
1..4..3
மெல்ல மெல்ல யோசித்து
மனதிற்குள் போராடி
ஒருவாறாக முடிவெடுத்து
தயங்கி தயங்கி தடவியழுத்தியதும்
பொசுக்கென்று காட்டிவிட்டது
அவளிடம்..
அந்த மென்பொருளடங்கிய
தொடுதிரை கைபேசியொன்று!
செம்பா
திருச்சி
பள்ளிகூடத்திற்கு

முன்பு
கொய்யக்காயும் இலந்தை பழமும்
விற்கின்ற பாட்டிகள்
இன்னும்
இருந்து கொண்டே தான்
இருக்கிறார்கள்…
கிழிந்த சேலையோடும்
காய்ந்த வயிற்றோடும்,
வாங்குவதற்கு மட்டும்
எந்த மாணவர்களும்
வருவதேயில்லை…
எல்லோர் கையிலும்
பைவ் ஸ்டாரும்,
டைரி மில்க் சாக்லெட்டும்
அலங்கரிப்பதால்,
அழகிழந்து போகிறது…
பாட்டிகளின் வாழ்க்கை,
எவ்வித சலனமுமில்லாமல்!
மு.முபாரக்,
முதுநிலை எழுத்தர்,
எண் 273 வாளாடி கூட்டுறவு வங்கி,
வாளாடி,
சொல்லாமலேயே…..

——————-/—————-
சொல்லி மறந்த காதலை விட
சொல்லாமலேயே
வாழ்ந்து வரும் காதல்
சுகமானதுதான்…….
படித்து மறந்த நூலை விட
படிக்காமலேயே
பெற்ற அனுபவம்
சுகமானதுதான்……
அள்ளிக் கொடுத்த
கர்ணனை விட
அரிச்சுவடியை
சொல்லிக் கொடுத்த
ஆசானின் நினைவு
சுகமானதுதான்……
கருவில் சுமந்த
பிள்ளைகளை விட
தெருவில் திரியும் பிள்ளைகள்
‘அம்மா’-என அழைப்பது
சுகமானதுதான்……
அரிச்சந்திரனாய்
வாழ்வதை விட
சின்ன பொய்ச் சொல்லி
சிரிக்க வைப்பது
சுகமானதுதான்……
மரணமில்லா பெருவாழ்வு
வாழ்வதை விட
பிறர் தவறை
மறந்து வாழ்வது
சுகமானதுதான்…….!!!
ஆக்கம்:எல்.இரவி.
செ.புதூர்.612203.
செல்.9952720995.
பாரியன்பன் – கவிதைகள்
*******************************
1.

என் வீட்டுத் தொட்டிச் செடியில்
ரோஜா பூத்திருக்க
என் காதலிக்கென
பூ ஒன்று கேட்கிறேன்.
நான் நேசிக்கும் பெண்ணொருத்தி
பூ கேட்டிருக்கிறாள்
என்னில் பூத்திருக்கும் முதல் பூ
அவளுக்குத்தான் என்றது செடி.
சரியென்று விலகினேன்.
நான் யாரிடம் காதலைச் சொல்ல
என் செடியிடம் பூ கேட்டேனோ
அவளே அந்தப் பூவை
தலையில் சூடிப் போகிறாள்.
அவள் மனதில்
குடி கொண்டிருக்கும் காதல்
என்னுடையதா?
இல்லை ரோஜா செடியினுடையதா?
வாசப் பூவின்
காதல் மொழியறிந்த
உங்களில் யாரேனும் ஒருவர்
அதை ஒளிவுமறைவின்றி
என்னிடத்தில்
கேட்டுச் சொல்லிடுங்கள்.
2.
இரவுகள் வசமாவது போல்
எளிதில் வசமாகவில்லை
வானம்.
பகல்கள் பரிச்சியம் என்றாலும்
வேறாகவே தெரிகிறது
வானம்.
பறவைகளைப் போல்
இறக்கைகள் இல்லையென்று
ஏங்கியதுண்டு பலநாட்கள்.
சதாசர்வகாலமும் உடனிருந்தாலும்
காற்றின் மொழி வேறு.
திசைகளின் திருப்பங்களும்
கணக்குகளும் வெவ்வேறு.
வானம் குறித்தறிய
நிச்சயம் போதவே போதாது
ஓர் ஆயுள்.
ஒரு மாதிரிதான் வானம்.
மாயங்கள் சூழ்ந்ததும்
சூட்சுமங்கள் நிறைந்ததுமான
வானம்
என்றுமே அலாதியானதுதான்.
– கவிதைகள் ஆக்கம்
* பாரியன்பன்
குடியாத்தம் – 632602
கைப்பேசி ; 9443139353.

பார்க்காத போதும்
பேசாத போதும்,
எங்கேயோ ஓர்
இடத்தில்
நாம் நேசிப்பவர்கள்
நலமுடன் இருப்பார்கள்,
என்ற
ஒற்றை நம்பிக்கையில்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்…
தூர தேசத்தில்
எத்தனையோ துயரங்களை
தாங்கிய படி ,
உயிருள்ள ஒரு பாறையைப்
போல!
மு.முபாரக்
முதுநிலை எழுத்தர்,
எண் 273 வாளாடி கூட்டுறவு வங்கி,
வாளாடி,
என்னோடு எப்போதும்
இணங்கிப் போவதே இல்லை..
நான்..!
தாவும் மனதிற்கு
உச்சி என்ன ஆழமென்ன..
காண்பதே பிரதானம்..!
யாரை நினைத்து
இங்கே கண்ணீர்
சுரக்கிறதிந்த
சுவரிழந்த பழங்கேணி..!

எனது கைகளில்
கூழங்கற்களென
சில சொற்களை
கவிதைக்குளத்தில்
எறிய..
பறக்கின்றன
சில
பறவைகளும்..
சில
பட்டாம்பூச்சிகளும்..
ஆனாலும்
தவளையென
குதித்து
‘ப்ளக்’
எனும் ஓசையுடன்
அரங்கேறுகிறது
சில
கவிதைகளெனுமென்
உள்ளத்தின்
பிம்பங்கள்..!
ஆர் ஜவஹர் பிரேம்குமார்,
பெரியகுளம்.
பயணமொன்றில்.
இடம் பிடித்தது, குழந்தை விட்டுச்சென்ற செருப்பு மனதில்
நீ..
தலைகவசம்
அணிந்து போகையில்
மொட்டு அவிழாத ரோஜா போன்றே காட்சியளிக்கிறாய்!

கோலத்தில்
சிக்கிக்கொண்ட
புள்ளிகள்போக..
வெளியேகிடந்தன..
புள்ளிகளென..
உன்கால்விரல்பதிவுகள்..
இன்னொருக்கோலமாய்…!
#இரா.ரமேஷ்பாபு .விருத்தாசலம்.

என்னிடம் கவி
நீ
உன் செல்ல
நாய்க் குட்டி
பூனைக் குட்டியைக்
கொஞ்சும்போதுகூட
சற்றே அருகாமையிலிருக்கும்
என் மீது தொடர்ந்து
உன் பார்வை முத்தங்கள்
எந்த விதத் தடையுமில்லாமல்
பதிகிறது!
அப்பொழுதே
*என் மனம் நினைத்தது
உன் இதழ் முத்தங்கள்
எனக்குக் கிடைக்கப் போகும்
அந்த அழகான நாட்கள்
வெகு தொலைவில் இல்லையென்று!
யாமிருக்கக் கவிதையேன்? என்று
உன் இரு விழிகள் ஒரு சேர
இணைந்து வினவுவதற்குப் பரிசாக
என் முத்தங்களை
உனக்கு வழங்க
எனக்கு (ம்) ஆசைதான்!
ஆனால்
அந்த நாள் எனக்கே தெரியாது
உனக்குத்தான் தெரியும்!
ஒரு கனவின் ஆயுட்காலம்
சில வினாடிகள்தான் என்றறிந்திருக்கிறேன்
அந்தக் குறுகிய நொடிகளில்கூட
உன் வருகையை மட்டுமே
என் கனவு (களு) ம்
இதயமும் வரவேற்று மகிழ்கிறது!
உன் நிழலைக்கூட ரசிக்கும்
என்னிடம்
நீ
உன் காதலை ச் சொன்ன பிறகு
எனக்கு
நாட்காட்டியிலுள்ள
அத்தனை தினங்களுமே
கா த ல ர் தி ன ம் தா ன்!
முத்து ஆனந்த் , வேலூர்.