பாசம் நிறைந்த வீடு!

செந்தில்குமார் அமிர்தலிங்கம்.

மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஒரு நிறுவனத்தின் சென்னை கிளையில் மேலாளராகப் பணிபுரிகிறான் சந்தோஷ். வேலை விசயமாக மும்பை, பெங்களூரு, கேரளா என அடிக்கடி பறந்துக்கொண்டிருப்பவன்.

எப்போதும் பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருப்பவன்
எனவே மன உளைச்சலில் கடுகடுப்பாய் இருப்பான்.
மேலிடத்துப் பிரஷர் அதை வீட்டிலும் வெளிப்படுத்திவிடுவான்.அதனால் இவனது அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகள் என யாரும் இவனிடத்தில் நெருங்குவதில்லை. இவனும் அவர்களிடம் நெருங்குவதில்லை.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்றாலும் நண்பர்களுடன் ரிலாக்ஸ் செய்ய விரும்பி பீச், சினிமா என்று சென்றுவிடுவான்.இல்லையென்றால் லேப்டாப்பை நோண்டிக்கொண்டிருப்பான்.

எனவே இவனிடம் பேசவே வீட்டிலுள்ளவர்கள் பயப்படுவார்கள்.இவனும் குழந்தைகள் ஏதேனும் சிறு தவறு செய்தாலும் அடித்துவிடுவான்.அவர்கள் என்ன படிக்கிறார்கள் என்றுகூட இவன் நினைவில் இருப்பதில்லை.எல்லாமே மனைவி சுகந்திதான் கவனித்துக் கொள்கிறாள்.

வயதான பெற்றோரிடம்கூட நின்று ஒருவார்த்தைப் பேசுவதில்லை அவன்.
அவனது அன்பிற்காய் ஏங்கியே அவர்கள் நொந்துகொண்டிருந்தார்கள்.ஏதாவது கேட்டால் இந்த சம்பளம் வேணும்னா இப்படிதான் வேலை பார்த்தாகனும் என்று எகிறுவான்.

ஆனால்…

தற்போது கொரோனா பாதிப்பால் இருபத்தொரு நாள் ஊரடங்கு உத்தரவு ஆதலால் வீட்டில் இருக்கிறான்.

காலை ஒன்பது மணி.
அப்போதும் லேப்டாப்பில் எதையோ நோண்டிக்கொண்டிருந்தான்.அருகில் அவனது மனைவி வந்து நின்றாள்.

” என்னங்க”

” என்ன?”

“சாப்பிட வாங்க”

“வரேன் நீ போ”

சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து நின்றாள்.

“என்னங்க”

“அதான் வரேன்னு சொல்றேன்ல…” என்று எரிந்துவிழுந்தான்.
அவள் போய்விட்டாள்.

இவன் எழுந்து டைனிங் டேபிளுக்குச் சென்றான். அங்கே இவனுக்காய் யாரும் சாப்பிடாமல் காத்திருந்தனர்.இவன் வந்தபின்தான் அவர்களும் சாப்பிட அர்ந்தனர்.

அவனது அம்மா “நேரத்துக்குச் சாப்பிடுப்பா” என்றார்.

“வீட்டிலிருக்கும் போதாவது உடம்ப பாத்துக்கப்பா.” என்றார் அப்பா.

அவனுக்கு இட்லியை வைத்துக்கொண்டே சுகந்தி கேட்டாள்.

“என்னங்க உங்களுக்கு நம்ம பசங்க என்ன படிக்குறாங்கன்னு தெரியுமா?” என்றாள்.

ம்…என்று யோசித்தவன்

“பையன் சிக்ஸ்த், பொண்ணு ஃபோர்த்” என்றான்.

அதற்கு” அது போன வருஷம்ப்பா..” என்றனர் குழந்தைகள்.

இவனுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.

“இந்த அளவுக்கு குடும்பத்து மேல நினைப்பில்லாம வேலை வேலைனு சுத்துறீங்களே…இனிமேலயாவது எங்களையும் நினைச்சுப்பாருங்க” என்றாள் சுகந்தி.

“அவனுக்கு இன்னொரு இட்லி வைமா புதினா சட்னி அவனுக்கு ரொம்ப பிடிக்கும்” என்றாள் அம்மா.

“போதும்மா” என்றான்.

“சூடா வச்சிக்கப்பா” என்று அவனது அப்பாவே ஒரு இட்லியை எடுத்து அவன் தட்டில் வைத்தார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு நிமிர்ந்து அவனது அப்பாவைப் பார்த்தான்.
அவர் முகத்தில் முதுமையும் பாசமும் நிறையவே தெரிந்தது.

அவனது அம்மா “இவனை இப்பவிட்டா இனி எப்போ பாக்குறது” என்பது போல அவனை முழுவதுமாக பார்த்துக்கொண்டிருந்தாள் விழிகள் கசிய.

சிறுவயதில் எப்படியிருந்தார்களோ அப்படியே இருக்கிறார்களே அதே பாசத்தோடு.. நான்தான் மாறிவிட்டேன் என்று மனதினுள் நினைத்துக்கொண்டான்.

சாப்பிட்டு முடித்ததும்
மகன் கேட்டான்.
“அப்பா போனவருடம் உங்க பிறந்தநாளுக்கு நாங்க ஒரு கிப்ட் வாங்கியிருந்தோம்.ஆனா நீங்க வீட்டுக்கே வரல.வெளியூர் போய்டிங்க.அதுக்கப்புறமும் நீங்க பிசியாவே இருந்திங்க கொடுக்க முடியல. இப்ப பாக்குறிங்களாப்பா?” என்றான்.

இவன் பாக்குறேன் என்று தலையாட்டினான்.

இருவரும் ஓடிச்சென்று ரூமிலிருந்து ஒரு சிறிய பாக்ஸ் ஒன்றை எடுத்துவந்து கொடுத்தனர்.

அதில் இவனுக்காக அவர்கள் வாங்கிய அழகிய வாட்ச் ஒன்று இருந்தது.

“லேசா ஒடஞ்சிட்டதுபா ஸாரிப்பா” என்றான் மகன்.

இவன் “பரவால்லடா” என்றபடி வாங்கிக்கொண்டு இருவரையும் கட்டிக்கொண்டான்.

அவனது அம்மாவும் அப்பாவும் ஒரு பையை எடுத்துவந்து அவனிடம் நீட்டினர்.

அதில் அவனுக்காய் கலர் கலராய் சட்டைத்துணிகள் இருந்தன. கூடவே இவனது சிறுவயது புகைப்படமும் இருந்தது.

அவர்கள் கண்ணீரோடு இவனைப்பார்க்க இவனும் அழுதேவிட்டான்.

இனி இந்த இருபத்தியொரு நாளும் லேப்டாப்பை மறந்து இவர்களோடே கழிக்க வேண்டுமென மனதில் எண்ணிக்கொண்டான்.

இவன் எண்ணியது போலவே இருபத்தியொருநாளும் குடும்பத்தோடே மகிழ்ச்சியாக இருந்தான்.இவனுக்குப் பிடித்ததையெல்லாம் சமைத்துக்கொடுத்து சந்தோஷப்பட்டாள் மனைவி.

கொரோனா அச்சத்தையே மறக்கும் அளவுக்கு அவர்களது அன்பிலே திளைத்தான் சந்தோஷ்.

இத்தனை நாள் இதையெல்லாம் இழந்ததை எண்ணி வருந்தினான்.

இருபத்தியோராவது நாள்.
தொலைக்காட்சியில் பாரத பிரதமர் தோன்றி “கொரோனா வைரஸ் முழுவதுமாக அழிந்தது.இனி அச்சப்படத்தேவையில்லை.இனி சகஜமான வாழ்க்கைக்கு அனைவரும் திரும்பலாம்” என மகிழ்ச்சிப்பொங்க கூறிக்கொண்டிருந்தார்.

அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியே என்றாலும் சந்தோஷ் மறுபடியும் பிசியாகிவிடுவானே என்ற கவலை தொற்றிக்கொண்டது.

ஆனால் சந்தோஷ் சந்தோஷமான ஒரு செய்தியைக் கூறினான்.

“நான் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு அப்பா முன்னாடி பார்த்த கார்மெண்ட்ஸ் வேலையவே தொழிலாக எடுத்து செய்யலாம்னு இருக்கேன்.நம்ம வீட்லயே உங்க கூடவே” என்றான்.

கொரோனா ஒழிந்து வாழ்வில் ஔி கொடுத்ததாய் உணர்ந்தனர் அனைவரும் மகிழ்ச்சியாக.

முற்றும்.

செந்தில்குமார்அமிர்தலிங்கம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: