உண்மை முகம்.

“உண்மை முகம்”

விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் அலாரம் அடித்தது, அன்றாட வேலைகளை சுறுசுறுப்பாக செய்வதற்காக எழுந்தார் சுப்பிரமணி. சமையலறையில் மின்னல் வேகத்தில் நுழைந்து  காபி போட்டு சுட சுட ஒரு கப் காபியை கோழி மாதிரி முழுங்கிக் கொண்டே பிரிட்ஜில் இருந்த காய்கறிகளை வெளியே எடுத்து போட்டார் கூடவே இட்லி மாவையும்.

இன்னொரு டம்ளர் காப்பியை பக்குவமாக ஆத்தி மிதமான சூட்டோடு கையில் கொண்டுவந்து எழுப்பினார் மனைவியை…. லட்சுமி எழுந்திரு என்று …..

இடி இடித்தது போல் ஒரு குரல்…. உங்களுக்கு வேற வேலை இல்லையா காலையிலங்காட்டியும்  எழுப்பி உயிரை வாங்க வேண்டியது என்று அலுத்துக் கொண்டே எழுந்தாள் மனைவி……

கிடுகிடுவென்று ஓடிவந்து சமையலறைக்குள் புகுந்து காய்கனிகளில் இன்றைய மெனுவுக்கு  தகுந்தவாறு   வெட்டி வைத்து வெளியேறினார். ஆறரை மணி வரை தூங்கிய மகள் ஆராதனாவை தலையை கோதி எழுந்திரிடா….. காலேஜுக்கு லேட் ஆகுது இல்ல என்றார்….. போங்கடா டாட் … எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு… என்றபடி முணுமுணுத்தாள்.

அவள் அவசரமாக அம்மா கொண்டுவந்த ஹார்லிக்சை  மடக்கு  மடக்கு என்று குடித்துக்கொண்டே தலைமாட்டில் இருந்த  ஸ்மார்ட்போனை தடவி மேலும் கீழும் உருட்டினாள்…. பிறகு குளித்துவிட்டு மேக்கப் போட ஆரம்பித்தாள் …. எட்டரை மணி வரை கடிகார முள் சுழன்று விட்டது … ரூமில் இருந்து வெளியே வரவே இல்லை விதவிதமான அலங்காரங்கள், ஆடை அணிகலன்கள், வண்ணங்களில் ஒத்துப்போகும் டிசைன்களில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அழகு படுத்தி இருந்தார்.

சாப்பிடாமல் போனால் மயக்கம் வந்துவிடும் என்று சொல்லி இரண்டு இட்லியை கொண்டு வந்து அம்மா தட்டில் நீட்ட வேண்டாவெறுப்பாக அதை வாயில் கன்னத்தில் அடக்கிக் கொண்டாள் …

அப்பா இந்த குழந்தையை பத்திரமாக பேருந்தில் ஏற்றி விட்டுதான் அலுவலகம் செல்லவேண்டும். அதற்காக மகளுடைய பொம்மை பையை எடுத்துக்கொண்டு முன்னாடி போய் வண்டியை ஸ்டார்ட் பண்ணினார். வேகமா அம்மா பஸ் சீக்கிரம் போயிட போகுது…. வெளியிலிருந்து கூப்பிட்டார்…. ஓடிவந்து ஏறிய  ஆராதனாவை  ஆற அமர அழைத்துச் சென்று பேருந்தில் இடம்  பிடித்து  ஏற்றிவிட்டு பாய் சொன்னார், பதிலுக்கு இந்த பெண்ணும் பாய் சொன்னாள்,,,,,..

அப்பாடா என்கிற நிம்மதி பெருமூச்சு விடும் இவர் வீடு வந்து சேர்வதற்குள், அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கி விட்டார் ஆராதனா. மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்த பாய்பிரெண்ட் அகிலின்   பைக் அவளை பிக்கப் செய்தது.  தயாராக வைத்திருந்த ஷாலை  வைத்து மறைத்துக் கொண்டாள் கேமரா லென்ஸை விட்டு விட்டு செல்போன் மறைக்கும்  கவர் போல… பைக்  ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றது ,  அதிவேக பைக் அவ்வப்போது குறுக்கிட்ட பேருந்து நிறுத்தத்தில் மட்டும் சீறிப்பாய்ந்தது யாரும் அடையாளம் காணக் கூடாதென்று …

சட்டென குறுக்கிட்ட சாலையிலிருந்து மெயின் ரோட்டிற்கு ஏறிய இன்னொரு பைக் தீடீரென்று மோதியது …

அகில்  இறங்கி சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டான் , அப்போது அந்த பைக்கில் பின்னே அமர்ந்திருந்த பெண்ணின்  ஷால் காற்றில் நழுவி விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தான் அகில், எங்கடி காலேஜுக்கு போறேன்ட்டு பொறுக்கி பயலோட ஊர் சுத்திக்கிட்டுருக்க என்று கத்தினான் தனது தங்கையிடம்  …. இந்த வார்த்தை சுளீர் என்று ஆராதனாவின் முகத்தில் அறைந்தது போன்று உணர்ந்தாள். நாளை முதல் அப்பா ஏற்றி விடும் பேருந்திலேயே கல்லூரிக்குச்  செல்வது என மனதுக்குள் முடிவெடுத்துவிட்டாள் ஆராதனா …..

பா.சக்திவேல்

கோயம்புத்தூர்.

கவிதைச்சாரல்

எப்ப மச்சான் வருவீக..?

-‘பரிவை’ சே.குமார்.

டுத்த தையிக்குள்ள

பரிசம் போடுவேன்னு

அய்யானாரு வாசலிலே

அடிச்சிச் சொன்னியளே…

அதை மறந்து போனியளோ..?

வெத்தலக் கொடியோரம்

வெசனப்பட்டு நிக்கயில

மாருல சாச்சிக்கிட்டு

தைரியம் சொன்னியளே…

அதை மறந்து போனியளோ..?

உங்க நினைவோட

உழுத வயலுக்குள்ள

அழுது நிக்கயில

ஆதரவா அணச்சீங்களே…

அதை மறந்து போனியளோ..?

திருவிழா ராத்திரி

தெருவுல நான் போக

பின்னால நீங்க வந்து

கைபிடித்து நடந்தீங்களே…

அதை மறந்து போனியளோ..?

கொட்டச் செடியோரம்

கொலுசு மாட்டிவிட்டு…

காலில் கோலமிட்டு

குறுகுறுக்க வச்சியளே…

அதை மறந்து போனியளோ..?

சொல்லித் தையி மூணாச்சு…

சொந்தமெல்லாம் கேட்டாச்சு…

வரும் தையில் வருவீங்கன்னு

வசதியாச் சொல்லி வச்சேன்…

உங்கழுத்துல எந்தாலின்னு

உறுதியாச் சொன்னியளே..!

எங்கழுத்து ஏங்கி நிக்கி

எப்ப மச்சான் வருவீக…?

ஜீவா கவிதைகள்

வாசல் திறந்திருந்தும்

வார்த்தைகள்

விரதமிருக்கிறது…..

மெளனங்கள்

நம்மை தாங்கியபடி

உரையாடும் பொழுதுகளில்!!!

நீ இல்லா
பொழுதுகளில்….
உன் நினைவுகளை
என்னிலிருந்து வெளியாக்கி
உயிரற்ற புகையாய் 
மாற்றுகிறது……


நீ வெறுக்கும்
என் ஆறாம் விரல்!!! 
******************************************
மீட்டிய வீணையில் இருந்து 
விரல் எடுத்தபின்பும் 
இசை வழிவது போல்


நம் இதயங்கள்
மெளனமாய் பறிமாறிக்கொள்ளும்
முத்தங்களின் ஓசைகள் எல்லாம்


என் நினைவுக் குழிகளுக்குள் 
உறங்கிக்கிடகிறது ……..
லயம் மாறாத இச்சுகளுடன்!!!! 
********************************************
          ஜீவா (6384842078) 
             கோயம்புத்தூர்

கவிதைச்சாரல்

பாரியன்பன் – கவிதைகள்

*******************************

1.

ஆரம்பத்தில்

எப்படி இருந்தீர்களோ

அப்படித்தான் நானும் இருந்தேன்.

இப்போது நீங்கள்

இப்படி இருப்பதற்கு

ஒருகாரணம் இருப்பதுபோல்;

நான் இப்படி இருப்பதற்கும்

ஒரு காரணம் இருக்கிறது.

ஒருவிதத்தில் நீங்கள்

இப்படி இல்லாமல்

அப்படியே இருந்திருந்தாலும்

நான் இப்படி இருப்பதற்கு

நீங்கள் யாரும்

வருந்தப் போவதில்லை.

நீங்கள் அப்படி இல்லாமல்

இப்படி மாறி இருப்பதற்கு

நான் மட்டுமாவது

வருந்திக் கொள்கிறேன்

உங்களுக்காக…!

2.

தூரத்தில்

பயணப்படும் இருவரும்

எதிரிலிருக்கும் இருக்கையில்

அமர்ந்து சென்றிருக்கலாம்.

இருக்கையில் இளைப்பாராமலும்

கடந்து கொண்டிருக்கலாம்.

இருக்கையும் சூழலும்

சற்று அமரச்சொல்லி இழுக்கிறது

என்னை.

அவ்விருவருக்கும் இச்சூழல்

எப்படி இருந்ததோ தெரியாது.

இருவரும் என் பார்வையின்

எல்லைக்குள்தான்

இருந்து கொண்டிருக்கிறார்கள்.

சுவாரஸ்யம் மிகுதி பட

பதட்டமின்றி

நடந்து கொண்டிருக்கிறார்கள்.

பொதுவான சாலை

பொதுவான மரங்கள்

பொதுவான நிழல்கள்

பொதுவான விளக்குகள்

பொதுவான இருக்கை

என எல்லாமும்

பொதுவாய் இருக்க

அவ்விருவரைப் பற்றிய கவலை

தற்போது எனக்கு வேண்டாம்.

பொதுவான இருக்கையில்

நான் அமர்ந்து சற்றே

இளைப்பாறி கொள்வதில்

அப்படியொன்றும்

பெரிதாய்ப் பிழை

நிகழ்ந்து விடப் போவதில்லை.

– கவிதைகள் ஆக்கம்

* பாரியன்பன்

குடியேற்றம் – 632602

கைப்பேசி ; 9443139353.

பாலென காதல் பொங்கும்

முன் புற  மாடி  வீட்டின்

முன்றலில்  ஓர் இ  ளைஞன்

மின் கதிர்  பார்வை  யாலென்

மீன் விழி  துடிக்கச்  செய்வான்.

அன் புறப் பார்த் தென்  மேனி

அழகினை மாந்து   கின்றான்

இன்புறும் மெளன கீதம்

இதயத்தில்  மீட்டு   கின்றான்.

* * *     * * *      * * *     * * *    * * *

கள்ளமாய்ச் சிரிக்கும்  போதும்

கதவோரம்  நிற்கும்  போதும்

உள்மன  வீணை    மீட்டி

உடலெங்கும்  இன்ப.  நாதம்

வெள்ளமாய்ப்  பெருகும் ‘, மார்பு

விம்மியே  தணியும், நெஞ்சில்

முள்ளென   ஏதோ   ஒன்று

மேல்நின்று   கீழ் இ  றங்கும்.

* * *    * * *     * * *    * * *    * * *   * * *

அடிக்கடி  கனவு   தோன்றும்

ஆயிரம்  எண்ணம்   மோதும்

துடிக்குமென்   இதழ்கள்   சொல்ல        நாணமோ  தடை வி   திக்கும்

படிக்காத ப்   பாடம்   ஒன்று

பன்முறை   நெஞ்சில்   தோன்றி

அடிக்கடி   ஏதோ   கூறி

அலையென  மோதிச்  செல்லும்

* * *    * * *    * * *    * * *     * * *   * * *

விடிந்ததும்   கோலம்   போடும்

வேளையும்   பொழுது   சாய்ந்து

முடிந்ததும்   கதவை    மூடும்

முன்னிரா  வரையும்   இங்கே

கடந்திடும் கணம் ஒவ்   வொன்றும்

கன்னியின்  மனதில்   இன்பம்

படிந்திடச்  செய்யும்  நெஞ்சில்

பாலெனக் காதல் பொங்கும்

* * *     * * *     * * *     * * *     * * *   * * *

குடந்தை பரிபூரணன்

கும்பகோணம் .

குறும்பா கூடம்!

1

கிளைத்தாவும் குரங்கு/

தரையில் விழுந்து சிதறுகிறது/

நேற்றைய மழைநீர்/

2

எரியும் அகல்விளக்கு/

எண்ணையில் மிதக்கிறது/

சில நட்சத்திரங்கள்/

3

மிரட்டும் அன்னை/

மழலையின் கண்களில்/

மழைக்கான அறிகுறி/

4

அன்னை அடித்ததற்கு/

காரணம் சொல்கிறது குழந்தை/

ஆட்டுக்குட்டியிடம்/

5

அழகான முகம்/

அருவருப்பாய் இருக்கிறது/

அகத்தின் எண்ணங்கள்/

6

துளையில்லா மூங்கில்கள்/

அசைகையில் இசை பாடுகிறது/

குயில்கள் கூட்டம்/

7

சிறைபிடித்த மீனை/

தொட்டியில் விட்டதும் தேடுகிறது/

தன் கடலை/

8

வனவிலங்கு காப்பகம்/

உறுமும் புலியின் கண்களில்/

அடர்ந்த காடு/

9

மரங்கொத்தி பறவை/

இடைவெளி விட்டு தருகிறது/

அதே இசையை/

10

கம்பளிப்புழு/

ஊர்ந்து செல்கையில்/

ஒர் நடன அசைவு/

ஜீவா

அரைக் கால் டவுசர்

முழுக்கை சட்டையுடன்

ஜவுளிக்கடை பொம்மை !

பூட்டிய வீட்டில்

பொம்மைகளுடன்விளையாடும்

சிலந்தி

ஏதோ ஒரு வாசனை

பால் கொடுக்கும்

பூனையின் மீது

காலையில் மலர் தோட்டம்

மாலையில்

வெறும் தோட்டம்

ஹிஷாலி

ஆசையே துன்பத்திற்கு காரணம்.
அதனால்…..
துன்பப்படாமல் இருக்க ஆசைப்படு

புது வண்டி ரவீந்திரன்

ஆன்ராய்டு பழுதாகிறது
பகலும் இரவும்
நீண்ட பொழுதாகிறது


புது வண்டி ரவீந்திரன்

வெளுத்து வாங்கியது
சலவைக்காரர் வீதியில்
மழை.
புது வண்டி ரவீந்திரன்

நாத்திக சங்கத்தில்
ஆள் சேர்க்க ஆரம்பித்தான்
பிள்ளையார் சுழி போட்டு
புது வண்டி ரவீந்திரன்

கிழித்து எறிந்தேன் நாட்காட்டியை

கண்ணில் பட்டது

கடன் காரனுக்கு வட்டி கட்டும் நாள்

இல்லாத மீசையை முறுக்கியது

குழந்தை

ஆனந்தத்தில் குழந்தையானார் அப்பா .!!

காகிதத்தில் ஒன்றுமில்லை

இனி நிரப்பலாம்

ஆயிரம் இதயங்களை …

சாலையோர அகதிகள்

கூரைவீடில்லை

போர்வையானது பனி…

வாசகன் வெங்கடேசன், இராணிப்பேட்டை.

கொடிய பாம்பின் விஷம் கூட உடனே கொல்லும்,

நரம்பில் நாவின் கூற்றோ

நாள்தோறும் மெல்ல மெல்ல கொல்லும்

யமு. கஸ்தூரிகிருபாகரன் பி சி ஏ.,
     மிட்டூர்

கவிதைச்சாரல்

கவிதைத் தாள்களில்  விரல் ஸ்பரிசம்

……………………………………………..

நெஞ்சப்பரப்புகளில்  நீட்டி நிமிர்ந்து

உருண்டு புரளுவது நீ மட்டும்தானடி

கடந்துபோகின்ற  எல்லா உருவங்களிலும்

உன் தலையை  ஒட்டிவைத்தமாதிரியே

கண்ணுக்குத்தெரிகிறது.

உன் பெயர்கொண்ட

கடைகள் கண்ணில் பட்டால்

உள்நுழைந்து அள்ளிவருகிறேன்

உன் நினைவுகளையே.

உன் குறுஞ்செய்தி  எல்லாமே வாசிக்கிறேன்

நீ வருஞ்செய்தியை மட்டுமே

நேசிக்கிறேன்.

சன்னல் திரையெல்லாம்

நீ உடுத்திவந்த மயில்பச்சை

வண்ணத்திலேயே என்னுள் விரிகிறது.

நீ வாசித்து விட்டு வைத்துப்போன

கவிதைத் தாள்களில்

விரல் ஸ்பரிசம்  உணர்ந்து நெகிழ்கிறேன்.

மொட்டைமாடியில்  நிலவை

மெல்லத்தழுவும் ஒற்றைமேகம் பார்த்து

பொறாமையில் புழுங்குகிறேன்

நடுச்சாமத் தூக்கத்தில்

கனவுகலைந்து விழித்ததுபோலவே

நீ அருகிலில்லாத நான்.

காசாவயல் கண்ணன்

தேவதைகள்…!?

உடைந்து போன

திருகாணிக்கு பதிலாய்….?

குச்சியை சொருகும்…

பக்குவம்…!

கிழிந்த ஆடையை..

குண்டூசியை வைத்தே

மானம் மறைக்கும்

மகிமை….!?

இருக்கும் கொஞ்சம் மாவில்…

இரண்டு தோசைகள் வார்த்து

எனக்கு தந்துவிட்டு….

தனக்கு பசியில்லை என பொய் சொல்லி..

பட்டினியாய் படுப்பவள்…..!?

தையல் வேலையை

பக்கத்து வீட்டு மாமியிடம் கற்று…

அவளிடமே

வேலை பார்த்து…?

கிடைத்த பணத்தை

யாருக்கும் தெரியாமல்…

என் சட்டை பையில் வைக்கும் முதிர்ச்சி…

எந்த நிலையில் நான் வீடு வந்தாலும் …?

உள்ளச் சிரிப்போடு

எனை எதிர் கொள்ளும் என் மகள்…!?

ஏழைக்கு பிறந்த

மகள்கள்…!

எல்லா அப்பனுக்கும்

தேவதைகளே….!?

– முனைவர் சா சம்பத்

காலமா?..ஞாபகமா?

சூழ்கொண்ட மேகங்கள்

அவிழ்ந்து விழுகையில்

ஓடிவந்த  முதல் துளி

எதுவென்றே தெரியாதது போல..

ஓடி வரும் புது வெள்ளத்தில்

முதலில் கால் நனைத்தது

யாரென்றே தெரியாதது  போல..

ஒவ்வொரு  இரவிலும்

முதலில் முளைத்த வெள்ளி

எதுவென்றே தெரியாதது போல..

வயல் தூவிய விதை நெல்லில்

முதல் நாற்று எதுவென்றே

தெரியாதது போல…

உருண்டோடிய உயிரணுக்களில்

எந்த துளி கருவானதென்றே

அறியாதது போல..

அம்மா சொல்லிக்கொடுத்த வார்த்தைகளில்

உச்சரித்த முதல் வார்த்தை

எதுவென்றே தெரியாதது போல..

இனிமேலும் நடக்கவிருக்கும்

ஏதோ ஒரு  முதல் விசயத்தை

தெரியாது போகாமலிருக்க..

எதை பிடித்துவைக்க  வேண்டும்!

காலமா?..ஞாபகமா..?

செம்பா

திருச்சி

கவிதைச்சாரல்

புது வருடம்

புதுவருடம் மனங்களில் பூத்துக்குலுங்கட்டும்
புது கனவின்
வண்ணங்களில்
வாழ்வு மலரட்டும்
வாசம் உறவுகளில்
நேசமாய் வீசட்டும்
பழைய நாச மோசங்கள்
ஒழியட்டும்
புதிய ஆச பாசங்கள்
பிறக்கட்டும்
வெந்து நொந்த
பாலை மனம்
இனி நந்தவனம்
ஆகட்டும்.

சங்கீதா சுரேஷ்
தர்மபுரி

நினைவுகளின் பயணத்தில்

பயணிக்கிறேன்

சாலையெங்கும் உதிரிப்பூக்களின்

வாசனை பற்றி கடக்கிறேன்

மீண்டுமொருமுறை கிள்ளி பறிக்கும்

உன் ஞாபகம் தொத்தி

நகர்கிறேன்

தனிமையிரவுகளை தள்ளி

போட

முற்பட்டு முடியாமல்

வீழ்கிறேன்

உன் நினைவுகளின் தீவில் ……!!!!

ச. இராஜ்குமார்

திருப்பத்தூர்

அலட்சியத்தை அலட்சியப்படுத்துங்கள்!

அலட்சியம்! இது நம் வாழ்க்கையில் ஒன்றாகிப் போய்விட்டது. நாம் எதையுமே லட்சியப்படுத்துவது இல்லை! எல்லாம் நமக்கு அலட்சியம்தான். வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையை கூர்ந்து நோக்கினோமானால் அவர்கள் எதையும் அலட்சியப்படுத்தி இருக்க மாட்டார்கள். அலட்சியம் எதனால் வருகிறது? சோம்பல்! ஆர்வமின்மைதான் முதல் காரணம்.

அலட்சியத்தால் வாழ்க்கை இழந்தவர்கள் வாய்ப்பு இழந்தவர்கள் ஏராளம்! ஆனாலும் நாம் இன்னும் அலட்சியத்தை கைவிடுவதாக காணோம். எதுவென்றாலும் நமக்கு அலட்சியம்தான். குண்டுசீ குத்தினாலும் அலட்சியம் கூடங்குளம் அணு உலையானாலும் அலட்சியம். பத்து ரூபாய் லஞ்சம் என்றாலும் அலட்சியம் பல்லாயிரக்கணக்கான கோடி ஊழல் என்றாலும் அலட்சியம்! ஒரு நான்கு நாளைக்கு அதைப்பற்றி பேசிவிட்டு அப்புறம் மறந்து விடுகிறோம்! அதாவது அலட்சியமாக விட்டு விடுகிறோம். மறுபடியும் அதே ஊழல் வாதிகளை கொண்டாடி நாட்டை அவர்களிடம் கொடுக்கிறோம்.

இதில் ஒரு நொண்டி சாக்கு வேறு! தேன் எடுக்கிறவன் புறங்கையை நக்காம இருப்பானா? என்று நமக்கு நாமே சமாதானம் தேடிக் கொள்கிறோம். காலையில் எழுவதிலிருந்து மாலை உறங்கும் வரை தினம் தினம் நாம் எல்லாவற்றிலும் அலட்சியமாகத்தான் இருக்கிறோம். காலையில் ஏழு மணிக்கு ஆபீஸ் கிளம்ப வேண்டும் என்றால் 5மணிக்கு எழுந்தால் நன்றாக இருக்கும். அலாரம் வைத்து எழுந்து கொள்ள வேண்டும் என்று நினைப்போம். படுத்து விடுவோம். எழுந்து மீண்டும் அலைபேசியில் அலாரம் வைக்க சோம்பேறித்தனம். இருக்கட்டும் பார்த்துக்கலாம்! ஒரு நாள் லேட்டா போனா ஒண்ணும் குறைஞ்சி போயிடாது என்று அலட்சியப்படுத்துகிறோம்.

பள்ளிப் பேருந்தில் இருந்த ஒரு ஓட்டையை அலட்சியப்படுத்தியதால்தான் பாவம் ஒரு அப்பாவி சிறுமி பலியானாள். நம்முடைய அலட்சியம் வாக்களிப்பதில் கூட இருக்கிறது. ஒரு நாள் லீவு ஜாலியா இருக்காம எவன் போய் ஓட்டு போட்டுகிட்டு கியுவில காத்து கால் கடுக்க நின்னு நாம போடுற ஒரு ஓட்டுல உலகமே மாறிப்போயிட போவுதா என்று எண்ணி போகாமல் இருந்து விடுகிறோம்! இது எவ்வளவு பெரிய அலட்சியம்! ஜனநாயகத்தில் ஓட்டளிப்பது நமது கடமை! இதை கூட அலட்சியப்படுத்தி விடுகிறோம்.

இதைப்போலத்தான் பல அலட்சியங்கள் கண்கூடாக பார்க்கிறோம்! மின் தட்டுப்பாடு நிலவும் இக்காலத்தில் பகலில் கூட விளக்குகள் ஒளிர்கின்றது. குழாயில் தண்ணீர் வீணாகிறது. சாலையில் வாழைப்பழத்தோலை அலட்சியமாக வீசுவது. பூசணிக்காய்களை உடைத்து சாலையில் போடுவது. இதெல்லாம் இருக்கட்டும் தலைக்கவசம் அணியாமல் அலட்சிமாக இருப்பதால்தானே எண்ணற்ற விபத்துக்களில் உயிரிழப்புக்கள் ஏற்படுகிறது.

கட்டணங்கள் கட்ட வேண்டிய தேதிவரை கட்டாமல் கடைசிநாள் பாத்துக்கலாம் என்று தள்ளிப்போடுவது. வண்டியில் சிறிது காற்று குறைவாக இருக்கும் போதே கவனிக்காமல் விட்டு சுத்தமாக பஞ்சர் ஆகி நிற்கும் போது எரிச்சல் அடைவது. என்று நாம் அலட்சியப்படுத்தும் விசயங்கள் ஏராளம்.

சின்ன வயதில் படித்த ஒரு பாட்டு! அதன் அர்த்தம் மட்டும் சொல்கிறேன்! பாடல் மறந்து விட்டது. குதிரை வீரன் ஒருவன் அண்டை நாட்டுக்காரன் படையெடுத்து வருகிறான் என்று தன் நாட்டிற்கு செய்தி சொல்ல குதிரையில் புறப்படுவான். வழியில் குதிரையின் லாடத்தில் ஒரு ஆணி கழன்று விடும். ஒரு ஆணி தானே! பார்த்து கொள்ளலாம் என்று அலட்சியப்படுத்தி பயணிப்பான் அவன். ஒரு ஆணி போனதால் லூஸான லாடம் கழன்று கொள்ளும். லாடம் கழன்றதால் குதிரையால் வேகமாக பயணிக்க முடியாமல் போகும். மேலும் கால் புண்ணாகி பயணம் தடைபடும். இதற்குள் அண்டை நாட்டுகாரன் படையெடுத்து வந்து அந்த நாடே அடிமைப் பட்டு போகும். ஒரு ஆணியை அலட்சியப்படுத்தியதால் வந்த வினை இது!

நாமும் அப்படித்தான்! வியாபாரத்திற்குத்தானே வந்தார்கள் என்று அலட்சியப் படுத்தியதால் முன்னுறு ஆண்டுகள் அடிமைப்பட்டு கிடந்தோம் அன்னியரிடம்.

பெரிய பெரிய கோயில்கள் பாழடைந்து கிடக்கும்! அல்லது அந்த கோயில் தளங்களில் பெரும் ஆலமர அரசமரங்கள் முளைத்து இடிந்து கிடக்கும். இதை கண்கூடாக பார்த்திருப்பீர்கள். ஒரு பெரிய கட்டிடத்தையே அந்த மரத்தின் வேர்கள் சாய்த்திருப்பதை கண்டிருப்பீர்கள்! இது அலட்சியத்தால் நேர்ந்தது அன்றோ! சிறு செடியாக இருக்கும் போதே களைந்து இருந்தால் அந்த கட்டிடங்கள் பாழாகி இருக்காது அல்லவா? ஆனால் கவனிக்காமல் விட்டோ! சிறு செடிதானே என்று எண்ணியதால் என்ன ஆயிற்று கட்டிடமே குலைந்து போகின்றது அல்லவா?

மழை எல்லாம் வராது என்று மழை நாளில் குடை எடுக்காமல் போய் நனைந்தவர்கள் ஏராளம். பெருமழை எல்லாம் இனிமே வராதுப்பா என்று ஆற்றங்கரைகளையும் ஏரிகளையும் ஆக்கிரமத்து வீடு கட்டியதன் பலனை சென்னை பெருவெள்ளத்தில் அனுபவித்தோம்.

ஒவ்வொரு சம்பவமும் ஒரு படிப்பினையை தந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அந்த படிப்பினையை மறந்து அலட்சியப்படுத்தி விட்டோமானால் முன்னேற்றம் என்பது கானல் நீரே!

சிக்னல் விழுந்தும் வாகனம் வரும் முன் கடந்துவிடலாம் என்ற அலட்சியம் நம் உயிரையே இழக்க வைக்கிறது அல்லவா? கடைசி நாள் வரை படிக்காமல் தேர்வெழுதும் அலட்சியம் நம் வாழ்க்கையையே மாற்றி அமைத்து விடுகிறது அல்லவா? பணம் இருக்கிறது ஓட்டு வங்கி இருக்கிறது அதைக் கொண்டு வெற்றி பெற்று விடலாம் என்று நினைக்கும் அரசியல் வாதிகளையும் கூட மக்கள் அலட்சியப்படுத்தி விடலாம் ஆனால் யார் ஆண்டால் என்ன என்று ஓட்டுப்போடாமல் அலட்சியப்படுத்தலாமா?

வெற்றி பெற விரும்புபவர்கள் எதையும் அலட்சியப்படுத்த மாட்டார்கள்! சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று பழமொழியே உண்டு. நாமும் வெற்றியாளர்களாக மாற அலட்சியத்தை அலட்சியப்படுத்துவோம்! வெற்றி பெறுவோம்!

ஆட்டுவித்தால் யாரொருவர்

முகில் தினகரன்.

(சிறுகதை)

அந்தக் காலை நேரத்தில் கோவிலில் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. அங்கப் பிரதட்சணம் செய்வோர்களும், அடிப் பிரதட்சணம் செய்வோர்களும், பகவானை மனதில் நினைத்துக் கொண்டு, தத்தம் பாதைகளில் முன்னேறிக் கொண்டிருந்தனர்.

ஈரச் சேலையுடன் அங்கப் பிரதட்சணப் பாதையில் உருண்டு கொண்டிருக்கும் தன் மனைவி அலமேலுவின் கூடவே மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தார் ஜெயவேல்.

அவளைப் பார்க்கப் பார்க்க அவர் மனதில் அளவு கடந்த வேதனை பாறாங்கல்லாய்க் கனத்தது. “ஆண்டவா!…தனக்கொரு பிள்ளை வரம் வேண்டும் என்பதற்காக தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமை உன் கோவிலுக்கு வந்து…அங்கப் பிரதட்சணம் செய்யறதா வேண்டிக்கிட்டு…வாராவாரம் இங்க வந்து தன் உடலை வருத்திக்கிட்டு, ஈரச் சேலையோட உருண்டுக்கிட்டிருக்கா இவ!…இது ஒன்பதாவது வாரம்!…எப்படியோ அவ…தன்னோட வேண்டுதலை நிறைவேத்திட்டா…இனி நீ அவளுக்கு பிள்ளை வரத்தைக் குடுக்க வேண்டியதுதான் பாக்கி!…குடுப்பியா?”

ஆண்டவனோடு பேசிக் கொண்டிருந்த ஜெயவேலை அங்கு உண்டான திடீர்ப் பரபரப்பு கலைக்க, கூர்ந்து கவனித்தார்.

வேக, வேகமாய் ஓடி வந்த ஐந்தாறு கோவில் சிப்பந்திகள், “எல்லோரும் உடனே கோயிலுக்கு வெளியே போங்க!…” என்று பொத்தாம் பொதுவாய்க் கத்திக் கொண்டு ஓடினர்.

அதைக் கேட்டதும், என்ன?…ஏது?..என்று விசாரிக்கக் கூடத் தோன்றாமல், பக்தர்கள் கூட்டம் அடுத்த விநாடியே கோவிலுக்கு வெளியே தலை தெறிக்க ஓடியது. அங்கப் பிரதட்சணம் செய்து கொண்டிருந்தவர்களும், அடிப் பிரதட்சணம் செய்து கொண்டிருந்தவர்களும், விஷயம் இன்னதென்று புரியாமல், எழுந்து நின்று யோசிக்க,

பாய்ந்து வந்த போலீஸ்காரர், “எதுக்கு இன்னும் இங்க நின்னுட்டிருக்கீங்க?…அதான் கோவிலுக்கு வெளிய போகச் சொல்லிச் சொன்னாங்கல்ல?..ஓடுங்க…ஓடுங்க…!” என்று அடித் தொண்டையில் அலறினார்.

“சார்…என்ன விஷயம்?…எதுக்கு எல்லோரையும் வெளிய போகச் சொல்லுறீங்க?” யாரோ ஒரு தைரியசாலி பக்தர் சன்னக் குரலில் கேட்க,

“யோவ்…கோவிலுக்குள்ளார பாம் வெச்சிருக்கறதா தகவல் வந்திருக்கய்யா…”

அவ்வளவுதான், கண் மூடிக் கண் திறப்பதற்குள், அங்கப் பிரதட்சணக்காரர்களும், அடிப் பிரதட்சணக்காரர்களும் காணாமல் போயினர்.

ஜெயவேலு குனிந்து அலமேலுவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார். “ஏய்…அலமேலு…கோவிலுக்குள்ளார பாம் வெச்சிருக்காங்களாம்!….எல்லோரும் போயிட்டாங்க!…எழுந்திருச்சு வாடி நாமும் போயிடலாம்…!”

உருண்டு கொண்டிருந்த அலமேலு தன் உருளலைச் சற்றும் நிறுத்தாமல், “ம்ஹூம்…மாட்டேன்!…என்னோட வேண்டுதலை நான் முடிக்கப் போற கடைசி நேரத்துல ஆண்டவன் எனக்கு வெச்சிருக்கற சோதனைதான் இது!…இங்க பாமும் இல்லை…ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை!…நீங்க பொலம்பாம வாங்க!” என்றாள்.

சற்றுத் தொலைவிலிருந்து இவர்களிருவரையும் பார்த்து விட்ட ஒரு போலீஸ் உயர் அதிகாரி “ஏய்…ஏய்!” என்று கத்திக் கொண்டே ஓடி வந்தார். “என்ன ரெண்டு பேரும் சாவு வரம் கேட்டா அங்கப் பிரதட்சணம் பண்ணிட்டிருக்கீங்க?…போங்க வெளிய மொதல்ல!”

“டீ…அலமு…எழுந்திருடி!”

அவள் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாதவளாய், தொடர்ந்து உருண்டு கொண்டேயிருக்க, கடுப்பானார் போலீஸ் அதிகாரி.. “த பாரும்மா….நீயா எந்திரிச்சு ஓடுறியா?..இல்லை ரெண்டு லேடி கான்ஸ்டபிள்ஸை வரச் சொல்லி உன்னையத் தூக்கிட்டுப் போகச் சொல்லட்டா?”

அவள் அதற்கும் அசராது உருள, ஜெயவேலு கெஞ்சினார். போலீஸ் அதிகாரி மிரட்டினார். நேரம் ஓடிக் கொண்டேயிருந்தது. பொறுமையிழந்த அந்த போலீஸ் அதிகாரி, “எக்கேடோ கெட்டுப் போங்க!….” என்றபடி தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கோவிலுக்கு வெளியே ஓடினார்.

எந்த நிமிடமும் பாம் வெடிக்கலாம்!…உடல் சிதறி தானும் அவளும் மரணிக்கலாம், என்று உறுதியாய் முடிவே செய்து விட்ட ஜெயவேலுவுக்கு, அதிலும் ஒரு சிறிய ஆறுதல் என்னவென்றால், இருவரும் ஒரே இடத்தில்…ஒரே நேரத்தில் மரணிப்பது. “ஆண்டவன் இந்தக் கொடுப்பினைதான் உங்களுக்கு என்று தீர்மானித்து விட்டால் அதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே?!”

அடுத்த இருபதாவது நிமிடம் அலமேலு தன் அங்கப் பிரதட்சணத்தை முடித்து விட்டு, குருக்கள் இல்லாத சன்னதியில் தானே சென்று பூஜை செய்து விட்டு, கணவருடன் வெளியேறிய போது… கோவிலுக்கு வெளியே கூடியிருந்த மொத்தக் கூட்டமும் அவர்களிருவரையும் பிரமிப்புடன் பார்த்தது. ஒன்றிரண்டு பத்திரிக்கைக்காரர்கள் ஓடி வந்து அவர்களை புகைப்படம் எடுக்க முனைந்தனர்.

கூட்டத்தில் சலசலப்பு தோன்றியது. “யோவ்..எல்லாம் வெறும் வதந்திய்யா!”

“எவனோ…வெத்து மிரட்டல் விட்டிருக்கான்!”

“இருங்கப்பா…இருங்கப்பா…பாம் ஸ்குவாட் உள்ளார போயிருக்கு…வரட்டும்…வந்தாத்தானே தெரியும்…வதந்தியா?…இல்லையா?ன்னு”

எல்லோரும் காத்திருக்க, பாம் ஸ்குவாட் வெளியே வந்தது, இரண்டு கைகளையும் விரித்துக் கொண்டு.

“அடப் போங்கப்பா…பொழப்புக் கெட்டதுதான் மிச்சம்!”

பாம் ஸ்குவாட் அதிகாரிகள், “கோவிலுக்குள் பாம் இல்லை!” என்று உறுதியளித்த பின், காவல் துறை பக்தர்களை மறுபடியும் கோவிலுக்குள் அனுமதித்தது.

அதே நேரம்,

தீவிரவாதிகளின் பாசறையில், தலைவன் போலிருந்த ஒரு தாடிக்காரன் கத்திக் கொண்டிருந்தான். “ஏன்?…ஏன்?…அந்த பாம் வெடிக்கலை?…எனக்குத் தெரிஞ்சாகணும்!…யாரோ நம்மாளுகதான் டபுள்கேம் ஆடியிருக்காங்க!…உண்மையைச் சொல்லிடுங்க…இல்லாட்டி நாம எல்லோருமே ஒட்டு மொத்தமா பிரச்சினைக்கு ஆளாய்டுவோம்!”

“பாஸ்…பாமை ஃபிக்ஸ் பண்ணினது நாந்தான்!….டைம் செட் பண்ணியதும் நாந்தான்!…அப்ப எல்லாமே சரியாத்தானிருந்தது!” கண்ணாடியை மூக்கின் மீது தொங்க வைத்திருந்தவன் சொல்ல,

“பாமை எந்த இடத்துல ஃபிக்ஸ் பண்ணினே?”

“ம்ம்ம்…அங்கப் பிரதட்சணம் பண்ணுறவங்க உருளுவாங்களே?…அந்தப் பாதையோட முடிவுல…சிமெண்டுத் தரையை லேசாப் பெயர்த்து…அதற்குள் செருகி வெச்சேன்!…ம்.ம்.ம்..பாஸ்….எனக்கொரு சந்தேகம்!”

“என்ன?”

“போலீஸ் வந்து பப்ளிக்கை அலர்ட் பண்ணினப்ப எல்லோரும் வெளிய ஓடி வந்துட்டாங்க!…அப்ப அந்த அங்கப் பிரதட்சணப் பாதை ட்ரை ஆகத்தான் இருந்தது!…ஒரு லேடி மட்டும் பிடிவாதமாய் அங்கப் பிரதட்சணத்தை முடிச்சுட்டுத்தான் வெளிய வருவேன்னு…யார் சொல்லியும் கேட்காம கடைசி வ்ரை உருண்டு முடிச்சுட்டுத்தான் வந்தாங்க!”

“சரி…அதுக்கும் பாம் வெடிக்காததற்கும் என்ன சம்மந்தம்?”

“அனேகமா…அந்த பாம் வெடிக்கப் போற நேரத்துல அந்தப் பொம்பளை ஈரச் சேலையோட அது மேல உருண்டிருக்கணும்…அதனால வாட்டர் பாஸ் ஆகி…பாமோட டைமிங் ஸ்டிரக் ஆகி நின்னிருக்கும்!…அநேகமா வெடிக்கறதுக்கு ரெண்டு…மூணு…விநாடிக்கு முன்னாடிதான் ஸ்டிரக் ஆகியிருக்கும் போலிருக்கு!”

“ச்சே!” என்று தன் வலது கை முஷ்டியால் இடது உள்ளங்கையில் குத்திக் கொண்டான் பாஸ்.

அதே நேரம்,

“டீ…அலமு..என்னடி ஆச்சு உனக்கு?…சொல்லச் சொல்லக் கேட்காம…ஒன்பது வாரம் பிடிவாதமா ஈரச் சேலையோட அங்கப் பிரதட்சணம் பண்ணினியே…இப்ப திடீர்னு மயங்கி விழுந்திட்டியேடி!…அய்யோ…எனக்கு “பட…பட”ன்னு வருதே!” ஜெயவேலு பதட்டமாகிப் புலம்ப,

பக்கத்து வீட்டுத் தாயாரம்மா, சிரித்த முகத்துடன் அவர் காதருகே வந்து, “ஒண்ணும் பதட்டப்படாதீங்க சாமி…நாடி பிடிச்சுப் பார்த்துட்டேன்…எல்லாம் நல்ல விஷயம்தான்…உங்க சம்சாரம் உண்டாகியிருக்கா!” என்றாள்.

“பகவானே….!!” தன்னையுமறியாமல் கூவி விட்டார் ஜெயவேலு.

(முற்றும்)

பாரங்கள் குறைவதில்லை!

ஒளிப்படமாய் விளங்குகிறது எங்கள் வாழ்க்கை!
ஒளிப்பதற்கு ஏதும் இல்லை!
இருசக்கர வாகனத்தில்
ஆறு பேர் பயணிக்கிறோம்!
துவிசக்கரம் போல சுழல்கிறது
நடுத்தரமான வாழ்க்கைப் பயணம்!
அதிக சுமைதான்!
ஆனாலும் இழுத்துக் கொண்டே ஓடுகின்றோம்!
சுமக்க கஷ்டப்படுவதில்லை!
சோகங்களைக் கூட சுமைகளிடையே
தொலைத்துவிட்டு
சுகங்களை தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம்!
கல்யாணம் சீர்வரிசை, காதுகுத்து
காய்ச்சல் தலைவலி, திடீர் பயணம்
என்று தினம் தினம் முளைக்கும் புது
சுமைகள் நடுத்தரனின் வாழ்வில்
நாள்தோறும் சகஜமே!
நடுத்தரனுக்கு தோள் கொடுத்து உதவும்
இரு சக்கரப்பிறவி நான்!
என்ன செய்ய? அவன் பாரத்தை குறைக்க
என் மீதும் பாரமேற்றிக் கொள்கிறேன்!
நடுத்தரனின் சுமைகளோடு ஒப்பிட்டால்
என் பாரம் குறைவுதான்!
இறுதி மூச்சிருக்கும் வரை
இழுக்கின்றான் குடும்ப பாரம்!
இறுதி எண்ணெய்த்துளி வரை அவனோடு
அவன் குடும்பம் சுமக்கிறேன்!
இறக்கிவிட்டு பயணிக்கையில் என் பாரம் குறைகிறது
இறுதிவரை குறைவதில்லை அவன் பாரம்!


நத்தம். எஸ்.சுரேஷ்பாபு.