
நமக்குத் தெரிந்த ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டோ,விபத்தில் சிக்கியோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த தகவல் நம் கவனத்துக்கு வருகிறது.
நாம் என்ன செய்வோம்?
*சம்பந்தப்பட்டவரின் போன் நம்பரை தெரிந்து கொண்டு தொடர்பு கொள்வோம். யாராவது எடுப்பார்கள். விசாரிப்போம். ஆறுதலாக நாலு வார்த்தை சொல்வோம்.
*சம்பந்தப்பட்டவர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிற பட்சத்தில், நம்மால் நேரம் ஒதுக்க முடிந்தால் நேரில் போய் பார்த்துவிட்டு வருவோம்.
*நம்மிடம் அவருக்கு உதவுகிற அளவுக்கு பணமும், உதவுகிற மனதும் இருந்தால், சம்பந்தப்பட்டவருக்கு நம்முடைய பண உதவி தேவைப்படுமானால் கை கொடுப்போம்.
*ரத்தம் தேவைப்படுமானால் தானம் செய்யவோ, யார் மூலமேனும் ஏற்பாடு செய்யும் முயற்சியிலோ இறங்குவோம்.
*’கூட்டுப் பிரார்த்தனை’க்கு அழைப்பு விடுப்போம்.
ஆனால், இன்று நாம் அப்படியா நடந்து கொள்கிறோம்?
கிட்டத்தட்ட 200 பேர் அங்கம் வகிக்கிற ‘வாட்ஸ்ஆப்’ குரூப் அது. குழுவின் உறுப்பினரில் ஒருவருக்கு விபத்து. காயங்களுக்கு கட்டுப் போட்டபடி அவர் மருத்துவமனையில் படுத்திருக்கும் போட்டோவை குழுவிலுள்ள ஒருவர் பகிர்ந்திருந்தார்.
உடனே ஒருவர், ‘விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ என்றார்.
இன்னொருவர், ‘நண்பா, கவலைப் படாதே. உன் நல்ல மனசுக்கு சீக்கிரம் மீண்டு வருவாய். வாழ்த்துகள்‘ என பதிவிட்டார்.
வேறொருவர், ‘உங்களுக்கா இந்த நிலைமை? கடவுளுக்கு கருணையே இல்லையா?’ என ஃபீலிங்கை கொட்டினார்.
நாள் முழுக்க பலரும் இப்படியே குரூப்பில் ஆறுதல் வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டேயிருந்தார்கள்.
ஆக்ஸிடென்டில் அடிபட்டுக் கிடப்பவர் போனை கையில் வைத்துக் கொண்டு வாட்ஸ்ஆப்’பில்யார் யார் தனக்கு ஆறுதல் சொல்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருப்பாரா?
குரூப்பில் பதிவாகும் சம்பிரதாய ஆறுதல்கள், நாமும் ஏதேனும் சொல்ல வேண்டுமே என்ற எண்ணத்தில் உதிர்க்கும் இயந்திரத் தனமான விசாரிப்புகள் சிகிச்சையெடுத்துக் கொண்டிருப்பவருக்கு எந்த விதத்தில் உதவும் என்பது புரியவில்லை.
மரணச் செய்தி வந்தாலும் இதே நிலைமைதான். பலரும் RIP போடுவதோடு கடமை முடிந்துவிட்டதாக கருதுகிறார்கள். சிலர் ‘ஆழ்ந்த இரங்கல்’, ‘நெஞ்சம் வெடிக்கிறது, இதயம் பிளக்கிறது’ என விதவிதமான வார்த்தைகளால் உருகுகிறார்கள். சிலர் கண்ணீர் வடிக்கிற எமோஜியைத் தட்டிவிடுவதோடு சரி.
வாட்ஸ்ஆப்’பில் மட்டுமில்லை. ஃபேஸ்புக்கிலும் இதே நிலைமைதான்.
மனிதர்கள் இப்படியான மனநிலைக்கு வந்திருப்பதே வேதனை. இதை மிஞ்சும் கொடுமையெல்லாம் நடக்கிறது. உதாரணத்துக்கு சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம்…
கவிஞர்கள் சிலர் அங்கம் வகிக்கிற வாட்ஸ்ஆப் குரூப் அது. அதன் அட்மினின் மாமியார் காலமாகி விட்டார். அந்த தகவலை அட்மினே குரூப்பில் தெரிவித்தார். தெரிவித்துவிட்டு, ஆகவேண்டிய காரியங்களைக் கவனிக்கப் போய்விட்டார்.
குரூப்பில் பலரும் RIP போட்டுக் கொண்டிருந்தார்கள். ‘குழுவில் ஒருவர் இரங்கல் செய்தி போட்டபின் நாம் சும்மாயிருந்தால் நல்லாயிருக்காது’ என்ற எண்ணத்தில் பலரும் இயந்திரத்தனமாக RIP போடுவது பழக்கமாகி வழக்கமாகி விட்டது. சரி இதிலாவது ஒற்றுமையாக இருக்கிறார்களே என பாஸிடிவாக எடுத்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.
போகட்டும்… சில நாட்கள் கழித்து அந்த குரூப்பின் அட்மினிடம் பேச வாய்த்தது. என் வேதனையை பகிர்ந்து கொண்டேன்.
“அட ஏங்க கேக்குறீங்க? ஒருத்தர் என்கிட்டே, ‘உங்க மாமியாருக்கு குரூப்ல இரங்கல் செய்தி போட்டதுக்கு ஏன் நீங்க ரிப்ளை பண்ணலை?’ன்னு கோச்சிக்கிட்டார்” என்றார். அவர் குரலில் அத்தனை வேதனை.
இதையெல்லாம் பார்க்கும்போது யாராவது செத்துப் போனால் அவரது வாட்ஸ்ஆப்’பிற்கே இரங்கல் செய்தி அனுப்புவதெல்லாம் கூட நடந்து கொண்டிருக்கும் என யூகிக்கிறேன்!
இந்த சமூக வலைதளங்கள் மனிதர்களை இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறதோ? எப்படியெல்லாம் மாற்றப் போகிறதோ?
எப்படியிருந்த நாம…
-சு. கணேஷ்குமார், WhatsApp: 99415 14078
==================================================================================