சகல நன்மையும் தரும் சனிப்பிரதோஷ வழிபாடு!

சிவாலயங்களில் மிகவும் சிறப்பாக வழிபாடு செய்யப்படுவது பிரதோஷ வழிபாடு ஆகும். பிரதோஷத்தில் சனிப்பிரதோஷத்திற்கு மிகவும் சிறப்பு உண்டு. பாற்கடலை கடைகையில் ஆலகால விஷம் வெளிப்பட்டதை சிவனார் உண்ட தினம் சனிக்கிழமை என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளதால் சனிப்பிரதோஷம் சிறப்பு அடைகின்றது.

பொதுவாக பிரதோஷம் நித்ய பிரதோஷம் மாதப்பிரதோஷம், மஹா பிரதோஷம் என மூன்று வகைப்படும்.

நித்ய பிரதோஷக்காலம்: தினமும் சூர்யாஸ்தமனத்திற்கு முன் 3 3/4 நாழிகை பின் 3 3/4 நாழிகை சேர்ந்த 7 1/2 நாழிகை.

மாத பிரதோஷகாலம்: பிரதிமாதம் வளர்பிறை,மற்றும் தேய்பிறை திரயோதசி திதியன்று சூர்யாஸ்தமனத்திற்கு முன் 3 3/4நாழிகை,பின் 3 3/4 நாழிகை.

மஹா பிரதோஷம்: இவை மூன்று வகைப்படும் உத்தமம், மத்யமம், அதமம்.

உத்தம மஹாபிரதோஷம்: சித்திரை,வைகாசி, ஐப்பசி,கார்த்திகை, ஆகிய மாதங்களில் வளர்பிறை திரயோதசியுடன் கூடிய சனிக்கிழமைகளில் சூர்யாஸ்தமனத்திற்கு முன் 3 3/4நாழிகை,பின் 3 3/4 நாழிகை காலம்.

மத்யம மஹாபிரதோஷக்காலம்: சித்திரை,வைகாசி, ஐப்பசி,கார்த்திகை, ஆகிய மாதங்களில்தேய்பிறை திரயோதசியுடன் கூடிய சனிக்கிழமைகளில் சூர்யாஸ்தமனத்திற்கு முன் 3 3/4நாழிகை,பின் 3 3/4 நாழிகை காலம்.

அதம மஹாபிரதோஷ காலம்:மேற்கூறிய நான்கு மாதங்களைத்தவிர மற்ற மாதங்களில் வரும் வளர்பிறை தேய்பிறை திரயோதசியுடன் கூடிய சனிக்கிழமைகளில் சூர்யாஸ்தமனத்திற்கு முன் 3 3/4நாழிகை,பின் 3 3/4 நாழிகை காலம்.

பிரதோஷ காலத்தில் எல்லா தெய்வங்களும் சிவாலயத்தில் வந்து சேர்ந்து வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே பிரதோஷ காலத்தில் மற்ற சன்னதிகளில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணிவரை வழிபாடு செய்வதில் பலனில்லை. ஏனெனில் அங்கிருக்கும் தெய்வங்கள் சிவாலயத்திற்கு வந்து விடுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு செய்தோமானால் எல்லா தெய்வங்களின் அருளும் ஒருசேர கிடைக்கும்.

சனிப்பிரதோஷ வேளையில் சிவனாருக்கு திலான்னம் என்னும் எள்ளுச்சாதம் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்வதால் சனிக்கிரக பாதிப்புக்கள் விலகும். சிவன் எல்லா கோள்களுக்கும் அதிபதி. எனவே சனிப்பிரதோஷ வழிபாடு செய்கையில் நவகிரக தோஷங்கள் நிவர்த்தி அடையும்.

பொதுவாக பிரதோஷ பூஜையில் சிவனுக்கு நிவேதனம் முக்கான்னம் என்னும் மிளகுப் பொங்கல்( வெண்பொங்கல்) உகந்தது ஆகும். ஆலகாலத்தை உண்டவர் சிவபெருமான். மிளகு விஷத்தை போக்கும் குணம் உடையது. எனவே வெண்பொங்கல் நிவேதனம் சிறப்பு ஆகும்.

சோமசூக்தபிரதட்சணம்: முதலில் நந்தியை தரிசித்து அப்பிரதட்சணமாக சண்டிகேஸ்வரர் வரைசென்று அங்கு திரும்பி பிரதட்சணமாக வழியில் நந்தியை தரிசித்து கோமுகியை அடையவேண்டும் மீண்டும் திரும்பி வந்து நந்தியைதரிசித்து சண்டிகேஸ்வரரயை அடையவேண்டும்.மீண்டும் பிரதட்சணமாக வந்து நந்தியை தரிசிக்காமல் கொமுகியைஅடைந்து திரும்பி நந்தியைதரிசிக்காமல்சண்டிகேஸ்வரரை தரிசித்து பின்னர் பிரதட்சணமாகவந்து நந்தியை தரிசித்து பின்னர்,நந்தியின் இரு கொம்புகளுக்கிடையில் சிவனை தரிசித்து வழிபட வேண்டும்.இப்பிரதட்சணம் செய்து வழிபட்டால் மேன்மையான பலன்கள் கிடைக்கும்.

பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும். ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள்.ஆக சராசரியாக மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு. சவுகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லப்படுகிறது.

பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறனிந்து சிவ நாமம் ஆன நமசிவாய ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு சாப்பிடலாம். இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனருள் கிடைக்கும்.

ஒரு கைப்பிடி காப்பரிசி (வெல்லமும் அரிசியும் சேர்த்தது), ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால்… சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும்.

நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்புடையது. தூய்மையான ஆற்றுநீர், கிணற்றுநீர் அபிஷேகத்திற்கு முதன்மையானதாகும். கொண்டுவந்த திருமஞ்சனத்திற்குரிய நீரில் பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ முதலிய மணமுள்ள பொருள்களை இடவேண்டும். விளாமிச்சை எனப்படும் வெட்டிவேர், தீர்த்தப்பொடிகள் இடவேண்டும்.

நல்லெண்ணெய், மாப்பொடி, நெல்லிமுள்ளி, பஞ்சகவ்யம், பஞ்சாமிருதம், பால், தயிர், நெய், தேன் கரும்பின் சாறு, பழவர்க்கம், இளநீர், வாசனைச் சந்தனம் சிருங்கநீர், தாராநீர், ஸ்நபனநீர், சங்காபிஷேகம் ஆகியனவற்றை வரிசையாகச் செய்யவேண்டும். விபூதி, அன்னம், கும்பநீர், அர்க்கிய தீர்த்தம் இவற்றாலும் அபிஷேகம் செய்யவேண்டும்.

சகலாகம சங்கிரகம் என்னும் நூலில் கீழ்க்கண்ட முறை கூறப்பட்டுள்ளது:- 1. எண்ணெய், 2. பஞ்சகவ்யம், 3. மாவு, 4. நெல்லிமுள்ளி, 5. மஞ்சள் பொடி, 6. பஞ்சாமிருதம், 7. பால், 8. தயிர், 9. நெய், 10. தேன், 11. கரும்பின் சாறு, 12. பழரசங்கள், 13, இளநீர், 14. அன்னம், 15. சந்தனம், 16. ஸ்நபனநீர்.

அறுகு, சண்பகம், புன்னாகம், நந்தியாவட்டை, பாதிரி, பிருகதி, அரளி, தும்பை ஆகிய எட்டும் அஷ்ட புஷ்பங்கள் எனப்படும். பிரதோஷ தினத்தில் இவற்றை சிவபெருமானுக்கு அணிவித்து அர்ச்சனை செய்தல் சிறப்பாம்.

அபிஷேக பலன்கள்:

அபிஷேகத்தூள் – கடன் தொல்லை தீரும்

பஞ்சாமிர்தம் – நீண்ட ஆயுள் கிடைக்கும்

பால் – பொறுமை, சாந்த குணம் உண்டாகும்

தயிர் – உடல் ஆரோக்யம் சிறக்கும்

எலுமிச்சை – திருஷ்டி விலகும்

தேன் – கல்வி, கலைகளில் சிறக்கலாம்

இளநீர் – புத்திர பாக்கியம் கிடைக்கும்

விபூதி – அறிவு பெருகும்

மஞ்சள் – சகல சௌபாக்கியமும் கிடைக்கும்

பச்சரிசி மாவு – கடன் வசூலாகும்

நெய் – எதிரிகள் நண்பர்கள் ஆவர்

சந்தனம் – பக்தி பெருகும்

பன்னீர் – நினைத்த காரியம் கைகூடும்

நல்லெண்ணெய் – சுக வாழ்க்கை அமையும்

பஞ்ச வில்வங்கள்

முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா ஆகியன. இவை சிவபெருமானுக்கு மிகவும் உகந்தவை பிரதோஷ பூஜையில் இவற்றினால் அர்ச்சனை செய்தால் சிவபெருமானுக்கு மகிழ்ச்சி அளிக்கும். நமக்கு நன்மைகள் உண்டாகும்

மிகவும் புண்ணியமான இந்தநேரத்தில் நாம் எந்த ஒரு மந்திரம் ஒரு முறை ஜபித்தாலும், அது பலகோடிமடங்கு ஜபித்ததற்கான புண்ணியத்தைத் தரும்.

ஓம் ஆம் ஹவும் சவும் என்ற மந்திரத்தை ஒரு சிவாலயத்தில் ஒரு முறைஜபிப்பதால்,நாம்,நமது முந்தைய ஏழு பிறவிகள்,நமது முன்னோர்கள் ஏழுதலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் அவற்றால் ஏற்பட்ட பாவங்கள்அழிந்துவிடும்.(பொய் சொல்லுதல்,கொலை செய்தல்,பேராசைப்படுதல்,வீணானஅபகரித்தல்,குருவை நிந்தித்தல் போன்றவை பஞ்சமாபாதகங்கள்)எனவே,இந்தமந்திரத்தை,குறைந்தது ஒன்பது தடவையும்,அதிகபட்சமாக 108 முறையும்ஜபிப்போம்.

நந்திகேச மஹாபாக சிவத்யான பராயண:
உமாசங்கர ஹேவார்த்தம் அனுஞ்ஞாம் தாதுமர்ஹஸி”

என்ற நந்தி ஸ்துதியாலும் வணங்கித் துதிக்க வேண்டும்.

`சிவனடியில் சரணம் புகுந்து சிவத்தியானத்தில் ஆழ்ந்திருக்கும் மகா புண்ணியம் பெற்ற நந்திகேசுவரரே! சன்னதிக்குச் சென்று உமையோடு கூடிய ஈஸ்வரனைத் தரிசிக்க எனக்கு உத்தரவு தருக’ என்பது இதன் பொருளாகும்.

பிரதோஷ வழிபாட்டினால், கடன், வறுமை போன்றவை விலகி மிருத்யு பயம் நீங்கி பிரம்மஹத்தி தோஷமும் விலகுகின்றது. பிரதோஷவழிபாடு செய்கையில் அனைத்து தெய்வங்களையும் வழிபாடு செய்த பலன் கிடைக்கின்றது.

இன்று சனிப்பிரதோஷம் எல்லா சிவாலயங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. அன்பர்கள் அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று தங்களால் இயன்ற அபிஷேகப் பொருள்கள் புஷ்பங்களை சமர்பித்து நெய்தீபம் ஏற்றி நந்தியெம்பெருமானையும் சிவபெருமானையும் வழிபாடு செய்து பிறவிப் பெருங்கடலை நீந்த அவனருள் வேண்டுவோமாக!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: