கவிதைச்சாரல்!

காதலியின் புனிதத்தை..!

அன்பே….ஆருயிரே….

உன்னை சந்திக்கும் போதெல்லாம்

நித்திஸ் போல் என்னை

ஏதோதோ செய்கிறாய்….?

உரசலில் எழும் தீப்பொறிபோல்

உள்ளத் தீயை மூட்டி

என்னுள் குளிர் காய்கிறாய்…?

கள்ளப் பார்வையால்

மெல்ல என்னை அள்ளி

செல்லமாய் கிள்ளிப் போகிறாய்….?

தொட்டு அணைத்து

மொட்டு அவிழ்த்து ஏன்

சிட்டாய் சிறகடிக்கிறாய்….?

பனிமலரா..? கனிமலரா…?

என பரிகாசம் செய்தே

தனி முத்திரையைப்

பதிக்கிறாய்……?

ஜீவகாருண்யம் பேசியே

என் ஜீவனை

கோவா கடற்கரை அழகியாக்கி

கொவ்வை இதழை பறிக்கிறாய்….?

படம் பார்க்க

தியேட்டருக்குள் அழைத்து

என் திரை விலக்கி

படம் பார்க்கிறாய்…..?

ஊரோரம் கூட்டி வந்து

யாருமில்லா நேரத்தில்

உதட்டோரம்

திகட்ட வைக்கிறாய்…?

அளவு குறைந்த

உள்ளாடையைப் போல்

அடிக்கடி என்னை

இறுக்கிக் கொ(ல்)ள்கிறாய்…?

பிரிய மனமில்லாமல்

உன்னிடமிருந்து பிரியும் போது

காதலி(யி)ன் புனிதத்தை

என்னுள் புரிய வைக்கிறாய்….?

ஆக்கம்:

எல்.இரவி.எம்.ஏ;எம்.காம்;எம்.ஃபில்;பி.எட்;டி.எ;

செ.புதூர்.612203.

செல்.9952720995.

யாசகன்…

மின்சாரம் துண்டிக்கப்பட்ட

அந்த

இரவுப் பொழுதில்,

தேர்வுக்கு

படிக்க முடியவில்லை என

கல்லூரி மாணவியின் குமுறல்,

சாப்பாடு

செய்ய முடியவில்லையென

இல்லத்தரசியின் புலம்பல்,

தொலைக்காட்சிப் பெட்டியில்

செய்திகள் பார்க்க முடியவில்லை

என்ற

பெரியவரின் பெருமூச்சு,

கிரிக்கெட்

பார்க்க முடியவில்லை

என இளைஞர்களின் கூச்சல்,

இருள் சூழ்ந்ததால் உறங்காமல்

விழித்துக் கொண்ட

குழந்தையின் அழுகைச் சத்தம்,

இவர்களின் சத்தம் கேட்டபடி

தெருவை கடந்து

கொண்டிருக்கிறான்…

பிறந்ததிலிருந்து ஒளியையே

பார்க்காத

பார்வையற்ற யாசகன்!

மு.முபாரக்

முதுநிலை எழுத்தர்

எண் 273 வாளாடி கூட்டுறவு வங்கி

வாளாடி

லால்குடி வட்டம்

திருச்சி மாவட்டம்

8072600090

பாரியன்பன் – கவிதைகள்

*******************************

1.

முதாதாய் நினைவில்

நிரம்பிவிட்ட ஒருவர்

தற்சமயம்

தொடர்பற்று போக

அவரை மரணம்

சூழ்ந்திருக்கும் என்று

ஒருநாளும் சுலபத்தில்

ஏற்பதில்லை மனம்.

2.

பறக்க நினைக்கும்

போதெல்லாம்

எனக்கு

கவிதைச் சிறகினை

தந்துவிடுகிறது

கற்பனை.

3.

என்னை

பிடிக்காத போதிலும்

எனக்கு

அதிகமாய்ப் பிடிக்கிறது

உன்னை.

4.

இதழ் விரித்த

மலர்கள் கற்பை இழக்க

மயக்கத்தில்

மது அருந்திய வண்டுகள்.

5.

உன்னிடத்தில்

நித்தமும் தோற்பேன்

என்றால்

ஒருவிதத்தில் அதுவும்

எனக்கு வெற்றியே…!

6.

நான் தளர்வடையும்

போதெல்லாம்

அதன் எடையை விட

பளு கூடிய

ஏதேனுமொரு பொருளை

சிற்றெறும்பு

உருட்டிச் செல்வதை

எதேச்சையாக

காண நேர்கிறது.

7.

ஒவ்வொரு கணமும்

என் புத்தியைத் தீட்டுகிறேன்.

எந்த நேரத்திலும் அதற்கு

வேலை வரக்கூடும் என்ற

நம்பிக்கையில்.

8.

இருவரும்

ஒருவரை ஒருவர்

பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

மெல்ல மெல்ல ஊர்ந்து

நமக்குள்

புகுந்து கொண்டிருக்கிறது

காதல்.

9.

என்னைக் காயங்களால்

செய்திருக்கிறேன்.

நீங்கள்

களிம்போடு வருவீர்களென்ற

நம்பிக்கையில்…!

10.

என்னால் பேசலாகாது

என் உடம்பெல்லாம்

கூசுகிறது.

என்னை மொய்க்கும்

ஈக்களிடம்

சொல்லி விடுங்கள்

நான் பலகாரமல்ல

பிணமென்று.

11.

நிற்பதற்கு இடமில்லாத

பேருந்தில்

இடம் பிடிக்க பாம்பாட்டி

பாம்பை போடுகிறான்

காலியானது பேருந்து.

12.

கரைகள் எனும்

இரு வரிகள் கொண்ட

அழகிய பூமி தாளில்

இயற்கை மகள் எழுதிய

நளினப் புதுக்கவிதைகள்

நதி.

– கவிதைகள் ஆக்கம்

* பாரியன்பன்

குடியாத்தம் – 632602

கைப்பேசி ; 9443139353.

வதை


மரங்கள் வெட்டப்பட்ட
காட்டில்
பசியோடு பறக்கிறது
மரங்கொத்தி !
           -து.மனோகரன்

பொறாமை

நீ
குடையை பிடித்ததால்
கோவமோ  என்னமோ
கொட்டித் தீர்க்கிறது
மழை !
      –து.மனோகரன்

எறையூர்

உங்களைத் தேடி அடைவதில்

உங்களைத் தேடி அடைவதே

என் வாடிக்கையாகிவிட்டது

ஒட்டுமொத்தமாய் ஓரிடத்தில் தொலையாமல்

உங்களுக்கென தனி உலகில்

தொலைந்து போகிறீர்கள்

தொலைந்து போவதற்கு முன்

ஒரு அழைப்பு மணி அடித்திருக்கலாம் எனக்கு

ஒரு கடிதம் எழுதிருக்கலாம்

ஒரு குறுஞ்செய்தியில் கூவியிருக்கலாம்

தொலைந்து போன உங்களைத் தேட

ஆர்வத்தோடு புறப்பட்டு விட்டேன்

எப்படி தொலைந்தீர்களென்ற ஒரு குறிப்பும் இல்லாமல்

வெகுநேர சிந்தனைக்கு பின்

தொலைந்து போன உங்களைத் தேட

ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்

இப்போது நானும் உங்களோடு

தொலைய வேண்டும் …

வாசகன் வெங்கடேசன், இராணிப்பேட்டை

9677939311

கவிதைத் தாள்களில்  விரல் ஸ்பரிசம்

………………………………

……………..

நெஞ்சப்பரப்புகளில்  நீட்டி நிமிர்ந்து

உருண்டு புரளுவது நீ மட்டும்தானடி

கடந்துபோகின்ற  எல்லா உருவங்களிலும்

உன் தலையை  ஒட்டிவைத்தமாதிரியே

கண்ணுக்குத்தெரிகிறது.

உன் பெயர்கொண்ட

கடைகள் கண்ணில் பட்டால்

உள்நுழைந்து அள்ளிவருகிறேன்

உன் நினைவுகளையே.

உன் குறுஞ்செய்தி  எல்லாமே வாசிக்கிறேன்

நீ வருஞ்செய்தியை மட்டுமே

நேசிக்கிறேன்.

சன்னல் திரையெல்லாம்

நீ உடுத்திவந்த மயில்பச்சை

வண்ணத்திலேயே என்னுள் விரிகிறது.

நீ வாசித்து விட்டு வைத்துப்போன

கவிதைத் தாள்களில்

விரல் ஸ்பரிசம்  உணர்ந்து நெகிழ்கிறேன்.

மொட்டைமாடியில்  நிலவை

மெல்லத்தழுவும் ஒற்றைமேகம் பார்த்து

பொறாமையில் புழுங்குகிறேன்

நடுச்சாமத் தூக்கத்தில்

கனவுகலைந்து விழித்ததுபோலவே

நீ அருகிலில்லாத நான்.

காசாவயல் கண்ணன்

தென்றல்

” தென்றல் தீண்டாத

பாடலும் உண்டா

தென்றல் சுட்டதும

உண்டா ….?

பெண்ணின்

இதயம்

மனம்

கூந்தல்

தென்றல் வருடாத

இடமும் உண்டா

இரண்டு மென்மை

ஒன்றாய் கலந்து

பெண்ணும் தென்றலும்

இணைந்து

பயணிக்க

சுடுமோ

இதயம் …

– சீர்காழி . ஆர் . சீதாராமன் .

அல்லாயேசு என்றாலும் அரனேஹரியே என்றாலும்

. எல்லாம் ஒன்றே;பெயர் வேறே மதங்களைக் கடந்து வாழ்ந்திடுவோம்;மனிதர்களாக உணர்ந்திடுவோம்

கல்லார் கற்றார் வேற்றுமை களைந்து எல்லார்க்கும் கல்வியைப் பொதுவில் வைப்போம்

நல்லார் தீயார் இருப்பர் யாண்டும் யாவரும் உறவென கலந்திருப்போம்

உண்பது நாழி;உடுப்பது நான்கே இதிலேன் இத்தனை ஏற்றத் தாழ்வுகளோ? .
உணவும் உடையும் பகிர்ந்து கொள்வோம் பகுத்து உண்டு பல்லுயிர் ஓம்பி பண்பில் அன்பில்உயர்ந்து நிற்போம்

காற்றும் நிலமும் கடலும் நதிகளும் தோற்றும் இயற்கை பொதுமை யன்றோ? போற்றுவோம் அவற்றையும் பொதுவில் வைத்தே

பொதுமை பேணி பெருமை கொள்வோம்//

கோவிந்தம்மாள் ரத்தினம், குடியாத்தம்.

பிடிக்காத வார்த்தைகள்!

பகலை இரவாக்குவதும் இரவைப் பகலாக்குவதும்

நமக்குக் காதல் வந்த கலை அன்பே!

பரிசுத்தமான நம் அன்பு வளர பெரும்பங்கு வகிப்பதில்எப்பொழுதுமே முத்தங்கள்தான் முதலிடத்தைப் பெறுகிறது!

விடுமுறையை விரும்பாத

ஒரே உணர்வும் உறவும் காதலாகதான் இருக்க முடியும்

என்று நம் இதயங்கள்

மிக நன்றாகவே

தெரிந்து வைத்திருக்கிறது!

நம் மனசைப்போலவே

நம் அலைபேசிகளுக்கும்

பிடிக்காத வார்த்தைகள்

‘நாட் ரீச்சபிள்!

💞💚💞💛💞💜💞💙💞🧡💞

முத்து ஆனந்த் வேலூர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: