ஷிம்லா ஸ்பெஷல்! பகுதி 6

ஷிம்லா ஸ்பெஷல்!

நார்கண்டா பகுதியில் ஹாதூ பீக், மண்டோதரி கோவில் தவிர நிறைய விஷயங்கள் இருக்கின்றன – சுற்றுலாப் பயணிகளுக்கு – குறிப்பாக ட்ரெக்கிங் – மலைப்பாதையில் வன உலா, ஆப்பிள் தோட்டங்கள் போன்றவை. ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு அனுபவம் அங்கே கிடைக்கும். நாங்கள் போன சமயத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே எங்களுக்குக் கிடைத்ததால் நார்கண்டாவில் ஹாதூ பீக் மட்டுமே பார்க்க திட்டமிட்டிருந்தோம். ஷிம்லாவில் தங்குவதற்கு பதிலாக நார்கண்டாவில் ஏதேனும் ஒரு ரிசார்ட்டில் ஒரு நாள் தங்கலாம் – தனிமை விரும்பிகள்! நல்ல இடம். ஹாதூ பீக் விட்டு வர மனமே இல்லாமல் இருந்தது என்றாலும் புறப்பட்டு தானே ஆக வேண்டும். எனவே அங்கிருந்து அதே பயங்கர மலைப்பாதையில் கீழ் நோக்கிய பயணம். சிறிது தொலைவிற்குப் பிறகு சாதாரண பாதை தான் – முதல் 7 கிலோமீட்டர் தான் கொஞ்சம் கஷ்டம்.

போகும் போது எடுத்துக் கொண்ட நேரத்தினை விட சற்றே அதிக நேரம் எடுத்தது – போக்குவரத்து அதிகமாக இருந்தது – வழியில் இருந்த சிறு கிராமங்களில் ஆங்காங்கே ட்ராஃபிக் ஜாம் வேறு. வழியில் அப்படி இருந்த ஒரு கிராமத்தில் வண்டியை நிறுத்தி அங்கே இருந்த கடைகளில் சும்மாவேனும் வேடிக்கை பார்த்தோம். நிறைய மலைப்பழங்கள், காய்கறிகளை விற்பனைக்கு வைத்திருந்தார்கள். கேரள நண்பர்கள் பேரக்காய் [கொய்யா] வேண்டும் என வாங்கினார்கள் – ஹிமாச்சல் வந்தும் நம் ஊர் பழம்! நான் அவர்களுக்காக அங்கே கிடைக்கும் கின்னு, ப்ளம், ஆப்பிள், பேரிக்காய் போன்றவற்றை வாங்கினேன். ஹிமாச்சலப் பிரதேசத்தினை இந்தியாவின் பழக்கூடை [Fruit Bowl of the country] என அழைப்பதுண்டு! இந்தியாவின் பெரும்பகுதி ஆப்பிள் தேவை இங்கேயிருந்து தான் கிடைக்கிறது!

மலைப்பகுதிகளில் வளர்ந்து வரும் கட்டுமானங்களை பார்கும் போது மனதில் வேதனை – இன்னும் சில வருடங்களில் இந்தப் பகுதிகளும் கட்டிடங்களாக மாறி விடும் அபாயம் இருக்கிறது. மேலே உள்ள படத்தில் பாருங்கள் – எத்தனை அடுக்கு மாடி கட்டிடம் இந்த மலையில் கட்டி இருக்கிறார்கள். இது எத்தனை தூரம் பாதுகாப்பானது என்று புரியவில்லை. மலைச்சரிவு ஏற்பட்டால் அந்த கட்டிடம் என்ன ஆகும்? அங்கே இருப்பவர்கள் கதி என்ன என்ற சிந்தனைகள் மனதுக்குள். அதுவும் ஹிமாச்சல், உத்திராகண்ட் போன்ற இடங்களில் மலைகள் பாறைகளை விட மண் அதிகம் நிறைந்தது என்பதால் மலைச்சரிவுகள் அடிக்கடி நடக்க வாய்ப்பு உண்டு. ஒவ்வொரு மழைக்காலத்திலும் ஏற்படும் மலைச்சரிவுகள் நிறையவே.

இப்படி மலைப்பகுதிகளில் நடக்கும் விஷயங்களை அளவளாவியபடியே குஃப்ரிக்கு வந்து சேர்ந்தோம். அப்போது மதியம் இரண்டு மணி. குஃப்ரியில் இருக்கும் சில இடங்களைப் பார்ப்பதற்கு முன்னர் மதிய உணவினை எடுத்துக் கொள்வோம் என்று ஓட்டுனரிடம் சொல்ல, அவர் எங்களை அழைத்துச் சென்ற இடம் ஹோட்டல் ஹாலிடே இன்! அட குஃப்ரியில் கூட பிரபல ஹாலிடே இன் இருக்கிறதா என்று நீங்கள் கேட்பதற்குள் சொல்லி விடுகிறேன் – பெயர் மட்டும் தான். இது லோக்கல் மனிதர் நடத்தும் உணவகம். காலையில் சாப்பிட்ட உணவகம் போல இதிலும் மலைப்பகுதியையும் சாலையும் பார்த்துக் கொண்டே சாப்பிட வசதி – கண்ணாடிச் சுவர்! அங்கே அமர்ந்து கொள்ள மெனு கார்டு வந்தது. வழக்கம் போல உணவு ஆர்டர் கொடுப்பது என் வேலை!

சப்பாத்தி, தால் தடுக்கா, பிண்டி மசாலா, பூந்தி ராய்தா, சாலட், ஜீரா ரைஸ் மற்றும் கடாய் பனீர் ஆர்டர் செய்து காத்திருந்தோம். காத்திருக்கும் வேளையில் உங்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். இந்த குஃப்ரி பகுதி ஷிம்லாவிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும், ஷிம்லாவினை விட இங்கே பனிப்பொழிவு அதிகம் இருக்கும். அதனால் குஃப்ரி பகுதி பாதை அடிக்கடி மூடி விடுவார்கள். அந்தச் சமயங்களில் இங்கே அதிக அளவு போக்குவரத்து பிரச்சனை உண்டு. குஃப்ரியில் பார்க்க வேண்டிய இடங்கள் எனப் பார்த்தால் சில பாயிண்டுகள் மட்டுமே. அவற்றில் பாதிக்கு மேல் மலைப்பகுதிகளைப் பார்வையிட அமைத்திருக்கும் பாயிண்டுகள் தான். குஃப்ரி ஃபன் பாயிண்ட், மஹாசு பீக் [கோவேறு கழுதையில் பயணிக்க வேண்டும்!], ஹிமாலயன் நேஷனல் பார்க், இந்திரா டூரிஸ்ட் பார்க் போன்றவை மட்டுமே. இதில் எங்கே போக வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்ய சில விஷயங்களை பிறகு சொல்கிறேன்.

நாங்கள் சொல்லி இருந்த மதிய உணவும் வந்தது. பொறுமையாக அனைத்தையும் சாப்பிட்டோம். நன்றாகவே இருந்தது உணவு. மொத்தமாக மதிய உணவுக்கான செலவு ரூபாய் 820/-. இங்கேயும் அதிகமில்லை. எப்போதும் போல, இந்த முறையும் ஓட்டுனர் ரஞ்சித் சிங் எங்களுடன் சாப்பிடாமல் தனியாகவே ஹோட்டலின் வேறு பகுதியில் சாப்பிடச் சென்று விட்டார். நாங்கள் அழைத்தாலும் எங்களுடன் வராமல் வேறு இடத்திற்குச் செல்கிறார். சுற்றுலாத் தலங்களில் இருக்கும் இந்த மாதிரி ஹோட்டல்களில் வாடிக்கையாளர்களை அழைத்து வரும் ஓட்டுனர்களுக்கு சாப்பாடு இலவசம்! அதனால் அங்கே தான் செல்கிறார். நாங்கள் காசு கொடுத்து சாப்பிடச் சொன்னாலும் வாங்கிக் கொள்வதில்லை! ஏமாற்றக் கூடாது என்ற மனது – வாழ்க ரஞ்சித் சிங்.

நார்கண்டாவிலிருந்து புறப்பட்டு, மதிய உணவு சாப்பிட்ட பிறகு குஃப்ரியில் இருக்கும் சில இடங்களைச் சுற்றலாம் என முடிவு செய்தோம். குஃப்ரியில் அப்படி என்னதான் இருக்கிறது? இந்தப் பகுதியில் பார்க்கலாம்.

ஷிம்லா பார்க்கப் போகும் பலரும் சொல்வது ஷிம்லாவில் ஒன்றுமே இல்லை – ஷிம்லா போகும்போது அப்படியே குஃப்ரிக்கும் சென்று வாருங்கள் என்று – என்னைக் கேட்டால் பனிப்பொழிவு இருக்கும் மாதங்கள் தவிர மற்ற நாட்களில் குஃப்ரியில் பார்க்க ஒன்றுமே இல்லை என்று தான் சொல்வேன். தனியார் நிறுவனம் நடத்தும் Kufri Fun World, பனிப்பொழிவு காலங்களில் ஸ்கீ செய்யும் வசதிகள், மஹாசு பீக் என்ற இடம் [அந்த இடத்திற்குச் செல்லும் வழியைப் பார்த்தால் நிச்சயம் உங்களுக்குச் செல்லத் தோன்றாது!], Himalayan Nature Park மற்றும் உள்ளூர்வாசிகள் செய்த பல கலைப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அவ்வளவு தான் குஃப்ரியில்! இதைத் தவிர சில View Points மற்றும் Yak மீது அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள ஒரு வாய்ப்பு!

நாங்கள் சென்ற போது பனிப்பொழிவு இல்லாத காரணத்தால் Ski செய்யும் வசதிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அந்த வசதி இருந்திருந்தால் அந்த அனுபவம் பெற்றிருக்கலாம். Kufri Fun World என்பது நம்மூரில் இருக்கும் Wonderworld போன்ற சமாச்சாரம் – குழந்தைகளுடன் செல்பவர்கள் ரசிக்க முடியும்! எங்கள் குழுவில் என்னைத் தவிர வேறு குழந்தைகள் இல்லை! 🙂 கீதாம்மா இல்லை இல்லை என்னைவிடச் சின்னக் குழந்தை இல்லை என்று சண்டைக்கு வரப் போகிறார்கள் – அதற்குள் அடுத்த விஷயத்திற்கு தாவி விடுகிறேன். View Points எனக்கென்னமோ அத்தனை ருசிக்க வில்லை – ஹாதூ பீக் பகுதியில் கிடைத்த வியூ ஷிம்லா-குஃப்ரியில் வேறு எங்கும் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.


மஹாசு பீக் செல்லும் வழியில் Deshu Peak என்ற ஒரு இடமும் வருகிறது. மஹாசு பீக் செல்லும் பாதை குறுகிய பாதை தான் – இந்தப் பாதையில் வாகனங்கள் செல்ல இயலாது என்பதால் ஒன்று நடந்து செல்ல வேண்டும் – அல்லது இங்கே இருக்கும் குதிரை/போனியில் செல்ல வேண்டும். பாதை முழுவதும் குதிரை/போனியின் எச்சங்கள் மற்றும் சேறும் சகதியும் உண்டு என்பதால் நடந்து செல்ல வாய்ப்பே இல்லை. குதிரைக் காரர்கள் சொல்லும் கட்டணம் சற்றே அதிகமாகவே இருக்கிறது. மஹாசு பீக் வரை செல்ல ஒரு ஆளுக்கு 650 ரூபாய் வரை வாங்குகிறார்கள். Deshu Peak வரை என்றால் 350 ரூபாய். ஆனால் பெரும்பாலும் குதிரைக்காரர்கள் சுற்றுலா வாசிகளை ஏமாற்றவே முயற்சிக்கிறார்கள்.

குதிரை மீது அமர்ந்து கொண்டு செல்ல, குதிரை வாலாக்கள் நடந்து வருகிறார்கள். அந்த சேறும் சகதியுமான குதிரை எச்சங்கள் நிறைந்த பகுதியில் நடப்பதற்கே அவர்களுக்குத் தனியாக காசு தர வேண்டும் என்றாலும் பல சமயங்களில் அவர்கள் ஏமாற்றுக் காரர்களாக இருப்பது பார்த்தால் வருத்தம் தான் மிஞ்சும். ஏற்கனவே ஹாதூ பீக் வரை சென்று வந்ததால் எங்கள் குழுவினருக்கு மஹாசு பீக் செல்ல ஆசையில்லை. கூடவே அந்த வழியைப் பார்த்தவுடன் அவர்கள் சொன்னது “ஹேய்…. ஒரே ச்சளி!” அதனால் அப்படியே மலைப்பாதையில் வேறு பக்கமாக கிராமங்கள் நோக்கி நடந்தோம். அந்தப் பாதையில் தான் இன்னுமொரு சுற்றுலாத்தலமான ஹிமாலயன் நேஷனல் பார்க் இருக்கிறது.


இங்கே பலவித பறவைகள் மற்றும் பாலூட்டிகளை அடைத்து வைத்திருக்கிறார்கள். இந்த பூங்காவிற்குள் செல்ல கட்டணம் உண்டு. கூடவே கேமரா கட்டணமும். ஏற்கனவே இயற்கையாக விலங்குகள் வசிக்கும் காடுகளுக்கு பயணம் சென்றிருப்பதால் இந்த மாதிரி கூண்டுகளுக்குள் அடைபட்டிருக்கும் இடத்திற்குச் செல்ல மனது வருவதில்லை. பாவம் என்று தான் தோன்றும். வெளியிலிருந்து சில பல படங்களை எடுத்துக் கொண்டு மேலே நடந்தோம். இந்தப் பகுதியில் நிறைய கடைகள் இருக்கின்றன. பெரும்பாலும் தேவதாரு மரங்களிலிருந்து செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள், குளிர் காலத்திற்குத் தேவையான உடைகள், பெண்களுக்கான அணிகள் விற்கும் கடைகள் போன்றவை தான் அதிகம்.

மரப் பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு கடைக்குள் நுழைந்து பார்வையிட்டோம். நிறைய பேரம் பேச வேண்டியிருக்கிறது இது போன்ற கடைகளில். ஆள் பொருத்து விலை சொல்கிறார்கள் – சில வெளியூர் பயணிகள் ஹிந்தி தெரியாமல் கண்முன்னே ஏமாறுவதைப் பார்க்க முடிந்தது. எங்களிடம் ஒரு விலை சொல்லும் கடைக்காரர், அவர்களிடம் வேறு விலை – அதிகமான விலை சொல்கிறார்! எங்களை விட அதிகம் விலை கொடுத்து வாங்கியதையும் பார்த்தேன் – கடைக்காரரிடம் கேட்க, உனக்குக் கொடுத்த மாதிரியே எல்லாருக்கும் கொடுக்க முடியாது என்கிறார்! மரத்தினால் செய்யப்பட்ட சில பொருட்களை நானும் மற்ற நண்பர்களும் வாங்கிக் கொண்டோம். அங்கிருந்தபடியே எங்கள் வாகன ஓட்டுனரைத் தொடர்பு கொண்டோம். அவர் கீழே வாகன நிறுத்தத்தில் வண்டியை நிறுத்தி இருந்தார்.

ஆப்பிள் போலவே – இது உலர் பழங்கள் வைக்க….

குஃப்ரியிலிருந்து….

அவர் நாங்கள் நின்ற இடத்திற்கு வந்து சேர வாங்கிய பொருட்களை உள்ளே வைத்து நாங்களும் அவரவர் இடங்களில் அமர்ந்தோம். இந்த மலைப்பகுதிகளில் இருக்கும் ஒரு விலங்கு Yak! பார்க்க நம் ஊர் எருமை போலவே இருந்தாலும் இந்த Yak பனிப் பிரதேசங்களில் மட்டுமே இருக்கின்ற ஒரு விலங்கு. குஃப்ரி பகுதியில் நிறைய இடங்களில் சாலையோரங்களில் ஒன்றிரண்டு யாக் வைத்துக் கொண்டு சிலர் நின்று கொண்டிருப்பார்கள். உங்களுக்கு விருப்பம் இருந்தால் அவற்றின் மீது அமர்ந்து நிழற்படங்கள் எடுத்துக் கொள்ளலாம்! ஒரு ஆளுக்கு 50 ரூபாய் வாங்குகிறார்கள். எத்தனை படங்கள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் – அதற்கு தடை ஒன்றும் இல்லை. வழியில் இருந்த ஒரு யாக் அருகில் வண்டியை நிறுத்தினார் ஓட்டுனர்.

எங்கள் குழுவில் இருந்த அனைவரும் தனித்தனியே யாக் மீது அமர்ந்து படங்கள் எடுத்துக் கொண்டோம். பார்க்க ரொம்பவே சாது மாதிரி இருந்தாலும், இவற்றுக்கும் கழுதைக்கும் ஒரு ஒற்றுமை உண்டு – பின்னங்கால்கள் அருகில் சென்றால் கழுதை போலவே யாக்-உம் உதைத்து விடும்! குழுவில் இருந்த ஒரு கேரள நண்பர் வால் அழகா இருக்கே, என பின்னங்கால் அருகே செல்ல, நண்பரை விலகச் சொல்லி, யாக் உரிமையாளர் அலறினார். நல்ல வேளை யாக் உதைக்காமல் விட்டது! யாக் உரிமையாளருக்கு எங்கள் நால்வருக்கும் சேர்த்து ரூபாய் 200 கொடுத்து அவரிடம் என்ன சாப்பிடக் கொடுப்பார், என்றெல்லாம் விசாரித்துக் கொண்டிருந்தோம் – பதில் சொல்ல அவருக்கு விருப்பமில்லை – ”படம் எடுத்துக்கிட்டியா, போயிட்டே இரு” என்ற எண்ணத்துடன் இருந்தார்!

இப்படியாக குஃப்ரி பகுதியில் சில பல விஷயங்களைப் பார்த்து, பொருட்களை வாங்கி, படங்கள் எடுத்துக் கொண்டு ஷிம்லா நோக்கி புறப்பட்டோம். வழியில் என்ன செய்தோம், ஷிம்லா வந்த பிறகு என்ன செய்தோம் என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

குஃப்ரியிலிருந்து புறப்பட்ட எங்கள் பயணம், அடுத்ததாக நின்றது ஷிம்லா நகரில் தான். இந்தப் பயணத்தொடர் ஆரம்பிக்கும் போதே, ஷிம்லாவிற்குச் செல்ல சாலை வழி, ஆகாய வழி மற்றும் இரயில் பாதை உண்டு என்று சொல்லி இருந்தது நினைவில் இருக்கலாம். கால்காவிலிருந்து ஷிம்லா வரை குறுகிய பாதை இரயில் இருக்கிறது – நமது தமிழகத்தின் ஊட்டி இரயில் போலவே இங்கேயும் உண்டு. மிகவும் புராதனமான இரயில் பாதை. ஆங்கிலேயர்கள் காலத்திலேயே அமைக்கப்பட்ட பாதை – அதில் பயணம் செய்ய இயலவில்லை – நாங்கள் சாலை வழிப் பயணம் – பேருந்தில் தான் சென்றோம் என்பதால், இரயில் நிலையத்திற்கோ, அல்லது இரயில் பாதையையோ சென்று பார்க்க வேண்டும் என நினைத்திருந்தோம்.ஷிம்லா இரயில் நிலையம்…

ஓட்டுனர் ரஞ்சித் சிங்-இடம் எங்கள் எண்ணத்தைச் சொன்னபோது, கவலை வேண்டாம் – உங்களுக்கு ஒரு அருமையான இடத்திற்கு அருகே அழைத்துச் செல்கிறேன் – அங்கிருந்து உங்களுக்கு இரயில் நிலையத்தின் நல்ல View கிடைக்கும் என்று சொன்னார் – அட, பரவாயில்லையே, இதுவும் தெரிந்திருக்கிறதே இவருக்கு என, அங்கே அழைத்துச் செல்லச் சொன்னோம். அவர் எங்களை அழைத்துச் சென்றது, இரயில் நிலையம் அருகில் இருந்த ஒரு Foot Over Bridge பகுதிக்கு. எங்களை அங்கே இறக்கி விட்டு அடுத்த பக்கத்தில் வாகனத்தினை எடுத்துக் கொண்டு வருவதாகச் சொல்லிச் சென்றார். நாங்கள் சாலையைக் கடக்க அமைந்திருந்த இரும்பு Foot Over Bridge மீது ஏறிச் சென்றோம்.

வாவ்…. உண்மை – இரயில் நிலையத்தின் நல்ல View அங்கிருந்து கிடைத்தது. நானும் நண்பர் பிரமோத்-உம் அந்த பாலத்திலிருந்து இரயில் நிலையத்தினை நிறைய படங்கள் எடுத்துக் கொண்டோம். நாங்கள் படம் எடுத்துக் கொண்டிருந்ததை உங்களுக்குச் சொல்லும் போது அந்த இரயில் நிலையம் பற்றிய சில தகவல்களையும் பார்க்கலாம். Lord Curzon அவர்களால் 1901-ஆம் ஆண்டு திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்டது இந்த இரயில் பாதையும் இரயில் நிலையமும். கால்காவிலிருந்து சுமார் 96 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஷிம்லாவிற்கான இருப்புப் பாதை – கடல் மட்டத்திலிருந்து 2150 அடி உயரத்திலிருந்து [கால்கா] – 6811 அடி உயரத்திற்கு [ஷிம்லா] செல்லும் இரயில் பாதை. 100 வருடங்களுக்கும் மேலே ஆன இந்த இருப்புப் பாதை UNESCO WORLD HERITAGE SITE!

1901-ஆண்டு ஆரம்பித்து 1903-இல் பணி நிறைவு பெற்றது. 9, நவம்பர் 1903-ஆம் ஆண்டு இந்தப் பாதையில் இரயில் போக்குவரத்து துவங்கியது! இரண்டு ஆண்டுகளில் இத்தனை சிறப்பான பணி நடந்திருக்கிறது. பாதையில் இரண்டில் மூன்று பகுதிக்கும் மேல் வளைவுகள் தான் – மொத்தம் 900 இடங்களில் வளைவுகள்! நேர் பாதை இல்லை! வளைந்து வளைந்து செல்லும் இந்தப் பாதையில் 103 குகைகளும், எண்ணூற்றிற்கும் மேற்பட்ட பாலங்களும் இருக்கின்றன. ஏழு பெட்டிகள் கொண்ட இந்த இரயில், மணிக்கு 22 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. கால்காவிலிருந்து ஷிம்லா வரையான 96 கிலோமீட்டர் தூரம் பயணிக்க சுமார் ஐந்து மணி நேரம் எடுக்கும். ஆனால் மிகவும் இரசிக்க முடியும் இந்தப் பயணத்தினை – ஏனெனில் போகும் பாதை அப்படி.

ஹிமாலயன் க்வீன், ஷிவாலிக் டீலக்ஸ் போன்ற ஐந்து இரயில்கள் கால்காவிலிருந்து ஷிம்லாவிற்கும், ஷிம்லாவிலிருந்து கால்காவிற்கும் பயணிக்கின்றன. குழந்தைகளுடன் பயணிப்பது என்றால் இந்த இரயில் பயணம் மிகவும் இரசிக்கக் கூடிய விஷயம். இயற்கையை ரசித்தபடியே இந்தப் பாதையில் பயணிப்பது நன்றாக இருக்கும். இந்த இரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்யும் வசதி உண்டு. மற்ற இரயில் பயணங்கள் போல அல்லாமல் ஒரு மாதம் முன்னர் தான் முன்பதிவு செய்ய முடியும் – WWW.IRCTC.COM தளத்தில் Kalka – Simla தேர்வு செய்தால் இந்த இரயில்களுக்கான முன்பதிவு செய்யும் வசதிகள் இருக்கின்றன. கட்டணம் – 65 ரூபாய் முதல் 565 ரூபாய் வரை – பயணிக்கும் வகுப்பினைப் பொறுத்து! சரியாக ஒரு மாதம் இருக்கும் போது முன்பதிவு செய்து கொள்வது நல்லது!

ஷிம்லா இரயில் நிலையம்…

மலைப்பகுதியில் கிடைக்கும் இலந்தைப் பழம்….

இரயில் நிலையத்தின் படங்களை எடுத்துக் கொண்டு பாலத்தின் வழி மறுபக்கத்தில் இறங்க, ஓட்டுனர் ரஞ்சித் சிங் அங்கே எங்களுக்காகக் காத்திருந்தார். வாகனத்தில் ஏறிக் கொண்டு எங்கள் தங்குமிடம் அருகே இறக்கி விட்டார். எங்கள் உடைமைகளை தங்குமிடத்தின் வரவேற்பு அறையில் இருக்கும் உடைமைகள் காப்பகத்தில் வைத்து விட்டு மால் ரோடு நோக்கி நடந்தோம். முதல் நாளும் மால் ரோடு பகுதியில் மாலை நேரத்தில் நிறைய நேரம் நடந்தோம். இரண்டாவது நாளும் மால் ரோடு பகுதியில் இருக்கும் வேறு சில இடங்களுக்கு சென்று வந்தோம். பழங்கள், காய்கறிகள் விற்பனை செய்யும், இடம், கீழே இருந்த கிராமங்கள் என நீண்ட தூரம் நடந்து வந்தோம். உள்ளூர் மக்களையும், அவர்கள் பழக்க வழக்கங்களையும் பார்த்து ரசித்த பிறகு தங்குமிடம் திரும்பினோம்.

அறையில் எங்கள் உடைமைகளை சரிபார்த்துக் கொண்டு சற்றே ஓய்வு. இரவு 10 மணிக்கு ஷிம்லாவிலிருந்து தில்லி நோக்கிய பயணம் – ஹிம்சுதா – ஹிமாச்சலப் பிரதேச அரசு வோல்வோ பேருந்தில் முன்பதிவு செய்திருந்தோம். இரவு உணவினை தங்குமிடத்திலிருந்த ஹல்திராமில் முடித்துக் கொண்டோம். தங்குமறையைக் காலி செய்து, ஓட்டுனர் ரஞ்சித் சிங் அவர்களை அழைக்க, அவர் வாகனத்திலேயே பேருந்து நிலையம் வந்து சேர்ந்தோம். சிறிது நேர காத்திருப்பிற்குப் பிறகு பேருந்து வந்து சேர்ந்தது. பேருந்தி அமர்ந்து சில நிமிடங்களில் நல்ல உறக்கம். வழி முழுவதும் உறக்கத்திலேயே கழிந்தது. விடிகாலை தில்லி வந்த பிறகு விழித்து ஒரு ஆட்டோ பிடித்து, வழியில் கேரள நண்பர்களை கேரளா இல்லத்தில் விட்டுவிட்டு நான் வீடு வந்து சேர்ந்தேன்.

சிம்லா, குஃப்ரி, நார்கண்டா பயணம் இனிதே நிறைவுற்றது! பயணம் நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்! சமீபத்தில் சென்ற அனைத்து பயணங்கள் பற்றியும் உங்களுடன் பகிர்ந்து கொண்டுவிட்டேன். கடந்த மே மாதம் தமிழகம் வந்திருந்த போது இரண்டு நாட்கள் புதுச்சேரி சென்று வந்தேன் – கல்லூரி தோழர்களின் சந்திப்பு – ஆனால் அப்பயணம் பற்றிய கட்டுரைகள் தொடராக எழுதப் போவதில்லை! முடிந்தால் ஒன்றிரண்டு பதிவுகளில் எழுதுகிறேன். வேறு பயணம் செல்ல வாய்ப்பு இதுவரை அமைய வில்லை. கடைசியாக சென்ற பயணம் சென்ற நவம்பர் மாதம் [2017]. அடுத்த நவம்பரே வந்து விட்டது! பயணம் வாய்க்கவில்லை! அதனால் நீங்களும் என் தொடர் பயணக்கட்டுரைகளிலிருந்து தப்பினீர்கள்! வேறு பயணம் செய்தால், அந்த அனுபவங்களை, முடியும் போது பகிர்ந்து கொள்வேன்!

நிறைவுற்றது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: