
மகளிர் கிரிக்கெட்டில் புதிய உச்சத்தை தொட்டு சாதனை செய்துள்ளார் 16 வயது இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா தற்போது நடந்து வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் அதிரடியில் கலக்கும் அவர் மகளிர் கிரிக்கெட்டில் அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீராங்கனை என்ற சாதனையை செய்துள்ளார். இவரால் தான் மகளிர் கிரிக்கெட் மாறப் போகிறது என்றும், இவர் ஒருவரே ரசிகர்களை மகளிர் கிரிக்கெட்டை பார்க்க தூண்டுவார் எனவும் இப்போதே அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கடந்த செப்டம்பர் 24, 2019 அன்று தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான டி20 போட்டியில் தன் 16 வயதில் அறிமுகம் ஆனார் துவக்க வீராங்கனை ஷபாலி வர்மா. அப்போது முதல் மகளிர் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீராங்கனையாக பார்க்கப்படுகிறார்.
அவரது சிறப்பே அதிரடி ஆட்டம் தான். பொதுவாக மகளிர் கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டம் என்பது, ஆடவர் கிரிக்கெட்டுக்கு இணையாக இருக்காது. அதிக சிக்ஸர்களை பார்க்க முடியாது. சில வீராங்கனைகள் சில போட்டிகளில் அப்படி அதிரடி ஆட்டம் ஆடுவார்கள்.
இது வரை எந்த வீராங்கனையும் ஒரு மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் தொடாத ஸ்ட்ரைக் ரேட்டை தொட்டு மிரட்டல் சாதனை செய்துள்ளார். 2020 டி20 உலகக்கோப்பை தொடரில் 3 போட்டிகளில் 172.72 ஸ்ட்ரைக் ரேட்டில் 114 ரன்கள் குவித்துள்ளார். இது உலகக்கோப்பை சாதனை ஆகும்.