பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 2

உங்கள் பிரிய “பிசாசு”

சென்ற பகுதியில் : ராகவன் பொன்னேரியில் இருக்கும் சமயம் அவனது நண்பன் வினோத் ஊருக்கு வருவதாக கூறுகிறான். வினோத் வெளிநாட்டில் வசிப்பவன் அவனது திடீர் வருகை ராகவனுக்கு ஆச்சர்யம் தருகிறது. அதே சமயத்தில் பஞ்செட்டியில் கோயில் குளக்கரை அருகே வசிக்கும் முகேஷ் தன் நண்பன் ரவியுடன் டீவி பார்த்துக் கொண்டிருக்கும் சமயம் ஆவிகளை பற்றி பேச்சு கிளம்புகிறது. ரவி ஆவி, பேய் எதுவும் இல்லை என்கிறான் முகேஷ் இருக்கிறது என்று விவாதிக்க மின்வெட்டில் கரண்ட் கட் ஆகிறது. திடீரென ரவி குரல் மாறி விகாரமாக பேச முகேஷ் பயப்படுகிறான். இனி.

எ.. என்னது உசுரு உன். உன்னோடதா? ஒண்னும் புரியலை?

ஏண்டா மடையா எத்தினி பேயி படம் பார்த்திருப்பே? இப்படி ட்யூப் லைட்டா இருக்கியே? ரவி உடம்புல நான் புகுந்துட்டேன்! டொட்டடொய்ங்க்!

என்ன.. து! நீ ரவி உடம்புல புகுந்திட்டியா? யாரு யாருடா நீ!

அது! அது என்ன எத்தினி பேரு சேர்ந்து அடிச்சி கொன்னு போட்டாங்க தெரியுமா? அவங்களை நான் பழி வாங்க வேண்டாம்!

என்னது உன்னை அடிச்சி கொன்னுட்டாங்களா?

ஆமா! பிரண்ட்! ம்ம்ம்! ரவி அழ ஆரம்பித்தான்! நான் என்ன தப்பு செஞ்சேன்! ஒரு பொண்ணை லவ் பண்ணேன். அந்த பொண்ணும் என்னை லவ் பண்ணுச்சு! பாவிப் பசங்க பொண்ண கொடுக்க விருப்பம் இல்லாமா என்னையும் அந்த பொண்ணையும் கொன்னுட்டாங்க! நான் விடமாட்டேன்! அவங்களை விடமாட்டேன்! ஆவேசமாக பேசினான் ரவி.

ரவி! ரவி உனக்கு என்னடா ஆச்சு இப்படியெல்லாம் பேசற? வியர்த்து வழிந்தபடி கேட்டான் முகேஷ்.

டேய்! விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு இப்ப சீதைக்கு ராமன் சித்தப்பான்னு கேக்குற? நான் தான் சொன்னேனே! நான் ரவி இல்லே!

அ.. அப்ப நீ யாரு?

அட அத நாங்க சொல்லிடுவோமா? இப்ப நான் வாரேன்! இவன் உடம்பு எனக்கு செட் ஆவலை? நாளைக்கு உன் உடம்பை டெஸ்ட் பண்ணி பார்க்கறேன்! இப்ப வரட்டா?

ஒரு செகண்டில் ரவி பழைய நிலைமைக்கு வந்திருந்தான். அவன் முகம் வெளிறியபடி நின்றிருந்த முகேஷிடம் அப்பா முகேஷு! என்ன இப்படி பேய் அடிச்சாப்பல நிக்கற? என்ற போது முகேஷ் முழுவதும் அதிர்ந்தான்.

டேய்! உனக்கு ஒண்ணும் இல்லையே? இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி ஏதேதோ பேசின? இப்ப நார்மல் ஆயிட்டியா?

என்னடா சொல்றே? நான் எப்ப அப்நார்மல் ஆனேன்! நார்மலாத்தான் இருக்கேன்! கரண்ட் ஆப் ஆனதும் கேண்டில் ஏத்தறேன்னு உள்ளே போன நீ எதைக்கண்டு பயந்து இப்படி நிக்கறே? வர வர நீ பேய் ப்ரோக்ராம் பாத்து பாத்து இப்படி ரொம்பவே பயந்து சாகிற. ஐயம் ஆல்ரைட்! கேண்டில் என்ன ஆச்சு? சரி நான் கிளம்பட்டா என்றான் ரவி.

இல்ல வேண்டாம்! கரண்ட் வர்ற வரைக்கும் நீ இங்கேயே இரு!

இதென்னடா வம்பா போச்சு! ஒருமணி நேரம் வராதுடா கரண்ட்! அதுவரைக்கும் நான் இங்க இருந்தா என் வீட்டுல தேட ஆரம்பிச்சிடுவாங்க! இப்பவே கண்ட இடத்துல சுத்திட்டு லேட்டா வீட்டுக்கு வரேன்னு ஒரே அலப்பறையா இருக்கு. இன்னும் ஒன் அவர்! நம்பளாலே முடியாது. நெவர் உனக்கு பயமா இருந்தா நீ என் கூட வா! என்றான் ரவி!

உன் கூடவா?

நான் என்ன பேயா பிசாசா? இங்க மட்டும் நான் உன் கூட இருக்கலாம்! நீ என்கூட வரக்கூடாதா?

இ.. இல்ல!

என்ன இல்ல நொல்லன்னுகிட்டு! இஷ்டமா இருந்தா வா! இல்லே இங்கேயே கதவை சாத்திகிட்டு தூங்கு! இதுக்குத்தான் இந்தமாதிரி கண்ட கண்ட புரொகிராம்லாம் பார்க்க கூடாது! இப்படி பயந்து சாகிறயே? ரவி புலம்ப சற்று முன் பேசிய ரவியா இது என்று குழம்பி போயிருந்தான் முகேஷ்!

சாரிடா முகேஷ்! நான் கிளம்பறேன் என்று அவன் கிளம்ப அவன் கையை பிடித்து நிறுத்தினான் முகேஷ்!

நில்லுடா! என்னமோ ஒன்னும் தெரியாதவன் போல பேசற? பேய் இல்லை பிசாசு இல்லேன்னு சொன்ன உன் மேலேயே ஒரு பேய் இறங்கி இருக்கு. கரண்ட் ஆப் ஆனவுடன் நீ போட்ட ஆட்டம் அப்பாடா! இப்ப என்னடான்னா? ஒண்ணுமே தெரியாத மாதிரி பூனை மாதிறி பம்மறியே?

ஹா! ஹா வென சிரித்த ரவி!, டேய் முகேஷ் உனக்கு என்னமோ ஆயிருச்சு! டீவியில பேய்க் கதை பார்த்து பார்த்து நல்லாவே கற்பனை பண்ணறே? நல்ல ஜோக்குடா இது! என் மேல பேய் இறங்கிச்சா? எங்கடா? எங்க? காட்டு பார்க்கலாம்!

டேய் சீரியஸாடா! நான் சொல்றதெல்லாம் உண்மைதாண்டா! இப்ப அது போயிடிச்சு திரும்பவும் பிடிக்கலாம்!

டேய்! எனக்கு உன்னை அப்படியே நாலு சாத்து சாத்தலாம்னு தோணுது! ஏண்டா இன்னும் இப்படியே இருக்கே?

அப்ப நீ நம்பலை?

நீ ஆயிரம் தடவை சொன்னாலும் நம்ப மாட்டேன்!

நீ இப்படி சொல்லுவேன்னு தெரியும் நீ கரண்ட் போனதும் என்ன பண்ணேன்னு இந்த ஆடியோவில கேளு கரண்ட் போனதால ஃபேஸ் தெளிவா இல்ல ஆனா ஆடியோ கிளியறா வந்திருக்கு! என்று தன் செல் போனை ஆன் செய்தான் முகேஷ்!

வியப்பாக அப்படி என்னதாண்டா பண்ணேன் நான் என்று அதில் ஆழ்ந்தான் ரவி.

பொன்னேரியில் ஷாப்பிங் முடித்து தனது ஸ்பெலண்டரில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தான் ராகவன். அவன் பஞ்செட்டி வரும் சமயம் மீண்டும் போன் சத்தமிட்டது.பைக்கை ஓரம் கட்டி செல்லை ஆன் செய்தான். அழைத்தது வினோத் தான்!

என்ன வினோத் எங்க இருக்கே?

என்னடா ரோடு இது ஒரே டிராபிக்! இப்ப டோல்கேட்ல மாட்டிகிட்டுருக்கேன்! நீ வீட்டிற்கு வந்திட்டியா?

ஆல் மோஸ்ட்! பஞ்செட்டி பஸ் ஸ்டாண்ட் பக்கம் நிக்கறேன்! இன்னும் அஞ்சு நிமிசத்துல வீட்டுக்கு போயிருவேன். என்னடா திடீர் விசிட்! இப்பத்தானே தீபாவளிக்கு வந்தே? பொங்கலுக்கு வரமாட்டேன்னு சொன்னே? ஆனா உடனே வந்திருக்கே? என்ன விசயம்?

அதான் வந்திட்டேன் இல்லை! வந்து எல்லாம் விவரமா சொல்றேன்? வீட்டுல எனக்கு ஸ்பெஷலா சமைக்க சொல்லு!

அதைபத்தி நீ கவலையே பட வேண்டாம்! சீக்கிரம் வந்து சேரு! ஓக்கே போனை கட் செய்து நத்தம் செல்லும் வழியில் வண்டியை திருப்பினான் ராகவன்.

அவன் மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது. இப்போது திடுமென வினோத் வர காரணம் என்ன? யோசித்துக் கொண்டே ஊருக்குள் வந்தான் ராகவன்.

ஊர் காவல் தெய்வம் போரியம்மன் சன்னதியில் பூசாரி ஒருவர் மந்திரித்துக் கொண்டு இருந்தார். தட்டில் விபூதி பரப்பி சூடம் கொளுத்தி வைத்து விட்டு ஒரு பெண்ணை நிற்க வைத்து வேப்பிலையால் மந்திரித்து கொண்டு இருந்தார்.

கிராமங்களில் இது சகஜமான ஒன்று பேய் மிரட்டி விட்டது! ஆவி அடித்து விட்டது என்று பூஜாரிக்கு எப்போதும் கிராக்கிதான்! தினம் யாராவது ஒருவர் வந்து மந்திரித்துச் செல்வார்கள்.திருநீறு மந்திரித்து வேப்பிலை அடித்து அனுப்புவார் பூஜாரி. வருபவர்கள் தங்கள் சக்திக்கு ஏதாவது ஐம்பதோ அல்லது இருபதோ தந்துவிட்டு மந்திரித்துச் செல்வார்கள்.

என்னய்யா? பூஜாரி! நல்ல வருமானம் போல?

ஆம்! பெரிய வருமானம்! இந்த பொண்ண பெரிய ஆவி ஒண்ணு பிடிச்சிகிட்டு இருக்கு கழிப்பு எடுத்தாதான் குணமாகும். அவங்க கிட்ட சொல்லிபுட்டேன்!

என்னது பெரிய வருமானத்துக்கு அடிப்போட்டிட்டியா?

நீ சும்மா இரு தம்பி இது நம்ம மந்திரத்துக்கு அடங்காது தம்பி? பெரிய விவகாரமான பேயா இருக்குது அதான் பாய் கிட்ட போவ சொல்லியிருக்கேன்!

அப்ப உனக்கு கமிசன் கிடைக்கும்னு சொல்லு!

போங்க தம்பி எப்பவும் உங்களுக்கு எப்பவும் என் வருமானத்து மேல தான் கண்ணு!

அட நான் இப்ப என்ன இல்லாததையா சொல்லிட்டேன்! சரி யாரு இந்த பொண்ணை பிடிச்சிருக்கு?

போன மாசம் மருந்த குடிச்சி செத்து போனாலே செண்பகம் அவதான் இவ மேல வந்து குந்தியிருக்கா?

ஏனாம்?

அது அதெல்லாம் சொல்ல கூடாது! ரகசியம்! சரி சரி கிளம்புங்க தம்பி எனக்கு ஜோலி இருக்கு.

இதற்கு மேல் அந்த பூஜாரி வாய் திறக்க மாட்டார் என்று தோணவே வினோத் வேறு வந்து விடுவான் என்ற நினைப்பு வர வேகமாக வீட்டிற்கு சென்று வாசலில் நிற்கவும் காரில் வந்து இறங்கினான் வினோத். அவன் பின்னாலேயே ஒரு பெண்ணும் இறங்க

ஆகா! பையன் விவகாரத்ததான் கூட்டி வந்திருக்கான் என்று நினைத்துக் கொண்டான் ராகவன்.

வாடா! வா! நானும் ஜஸ்ட் இப்பத்தான் வந்து சேர்ந்தேன் வழியில கொஞ்சம் பூஜாரியோட அரட்டை அடிச்சதாலே லேட்டாயிடுச்சு.

இருவரையும் உள்ளே அழைக்க வீட்டின் முன் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு ராகவனின் மனைவி மீனாட்சியும் வாசலில் வந்து வினோத்! அட ஆச்சர்யமா இருக்கே! என்னப்பா திடீர்னு ஆமா இது யாரு? என்றாள் அவனுடன் உரசியபடி நின்ற பெண்ணைக் காட்டி!

இது! இது என்னோட ஒய்ப்! உள்ள போய் பேசுவமா? என்றான் வினோத்.

என்னடா என்கிட்ட கூட சொல்லாம கல்யாணம் பண்ணிகிட்ட சரி எப்ப மேரேஜ் நடந்துச்சு!

வினோத் பதட்டமாக இருந்தான். அதெல்லாம் அப்புறம் பேசுவோம்! முதல்ல இந்த காரை கட் பண்ணி அனுப்புவோம். லக்கேஜ் எல்லாம் எடுக்கலாம் என்று காரில் இருந்த பொருட்களை இறக்குவதில் கவனம் செலுத்தினான்.

பின்னர் அவசர அவசரமாக பொருட்களை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்த வினோத், வா செல்வி உள்ள வா! பயப்படாதே இது நம்ம வீடு மாதிரிதான் என்றான்.

அவள் கண்களில் மிரட்சி தெரிந்தது. கல்யாணம் ஆகிவிட்டது என்கிறான். ஆனால் காலில் மெட்டி இல்லை! கழுத்தில் தாலி அதுவும் இல்லை!

ஏதோ விபரீதம் என்பது மட்டும் புரிந்தது ராகவனுக்கு. அது எந்த அளவுக்கு அவன் வாழ்க்கையில் விளையாடப் போகிறது என்பதை அறியாதவனாக நண்பனை உள்ளே அழைத்துச் சென்றான் ராகவன்.

மிரட்டும் (2)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: