அன்பார்ந்த வாசகப்பெருமக்களுக்கு! இனிய வணக்கங்கள்! தேன்சிட்டு மின்னிதழ் ஒன்றரை வயதில் இம்மாதத்தில் அடியெடுத்துவைத்து நடைபழக ஆரம்பித்துள்ளது. இந்த பதினெட்டு மாதங்களில் எத்தனையோ மாற்றங்களை சந்தித்த இந்த மின்னிதழ் இன்னும் பல மாற்றங்களை எதிர்நோக்கியுள்ளது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்னும் வாசகத்திற்கேற்ப வாசகர்களாகிய நீங்களும் மாறாமல் தேன்சிட்டு மின்னிதழை தொடர்ந்து வாசித்து ஆதரவு அளித்து வருவதற்கு அன்பின் நன்றிகள்.
இம்மாதம் காதலர் தினம் வருவதால் காதலர்தின சிறப்பிதழாய் வேலூர் கவிஞர் முத்து ஆனந்த் அவர்களின் சிறப்பு காதல் கவிதைகளோடு இதழ் மலர்ந்துள்ளது. தேன்சிட்டு இணையதளத்திலும் தற்போது சிறகடித்து வருவது நீங்கள் அறிந்ததே! பிப்ரவரி மாத இதழுக்கான பதிவுகள் அதில் அவ்வப்போது பதியப்பட்டு வருகின்றது. அவற்றை இணையதளப்பக்கத்தில் சென்று வாசித்து கருத்திட்டு வாருங்கள்!
எப்பொழுதும் சொல்வதுதான்! தேன்சிட்டு புதுப்புது படைப்பாளிகளை அடையாளம் காட்ட அவர்களை எழுத்துலகில் ஒரு பாதை அமைத்துத் தர காத்திருக்கிறது. எனவே வாசகர்களாகிய நீங்களும் உங்கள் படைப்புக்களை அனுப்பித் தருவதோடு உங்கள் நண்பர்களுக்கும் தேன்சிட்டு இதழை அறிமுகம் செய்து அவர்களின் படைப்புக்களை அனுப்பி வைக்கச் சொல்லுங்கள்!
வருங்காலத்தில் உங்கள் படைப்புக்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கத் தேவையான ஏற்பாடுகளை தேன்சிட்டு நிர்வாகம் முனைந்துவருகின்றது. தரமான படைப்புக்கள்! தப்பில்லா எழுத்தில் தேன்சிட்டு இணையதளத்திலும் தேன்சிட்டு மின்னிதழிலும் தொடர்ந்து வெளிவருகின்றது என்ற நற்பெயர்தான் தற்போது நமக்கு சன்மானம்.
மனம் தளராமல் தமிழ் வளர்ப்போம்! தமிழ் இலக்கியம் வளர்ப்போம்! என்றாகிலும் ஒருநாள் நம் கனவு மெய்ப்படும்! அதுவரை முயற்சியை கைவிடோம்! என்று சொல்லி விடைபெறுகின்றேன்! மீண்டும் அடுத்த இதழில் சந்திப்போம்! நன்றி!
அன்புடன்.
நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு, ஆசிரியர், தேன்சிட்டு.