
செந்தில்குமார் அமிர்தலிங்கம்
காலை மணி ஒன்பது..
கேசவன் தன் மொபைலில் முகநூல் நண்பரான பாஸ்கரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துக்கொண்டிருந்தான்…
மேலும்
தனது பதிவுகளுக்கு எத்தனை லைக்குகள் வந்திருக்கிறது என்று பெருமிதத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான்…
நேற்று போட்ட கவிதைக்கு நூற்றியிருபத்து மூன்று லைக்குகள் வந்திருக்க…
எழுபத்தியாறு கமெண்ட்டுகள் வேறு
பெருமகிழ்ச்சியடைந்தான்.
முக்கியமாக முகநூலின் மூலம் கிடைத்த பெஸ்ட் பிரண்ட் பாஸ்கரனின் கமெண்ட் அவனுக்கு உற்சாகமூட்டுவதாய் இருந்தது..
புன்னகை முகமாய் இருந்த அவனருகில் வந்த அவனது மனைவி…
“என்னங்க…மணி ஒன்பது ஆகுது இன்னும் போனையே நோண்டிக்கிட்டு இருக்கிங்க. உங்க அம்மா இந்நேரம் பஸ் ஸ்டாண்டுக்கே வந்திருப்பாங்க…” என்றாள்.
“அடடா ஆமால்ல நான் மறந்தே போயிட்டன்…அம்மா வேற திட்டுவாங்களே…”
என்று மொபைலை பாக்கெட்டில் வைத்தபடி வாசலில் நின்ற பைக்கை எடுத்தான்…உதைத்தான்.
ஸ்டார்ட் ஆகவில்லை.
அடக்கடவுளே இந்த வண்டிக்கு என்ன ஆச்சி..என்று நாலு உதை உதைத்தான். ம்ஹூம்..ஸ்டார்ட் ஆகல.
டென்சனானவன் தன் மனைவியைக் கத்தினான்.
அவள், பெட்ரோல் இருக்கானு பாருங்க
அதெல்லாம் இருக்கு
அப்புறம் ஏன் ஸ்டார்ட் ஆகல
தெரிலயே
என் ஸ்கூட்டிய எடுத்துட்டுப்போங்க
அய்யோ அத எனக்கு ஓட்டவே பிடிக்காது.
அப்ப என்தான் பண்ணப்போறிங்க
சரி குடுத்துத்தொலை அதையே எடுத்துட்டுப்போறேன்.டைம் வேற ஆகுது.
வேண்டா வெறுப்பாய்க் கிளம்பினான்.
மழைநீர் நிறைந்திருந்த சாலையில் பள்ளம் மேடு தெரியாமல் இரண்டுமுறை விழப்பார்த்தான்.
எப்படியோ பஸ் ஸ்டாண்டை நெருங்கியவன் ஒரே டென்சனப்பா என்று நினைத்தவாறு சட்டென ஒரு திருப்பத்தில் திரும்ப…
எதிரில் வந்தவன் மேல் மோதிவிட்டான்.
அவன் கீழே விழ
இவனும் கீழே விழ
அவன் வெள்ளை வேஷ்டி சட்டையெல்லாம் சகதியானது.
இருவரும் லேசான சிராய்ப்புகளுடன் தப்பினர். ஆவேசமாய் எழுந்த அவன்…
” டேய் உனக்குக் கண்ணு என்ன பொட்டையா.?”
ஏன் உன் கண்ணு என்ன பின்னாடியிருக்கா?
நான் வெளியூர்லயிருந்து கோவிலுக்கு வந்திருக்கேன்..என் டிரெஸ்ஸ இப்படி நாஸ்த்தி பண்ணிட்டியேடா பாவி.
என் வண்டி சைடு மிரர் உன்னாலதான்டா ஒடஞ்சுப்போச்சி.
இருவரும் அடித்துக்கொள்ள..
கூட்டம் கூடிவிட..
ஒருவழியாக இருவரையும் விலக்கிவிட்டது கூட்டம்.
இவன் அம்மாவைத் தேடிப்படித்து அழைத்துக்கொண்டு வீடு சேர்ந்தான்.
வீட்டிற்குள் வந்ததும் டென்சனையெல்லாம் மனைவியின் மீது கொட்டிவிட்டு…பாத்ரூம் போய் குளித்துவிட்டு வந்தான்.
அம்மா இவனை சாப்பிட அழைக்க..
“இருமா வரேன்” என்று கூறிவிட்டு மொபைலை எடுத்துக்கொண்டு ஷோபாவில் உட்கார்ந்தான்.
முகநூலைத் திறந்தான் அதில் பாஸ்கரனின் பதிவு…
வணக்கம் நட்பூக்களே!
இன்று எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய கூறிக்கொண்டிருக்கிற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி!
இன்று எனது பிறந்தநாள் என்பதால் பக்கத்து ஊரிலுள்ள கோவிலுக்குச் சென்றேன். அங்கே பஸ்ஸ்டாண்டு பக்கத்துல ஒருத்தன் ஸ்கூட்டில வந்து என்மேல மோதிட்டான். என் வேஷ்டி சட்டையெல்லாம் சகதியாயிட்டது.
நல்ல வேளை பக்கத்துல ஒரு ஹோட்டல்ல தண்ணி கொடுத்தாங்க..கொஞ்சம் சுத்தம் பண்ணிக்கிட்டேன்..
ஆனால் கோவிலுக்குப் போகாமலேயே ஊருக்குக் கிளம்பிட்டேன்..
மனம் மிகவும் வருத்தமாக உள்ளது…” என்று போட்டிருந்தான்.
அவனுக்கு நிறைய கமெண்டுகள் வந்திருந்தது அனைத்தும் இவனைத்திட்டியே…
அதிர்ச்சியடைந்த இவன்
லைக் போடலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்தான்…
முற்றும்