பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 16

“உங்கள் ப்ரிய பிசாசு”

முன்கதை: ராகவனின் நண்பன் வினோத் கூட்டி வரும் பெண் செல்வியின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்கையில் அவளை ப்ரவீணா என்னும் பெண்ணின் ஆவி பிடித்துள்ளதாக கூறுகின்றனர். அதை விரட்ட மூவரும் பாயிடம் செல்கின்றனர். அந்த மசூதியின் மவுல்வி செல்வி உள்ளே நுழையும் போதே வாம்மா பிரவீணா என்று அழைக்க மூவரும் அதிர்கின்றனர்.

வாம்மா! பிரவீணா! வா! என்று அந்த மசூதியின் மவுல்வி அழைக்கவும் சலாம் பாய் என்று கையை முகத்தில் வைத்து செல்வி முகமன் கூறவும் மிகவும் அதிசயமாக இருந்தது மணிக்கும் ராகவனுக்கும். வினோத்திற்கு வியர்த்து வாங்கியது நடப்பது எதையும் நம்ப முடியவில்லை அவனால்.

இப்படி உக்காரும்மா! என்று செல்வியை தனது எதிரில் அமரவைத்த அந்த மவுல்வி கண்களை மூடிக்கொண்டு எதையோ ஜபித்தார். பின்னர் தன் கையில் இருந்த மயில் இறகினால் மூன்று முறை தடவினார். ஒரு கிண்ணத்தில் இருந்த நீரை கை மூடி எதையோ ஜபித்த அவர் அதையும் மயில் இறகினால் செல்வியின் முகத்தில் தெளித்தார்.

இது எதற்கும் மறுப்பு தெரிவிக்காமல் மவுனமாக இருந்தாள் செல்வி. பின்னர் வாம்மா ப்ரவீனா என்று செல்வியை உள்ளே அழைத்துச் சென்றார். மூவரும் உடன் செல்ல முயன்ற போது தடுத்த அவர் நீங்க இங்கேயே இருங்க என்று சொல்லிவிட்டு செல்வியுடன் அந்த தர்க்காவினுள் நுழைந்து விட்டார்.

சுமார் ஒரு அரை மணி நேரம் கடந்திருக்கும். இப்போது மவுல்வி மட்டும் திரும்பி வந்தார். மூவரை நோக்கி சைகை செய்ய மூவரும் சென்றனர். அந்த மவுல்வி நீங்க யாரு? இந்த பொண்ணுக்கு என்ன சொந்தம்? என்று கேட்டார்.

ராகவன் பதில் சொல்ல வாயெடுக்கும் முன் வினோத் சொன்னான். இந்த பெண்ணை கூட்டி வந்தது நான் தான். இவளை நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்.

மவுல்வி பெருமூச்சு விட்டார். இந்த பெண்ணோட உடம்பில ஒரு துர்மரணம் அடைஞ்ச ஆவி புகுந்துகிட்டிருக்கு! இப்ப என் முன்னாடி அது சாந்தமா இருந்தாலும் இங்கிருந்து கிளம்பியதும் அதற்கு ஆக்ரோஷம் அதிகமாகும். அது தன்னை கொன்னவங்களை பழிவாங்கிற நோக்கத்துல இருக்கு. அது நிறைவேற வரைக்கும் அந்த பெண்ணை விட்டு போகாது.

என்ன பாய் சொல்றீங்க? உங்க மாந்தீரிகத்துல அதை விரட்டிட முடியாதா? உங்களை ரொம்பவும் தெரிஞ்ச மாதிரி அது நடந்துகிச்சே!

சில ஆவிகளை கட்டுப்படுத்துவது ரொம்ப சிரமம்! இது அதுமாதிரியான ஒரு ஆத்மா! இதனோட ஆசைகள் பூர்த்தியாகாமல் இறந்ததாலே ரொம்ப ஆவேசமா இருக்கு! அந்த பொண்ணு ப்ரவீணா அடிக்கடி இந்த மசூதிக்கு வந்து போகும். இந்துவா இருந்தாலும் இங்க நடக்கிற விசேசங்களுக்கு வரும். அதனாலதான் இந்த இடத்துல அது அமைதியா இருந்துடுச்சு!

அப்ப இதை குணப்படுத்த முடியாதுங்களா?

அந்த பொண்ணோட ஆத்மா சாந்தியடையனும்! அதுக்கு அது பலியைத்தான் கேக்குது!

ஆனா! அதனால இந்த செல்வியோட வாழ்க்கை பாதிக்குமே பாய்!

மன்னிக்கனும்! இதை உடனடியா என்னாலே தீர்க்க முடியாது! நீங்க வேணா இந்த பொண்ணை இங்கேயே விட்டுட்டு போங்க! அதுங்கிட்ட பேசி பார்க்கலாம்! இல்லே வீட்டுக்கு கூட்டிட்டு போறதா இருந்தா ஒரு தாயத்து மந்திரிச்சு தாரேன்! அது ஒரு வாரம் வரைக்கும் காப்பாத்தும் அப்புறம் திரும்பவும் பழைய நிலைக்கு வந்திருவா! இப்ப முடிவு உங்க கையில தான் இருக்கு!

என்ன பாய் இப்படி சொல்லிட்டீங்க! பெரிய பெரிய கேஸையெல்லாம் நொடியில தீர்த்து வைச்சிருக்கீங்க! இப்ப இப்படி சொல்லிட்டீங்களே!

அது வேற விசயம்! இந்த பொண்ணோட உடம்பில புகுந்திருக்கிறது ஒரு ஆசை பூர்த்தியாகாத ஆன்மா! இதை குணப்படுத்துறது ரொம்ப கஷ்டம்.

சரி பாய்! பிரவீணா இந்த ஊரு பொண்ணு! செல்வியோ தெற்கத்தி பொண்ணு! இந்த ஆவி எப்படி அவ மேல புகுந்திடுச்சி?

ப்ரவிணா இங்கிருந்து கல்யாணம் பண்ணி குடியேறின ஊரில பக்கத்து வீட்டுல செல்வி இருந்திருக்கா! செல்வி கொஞ்சம் பலவீனமான பொண்ணு! இந்த மாதிரி அமைப்புள்ள ஆண் பெண்களை ஆவிகள் தங்கள் ஆசைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்திக்கும் பக்கத்து வீட்டு பெண் அதுவும் ப்ரவீணாவின் தோழியான செல்வியை பிரவீணா பிடிச்சிகிட்டா!

சரி பாய்! இதுக்கு வழிதான் என்ன?

அந்த அல்லா கிருபையால ஏதாவது நடந்தாத்தான் உண்டு! இப்ப ப்ரவீணா தன்னோட மரணத்துக்கு காரணமானவங்களை பழிவாங்க துடிச்சிகிட்டு இருக்கா! இன்னொரு அதிர்ச்சியான விசயத்தையும் சொல்றேன் கேட்டுக்கங்க! இவ புருசனும் இப்ப ஆவி ரூபத்துல வேற ஒரு பையனை பிடிச்சிகிட்டு இருக்கான்.

என்ன சொல்றீங்க பாய்!

ஆமா! இது எல்லாத்தையும் ப்ரவீணாத்தான் அதான் செல்விதான் சொன்னா! அவளும் அவ புருசனும் சேர்ந்து அவங்களை கொன்னவங்களை பழிவாங்க போறதா சொன்னா! அது மட்டும் இல்லாம இப்ப அவங்களை கொன்னவங்கள்ல ஒருத்தனை அவ புருசன் பழிவாங்கிட்டான்னும் அடுத்த பலிக்கு அவன் காத்துகிட்டு இருக்கிறதாவும் சொன்னா!

என்னது பலிவாங்கறாங்களா?

ஆமாம்! இந்த பலிகளை நாம தவிர்க்கணும்னா! அவ புருசன் ஆவியை நம்ம கட்டுக்கு கொண்டு வரணும்!

அது எப்படி முடியும் பாய்? அவன் யாரை பிடிச்சிகிட்டு இருக்கானோ?

செல்வியை விசாரித்தால் அதாவது செல்வியை பிடிச்சிருக்கிற பிரவீனாவை விசாரித்தால் தெரியும். ஆனா அவ சொல்ல மாட்டான்னுதான் தோணுது. இவளும் பழிகொண்டு அலையறா?

இவள் இங்க இருப்பதுதான் நல்லது! வெளியே போனால் பழிவாங்க ஆரம்பித்துவிடுவாள். அதனால் செல்விக்கும் ஆபத்து இருக்கும். நீங்க என்ன சொல்றீங்க?

மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். மணி தொண்டையை செறுமிக் கொண்டார். சாமி! இந்த பாய் சொல்றதுதான் கரெக்ட்! நாம இந்த பொண்ணை வீட்டுக்கு கூட்டிட்டு போய் சமாளிக்க முடியாது ஒரு வாரம் இங்கேயே தங்கட்டும்! வினோத்தும் இங்கேயே துணைக்கு இருக்கட்டும். இதுக்குள்ள பாய் ஒரு வழி கண்டுபிடிச்சு சுமார் பண்ணிடுவார் நாம பயப்படாம ஊருக்கு போவோம். வினோத்தம்பி என்ன நான் சொல்றது.

வினோத் அரை மனதாய் தலையசைத்தான்! சரி ராகவா! நாங்க இங்கேயே ஒரு வாரம் தங்கறோம்! எங்களோட துணிமணிகளை அப்புறம் கொண்டுவந்து கொடுத்திரு! பாய் இங்க தங்க வசதி இருக்கா என்றான்.

இருக்கு தம்பி! உங்களை மாதிரி சிலர் இங்கே வந்து தங்கி குணமாகி போறாங்க! அவங்க வசதிக்காக சில ரூம்களை அல்லா புண்ணியத்துல கட்டி வைச்சிருக்கேன். அதுல ஒண்ணுல நீங்க தங்கிக்கலாம்!

ஓக்கே பாய்! நானும் செல்வியும் தங்கிக்கிறோம்! ராகவா நீ புறப்படு என்றான் வினோத்.

இருவரும் விடைபெற்றனர். அவர்கள் வந்த கார் புழுதியைக் கிளப்பிக் கொண்டு மறைந்ததும் வினோத் பாயை பார்த்தான்.

என்ன வினோத்! வாங்க நாம் செல்வியை போய் பார்ப்போம் என்று அவர்கள் மசூதிக்குள் நுழைந்தனர்.

அந்த மசூதியினுள் நடு ஹாலில் ஒரு கிழிந்த பாயாய் கிடந்தாள் செல்வி.

செல்வி! செல்வி எழுந்திரு! என்று அருகில் சென்று தட்டி எழுப்பினான் வினோத். மெல்ல எழுந்து உட்கார்ந்த செல்வி வினோத் இது என்ன இடம்? இங்க எதுக்கு வந்திருக்கிறோம்! நம்ம ஊருக்கு போகலாமா? என்றாள்.

பாய் அவளிடம் செல்வி! உனக்கு ஒண்ணும் சிரமம் இல்லேயேம்மா! இது அல்லாவோட தர்க்கா! இங்க ஒரு திருவிழா நடக்க போவுது! அதுக்குத்தான் தம்பி உன்னை கூட்டி வந்திருக்காரு! நீங்க தங்கறதுக்கு ஒரு ரூம் ஏற்பாடு பண்ணிட்டேன்! வாங்க போகலாம்! என்று அழைத்து சென்று இரண்டு அறைகளை காண்பித்தார் ஒன்றில் செல்வியும் மற்றொன்றில் வினோத்தும் தங்குவதாக ஏற்பாடு.

நீங்க ரெண்டு பேரும் சவுகர்யமாக இதில் தங்கிக்கலாம்! வேளா வெளைக்கு உணவும் வரும்! அந்த உணவு வேண்டாம்னா! நீங்க வெளியே போயும் சாப்பிட்டுக்கலாம்! ஒரே வாரம் அதுக்குள்ள இதுக்கு ஒரு முடிவு கட்டலாம்!

பாய்! எதுக்கு முடிவு?

இல்லேம்மா! ஏதோ வாய் தவறி வந்துடுச்சி! விழாவை முடிஞ்சிடும்னு சொல்ல வந்தேன்!

என்கிட்ட ஏமாத்ததாதீங்க பாய்! என்னை விரட்ட உங்களாலேயும் முடியாது!என் நோக்கம் நிறைவேறாமல் நான் இந்த செல்வியோட உடம்பை விட்டு போகமாட்டேன்! உங்க ஆசைப்படி நான் ஒரு வாரம் இங்கே தங்கறேன்! ஆனா இன்னிக்கு ராத்திரியே என்னை கொன்னவனோட பொணம் ஒண்ணு விழப்போவுது! ஹா!ஹா! ஹா! என்று வெறித்தனமாக சிரித்தாள் செல்வி!

மிரட்டும்(16)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: