
பசி!
விற்பனைக்காக
குயவன் வனைந்து வைத்த
இத்தனை மண்பானைகளில்
எந்த பானையில் இருக்கிறது
அவருக்கான இன்றைய உணவு.
புதிதாக
குடிபோன இடத்தில்
எல்லோரையும்
அறிமுகப்படுத்தி வைக்கிறது
ஒரு சின்னப்புன்னகை!
இழப்பு
‘எப்படி இருக்கிறாய்!’ என்று
குனிந்து டைப் செய்யும் போது
அவள் அவனை
கடந்து போய்க் கொண்டிருந்தாள்.
எனக்கு முன்னால் விழித்து
இன்றும் காத்திருந்தது
ஒரு பகல்
தேனம்மா!
மலர் தாயிடம்
முட்டி முட்டி பாலுண்ணுதோ
வண்ணத்துப் பூச்சி!
காலையில் அந்த வீட்டுக்குள்ளும்
மாலையில் இந்த வீட்டுக்குள்ளும்
இருக்கிறது மதில்சுவரின் நிழல்.
— கி.ரவிக்குமார், நெய்வேலி.