
சுந்து பாபு. பெங்களூரு.
அது ஒரு தனியார் நிறுவனம்….
9 மணிக்குள் அலுவலகத்திற்கு வரவேண்டும் என்ற பரபரப்பில் அவரவர் ஓடி வந்து அவர்கள் இருக்கையில் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக் கொள்ள நேரமில்லாமல் அன்றைய பணிகளைத் தொடங்கினார்கள்.
சங்கரியும் அப்படித்தான் நிறைய கோபத்தோடும் சின்ன சின்ன அழுகையோடும் வேலையை செய்து கொண்டிருந்தாள் …
அடிக்கடி டைம் பார்த்துக்கொண்டு இருந்தாள்,
மதியம் ஒரு மணிக்கு லஞ்ச் டைம்….
லஞ்ச் டைம்க்காக காத்திருந்தது போல லஞ்ச் பாக்ஸை எடுத்துக்கொண்டு அவசரமாக டைனிங் ஹாலுக்கு ஓடினாள் சங்கரி…
ஆமாம் அந்த டைனிங் ஹால் சாப்பாட்டை மட்டும் ஷேர் பண்ணிக்கொள்ளும் இடமாக இருக்காது, அவரவர் சுக துக்கங்களை பங்குபோட்டுக் கொள்ளும் இடமாகவும் இருக்கும்….
டைனிங் ஹாலுக்கு போன உடனே பக்கத்தில் இருக்கும் பத்மாவிடம் சொல்லி அழ ஆரம்பித்தாள்….
இன்னைக்கு காலைல எழுந்திருக்க கொஞ்சம் லேட்டாயிடுச்சு…. என் பொண்ணு இன்னைக்கு சாப்பிடாமலேயே ஸ்கூலுக்கு போயிட்டாள் … என் பையன் எழுந்ததிலிருந்து ஒரே காய்ச்சல் ….. இந்த டென்ஷனில் கணவர் கண்டபடி திட்டி விட்டார் என்று அழுது முடித்தாள் சங்கரி …..
இப்படியே ஒவ்வொருவரும் மாமியாருடன் சண்டை……. நாத்தனாருடன் போன் சண்டை ……
என்று சின்ன சின்ன சங்கடங்களை பகிர்ந்து கொண்டிருந்தார்கள்….
ஆனால் எப்போதுமே சுரேஷ் மட்டும் எதுவுமே சொல்லாமல் எல்லோரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான்…..
இதை கவனித்துக் கொண்டிருந்த சங்கரி அன்று கேட்டே விட்டாள்……
ஏன் சுரேஷ் நீங்க மட்டும் எதுவுமே சொல்ல மாட்டீங்களா? என்று…….
உங்கள் எல்லாருக்கும் சிரிப்பதற்கும் அழுவதற்கும் விஷயங்கள் இருக்கின்றன ……
அதற்கு உங்கள் உறவுகள் காரணமாக இருக்கிறார்கள்,
ஆனால் எனக்கு யாருமே இல்லை, அனாதை ஆசிரமத்தில் தான் நான் வளர்ந்தேன்,
வேலைக்கு செல்ல ஆரம்பித்ததும் அங்கிருந்து வந்து விட்டேன், என்னால் முடிந்த உதவிகளை மட்டும் அவர்களுக்கு செய்து வருகிறேன் ……
என்ற சுரேஷின் வார்த்தையால் சங்கரியின் கண்கள் கண்ணீரில் மிதந்தன ……
உறவுகளால் கிடைக்கும் வேதனை மனதை காயப்படுத்தும் என்றாலும் அது இல்லாத வேதனையை நினைத்து மனது வலித்தது அவளுக்கு ………