
வேலூர் முத்து ஆனந்த்.
கவிதைக் காதலி
ஸ்ட்ராபெர்ரி
பையா
அடிக்கடி
நினைத்தபோதெல்லாம்
திடீர் திடீரென
என் இடுப்பில்
நீ முத்தம் வைத்து
என்னைச் சிணுங்கவும் சிலிர்க்கவும் செய்வாய்!
சிணுங்கல்களும் சிலுமிஷங்களும்
உனக்குக் கொள்ளை கொள்ளையாய்
பிடிக்கும் என்ற ரகசியம்
எனக்குத் தெரியவே
நீண்ட நாட்களானது!
எப்பொழுதும் நான்
உன் ப்ரியசகி என்று
எல்லா உரிமைகளும் கொடுத்த பின்னும்
அனுமதி பெற்ற பிறகுதான்
எந்த இடத்தையுமே தொடுகிறாய்!
ஏன் இப்படிஅலைகிறாய்?
என்று
என் தோழிகள் நையாண்டி செய்வதைப் பற்றி
எனக்குக் கவலையே இல்லை!
உன் ஒரே ஓர் இதழ் முத்தம்கூட
பக்கம் பக்கமாய்க் கவிதைகள்
படிப்பதற்குச் சமம் என்று
என் இதழ்களுக்குத்தானே தெரியும்!
ஐஸ்க்ரீம்களின் சுவைகளையே
தோற்கடிக்கும் அழகு முத்தங்களை
வழங்கும்
என் ஸ்ட்ராபெரி பையன் நீ!
உன்னைக் காதலிக்கா விட்டால்
அந்தக் காதலே அல்லவா
என்னைக் கோபித்துக் கொள்ளும்?!
இதயம்

நீ
என்னைப் பார்த்துக்
கண்ணடிக்கும்போதெல்லாம்
மின்மினிப் பூச்சிகளை ரசிப்பதைப்போல்
அப்படி ஒரு மகிழ்ச்சி எனக்கு! (ள்!)
துப்பட்டாவோ தாவணியோ
அல்லது முந்தானையோ
எதுவாக இருந்தாலும்
உன்னைத் தரிசித்த வினாடியில்
என் கட்டளைக்குக் காத்திருக்காமல்
காற்றின் துணையுடன்
உன் மீது வந்து விழுந்து
வந்தனம் சொல்லி
உன்னை அப்படி ஒரு காதலுடன் வரவேற்கிறது!
காதலில்
எவ்வளவு புரிதல்களும் அறிதல்களும்
இருக்க வேண்டுமென்று
உன் கவிதைகளைப் படித்த பின் தான்
உணர்ந்து கொண்டேன் கண்ணா!
அதனால்தானோ என்னவோ
என்னையே
உனக்குப் பரிசாக வழங்க
கொஞ்சமும் தயங்காமல்
மகிழ்ச்சியுடன் ஆணையிட்டது
என் காதல் இதயம்!
உன் விழிகள் அசைந்தால்
எதை வேண்டுமானாலும்
செய்யும் அளவிற்கு
என்னை அடிமைப்படுத்தி விட்டதடா
என் உயிருடன் உயிராகக் கலந்து விட்ட
உன் கவிதைகள்!
என் இமைக்கும் ஒவ்வொரு பொழுதும்
இனி எப்பொழுதும்
உனக்காக மட்டும் தானடா!
தேன் மழை

என் நெற்றிச் சுட்டியில் தொடங்கி
விரல் மோதிரம்
கை வளையல்கள்
கால் கொலுசுகள் என்று
அத்தனையிலும் உன் கவிதைகள்தானடா
காதலுடன் மிதக்கிறது!
எனக்கென்னவோ
எந்த மலரின் நறுமணத்தை முகர்ந்தாலும்
எனக்கு உன் வாசம்தான் வருகிறது!
எல்லா நகைகளையும் எனக்கு நீயே அணிவித்து
அழகு பார்த்து ரசித்து
என் இதழ்ப் புன்னகையை ரசிக்கும் நீ
எனக்குத் தாலியையும் மெட்டியையும்
வழங்க
எப்பொழுதடா நாள் குறிக்கப் போகிறாய்?!
உன்னுடன் சேர்ந்ததாலோ என்னவோ
நம் காதலில் எப்பொழுதும்
சர்க்கரைப் பந்தலில் தேன் மழை பொழிகிறது!
உன்னுடன் இணையும்
அன்பான நேரங்களில்
எனக்குக் கவிதைகளுக்கும் முத்தங்களுக்கும்
வித்தியாசமே தெரிவதில்லை!
நீ
என்னுடன் இல்லாத நேரங்களில்தான்
தெரிகிறது
முத்தத்திற்கு எவ்வளவு சக்தி என்று!
உன் மனசில்எப்பொழுதும்
இருப்பதைப் போலவே
உன்னுடன் இல்லத்திலும்
நான் இருக்க வேண்டும் என்ற என் ஆசையை
விரைவில் நிறைவேற்று
என் இனிய உயிர்க் காதல் அன்பே!
முத்து ஆனந்த் வேலூர்