கவிதைக் காதலி

காதலர் தினம்
வெட்கப்படும் தருணங்கள்
எனக்கும் (கூட) இருக்கிறதென்று
உன்னுடன் நான் நெருக்கமாக
இருக்கும்போதுதான் முதல் முதலாக
உணர்ந்தேனடா!
பருவம் எழுதியதன் மகிழ்ச்சியை
நீ எனக்கு வழங்கிய பின்தான்
அழகாகப் புரிந்தது
காதலுக்கு எத்தனை பெரிய சக்தியென்று!
என்னுடைய எண்ணங்களுக்கெல்லாம்
வண்ணங்களைப் பூச நீ மட்டுமே
தெரிந்து வைத்திருக்கிறாய்!
காதலர் தினமென்று ஒரு தினத்தை மட்டுமே
குறிப்பிட்டு அநேகர் மகிழ்கின்றனர்
ஆனால் – அன்பே
உனக்கும் எனக்கும்
தினமும்தான் காதலர் தினம் என்று
நமக்கு மட்டுமே அல்லவா தெரியும்!
உன்னை நினைத்து
நான் வியக்கும் வினாடிகள்
ஒன்றிரண்டல்லடா!
அந்த வியப்பின் வினா என்ன தெரியுமா?!
என் கற்பனைகளிலும் கனவுகளிலும்கூட
விடாமல்
என்னை முழுதாய் ஆளவும்
ஆக்ரமிக்கவும்
நீ மிகவும் கை தேர்ந்தவனாக இருக்கிறாய்!
உன் காதலில் மட்டுமல்ல
உன் கவிதைகளிலும் நான் வாழ்வதற்காகதான்
நான் உன் கவிதைக் காதலியாக மாறினேன்!
முத்து ஆனந்த், வேலூர்
மன்மதன் அன்பு

நான் புன்னகைக்கும்போதெல்லாம்
புதிதாகப் பிறக்கும் என் கன்னக் குழிகளை
நம் செல்ஃபிக்களில்
நீ சேமித்து வைத்திருக்கிறாய்!
ஆனால் – அந்தக் கன்னக் குழிகளில்
நீ வழங்கிய காதல் முத்தங்களை
நான் பத்திரப்படுத்தியிருக்கிறேன்!
ஓரிரு நாட்கள் உன் முத்தங்கள்
இல்லாவிட்டால்கூட
என் காதல் காய்ச்சலில் விழுந்து விடுகிறது!
இப்படி நீ என்னை
அடிமைப்படுத்தி வைத்திருப்பது
உன் கொள்கையாகவே மாறிப் போயிற்று!
ஒரு நல்லவனைக்கூடக்
கொள்ளையனாக மாற்றி விடுகிறது
இதயங்களைப் பறிக்க வைக்கும்
இந்தக் காதல்!
என் மனசெல்லாம் ஆயிரம் பேர் இருந்தாலும்
என் மனசாகவே மாறத் தெரிந்தவன்
நீ ஒருவன்தான்!
தாள்களில் மட்டுமல்ல
நினைத்த இடத்திலெல்லாம்
நீ கவிதை எழுதத் தெரிந்தவன் என்று
உன்னைக் காதலித்த பிறகல்லவா
தெரிந்து கொண்டேன்!
உன் ஒவ்வொரு கவிதையையும்
என் விழிகள் விழுங்கி ரசித்தபோதுதான்
தெரிந்தது
காதல் இத்தனை பேரழகானதென்று!
என்னை ரதியென்று நினைக்க வைத்த
என் மன்மதன் உன் அன்பு
என்றென்றும் எனக்கு வேண்டுமடா!
முத்து ஆனந்த், வேலூர்
ஐஸ்க்ரீம்

உன் கவிதைகளில்
அப்படியொரு காதல் மின்னல்!
அதைப் படித்துப் படித்துதானே
நான் உன் அடிமையாகிப் போனேன்!
உனக்கும் எனக்குமான
ஒவ்வொரு நாளும்
நாம் காதலில் மிதந்து கொண்டிருக்க
தனியொரு நாளான காதலர் தினம்
நம்மை வாழ்த்திக் கண் சிமிட்டுகிறது!
எனக்குப் பிடித்த கவிதைகள்
என் ப்ரியசகியின் முத்தங்கள்
என்று நீ உன் நாட்குறிப்பில்
எழுதி வைத்திருந்ததை
நான் உனக்குத் தெரியாமல்
திருட்டுத்தனமாகப் படித்தபோதே
மெய் சிலிர்த்துப் போனேன்!
ஓர் ஐஸ்க்ரீமைப்போல்
உருகி உருகி வழிந்து
நீ என்னைக் காதலிப்பதற்கு முன்னால்
நான் ஒன்றுமேயில்லாமல் காணாமல்தான் போகிறேன்!
போதைப் பழக்கம்
கவலைகளைக்கூட மறக்க வைத்து விடும் என்று
எந்த நேரமும் உன் நினைவுகளுடனிருக்கும்
என் காதலை உதாரணமடா!
உன்னையும் என்னையும் சேர்த்து
நம் அன்பு இனி
நம்மை வழி நடத்தட்டும்!
முத்து ஆனந்த், வேலூர்