
காற்றிலே கலைந்து முகத்திலே மோதி
முன்னே வந்துவிழும் ஒற்றைக் கூந்தலை
நீ கோதிக் கொள்கையில்
கலைந்து போகிறது மனசு!
நீண்ட நாளுக்குப் பின் பெய்யும் மழையாய்
உன் வருகைக்கு காத்திருக்கையில்
சிறு தூறலாய் தூவிவிட்டு மண்வாசனை
கிளப்பிச்செல்வது போல உன் யோசனைக்
கிளப்பிச்செல்கிறாய்!
நீ வருகிறாய் என்றதும் பூச்செடிகள் கூட
கொஞ்சம் முன்னதாக பூப்பதற்கு ஆசைப்பட்டு
இதழ் விரித்தன. ஆனால் நீயோ
உன் செவ்விதழை திறக்காமல் மவுனமானாய்!
வண்ணத்துப்பூச்சி போல சிறகடித்துக்கொண்டிருந்த
என் எண்ணங்களை கூட்டுப்புழுவாய் கட்டுப்படுத்தி
உன்னையே நினைக்க வைத்தாய்!
� அன்றொருநாள் அங்காடியொன்றில்
உருகாத பனிக்கூழோடு நீ போராடுகையில்
உருகி கரைகின்றேன் உனக்காக
நீ வந்து விட்டு சென்ற வாசம் கலையாமலிருக்க
கதவை அடைத்து காவல் காக்கின்றேன்!
காற்றோடு வாசம் கலந்து மறைந்து போனதுபோல
கண்ணா மூச்சி காட்டுகிறாய்!
நிலவை அணைக்கும் மேகமாய் நான்
மோகத்தில் துரத்துகையில் வேகமாய் விலகுகிறாய்!
எண்ணங்களில் உன்னை சிறைபிடித்தேன்!
இதயத்தில் சிறைபிடிக்கும் நாள் எந்நாளோ?