குற்ற உணர்ச்சி

“அகல்”

போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரபாண்டியின் வீட்டை சந்தானம் சில வாரங்களாக தீவிரமாக உளவு பார்த்துக் கொண்டிருக்கிறான். வீரபாண்டி எப்போது அலுவலகத்திற்குப் போவார் எப்போது வீடு திரும்புவார். அவரது 4 வயது மகள் கீதாவை எப்போது பள்ளிக்கு அழைத்துச் செல்வார்கள் திரும்ப வீட்டுக்கு அழைத்து வருவார்கள், வீரபாண்டி மனைவியின் அன்றாட வேலை என்ன என்பது முதல் அவர்கள் பால் வாங்கும் நேரம், படுக்கைக்குப் போகும் நேரம் வரை சந்தானத்திற்கு ஓரளவிற்கு அனைத்தும் அத்துபடி.

அதிகாலை ஐந்து மணி. மழை வருவது போல ஈரப்பதமான காற்று வீசிக் கொண்டிருக்கிறது. அந்தத் தெருவில் பாதி பேர் எழுந்து விட்டதை அவர்கள் வீட்டில் எரியும் விளக்குகள் காட்டிக் கொடுத்தது. டீக்கடையில் இளையராஜா பாடல். அந்தக் கடையின் மையத்தில் அனாதையாகத் தொங்கிக் கொண்டிருக்கும் முட்டை பல்பைச் சுற்றி பூச்சிகள் மொய்த்துக் கொண்டிருக்கிறது. ரோட்டில் ஆங்காங்கே இருக்கும் குழிகளை குடிநீர் குழாயில் வழிந்தோடும் தண்ணீர் நிரபிக் கொண்டிருக்கிறது. வீரபாண்டியில் புல்லட் வெளிச்சம் காற்றையும், அதன் சத்தம் தூங்கிக் கொண்டிருப்போர் காதுலையும் கிழித்தது.

இந்த புல்லட் சத்தம் பெரியவர்களுக்கு எரிச்சலையும் இளவட்டங்களுக்கு குஷியையும் அவ்வப்போது தரும். போலீஸ்காரனுக்கே உண்டான விரைப்பு வீரபாண்டியின் நடையிலும் பேச்சில் எப்போதும் கலந்திருந்தாலும் அந்தத் தெருவில் எல்லோருக்கும் பிடித்த மனிதர்.போலீஸ்காரன் தெருவில் இருப்பது அவர்களுக்கு ஒரு விதமான தைரியமும் கூட.

தோப்பைத் தாண்டி தனிமையில் இருக்கும் மரத்தைப் போல அவரது வீடும் தெருவைத் தாண்டி தனிமையில் இருந்தது. காம்பவுண்ட் சுவற்றிக்குள் நுழைந்த புல்லட்டின் வெளிச்சம், வீட்டின் கதவில் அடித்தது. கதவில் இருந்த விநாயகர் படம் தெரிந்தது. சாந்தி கதைவை திறந்தாள். புல்லட்டின் எஞ்சினுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது.

“வாங்க, என்னங்க ரொம்ப வேலையா?” தலையைத் துவட்டிக்கொண்டே கேட்டாள் சாந்தி.

“ஆமா சாந்தி. ஊருல இருக்க அயோக்கியப் பயலுகள்ள முக்காவாசிப்பேரு அரசியல்லதான் இருக்கானுக. அவிங்களுக்கு பந்தபஸ்து குடுக்க நாங்க படுற பாடு இருக்கே நாய்ப்பொழப்பு. என்ன பண்ண ? போதாக்கொறைக்கு நகையக் காணாம், பணத்தக் காணாம், அதத் திருடிட்டான் இதத் திருடிட்டான்னு இன்னும் பத்து வருஷத்துக் பாக்குற அளவுக்கு ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் குவிஞ்சு கெடக்கு. எழும்ப ஓடச்சாலும் எவனும் திருந்த மாட்டேங்குறான்”
சலித்துக் கொண்டார்.

“சரி அதவிடு, 5 மணிக்கே குளிச்சிட்ட?” கேட்டார் வீரபாண்டி.

“இத்தன பிரச்சனையில உங்களுக்கு சொந்த பிரச்சன எல்லாமே மறந்துபோகுது. இன்னைக்கு ஞாயிற்றுக் கிழமைங்க. சிந்தப்பா பொண்ணுக்கு7.30 டு 8.30 முகுர்த்தம். எல்லாம் வாங்கிக்குடுத்த போதுமா. சரி உள்ள வாங்க. குளிச்சிட்டு கெளம்புங்க. நான் டீ எடுத்துட்டு வாறன்”

சட்டையின் முதல் இரண்டு பட்டங்களைக் கழட்டிவிட்டு சோபாவில் அமர்ந்தார் வீரபாண்டி

“அய்யோ. சாரி மா. மறந்தே போச்சு, ஒருவாரம ஒரே அலைச்சல். என்னால ஒன்னும் முடியல சாந்தி அதனால” இழுத்தார் வீரபாண்டி.

“அதனால ?” அழுத்தமாகக் கேட்டாள் சாந்தி.

“நீ மட்டும் போயிட்டு வாயேன்”

“என்ன பேசுறோம்னு தெரிஞ்சுதான் பேசுறிங்களா ? இது உங்க சின்ன மாமனார் பொண்ணுங்க நீங்க வராம எப்டி ? இப்படியே பண்ணிட்டு இருந்திங்கன்னா நம்ம பொண்ணு கல்யாணத்துக்கு ஒருத்தரும் வரமாட்டாங்க”

“அதுக்கு இன்னும் இருவது வருசத்துக்கு மேல இருக்கே!”

“அதல்லாம் சீக்கிரம் ஓடிரும். விளையாடாம கெளம்புங்க”

“என்னப் பாத்தா விளையாடற மாதிரியா இருக்கு சாந்தி?”

வீரபாண்டியின் கண்களை உற்றுப் பார்த்தாள் சாந்தி. ரத்தம் வெளியே வராத குறை. செக்க செவேல் என்று இருந்தது. கண்கள் தூக்கத்திற்காக ஏங்கியதை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. முகத்தைப் பார்க்க சாந்திக்கு பாவமாக இருந்தது. அதற்குமேல் வீரபாண்டியை வற்புறுத்த அவளுக்கு மனது வரவில்லை. தனியாக திருமணத்திற்குப் போகவும் மனதில்லை.

“கீதா நைட் சப்டாளா?”

“உங்களுக்காக ரொம்ப நேரம் சாப்டாம இருந்தா, நான்தான் அது இதுன்னு சொல்லி சாப்டு தூங்க வச்சேன்”

“பேசாம ரிசெப்சனுக்கு போலாமா ?” கேட்டாள் சாந்தி.

“இல்லாம நல்லாருக்காது. உன் தங்கச்சியும் சித்தப்பாவும் ரொம்ப கஷ்டப்படுவாங்க. நீ போயிட்டு வாயேன். இது எலக்சன் டைம். மாமாட்ட எடுத்துச் சொன்ன புரிஞ்சுக்குவாரு”

“ஹ்ம்ம், அப்ப கீதா?” கேட்டாள் சாந்தி.

“அவள இப்ப எழுப்பாட்டி குளிக்க வைக்க முடியாதுமா, பாவம் தூங்கட்டும், நீதான் சாயங்காலம் வந்துருவில்ல ? நான் அவள பாத்துக்கிறேன். நீ போயிட்டுவா”

“உங்கள நம்ம முடியாது, திடிருன்னு வெளிய போவிங்க. அப்பறம் இவ தனியா அழுதுட்டு இருப்பா”

“எங்கயும் போக மாட்டேமா, எல்லாத்தையும் கண்ணன பாத்துக்க சொல்லிட்டு வந்துருக்கேன்”

“ஹ்ம்ம் சரி, அப்ப சாப்ட எதாவது பண்ணிவச்சுட்டு நான் கெளம்புறேன். நீங்க குளிச்சிட்டு வந்து கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க”

சாந்தி கிளம்பி ரெடியானாள். வீரபாண்டி சாந்தியை பஸ் ஏத்தி விட்டு வந்து படுத்தான்.

மணி ஆறரை இருக்கும். வீரபாண்டியின் போன் ஒலித்தது.

“சொல்லுங்க கண்ணன்”

“சாரி சார். ராத்திரி நடந்த பொதுக் கூட்டத்துல ஒரு சின்ன பிரச்சன, கொஞ்சம் வந்திங்கனா நல்லாருக்கும். உடனே போயிடலாம்” இழுத்தார் ஏட்டு கண்ணன்.

“என்ன பிரச்சன கண்ணன்?”

ஐந்து நிமிடத்திற்கு பேசிவிட்டு போனை துண்டித்தார் வீரபாண்டி. சற்று யோசித்தார். கீதா எப்படியும் ஒன்பது மணிக்குத்தான் எழுந்திருப்பாள் என்பதால் வந்துவிடலாம் என்று நினைத்தார். யூனிபார்மை போட்டுக் கொண்டு வீட்டைப் பூட்டிவிட்டு உடனே கிளம்பினார்.

இதையெல்லாம் நோட்டம் பார்த்துக் கொண்டிருந்த சந்தானம், எப்படியும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள நினைத்தான். பெரியவர்கள் வீட்டில் யாருமில்லை. விட்டு விடக்கூடாது. வீரபாண்டியை இந்தமுறை பழிவாங்கியே தீரவேண்டும். ஒரு வெள்ளிக் குத்துவிளக்கு திருடியதற்காக லத்தி உடையும்வரை வாங்கிய அடியை மறந்தாலும், பூட்ஸ் காலில் தனது நெஞ்சில் வீரபாண்டி எட்டி உதைத்ததை அவனால் கொஞ்சமும் மறக்க முடியவில்லை. அவனால் சரியாக தூங்க முடியவில்லை.

வீரபாண்டியை திருப்பி அடிக்க முடியாது. அவனை பழிவாங்க வேறு என்ன வழி ? இதையே பல நாட்கள் யோசித்த பிறகு இந்த முடிவிற்கு வந்தான். அவனது வீட்டிலேயே திருட வேண்டும். இழந்ததை மீட்க வேண்டும், போலீஸ் வீட்டிலேயே திருட்டு என்று வீரபாண்டி அசிங்கப்பட வேண்டும் என்ன ஆனாலும் பரவாயில்லை என்ற குருட்டு தைரியம் அவனுக்கு.

வீரபாண்டியின் புல்லட் சத்தம் மட்டுப்பட்டது. அவர் தெருவைத் தாண்டி கடந்ததை உறுதிப்படுத்திக் கொண்டு மெதுவாக காம்பவுண்ட் சுவற்றிற்குள் நுழைந்தான். சுவற்று மறைவில் குனிந்து கொண்டே வீட்டை நெருங்கினான். பலமுறை நோட்டம் பார்த்து செய்து வைத்திருந்த போலி சாவியை வெளியே எடுத்தான். ஒரே திருக்கில் கதவு லடக் என்று திறந்தது.

ஹாலிற்குள் நுழைந்தான். கீதாவின் படுக்கையில் அவள் தூங்கிக் கொண்டிருந்தாள். கால் தெரிந்தது. அந்த அறையின் கதவைச் மெதுவாகச் சாத்தினான். வீரபாண்டியின் ரூமிற்குள் நுழைந்தான். இருப்பது குறைந்த நேரம் அனைத்தையும் வேகமாகச் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவனது மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது.

வெவ்வேறு சாவிகளைக் கொண்டு அருகருகே இருக்கும் இரண்டு பீரோவில் பெரியதாக இருந்த பச்சை பீரோவை திறக்க முயற்சித்தான்.முடியவில்லை. ஏதேதோசெய்து பார்த்தான் பிறகு உடைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று நினைத்து கையில் கிடைத்ததை எடுத்து உடைத்தான்.

உடைத்த வேகத்தில் வெளிவந்த கதவில் முனை அவனது கையைக் கிழித்தது, ரத்தம் கசிந்து சொட்ட ஆரம்பித்தது. அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. மனதிற்குள் வெறி. வீரபாண்டியின் மீது அத்தனை வெறி. பீரோ கதவு திறந்தது. வெளியே மழை தூறல் போட்டுக் கொண்டிருந்தது. குறைந்தது இருபது பவுன் நகை இருக்கும். அவசர அவசரமாக எடுத்து மஞ்சள் பைக்குள் போட்டுக்கொண்டிருந்தான்.

கரடு முரடான அவனது கால்களை பூப்போன்ற மென்மையான ஒரு கை தட்டியது. சட்டென்று பயம் கலந்த கண்களோடு அவன் திரும்பினான். கீதாவின் குரல் வளையில், ரத்தம் கசியும் அவனது கையைக் கொண்டு நெரிக்க முயன்றான். கீதா அழவில்லை. அந்த அறையின் மூலையில் இருக்கும் ஒரு டப்பாவை நோக்கி கையைக் காட்டினாள் கீதா.

அவனுக்கு புரியவில்லை. குரல்வலையை பதிந்த கைகளைத் சற்று தளர்த்திவிட்டு”என்ன ?” என்று கோபத்தோடு கேட்டான். அவனது முகம் வியர்த்துக் கொட்டியது.

கீதா ஏதோ சொல்ல முயற்சித்தாள். அதையெல்லாம் கேட்க அவனுக்கு நேரமில்லை. அந்த இடத்தைவிட்டு சீக்கிரம் வெளியேற முற்பட்டான். கீதா மீண்டும் காலைத் தட்டினாள். இந்த முறை புருவத்தை உயர்த்தி நாக்கைத் துருத்திக்கொண்டு”என்ன ?” என்று கேட்டான். கீதா பயந்தாள்.

“அங்கிள் அங்கிள்.. அப்பா சொல்லிருக்காங்க, ரத்தம் யாருக்கு வந்தாலும் உதவனும் அவங்களுக்கு கட்டுப்போடணும் இல்லேன செத்துருவாங்கனு. உங்களுக்கு கைல ரத்தம் வருதுல்ல ? கட்டுப்போடணுமுல்ல ? அங்க அம்மா கட்டுப்போட துணியும் மருந்தும் வச்சுருக்காங்க. எனக்கு ஒருநாள் ரத்தம் வந்தப்ப அத வச்சுதான் கட்டுப் போட்டாங்க நான் சாகல” என்று அப்பாவியாய், யாரிடம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று தெரியாது மழலை மொழியில் சொல்லிவிட்டு அழுதாள் அழுதாள்.

அவனது புருவம் கீழே தாழ்ந்தது. இவன் இதை எதிர்பார்க்கவில்லை. மனது சிலநொடிகளில் திக்குமுக்காடியது. இதுவரை இல்லாமல் அவனது மனதிற்குள் ஏதோ புகுந்தது. அவன்மீது அக்கறையோடு யாரும் இப்படிப் பேசியதாக அவனுக்கு ஞாபகம் இல்லை. அவனது கண்கள் முதல் முறையாக ஏதோ ஒன்றை உணர்ந்தது. அன்பு இப்படித்தான் இருக்குமா என்று மனதிற்குள் கேள்வி எழும்பியது. கீதாவின் முகத்தை மீண்டும் பார்க்க அவனுக்கு தைரியம் வரவில்லை. தான் திருட வந்தோம் என்பதை மறந்துவிட்டு மெதுவாக நகர்ந்தான்.

கையில் இருந்த நகைகள் நழுவி தரையில் விழுந்து தெரித்தது. வீட்டைவிட்டு வெளியே வந்தான் சந்தானம். அதிகாலை மழையில் உடலோடு சேர்ந்து மனதும் கழுவப்பட்டதாய் ஒரு உணர்வு அவனுக்குள் !

முற்றும்.

நன்றி: http://kakkaisirakinile.blogspot.com/2014/04/blog-post.html

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: