவாலயம் கட்டி முடிக்க கிட்டத்தட்ட 13 வருடங்கள் ஆனதாம்! 1857-ஆம் ஆண்டு தான் தேவாலயம் திறக்கப்பட்டது. தேவாலயம் கட்ட ஆன மொத்த செலவு ரூபாய் 50,000/-. அதில் ரூபாய் 12,000/- மட்டும் அரசு கஜானாவிலிருந்து மீதி தனியார் நபர்களிடம் வசூலித்ததாம். அழகிய இந்த தேவாலயம் இன்றும் மால் ரோடு பகுதியில் ரிட்ஜ் என அழைக்கப்படும் இடத்தில் அமைந்திருக்கிறது.

மால் ரோடு பகுதியில் இருக்கும் கட்டிடங்கள் விளக்கொளியில் ரொம்பவே அழகு. சில வருடங்கள் முன்னர் இந்த மால் ரோடு பகுதியில் 100 அடி உயர கம்பம் நிறுவப்பட்டு அதில் இந்திய தேசத்தின் கொடி பட்டொளி வீச பறக்க விட்டிருக்கிறார்கள். நம் தேசத்தின் கொடி அங்கே பறந்த வண்ணம் இருப்பது சிறப்பு. இந்தியாவின் பல பகுதிகளில் இப்படியான கம்பங்களை SAIL நிறுவனம் வைத்திருக்கிறது. தலைநகர் தில்லியில் கூட இப்படியான கொடிக்கம்பங்கள் உண்டு. ஏற்கனவே படமும் என் பதிவில் வெளியிட்டது நினைவில் இருக்கலாம். இப்படியான அழகு மிகு மால் ரோடு பகுதியில் சில நிமிடங்கள் செலவழித்த பிறகு எங்கள் தங்குமிடம் நோக்கி நடந்தோம்.

ஷிம்லா மால் ரோடில் – சாக்லேட் பான்…….

தங்குமிடத்திலேயே ஹல்திராம் உணவகம் இருக்கிறது. ஒரு வழியாக சாப்பிட்ட பிறகே அறைக்குச் செல்வோம் என முடிவு செய்து ஹல்திராம் சென்றோம். அறைக்குச் சென்று மீண்டும் இறங்கி ஏற யாருக்கும் இஷ்டமில்லை! ஹல்திராமில் சிம்பிளாக தால், சப்பாத்தி, சப்ஜி என சாப்பிட்டு அறைக்குத் திரும்பினோம். ஷிம்லா நகரில் முதலாம் நாள் நல்லபடியாக கழிந்தது. அடுத்த நாள் ஷிம்லா நகரின் அருகில் இருக்கும் சில இடங்களுக்குச் செல்வதாக உத்தேசம். அடுத்த நாள் என்ன செய்தோம் என்பதை வரும் பகுதியில் சொல்கிறேன்.

ஷிம்லா நகரில் முதல் நாள் இரவு மால் ரோடு பகுதியில் சுற்றி முடித்து இரவு உணவிற்குப் பிறகு அறைக்குத் திரும்பினோம். நல்ல குளிர். கேரளத்திலிருந்து வந்திருந்த நண்பர்கள் – முதல் முறையாக இந்தக் குளிரை அனுபவிப்பதால் கொஞ்சம் கஷ்டப்பட்டார்கள். அறையில் ரூம் ஹீட்டர்கள் இருந்ததால் கொஞ்சம் தப்பித்தார்கள். அன்றைய கணக்கு வழக்குகளை எழுதி முடித்து உறக்கத்தினைத் தழுவினோம். சில நிமிடங்கள் வரை குரங்குகள் தகர மேற்கூரையில் குதித்து ஓடுவது கேட்டுக் கொண்டிருந்தது! பிறகு அவையும் தூங்கி விட்டன போலும். நாங்களும் உறங்க முடிந்தது. விடியற்காலையில் எழுந்து ஒவ்வொருவராக தயார் ஆனோம். முதல் நாள் மாலை சூரிய அஸ்தமனம் கண்டோம் என்றால் இரண்டாம் நாள் காலை சூரிய உதயம். சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

ஓட்டுனர் ரஞ்சித் சிங் அவர்களை அழைத்து சொன்னபடி வரச் சொல்லி ஒரு ரிமைண்டர் கால்! கவலை வேண்டாம் சொன்னபடி வருவேன் என அவர் பதில்! கைகளில் கேமரா பைகளோடு எங்கள் இரண்டாம் நாள் பயணம் துவங்கியது. இரண்டாம் நாள் நாங்கள் செல்ல திட்டமிட்டது நார்க்கண்டா என்ற ஒரு இடத்திற்கு! ஷிம்லா நகரிலிருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது நார்கண்டா. வழியில் குஃப்ரி நகரம். போகும் வழியில் குஃப்ரியில் காலை உணவை சாப்பிடலாம் என்று சொன்னார் ரஞ்சித் சிங். ஷிம்லா நகரிலிருந்து குஃப்ரி 18 கிலோ மீட்டர் தொலைவில். சரி காலை உணவை அங்கே முடித்துக் கொண்ட பிறகு நேராக நார்கண்டா சென்று விடலாம். திரும்பி வரும் வழியில் குஃப்ரி பார்க்கலாம் என்பது திட்டம்.

குஃப்ரி நகரில் ஒரு உணவகத்தில் நிறுத்தினார் ஓட்டுனர். அனுபவம் நிறைந்த ஓட்டுனர்களுக்கு எந்த இடத்தில் உணவு நன்றாக இருக்கும் என்பது தெரியும். அடிக்கடி அந்தப் பாதையில் பயணித்திருக்கும் ஓட்டுனர் என்றால் அவரிடமே உணவகம் தேர்ந்தெடுக்கும் பணியை விட்டுவிடுவது நல்லது – நல்ல உணவகமாகப் பார்த்து நிறுத்தச் சொன்னால் போதுமானது! அப்படித்தான் நாங்கள் உணவகப் பொறுப்பினை ரஞ்சித் சிங்-இடம் கொடுத்து விட்டோம்! ஒரு வேலை மிச்சம்! அவர் எங்களை அழைத்துச் சென்று விட்ட இடம் நன்றாகவே இருந்தது – முதலில் ஒரு அறை – பிறகு ஒரு தடுப்பு – அதன் பின்னர் இன்னுமொரு அறை. பின் புற அறைக்குச் சென்று அமர்ந்து கொள்ளுங்கள் என்றார் சிங்! அங்கே சென்றால் வாவ்! அறையின் முடிவில் பெரிய கண்ணாடிச் சுவர் – அந்தப் பக்கம் இயற்கை – மலைகளும் சிகரங்களும்!

பராட்டாவும் ஊறுகாயும்…

வழக்கம் போல நான் பராட்டா சொல்ல, கேரள நண்பர்கள் “தோசா” – தென்னிந்திய உணவுக்கு ஆசை வந்து விட்டது – வந்த சில நாட்களிலேயே! – நன்றாக இருக்காது என்று தெரிந்ததால், சுமாராகத்தான் இருக்கும் என்ற தகவலைச் சொன்னேன். ஆனால் விதி வலியது – தோசை மட்டுமே வேண்டும் என அவர்கள் சொல்ல, ஆலு பராட்டா, ப்யாஜ் பராட்டா மற்றும் தோசை என ஆர்டர் கொடுத்தோம். அதன் பிறகு, உணவு வரும் வரை அறையிலிருந்து இயற்கைக் காட்சிகளை ரசிப்பதும், நிழற்படங்கள் எடுப்பதுமாகக் கழிந்தது. உணவும் வந்தது – நானும் நண்பர் பிரமோத்-உம் பராட்டா சாப்பிட மற்ற நண்பர்கள் தோசை சாப்பிட்டார்கள். ஒரு விள்ளல் உள்ளே போனதும் முகம் கோணலானது! சுவை அப்படி! வட இந்தியர்களுக்கு இன்னும் தோசை செய்யும் பக்குவம் கைவரவில்லை.

பராட்டாவுக்குக் காத்திருந்த வேளையில்…

”கொள்ளாம்” என்று வெளியே சொன்னாலும், ருசித்து சாப்பிடவில்லை! குளிர் காலத்தில் நல்ல பசி எடுக்கும். அந்த ஒரு தோசை எந்த மூலைக்கு! வேறு என்ன வேண்டும் எனக் கேட்க ‘ஆலு பராட்டா’ என்றார்கள் இருவரும் கோரஸாக! நாங்கள் எங்களுக்கும் சொல்ல இரண்டாவது ரவுண்ட் பராட்டக்களுக்குக் காத்திருந்தோம். காலையில் ஒன்று அல்லது இரண்டு பராட்டாக்களுக்கு மேல் சாப்பிட முடியாது. கூடவே தேநீரும் வந்தது. நான்கு பேரும் சாப்பிட்டு முடிந்த பின் பில் வந்தது – மொத்தமாக – சிப்பந்திக்கான டிப்ஸ் சேர்த்து ரூபாய் 550 மட்டும்! பணத்தைக் கொடுத்த பின் வெளியே வந்து வாகனத்தில் – இன்று வேறு வாகனம் கொண்டு வந்திருந்தார் – அமர்ந்தோம். நார்க்கண்டா தான் இனிமேல் நிற்கும்!

நார்கண்டா செல்லும் வழியெங்கும் ஓரங்களில் ஆப்பிள் தோட்டங்கள். பூ விட்டு காய்க்க ஆரம்பிக்கவில்லை. பூக்கள் இனிமேல் தான் வரும். மொட்டையாக இருந்த மரங்களை பயணித்தபடியே பார்த்துக் கொண்டோம். காய்க்கும் சமயமாக இருந்தால் நிறுத்தி ஆப்பிள் தோட்டத்தினைப் பார்த்திருக்கலாம். வழியெங்கும் இயற்கைக் காட்சிகள் – ரொம்பவே அழகு. குறுகிய மலைப்பாதையிலும் நல்ல வேகத்தில் ஓட்டிச் செல்கிறார் ரஞ்சித் சிங். அவரிடம் பேசியபடியே வந்தோம். ஹிமாச்சலப் பிரதேசத்தின் பல சுற்றுலாத் தலங்களுக்கும் பலமுறை சென்றிருப்பதாகச் சொன்னார். எங்களுக்கு ஹிமாச்சலப் பிரதேசத்தின் சில விடுபட்ட தலங்களுக்குச் செல்லும் திட்டம் இருந்ததால் அவரிடம் விசாரித்துக் கொண்டிருந்தோம்.


ஹிமாச்சலப் பிரதேசத்தில் Tribal Circuit என்றழைக்கப்படும் இடங்களுக்கு பயணிக்க வேண்டும் என்பது நண்பர் பிரமோத் மற்றும் என்னுடைய ஆசை. அதற்கு எத்தனை நாட்கள் ஆகும், எப்படி வழி என்ற தகவல் எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தோம். அவரும் தில்லியிலிருந்து ஷிம்லா வரை வந்து விடுங்கள், நான் உங்களை எல்லா இடத்திற்கும் அழைத்துச் செல்கிறேன் – கட்டணம் எல்லாம் அப்போது பேசிக் கொள்ளலாம் – எல்லா இடங்களுக்கும் நான் பயணித்த அனுபவம் உண்டு என்று சொல்லிக் கொண்டு வந்தார். அவரிடம் விவரங்கள் கேட்டுக்கொண்டோம். திட்டமிட வேண்டும் – ஜூன் ஜூலை மாதங்களில் செல்லலாம் என்ற திட்டம் – ஆனால் இந்த வருடம் செல்ல முடியவில்லை!

விவரங்களைக் கேட்டுக்கொண்ட படியே எங்கள் பயணம் தொடர்ந்தது. நார்கண்டா பகுதிக்கு வந்து சேர்ந்திருந்தோம்.

ஹாதூ பீக் – ஷிம்லா மாவட்டத்தில் இருக்கும் உயரமான மலைச்சிகரம் இந்த ஹாதூ பீக். தேவதாரு, பைன், கேதுரு, தளிர் மரங்கள் நிறைந்த வனப்பகுதிகளுடன் மலைத்தொடர்களும், பனிச்சிகரங்களும் பார்க்கவே அழகான ஒரு மலைச்சிகரம் இந்த ஹாதூ பீக். அப்படி ஒரு அமைதி அந்த மலைச்சிகரத்தில். அப்படி என்ன இருக்கிறது அங்கே என்று சிலர் கேட்கலாம் – அமைதி, அமைதி அப்படி ஒரு அமைதி – சுற்றிலும் பனிபடர்ந்த மலைகளும், மரங்களும் இருக்கும் அந்த இடத்தில் சில நிமிடங்கள் இருந்தபோது மனதுக்குள் ஒரு மகிழ்ச்சி. இங்கே ஒரு அழகான கோவிலும் உண்டு – ஹாதூ மாதா கோவில்! கோவிலின் பிரதான தேவி யார் தெரியுமா – ராவணனின் மனைவியான மண்டோதரி! இந்தப் பகுதி மக்கள் சிரத்தையுடன் பூஜிக்கும் கோவில் இந்த ஹாதூ மாதா கோவில்.


நார்கண்டா பகுதி ஆப்பிள் தோட்டங்களுக்கும் பெயர்போனவை. ஆப்பிள் சீசனில் இங்கேயிருந்து தான் இந்தியாவின் பல பகுதிகளுக்கும் ஆப்பிள் கொண்டு செல்லப்படுகிறது. மலைப்பாங்கான சாலை என்பதால் இங்கே வருவதும் போவதும் ரொம்பவே த்ரில்லான விஷயம். அதுவும் நார்கண்டா நகரிலிருந்து ஹாதூ பீக் வரை இருக்கும் கரடு முரடான பாதையில் பெரிய வாகனங்கள் வர இயலாது. சிறிய கார்/ஜீப் போன்றவை தான் வர முடியும். அதுவே எதிரே இன்னுமொரு வாகனம் வந்தால் முன்னும் பின்னும் சென்று தான் ஒரு வாகனத்தினை மற்ற வாகனம் கடக்க முடியும். நாங்கள் சென்ற போது எடுத்த ஒரு காணொளியை உங்களுக்காகவே இணைத்திருக்கிறேன்.

நாங்கள் செல்லும்போது எதிரே ஒரு வாகனம் வர எங்கள் வண்டி பின்னால் வந்து முன்னே சென்றது – இடது பக்கத்தில் பள்ளம் – இதோ இப்போ விழுந்து விடும் என்று நினைக்கும் அளவு இருந்தது – இருக்கையின் நுனிக்கு வந்திருந்தேன் நான்! ஓட்டுனர் ரஞ்சித் சிங் என்னைப் பார்த்து புன்னகைத்து, ஒண்ணும் ஆகாது என்கிறார்! விழுந்தா என் பக்கம் தான் முதலில் விழும் என நினைத்தபடியே நானும் புன்னகைத்தேன்! அந்த குறுகிய பாதையிலும் அப்படி ஒரு வேகத்தில் வாகனம் செல்கிறது! பெரும்பாலான வாகன ஓட்டிகள் கீழேயிருந்து வரும்போது ஒரு பகுதி வரை கொண்டு வந்து விட்டு, மேலே நடந்து போகும்படிச் சொல்லி விடுகிறார்கள். அனுபவசாலிகள் மட்டுமே இந்தப் பாதையில் மேலும் பயணித்து ஹாதூ மாதா கோவில் வரை வாகனத்தினைச் செலுத்துகிறார்கள். ரஞ்சித் சிங் கோவில் வரை சென்றார்!

நிறைய வாகன ஓட்டிகள் பயணிகளை இறக்கிவிட்டு நடந்து போகச் சொல்கிறார்கள் – சுமார் ஒரு கிலோமீட்டர் மலைப்பாதையில் மேல் நோக்கி நடக்க வேண்டும – இயற்கைக் காட்சிகளை ரசித்தபடியே நடந்து போவதும் ஒரு வித அனுபவம் தானே. நாங்கள் சென்றபோது ஹிமாச்சல் சுற்றுலாத்துறை ஹாதூ பீக் பகுதியில் ஒரு கட்டிடம் கட்டிக் கொண்டிருந்தார்கள். அதுவரை சுற்றுலாத் துறையினரின் எந்தவித நடவடிக்கையும் அங்கே இல்லை. கோவிலும் கோவிலில் இருக்கும் பூஜாரிகள் மட்டுமே இருக்கிறார்கள் அந்தப் பகுதியில். மிகவும் அழகான கோவில். முற்றிலும் மரங்களாலேயே கோவில் வெளிப்பகுதி சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கோவில் நாங்கள் சென்ற போது மூடியிருந்ததால் மண்டோதரியை தரிசிக்க முடியவில்லை. வெளியிலிருந்தே பார்த்து வர வேண்டியிருந்தது.

இந்தப் பகுதியில் இன்னுமொரு விசேஷமும் உண்டு! அது தனிக் கதை – பாண்டவர்கள் சம்பந்தப்பட்ட கதை – பாண்டவர்கள் அஞ்ஞாதவாசத்தின் போது இந்தப் பகுதியில் சில நாட்கள் இருந்தார்கள் என்றும் இங்கே சமைத்துச் சாப்பிட்டார்கள் என்றும் சொல்கிறார்கள். இப்போதும் இங்கே அந்த அடுப்பு போன்ற அமைப்பு, ஹாதூ மாதா கோவில் பகுதியில் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். நாங்கள் சென்ற போது கோவில் பூட்டியிருந்ததால் எங்களால் அந்த அமைப்பினைப் பார்க்க முடியவில்லை. ஆனாலும் கோவில் பகுதியில் இருந்த சிலரிடம் கேட்கவும் தோன்றவில்லை. நாங்கள் சென்றபோது ஷிம்லாவில் பனிப்பொழிவு இல்லை. ஹாதூ பீக் பகுதியில் முந்தைய நாள் மாலையில் பனிப்பொழிவு இருந்தது என்று சொல்லி மலைப்பகுதியில் உறைந்து கிடந்த பனியைக் காண்பித்தார்கள்.


கேரளத்திலிருந்து வந்திருந்த இரண்டு நண்பர்கள் முதல் முறையாக வடக்கே வந்திருந்தார்கள் – அவர்களுக்கு இந்தப் பனிப்பொழிவு பார்த்ததிலேயே அவ்வளவு மகிழ்ச்சி. இன்னும் சில நாட்கள் கழித்து இங்கே வந்திருந்தால் இன்னும் அதிகப் பனிப்பொழிவு பார்த்திருக்கலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தோம். ஒரு பகுதியில் நண்பர் பிரமோத் கால் வைக்க, பனியில் சறுக்கி தடுமாறி விழப்போய் ஒரு வழியாக சமாளித்துக் கொண்டார். ஆனாலும் கொஞ்சம் தோலை வழட்டிவிட்டிருந்தது! பனிப்பொழிவு அதிகம் இருந்திருந்தால் இங்கே வரை நிச்சயம் வாகனத்தில் வந்திருக்க முடியாது. நடக்கவும் முடியாது. ரொம்பவே அதிகம் பனிப்பொழிவு இருக்கும் சமயத்தில் கோவிலும் மூடி விடுவார்கள் என்று தெரிகிறது.


ஹாதூ பீக் – கடல் மட்டத்திலிருந்து 3400 மீட்டர் அதாவது 11152 அடி உயரத்தில் இருக்கிறது இந்த மலைச்சிகரம். ஏற்கனவே 16500 அடி உயரச் சிகரத்திற்கு நான் சென்றிருக்கிறேன் என்றாலும் இங்கே கிடைத்த அனுபவங்களும் நன்றாகவே இருந்தது. ஹாதூ பீக் பகுதியில் மூன்று பெரிய பாறைகள் தனித்தனியே நிற்க அதன் அருகே நின்று கொண்டு நிறைய நிழற்படங்கள் எடுத்தோம். சிறிது நேரம் அங்கே அமர்ந்து அந்த குளிரில் பனிபடர்ந்த சிகரங்களையும் மலைமுகட்டில் இருந்த மரங்களையும் இயற்கைக் காட்சிகளையும் ரசித்துக் கொண்டிருந்தோம். எவ்வளவு நேரம் அப்படி அமர்ந்திருப்போம் என்று தெரியவில்லை. அப்படியே அங்கே இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம் என்றும் தோன்றியது.

இந்த நார்கண்டா பகுதியில் சில காட்டேஜ்/ரிசார்ட்கள் இருக்கின்றன. ஹாதூ பீக் போன்ற சில மலைச்சிகரங்களுக்கு ட்ரெக்கிங் வசதிகள் இங்கே இருக்கின்றன. அப்படி இருந்த ஒரு ரிசார்ட் பெயர் – அஞ்ஞாத் வாஸ்! அங்கேயே சில நிமிடங்கள் இருந்தோம். கேரள நண்பர்கள் இருவரும் பனித்துகள்களை எடுத்து வீசி விளையாடினார்கள். மலைப்பகுதியில் எங்கெல்லாம் நடக்க முடியுமோ நடந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு இந்த அனுபவம் புதியது என்பதால் மிகவும் ரசித்துக் கொண்டிருந்தார்கள். ஷிம்லா நகர் கூட எங்களுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனால் இந்த இடம் ரொம்பவே அழகு என்று திரும்பத் திரும்ப சொல்லியதோடு, அங்கிருந்து நகர மனமே இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒரு வழியாக அங்கேயிருந்து நடந்த போது வேறு ஒரு குடும்பத்தினர் அங்கே வந்தார்கள் – ஒரு புதுமணத் தம்பதியும் குடும்பத்தினரும் – அந்தத் தம்பதியினரை ஏற்கனவே இத்தொடரின் முன்னோட்டப் பதிவில் பார்த்திருக்கிறோம்.


அழகான இடத்திலிருந்து வர மனதே இல்லாமல் புறப்பட்டு நடந்து வாகனம் நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்தோம். ஓட்டுனர் ரஞ்சித் சிங் சுகமான உறக்கத்தில் இருந்தார். அவரை எழுப்பி, மீண்டும் அந்த குறுகிய மலைவழிப்பாதையில் பயணத்திற்கு தயாரானோம். அங்கிருந்து எங்கே சென்றோம், கிடைத்த அனுபவங்கள் என்ன என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன். நார்கண்டா, ஹாதூ பீக் பகுதியில் எடுத்த படங்களில் சிலவற்றை மட்டுமே பகிர்ந்து கொள்ள முடிந்தது. மற்றவை பிறிதொரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன்!

பயணம் நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: