கன்னிமாடம் விமர்சனம்

கன்னிமாடம்! திரை விமர்சனம்

கன்னிப் பெண்கள், கர்ப்பினிப் பெண்கள், பெண் துறவிகள் என பெண்கள் தனியே தங்கும் இடத்திற்குப் பெயர் கன்னிமாடம் ஆகும். இந்தப் படத்தின் நாயகியான மலர்க்கோ தங்க ஓரிடம் இல்லா
மல் தவிக்கிறார். படத்தின் தகிப்பிற்குக் காரணமோ, படம் தொட்டுள்ள ஆணவக்கொலை எனும் விஷயமாகும்.

நாயகன் அன்புவின் தங்கையை, அவனது தந்தையே சாதி ஆணவத்தில் படுகொலை செய்து விடுகிறார். தன் குடும்பமே சிதைந்துவிட்டது என வருத்தத்தில் இருக்கும் அன்பு, சென்னைக்கு ஓடி வரும் மலர் – கதிர் ஜோடியை அரவணைக்கிறான். கதிர் விபத்தில் இறந்து விட, நிராதரவாய் இருக்கும் கர்ப்பிணியான மலரைப் பாதுகாக்கும் பொறுப்பு அன்புவிற்கு ஏற்படுகிறது. இந்தச் சமூகக் கட்டமைப்பில் அது அத்தனை எளிதான காரியமா என்ன? அன்புக்கு நேரும் சோதனையும் சவால்களும் தான் படத்தின் கதை.

‘இன்னுமா சாதி பார்க்கிறாங்க?’ என அப்பாவித்தனமாய்க் கேட்கும் கவுன்சிலர் அழகுராணியாக ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்கா நடித்துள்ளார். அவரது அறிமுகத்தின் போது, அவரது உருவத்தினைக் கேலி செய்வது போன்ற கேமிரா கோணத்தினை இயக்குநர் போஸ் வெங்கட் தவிர்த்திருக்கலாம். ஏனெனில், படம் முழுவதும் பெரியாரிசத்தையும் ஒரு கதாபாத்திரமாகக் கொண்டு வந்துள்ளார் எனும்போது உருவு கண்டு நகையாடுவதான விஷயத்தைத் தவிர்த்திருக்கலாம். ‘வாயும் வயிறுமாக என்ன 40 வருஷமா இருப்பீங்களா?’ என்ற முருகதாஸின் வசனமும் ‘பாடி ஷேமிங்’ வகையைச் சார்ந்தது. அழகுராணி பாத்திரத்திற்கு பிரியங்கா கச்சிதமாகப் பொருந்தியுள்ளார்.

‘ஸ்கொயர் ஸ்டார்’ ஆகும் நடிப்புக் கனவில் வருடங்களைத் தொலைத்த பாத்திரத்தில் சூப்பர் குட் சுப்பிரமனியன் ரசிக்கும்படி நடித்துள்ளார். ஸ்டெல்லாவாக நடித்துள்ள வலீனா பிரின்ஸின் கதாபாத்திரத்தை இன்னும் வலுவாக உருவாக்கியிருக்கலாம்.

வாகனங்கள் மீது பிரியமுள்ள கதிராக விஷ்ணு ராமசாமி நடித்துள்ளார். படத்தின் நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் அன்பு எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார். கதாபாத்திரத் தேர்விலேயே இயக்குநர் போஸ் வெங்கட் பாதி வெற்றியினை உறுதி செய்துவிடுகிறார். முக்கியமாக, மலராக நடித்திருக்கும் சாயா தேவி அருமையான சாய்ஸ். அவரது அகத்தை இன்னும் கொஞ்சம் தொட்டிருந்திருந்திருக்கலாம். ஆனாலும், கதையின் கரு ஆணவக் கொலை என்பதால், அது ஒரு குறையாகத் தெரியவில்லை.

முதல் படத்திலேயே, பெரியாரின் புகைப்படத்தையும், அவரது கோட்பாட்டையும் படம் நெடுகே உலாவ விட்டு அசத்தியுள்ளார் போஸ் வெங்கட். மேலும் அதிர்ச்சியான க்ளைமேக்ஸ் மூலம், சமூகத்தின் கோர முகத்தையும், அதை பொறுத்துக் கொள்ள முடியாத தனிமனிதனின் மனசாட்சியையும் அழுத்தமாகப் பதிந்துள்ளன படம்.

பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 17

உங்கள் ப்ரிய “பிசாசு”

முன்கதை சுருக்கம்:

தன் நண்பன் ரவியை குணப்படுத்த அவனை திருப்பதி அழைத்துவருகிறான் முகேஷ். ஆனால் வழியில் ரவி காணாமல் போகிறான். திருப்பதியில் முகேஷை அவனது சித்தப்பா ஒரு ஆட்டோ டிரைவரை விட்டு தன் இருப்பிடத்திற்கு அழைத்துக் கொள்கிறார். அன்று இரவு அவனை ஏதோ பிடித்து இழுக்கிறது.

கொண்டபள்ளி ஒரு டிபிகல் ஆந்திர கிராமம். மலையடிவாரத்தில் பல குடிசைகள் சில கான்க்ரீட் வீடுகள். ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக மாடு இருந்தது. ஆனாலும் விவசாயம் படுத்து விட்டதால் இப்போது பலர் பக்கத்து கம்பெனிகளுக்கு வேலைக்கு சென்று விடுகிறார்கள். பேய்,பிசாசு, காத்து கருப்பு இவை மீது மிகுந்த நம்பிக்கையும் பயமும் அந்த மக்களுக்கு உண்டு.

பேய் அடித்துவிட்டது! பிசாசு மிரட்டிவிட்டது என்று எப்பொழுதும் சுவாமிஜியிடம் திருநீறு மந்திரித்து தாயத்து கட்டிச் செல்வார்கள். சுவாமிஜியும் நேரம் காலம் பார்ப்பது இல்லை! எப்பொழுது யார் அழைத்தாலும் கிளம்பிச் சென்று விடுவார். அதனால் அந்த பகுதியில் அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்தது. சுவாமிஜி சுவாமிஜி என்று உயிரையே விடுவார்கள். இவரும் அந்த மக்களுக்கு ஒன்றினைந்து இருந்தார்.

சுவாமிஜியின் பூர்வீகம் தமிழ்நாடு என்றாலும் அவர் சின்ன வயதிலேயே கொண்டபள்ளிக்கு வந்துவிட்டதாக கூறுவார். சிறுவயதில் தந்தையிடம் கோபித்துக் கொண்டு திருப்பதி வந்த அவர் அங்கு சில இடங்களில் வேலை செய்தார். எதுவும் சரிபட்டு வராத நிலையில் ஒரு நாள் இந்த குஹாத்ரி மலைக்கு வந்தவர் இங்கேயே தங்கி தியானம் செய்ய ஆரம்பித்து விட்டார்.

இந்த மலையில் ஒரு குகை அங்கே பாறையில் ஒரு எந்திரம் எழுதப்பட்டிருக்கும். அது சக்தி வாய்ந்த சுப்ரமண்யர் எந்திரம். மலைகளில் சுற்றி வந்த சுவாமிஜி தற்செயலாக இதை கண்டுபிடித்தார். அந்த எந்திரம் அவரை வசீகரித்தது. எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த யாரோ எழுதிய எந்திரம் அது. ஆனால் அது அவரை ஈர்த்தது. என்னை பூஜியேன் என்று அழைப்பது போல அவரது காதில் ஏதோ ஒலித்தது.

அங்கேயே தங்கி சுப்ரமண்யரின் மூல மந்திரத்தை இடைவிடாது ஜபிக்கத்துவங்கினார். இத்தகைய மந்திரங்களை ஜபித்தால் ஒரு கட்டத்தில் அந்த மந்திரத்திற்குரிய தேவதை எதிரில் பிரசன்னமாகும். அப்போது பயங்கர பிரகாசமாக தெரியும் அந்த தேவதையை கண்டு நாம் மிரளக்கூடாது. அப்படி மிரண்டு போனால் நமது புத்தி பேதலித்துவிடும். அதனால்தான் எதையும் குரு உபதேசத்துடன் செய்ய வேண்டும் என்று சொல்லுவார்கள்.

சுவாமிகள் இவ்வாறு சுப்ரமண்ய மந்திரம் ஜபித்து வர அவருக்கு முருகர் அருள் சித்தியாயிற்று. அதன் பின்னர் அவர் நினைத்த காரியம் கை கூடியது. இதனால் அவர்சொன்ன வாக்கு பலித்தது. தீராத நோய்கள் தீர்ந்தது.இப்படி இங்கு வந்த சுவாமிகள் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலம் அடைந்து இன்னும் பல சித்து வேலைகள் கற்றுக் கொண்டு மக்களுக்கு சேவை செய்ய ஆரம்பித்தார். இது அவருக்கு பல எதிரிகளையும் சம்பாதித்துக் கொடுத்தது. ஆனால் அதற்கெல்லாம் அவர் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

அன்றும் அப்படித்தான்! குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னதும் அவர் கிளம்பி போய்விட்டார். முகேஷ் முதலில் தைரியமாக இருந்தாலும் அந்த இடத்தின் அமைதி அவனை என்னவோ செய்தது. இருப்பினும் எப்படியோ மெல்ல உறங்கி விட்டான்.

திடுமென அவனை ஏதோ பிடித்து இழுப்பது போல தோன்ற அவன் காலை உதறினான். ஆனால் காலை அசைக்கவே முடியவில்லை. சித்தப்பா! சித்தப்பா! என்று அவன் கத்த முயன்றான். ஆனாலும் அவனால் வாய்திறக்க முடிந்ததே தவிர சத்தம் வரவில்லை! சில நிமிடங்கள் மரண அவஸ்தையில் இருந்தான் முகேஷ். இது அவனுக்கு புது அனுபவம். இப்படி எதுவும் அவன் வாழ்க்கையில் நடந்ததே இல்லை! எனவே மிகவும் மிரண்டு போய்விட்டான். இனி அவ்வளவுதான் என்று அவன் நினைத்த சமயம். வாசல் கதவு திறந்தது.

உள்ளே சித்தப்பா நுழைந்தார்.முகேஷ் இப்படியும் அப்படியுமாக புரண்டு படுப்பதையும் முனகுவதையும் பார்த்த அவர் நொடியில் தன் மேல் போட்டிருந்த துண்டினை எடுத்து அப்படியே குழந்தைகள் அந்த காலத்தில் சோடா கார்க்கில் நூலினை விட்டு சுழற்றி விளையாடுவார்களே அப்படி அந்த துண்டினை இரு கரங்களில் பிடித்து சுழற்றினார். அந்த சுழற்றல் வேகமாக அந்த துண்டு அப்படியே முறுக்கு போட அதை அப்படியே முடிச்சிட்டார். அவர் முடிச்சிட்ட நொடி முகேஷ் தூக்கத்தில் இருந்து விழித்தவன் போல எழுந்து உற்காந்தான்.

மாதறசத்! என்கிட்டேயே விளையாடறியா? என்று அந்த துண்டின் மீது தன் இடுப்பில் வைத்திருந்த பையில் இருந்து ஒரு துளி விபூதியை எடுத்து போட்டார் பின்னர் அப்படியே சுருட்டி அதை அங்கிருந்த ஒரு பானையில் போட்டு மூடினார்.

நடப்பது எல்லாவற்றையும் வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தான் முகேஷ்.

என்ன முகேஷ்! பயந்துட்டியா!இதெல்லாம் ஜுஜுபி! இதுக்கெல்லாம் பயப்படாதே! எப்படி வேர்த்து வழியுது உன் முகம்! இந்தா துண்டு துடைச்சிக்கோ! என்று ஒரு துண்டினை தந்தார்.

சித்தப்பா! இங்கே என்ன நடந்தது! என்னை எதுவோ இழுத்தது! நான் கத்தினேன்! ஆனா சவுண்டே வரலை! திடீர்னு நீங்க வந்தீங்க! ஒரு துணியால ஏதோ மாஜிக் பண்ணீங்க! எல்லாம் சரியாயிடுத்து!

ஒண்ணுமில்லே முகேஷ்! இது என்னோட கட்டுப்பாட்டில் இருக்கிற ஏரியா! அப்படின்னு சொன்னேனே தவிர என்னை ஏமாத்தி சில துர் ஆவிகள் இங்க உலாத்தி வரும்! அதுங்கள்ள ஒண்ணோட சேஷ்டைதான் இது! நீ சின்னை பையன் அது உன்கிட்ட விளையாடி பார்க்குது! விளையாடிச்சா? இதுவா விளையாட்டு!

ஆமாம்! ஆவிகளுக்கு நம்மை துன்புறுத்தி இன்புறுதல்தான் விளையாட்டு! நீ படற அவஸ்தை அதுக்கு மகிழ்ச்சி!

அப்பாடா! எப்படியோ நீங்க வந்து என்னை காப்பாத்திட்டீங்க! இல்லேன்னா நான் செத்திருப்பேன்!

அப்படியெல்லாம் நடக்காது! சாதாரணமா ஆவிங்க யாரையும் கொல்லாது!

அப்ப ஆவி அடிச்சிட்டதா சொல்றாங்களே!

அது நம்ம பலகீனம்! அதை பார்த்து பயந்து அந்த அதிர்ச்சியிலே உறைந்து உயிரை விட்டுடறவங்களும் இருக்காங்க!

சித்தப்பா! ஆவிங்கன்னா என்ன? செத்து போனவங்க எல்லாம் ஆவிங்களா உலாத்துவாங்களா?

இந்த அர்த்த ராத்திரியிலே இந்த கேள்வி தேவையா? நீ நிம்மதியா படுத்து தூங்கு! நானும் தூங்கறேன்! நாளைக்கு காலையில இதுக்கு விளக்கம் சொல்றேன்.

அதுவும் சரிதான்! ஆனா எனக்குத்தான் தூக்கம் வருமான்னு தெரியலை!

அப்படியா? நான் உனக்கு தூக்கம் வரவழைக்கிறேன்! எங்கே என் கண்ணையே கொஞ்ச நேரம் பாரு! ஆங்! அப்படியே பாரு அப்படியே பாரு! அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போதே முகேஷ் கண் சொக்கி அப்படியே படுக்கையில் விழுந்தான். சித்தப்பா சிரித்தபடியே அவனுக்கு போர்த்தி விட்டு பக்கத்தில் படுத்து உறங்கிப் போனார்.

மறுநாள் அதிகாலை அடிவாரத்து கோயிலில் சுப்ரபாதம் ஒலிக்க முகேஷ் கண்விழித்தான். சித்தப்பா எப்போதோ எழுந்து விட்டிருந்தார். முகேஷ் தன் பையில் இருந்த பேஸ்ட் பிரஷ் எடுத்துக் கொண்டு பல் துலக்கி முடித்தான். சித்தப்பா அதற்குள் குளித்து முடித்து அந்த குகையில் இருந்த முருகருக்கும் எந்திரத்திற்கும் பூஜைகள் செய்து கொண்டிருந்தார். அவர் உச்சரிக்கும் மந்திர உச்சாடனம் மிகத்தெளிவாகவும் சத்தமாகவும் வெளியே கேட்டுக் கொண்டிருந்தது. முகேஷ் பல்விளக்கியதும் காபி சாப்பிடவேண்டும் போல உணர்ந்தான். ஆனால் இது அவனது வீடு அல்லவே! குஹாத்ரி மலை! காபி பால் என்றால் கீழிருந்துதான் மேலே வரவேண்டும். பொழுது விடிந்து சில மணி நேரங்கள் கழித்துதான் அவை வந்து சேரும். எனவே முகேஷ் அங்கிருந்த தொட்டி தண்ணீரில் குளித்தான். மலைப் பிரதேசமானதால் தண்ணீர் சில்லென்று இருந்தது. குளித்து முடித்ததும் அவனது காபி தாகம் இன்னும் அதிகரித்தது.

பூஜை முடித்துவிட்டு சித்தப்பா உள்ளே வந்தார். என்ன முகேஷ் ஒரு மாதிரி இருக்கே! ஓ! காபி வேணுமா? இன்னும் பத்து நிமிசத்துல பால் வந்திரும்! காபி கலந்திடலாம். அதுக்கு முன்னாடி உனக்கு ஒரு அதிசயம் காண்பிக்க போறேன் வா!

என்ன சித்தப்பா! என்ன அதிசயம்?

வா! வந்து பாரு! நீ அசந்து போயிருவே!

அப்படி என்ன அதிசயம்?

நீ வா! என்று அவனை குடிலை விட்டு வெளியே அழைத்து வந்தார் அவனது சித்தப்பாவான சுவாமிஜி!

அங்கே!

ரவி நின்று கொண்டிருந்தான்.

(மிரட்டும் 17)

பாடல்கள் பலவிதம்!

ப்ரணா

அந்த காலம் தொட்டு இன்றுவரை பற்பல கவிஞர்கள் ஒரே கருத்துள்ள பாடல்களை தம் மொழி நடையில் தம் பாணியில் சிறப்பாக சிந்தித்து படைத்து வந்துள்ளனர். கவிஞர் ப்ரணா கவிஞர்கள் கண்ணதாசன், வாலி, வைரமுத்து மூவருக்கும் உள்ள ஒற்றுமையான பாடல்களை தொகுத்து தருகிறார். வாசித்து மகிழுங்கள்!

கல்யாணப் பரிசு

சி.சுரேஷ். தர்மபுரி

என் பெயர் ரமேஷ் படித்த பட்டதாரி வேலையில்லாமல் ஓசி டீக்காக அலைந்து கொண்டிருப்பவன்
என்ன பண்ணுவது என் நிலைமை தெரியாம என் கூட படிச்ச மாலா பத்திரிக்கை வேற வந்து எனக்கு வெச்சுட்டா
“கல்யாணத்துக்கு வந்தே ஆகணும்” ஒரே பிடிவாதமாக பத்திரிக்கை வைத்து விட்டு போய்ட்டா
கல்யாணத்துக்குப் போனால் நல்ல சாப்பாடு சாப்பிடலாம் ஆனா அதே நேரத்துல ஏதாவது அவளுக்கு கிப்ட் வச்சே ஆகணும் இல்லாட்டி மானம் மரியாதை போய்விடும்
என்ன செய்யலாம் யோசித்தேன் பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டேன் ஒரு பைசா கூட இல்லை இரண்டு நாளுக்கு முன்புதான் உண்டியலை உடைத்து இருந்த இருபது ரூபாய் சில்லறைக்கு டிபன் வாங்கி சாப்பிட்டேன்
என்னடா பொழப்பு சலித்துக் கொண்டான் என்னைவிட ரோட்டில் பிச்சை எடுக்கிற பிச்சைக்காரன் ஒசத்தி
அலுத்துக் கொண்டான்
வீடு நிறைய வாங்கிப் படித்த புத்தகங்கள்
ஒரு சில புத்தகங்களைத் தவிர மற்ற புத்தகங்கள் மீண்டும் படிக்கத் தோனாதவைகள் என்ன செய்யலாம் யோசித்தான்
பிறகு வீட்டிலே ஏற்கனவே பாதி கிப்ட் பேப்பர் வைத்திருந்தான் அந்த பேப்பரை எடுத்து “திருமண வாழ்க்கை சந்தோஷமாக நடத்துவது எப்படி” எனும் ஒரு புத்தகம் கண்ணுக்குப்பட அதை எடுத்து அப்படியே பேக் பண்ணினான்
துவைக்காத ஜீன்ஸ் பேண்ட்டுக்கு மேட்ச்சாக ஒயிட் சர்ட் அணிந்துகொண்டான், பாலிஷ் போடாத ஷீவை எடுத்து துடைத்து போட்டுக்கொண்டேன்.
இனி மாலாவை தைரியமாய் பார்க்கலாம் கிப்ட் கொடுக்கலாம் மதியம் சாப்பாடு சாப்பிடலாம் சந்தோஷத்தோடு கிளம்பினான்.

மகளிர் கிரிக்கெட்டின் புதிய நட்சத்திரம்! ஷபாலி வர்மா!

மகளிர் கிரிக்கெட்டில் புதிய உச்சத்தை தொட்டு சாதனை செய்துள்ளார் 16 வயது இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா தற்போது நடந்து வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் அதிரடியில் கலக்கும் அவர் மகளிர் கிரிக்கெட்டில் அதிக ஸ்ட்ரைக் ரேட் கொண்ட வீராங்கனை என்ற சாதனையை செய்துள்ளார். இவரால் தான் மகளிர் கிரிக்கெட் மாறப் போகிறது என்றும், இவர் ஒருவரே ரசிகர்களை மகளிர் கிரிக்கெட்டை பார்க்க தூண்டுவார் எனவும் இப்போதே அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கடந்த செப்டம்பர் 24, 2019 அன்று தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான டி20 போட்டியில் தன் 16 வயதில் அறிமுகம் ஆனார் துவக்க வீராங்கனை ஷபாலி வர்மா. அப்போது முதல் மகளிர் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீராங்கனையாக பார்க்கப்படுகிறார்.

அவரது சிறப்பே அதிரடி ஆட்டம் தான். பொதுவாக மகளிர் கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டம் என்பது, ஆடவர் கிரிக்கெட்டுக்கு இணையாக இருக்காது. அதிக சிக்ஸர்களை பார்க்க முடியாது. சில வீராங்கனைகள் சில போட்டிகளில் அப்படி அதிரடி ஆட்டம் ஆடுவார்கள்.

இது வரை எந்த வீராங்கனையும் ஒரு மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் தொடாத ஸ்ட்ரைக் ரேட்டை தொட்டு மிரட்டல் சாதனை செய்துள்ளார். 2020 டி20 உலகக்கோப்பை தொடரில் 3 போட்டிகளில் 172.72 ஸ்ட்ரைக் ரேட்டில் 114 ரன்கள் குவித்துள்ளார். இது உலகக்கோப்பை சாதனை ஆகும்.

கொஞ்சம் சிரியுங்க பாஸ்!

நம்ம தலைவரு, கும்பிட்ட கையை கீழே இறக்காம போறாரே!

தேர்தலில் மூக்கு உடைஞ்சதை மறைக்கத்தான்….

பா.சக்தி வேல், கோவை.

*பேருந்தில் பயங்கர மான கூட்டம் . ஒரே வார்த்தையில் கூட்டமே கலைஞ்சு போச்சு அப்படி என்ன வார்த்தை சொன்ன என்ன மாப்ள எப்போ சீனாவுலேர்ந்து வந்தே? வேத புருஷோத்தமன் ஆதிச்சபுரம் 614717*.

உலகத்துல இல்லாத தெய்வம் எல்லாம் தலைவருக்கு துணை நிற்குமா எப்படி ?”

” இருக்கற சிலையெல்லாம் தான் அவரு கஸ்டடியில இருக்காம் …

சீர்காழி.ஆர்.சீதாராமன்

” தூதுப் புறாவுக்கு பயிற்சி கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள் மன்னா …”

” போர் ஓலையை போட்டதும் கை நழுவி பறந்து விட்டதா அமைச்சரே ?”

சீர்காழி.ஆர்.சீதாராமன்

என் ஆளைச் ‘சுத்தி வளைச்சுப் பிடிக்க முடியலை’டா!”

“ஏன்டா என்னாச்சு? லவ்வுக்கு ஓக்கே சொல்லலியா?”

“அதில்லடா அவ ‘ரொம்ப குண்டா’ இருக்கா!”

முத்து ஆனந்த், வேலூர்.

“நீ உன் வீட்டுக்காரரை அடிக்கடி ‘பழம், பழம்’ன்னு சொல்றியே! உனக்கு அவர் மேல அவுவளவு அன்பா?!”

“அட அவ ஒருத்தி, அவரு ஒரு ‘பழம்’ விடாம எல்லாப் பழங்களையும் சாப்பிடுவாரு! அதனால அவருக்கு அப்படி ஒரு ‘பேரை’ வச்சேன்!”

முத்து ஆனந்த், வேலூர்.

புலவர்கள் அரசவையில் என்னைப்பற்றி புகழ்ந்து பாடவே

மாட்டேங்கிறாங்களே ஏன் அமைச்சரே..?

அரசவையில் பொய் பேசக்கூடாது என்று உத்தரவு போட்டிருக்கிறீர்களே அரசே!

எஸ்,எஸ்,பாபு, பஞ்செட்டி.

நம் மன்னருக்குப் பிடித்த உணவு எது சொல் பார்க்கலாம்?

குழிப் பணியாரம்..தான்..!

சின்னசாமி, நத்தம்.

“தலைவரை மிகப் பெரிய சக்தி ன்னு சொன்னது தப்பா போச்சா ஏன் ? “

” எரிபொருளுக்குக்கு பதில் மாற்று சக்தியா அவரை பயன்படுத்த முடியுமான்னு யாரோ கேட்டுட்டாங்களாம் …

சீர்காழி.ஆர்.சீதாராமன்

பாத்திரம் கழுவ முதலாளியம்மா வீட்டுக்கு இன்னிக்கு கொஞ்சம் லேட்டா போயிட்டேன்”

” அச்சச்சோ என்னாச்சி?”

.”முதலாளியம்மா கழுவி கழுவி ஊத்திட்டாங்க!””

புது வண்டி ரவீந்திரன்

” ஆபரேஷன் பேஷண்ட் எஸ்கேப் ஆனதும் டாக்டர் என்ன சொன்னார் ?”

” ஹி… ஹி.. ஓடுகாலின்னு தான் ….”

சீர்காழி.ஆர். சீதாராமன்.

சாதனை அரசிகள்!

நெய் மிளகாய், பிங்க் கொய்யா: புதிய ரகங்களை கண்டுபிடித்து அசத்தும் பட்டதாரி ‘விவசாயி’ ஸ்ரீலஷ்மி! விவசாயிக்கு லாபம் மக்களுக்கு ஆரோக்கியமான உணவு இந்த இரண்டையும் சாத்தியமாக்கி வருகிறார் புதுச்சேரியை சேர்ந்த எம்பிஏ பட்டதாரிப் பெண் ஸ்ரீலஷ்மி. பாரம்பரிய பயிர்களில் புதிய ரகங்களை கண்டுபிடித்து விவசாயத்தில் புதிய இலக்கணம் படைத்து வருகிறார் இவர். By Priyadarshini Bharathiraja 14th Mar 2019 15 claps +0 +0 நான் விவசாயியின் மகள் என்று சொல்லவே பலர் சங்கோஜப்படும் காலகட்டத்தில் அப்பாவின் விவசாய அறிவையும் அனுபவத்தையும் பார்த்து வியந்து அவர் வழியிலேயே விவசாயத்துறையில் புதுமைகள் படைத்து வருகிறார் புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்ரீலஷ்மி. “புதுச்சேரி மாநிலம் கூடப்பாக்கம் எனது சொந்த ஊர். அப்பா வேங்கடபதி 4ம் வகுப்பு மட்டுமே படித்திருந்தாலும் வேளாண் ஆராச்சியில் என்னை வியக்க வைத்த மனிதர். லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து பரிசோதனைக் கூடம் அமைக்கும் அளவு வசதி இல்லாததால் எங்களிடம் உள்ள பணம் மட்டும் பொருட்களை பயன்படுத்தி 1999லேயே சோதனைக் கூடம் அமைத்து புதிய ரக கண்டுபிடிப்புகளை அப்பா செய்து வந்தார். அந்த காலகட்டத்தில் அப்பா பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு சென்று வேளாண் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்று பேசுவதுண்டு. அப்பாவிற்கு ஆங்கிலம் தெரியாது என்பதால் என்னையும் உடன் அழைத்துச் செல்வார். பேராசிரியர்கள் ஆங்கிலத்தில் பேசுவதை எனக்கு புரிந்த வரை அப்பாவிற்கு விளக்கிக் கூறுவேன். இதோடு பேராசிரியர்களின் உரையை பதிவு செய்து வந்து வீட்டிலும் போட்டு கேட்டு அர்த்தம் புரிந்து கொள்வோம். இப்படியாக அப்பாவிற்கு உதவியாக 7 வயதில் தொடங்கிய பயணம் விவசாயத்தின் மீதான ஈர்ப்புக்கு காரணமாகிவிட்டதாகக் கூறுகிறார் ஸ்ரீலஷ்மி. கனகாம்பர பூக்களில் புதிய ரகங்களை விளைவித்து வேங்கடபதி ரெட்டியார் அனைவரையும் அதிசயப்படுத்தி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து சவுக்கை, கரும்பு போன்ற பயிர்களில் குறைவான காலத்தில் அதிகப்படியான விளைச்சலை தரக்கூடிய வகைகளை உருவாக்கியுள்ளார். கல்வியறிவு இல்லாவிட்டாலும் விடாமுயற்சியோடு வேளாண் ஆராய்ச்சியில் புதுமைகள் பல படைத்ததை பெருமைப்படுத்தும் விதமாக மத்திய அரசு இவருக்கு ’பத்மஸ்ரீ’ விருது வழங்கி கவுரவித்துள்ளது. அப்பாவிற்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறது என்பதை உண்மையாக்கும் விதமாக கான்வென்ட்டில் படித்து, எம்பிஏ பட்டம் பெற்றாலும் விவசாயம் தான் எனது மூச்சு என்று அப்பா வேங்கடபதி வழியில் அவரை பின்பற்றி ஸ்ரீலஷ்மியும் படித்து முடித்த பின்னர் வேளாண் ஆராய்ச்சியில் இறங்கிவிட்டார். “எம்பிஏ படித்து முடித்த பின்னர் பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கு தேர்வான போதும் பிறரிடம் அடிமையாக ஏன் வேலை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். விவசாயம் தான் நிறைவான வாழ்கைக்கான அர்த்தம் தரும், இந்தத் துறையில் இருந்தால் மட்டுமே என்னை தனித்துக் காட்ட முடியும் என கருதினேன். அதோடு வேளாண் ஆராய்ச்சியில் எனக்கு வேண்டிய தகவல்களை வழங்க எனக்கு குருவாக அப்பா இருக்கிறார், அவரின் அனுபவமே ஆயிரம் விக்கிபீடியாவிற்கு சமம் என்பதால் விவசாயத்தையே சொந்த தொழிலாக செய்யலாம் என்று முடிவு செய்து அதையே விரும்பி செய்தேன்,” என்கிறார் ஸ்ரீலஷ்மி. 2012ல் மிளகாயில் புதிய ரகமாக நெய் மிளகாய் என்ற ரகத்தை கண்டுபிடித்துள்ளார் இவர். இந்த மிளகாய் சாதாரண மிளகாயை விட காரம் கூடுதல் + சமைக்கும் உணவில் சேர்க்கும் போது நெய் வாசனையை கொடுக்கும் என்பது இதன் ஸ்பெஷல். இதனைத் தொடர்ந்து 2014ல் ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், ஊட்டி, கொடைக்கானல் போன்ற குளிர்பிரதேசங்களில் விளையக்கூடிய ஆப்பிள் பழங்களை வெப்பம் மிகுந்த கடலோரப் பகுதிகளிலும் விளைவிக்க முடியும் என்பதை சாதித்து காட்டினார். குளிர்பிரதேசத்தில் விளையக்கூடிய ஆப்பிளுக்கு நிகராக அதிக சாறு நிறைந்ததாகவும், சுவை மிகுந்ததாகவும் உள்ளது. இவர் உருவாக்கி உள்ள ஆப்பிள் மரத்தில் ஆயிரக்கணக்கான பூக்கள் பூத்து குலுங்கி இருக்கின்றன. ஆப்பிள் வகைகளை கிராஃப்டிங் செய்து இனவிருத்தி செய்யவும் ஸ்ரீலஷ்மி திட்டமிட்டுள்ளார். 2016ல் ஆப்பிள் பழம் போன்று பெரிய அளவில் நாவல்பழ ரகம், 2 அடி உயரம் கொண்ட கத்தரிக்காய், கேரட், பீட்ரூட் போன்ற காய்கறி வகைகளையும் விளைவித்து வியக்க வைத்துள்ளார். பொதுவாக கத்திரிக்காய் செடியில் இருந்து 6 மாதம் மட்டுமே விளைச்சல் எடுக்க முடியும், அதிலும் நோய் தாக்குதலால் மகசூல் பாதிக்கும். இதனை கட்டுப்படுத்தும் விதமாக கிராஃப்டிங் செய்து ஒரே செடியில் கத்திரிக்காய், மிளகாய், தக்காளி (இவை மூன்றும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவை) என மூன்றையும் ஒட்டுகட்டி விளைச்சல் எடுக்க முடியும். இது செடி போன்று இருக்காமல் மரம் போன்று இருப்பதால் 5 ஆண்டுகள் விளைச்சல் கொடுக்கும், மேலும் சுண்டைக்காயை வேரில் போட்டு ஒட்டுகட்டுவதால் மரம் வளர அதிக நீர் தேவையில்லை, வறட்சியையும் சமாளிக்கும் என்று தனது ஆராய்ச்சிகளின் பலன்களை மடை திறந்த வெள்ளமென கொட்டுகிறார் ஸ்ரீலஷ்மி. 2018ம் ஆண்டு முதல் கொய்யா விவசாயத்தில் பல புதிய ரகங்களை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளார் ஸ்ரீலஷ்மி. சந்தையில் தற்போது வெள்ளை கொய்யா மட்டுமே கிடைக்கிறது. இதில் வைட்டமின் சி மட்டுமே இருப்பதால் இதனை சாப்பிட்டால் வயிறு நிறையும். இதுவே சதைப்பகுதி பிங்க் அல்லது சிகப்பு நிறத்தில் இருக்கும் கொய்யாவை சாப்பிட்டால் மார்பக புற்றுநோயை தவிர்க்கலாம், சர்க்கரை நோய் கட்டுப்படும். ஆனால் இந்த வகை கொய்யா சந்தையில் கிடைப்பதில்லை என்பதோடு அதிக விலையும் கூட. வளர்ந்த செடியின் நுனிமொட்டை வெட்டி எடுத்து செடிகளாக வளர்க்கும் குளோனன் முறையில் இந்தச் செடிகளை குறிப்பிட்ட வெப்பநிலையில் வைத்து வளர்த்து, பிறகு வயலில் நடும்போது 2 மாதத்திலேயே செடிகளில் கொய்யா பிஞ்சுகளைக் காண முடிந்தது. நிச்சயமாக ஒரு ஏக்கர் நிலத்தில் இந்த வகை கொய்யா ரகங்களை நட்டு எங்களின் அறிவுறுத்தல்கள்படி பராமரித்து வந்தால் ஓராண்டில் 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்க முடியும் என்று உத்தரவாதம் தருகிறார் ஸ்ரீலஷ்மி. பட உதவி: தினமலர் புதிய ரக கண்டுபிடிப்புகள் அனைத்துமே எங்களது பண்ணையில் 2 ஆண்டுகள் வரை சோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே விவசாயிகளிடத்தில் வழங்கப்படுகிறது. விதைகளாக விவசாயிகளிடம் வழங்கினால் அவற்றில் சம அளவிலான மகசூல் எடுப்பது சிரமம் என்பதால் குளோனன் முறையில் செடிகளை வளர்த்து கொடுக்கிறோம். இந்த குளோனன் முறையில் வளர வைக்கும் செடிகளில் காய்க்கும் காய்கள், பழங்கள் சமமான எடை மற்றும் அளவில் இருக்கும் என்பதால் விவசாயிக்கு நஷ்டத்தை ஏற்படுத்தாது என்கிறார் ஸ்ரீலஷ்மி. அப்பாவின் அனுபவம் அறிந்தவர்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் கிடைத்த விளம்பரம் காரணமாக எங்களின் புதிய ரகங்கள் பற்றி அறிந்தவர்கள் எங்களை அணுகி செடிகளை வாங்கிச் சென்று தங்களது விளைநிலத்தில் பயிரிட்டு வருகின்றனர். செடிகள் உற்பத்தி செய்து விற்பனை செய்வதன் மூலம் தாங்களும் வருமானம் பெறுவதாகக் கூறுகிறார் ஸ்ரீலஷ்மி. அதிக மகசூல் தரும் கொய்யாச்செடிகளை புதிய முறையில் வளர்த்து ஜெர்மனியைச் சேர்ந்த இன்டர்நேஷனல் பீஸ் யூனிவர்சிட்டியின் (International Peace University ) டாக்டர் பட்டத்தைப் பெற்றுள்ளார். வேளாண் ஆராய்ச்சியில் இதுவரை செய்தது எல்லாம் ட்ரெய்லர் தான் இனி தான் மெயின் பிச்சரே என்கிற ரீதியில் உற்சாகம் குறையாமல் பேசும் ஸ்ரீலஷ்மி, கொய்யாவில் 50 புதிய ரகங்களை கண்டுபிடிக்க திட்டமிட்டுள்ளார். 2 அல்லது 3 மாதங்களில் ஆராய்ச்சி முடிந்து புதிய ரக கொய்யா தயாராகிவிடும் என்கிறார் இந்த பெண் விவசாயி. பெண்களுக்கு ஏற்ற துறை வேளாண் ஆராய்ச்சித்துறை ஆனால் ஃபிளைட் கூட எளிதில் ஓட்டிவிடும் இன்றைய பெண்கள் இந்தத் துறையை திரும்பிக் கூட பார்க்காதது வருத்தமாக இருப்பதாகக் கூறுகிறார் ஸ்ரீலஷ்மி. கண்டுபிடிப்பிற்கான ஆர்வமும், சரியான வழிகாட்டுதலும் இருந்தால் இந்தத் துறையைப் போல பெண்களுக்கு எளிமையான துறை வேறு எதுவுமே இல்லை. எல்லா பெண் குழந்தைகளையும் போல அப்பா தான் என்னுடைய முன்மாதிரி என்று சொல்லும் ஸ்ரீலஷ்மி, மறைந்த அப்துல் கலாம் ஐயாவின் விருப்பத்தின்படியே தான் வேளாண் ஆராய்ச்சியாளராகியுள்ளதாகக் கூறுகிறார். நான் 7 வயதாக இருக்கும் போதே அப்துல்கலாம் ஐயா ராஷ்ட்ரபதி பவனுக்கு எங்களை குடும்பத்துடன் அழைத்து அப்பாவை பாராட்டினார். அப்போது அப்பா இந்தத் துறையில் சாதிப்பது போல நானும் சாதிக்க வேண்டும் அப்போது தான் தனித்துவத்துடன் இருக்க முடியும் என்று அறிவுரை கூறினார். அவரின் ஊக்கத்தினாலும் அப்பாவுடன் சிறு வயது முதல் பயணித்து வந்த காரணத்தாலும், தான் முழுக்க முழுக்க கணினி சார்ந்த பட்டப்படிப்பை படித்தாலும் விவசாயத்துறைக்கே முக்கியத்துவம் அளித்ததாக பெருமையோடு சொல்கிறார் ஸ்ரீலஷ்மி. எப்போதுமே ஒரு செயலை செய்வதற்கு முன்னர் லட்சம் முறை யோசிக்கலாம் ஆனால் அதனை செய்யத் தொடங்கிய பின்னர் அது சரியா, தவறா என்று ஆராய்ச்சி செய்யக் கூடாது. இதை செய்து முடிக்க வேண்டும் என்றால் எப்பாடு பட்டாவது அதை சாதித்து காட்ட வேண்டும். இலக்கை அடைவற்காக வாழ்வில் எந்த ரிஸ்க்கையும் எடுக்கலாம். விமர்சனங்களை தூக்கி எறிந்து வெற்றியில் மட்டுமே குறியாக இருந்து அதை நோக்கி கவனம் செலுத்தினால் லட்சியம் நிறைவேறும் என்பதே ஸ்ரீலஷ்மியின் தொடர் சாதனைகளுக்கான உரம்.

நன்றி: https://yourstory.com/

ஹாங்காங்கில் நடந்த ஆசிய பளுதூக்கும் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ஆர்த்தி அருண் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். பல்வேறு நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் கலந்துகொண்ட இந்த தொடரில் இவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

மருத்துவரான இவர் சென்னையில் வசித்து வருகிறார். மேலும் பல்மருத்துவமனை ஒன்றையும் நடத்தி வருகிறார். ஏற்கனவே கடந்த 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் பளுதூக்கும் போட்டியில் தமிழக அளவில் முதலிடம் பிடித்த இவர், கடந்த ஆண்டு கேரளாவில் நடைபெற்ற தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டியில் மாஸ்டர்ஸ் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார்.

இதனையடுத்து ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்றார் ஆர்த்தி அருண். வெற்றிக்கு பிறகு சென்னை திரும்பிய அவருக்கு சென்னை விமான நிலையத்தில் அவரது குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்த்தி அருண், தங்கம் வென்றது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். மேலும் காமன்வெல்த் மற்றும் உலக பளு தூக்கும் போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 5,000 ரூபாய் முதலீட்டில் பெண்கள் பிரத்யேக ஆடை தயாரிப்பில் கால் பதித்த பெண் தற்போது பல கோடிகளுக்கு அதிபதி ஆகியுள்ளார்.

பொள்ளாச்சியில் பிறந்து வளர்ந்து படித்த ஸ்ரீநிதி மஞ்சுளா காதலித்து திருமணம் செய்த பின் கூட்டுக் குடும்பமாக ஒரு சராசரி மனுஷியாகத்தான் வாழ்ந்து வந்தார். இவருக்கு சக்தி ஆதர்ஷ், நிஜிந்திரவாணன் என்ற பெயர் கொண்ட 2 பிள்ளைகள்.
ஆரம்பத்தில் நன்றாக சென்ற வாழ்க்கை நாளடைவில் ஸ்ரீநிதியின் முன்னேற்றத்துக்கு அவரது கணவரே தடை கல்லாக இருந்துள்ளார்.

இதனால் எப்படியாவது வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என முடிவு எடுத்த ஸ்ரீநிதி தையல் பயிற்சியில் சேர்ந்தார். பலர் இவருடைய உழைப்பை பார்த்து கேலி, கிண்டல் செய்தாலும் அதை எல்லாம் பொருட்படுத்தால் ஒவ்வொரு படியாக மேல் எடுத்து வந்தார்.அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தாலும் ஸ்ரீநிதியின் வளர்ச்சிக்கு அவரது மாமியார் ரத்னகுமாரி ஆதரவா இருந்து பெரிதும் உதவி உள்ளார். மேலும் ஸ்ரீநிதி பணி நிமித்தமாக இருக்கும்போது அவரது குழந்தைகளையும் நன்றாக கவனித்துக் கொண்டார் மாமியார். ஆனால் சில நாட்களில் மாமியார் இறந்து விட ஸ்ரீநிதி 2004 -ல் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.ஒரு தையல் மெஷின், ஒரு உதவியாளர், 5,000 ரூபாய் முதலீட்டில் தொழிலை ஆரம்பித்த ஸ்ரீனிதி பெண்களுக்கான பிரத்யேகமான சேலைகளையும் வித்தியாசமான டிசைன்களுடன் கூடிய ஜாக்கெட்டுகளையும் தைத்துக் கொடுக்க ஆரம்பித்தார். தற்போது ஸ்ரீநிதியிடம் 50 பேர் வேலை செய்கிறார்கள்.

மேலும் தமிழகம் முழுவதும் தன்னுடைய நிறுவனமான `ஆதுநிஸ்’ கிளைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளார் ஸ்ரீநிதி. மேலும் கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகளுக்கு ஆடை வடிவமைப்பு தொழிலை கற்றுக் கொடுக்கவும் ஸ்ரீநிதி திட்டமிட்டுள்ளார். தொழில் தொடங்க பெரிய அளவுல பணம், முதலீடுனு இருக்கணுங்கிற அவசியமில்லை.நமக்கு என்ன திறமைன்னு கண்டுபிடிச்சு, அதையே மூலதனமாக்கி உழைத்தால் நிச்சயம் வெற்றி என்கிறார் ஸ்ரீநிதி.

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி மன்றத்திற்கான தேர்தலில் 5 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.இதில் 22 வயதே நிரம்பிய டாக்டர் அஷ்வினி சுகுமார் என்கிறவரும் போட்டியிட்டார். இவரது தந்தை சுகுமார் அதிமு பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி தலைவராக 22 வயது பெண் மருத்துவர் அஷ்வினி மாவட்டத்தில் அதிக வாக்கு வித்தியாசமாக 2547 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தேர்தலில் பதிவான 6982 வாக்குகளில் டாக்டர் அஷ்வினி சுகுமாருக்கு 4187 வாக்குகள் கிடைத்த நிலையில் இவர் தனக்கு அடுத்தபடியாக வாக்குகள் பெற்ற வேட்பாளரான ஷீபாவை விட 2547 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.இதன்மூலம் மாவட்டத்தில் குறைந்த வயதில் வெற்றி பெற்ற வேட்பாளராகவும், மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற வேட்பாளராகவும் டாக்டர் அஷ்வினி சுகுமார் சாதனை படைத்துள்ளார்.தனது வெற்றி குறித்து டாக்டர் அஷ்வினி தெரிவிக்கையில் புதுகும்மிடிப்பூண்டியில் அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்வது, ஊராட்சிக்கு என தனியாக சேவை மையம் ஏற்படுத்தி தருவது, ஊராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை மையங்கள் அனைத்து

பகுதிகளிலும் ஏற்படுத்தி தருவது என தேர்தலில் தான் மக்களுக்கு தந்த 15 வாக்குறுதிகளையும் நிறைவேற்றி தருவேன் என்றார்.மேலும் ஊராட்சி பணியோடு சேர்ந்து தனது ஊராட்சியில் மருத்துவ சேவையையும் செய்ய தயாராக உள்ளதாக புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி தலைவர் டாக்டர் அஷ்வினி தெரிவித்தார். நன்றி : தினமணி

அமெரிக்கா, ரஷ்யா உள்பட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் அமைத்துள்ள சர்வதேச ஆய்வு மையத்தில் 6 வீரர்கள் தங்கியிருந்து தொடர்ந்து ஆராய்ச்சி வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் தோராயமாக ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் மூன்று பேர் பூமிக்கு திரும்புவர், பின்னர் அதற்கு பதிலாக புதிதாக மூவர் விண்வெளிக்கு அனுப்பிவைக்கப்படுவர்.
அந்த வகையில், அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டினா கோச் என்ற விண்வெளி வீராங்கனை கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 14 அன்று சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்றார். தொடர்ந்து 10 மாதங்களுக்கு மேல் அங்கு தங்கியிருந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்த அவர் இன்று பூமி திரும்பியுள்ளார். கஜகஸ்தானில் விண்வெளி ஓடம் மூலம் அவர் தரை இறங்கியுள்ளார். இதன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 328 நாட்கள் தங்கியிருந்து, அதிக நாட்கள் விண்வெளியில் தங்கிய பெண் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

சண்டிகரை சேர்ந்த இளம்பெண் ஒருநாள் போட்டியில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

ஆந்திர மாநிலம் கடப்பாவில் நடந்த19 வயதினருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சண்டிகர் வீராங்கனை காஷ்வி கவுதம் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தார்.

சண்டிகர்-அருணாச்சல பிரதேச அணிகளுக்கு இடையேயான போட்டியில் முதலில் களமிறங்கிய சண்டிகர் அணி 50 ஓவர்களில்4 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்து. பின்னர் களமிறங்கிய அருணாச்சல பிரதேச அணி காஷ்வி கவுதமின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 25 ரன்களுக்குள் சுருண்டது.

அபாரமாக பந்து வீசிய காஷ்வி கவுதம் மொத்தம் உள்ள பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்து சாதனை படைத்தார்.

காஷ்வி கவுதம் மொத்தம் 29 பந்துகளை வீசினார். அவர் வீசிய29 பந்துகளில் ஆறு டாட் பந்துகள், மீதமுள்ள 23 பந்துகளில்12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து அருணாச்சல பிரதேசத்தின்10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

94 வயது சமூகப்போராளி! கிருஷ்ணம்மாள் ஜெகனாதன்.

தமிழகத்தை சேர்ந்த 94 வயது சமூக போராளி கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு பத்ம பூஷன் விருதை அறிவித்திருக்கிறது மத்திய அரசு. யார் இவர்? இவர் தமிழக மக்களுக்கு ஆற்றிய பங்குதான் என்ன?

காந்தி, வினோபா பாவே என பெருந்தலைவர்களோடு பயணித்து, நிலமற்ற மக்களுக்கு நிலம் வாங்கி தந்த கிருஷ்ணம்மாளின் நீண்ட நெடிய விருது பட்டியலில் இப்போது இந்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷனும் சேர்ந்துள்ளது.

பதின்பருவத்தில் தொடங்கிய அவரது போராட்டம், காலங்கள் கடந்தும் அதே வீரியத்தோடு பயணிக்கிறது. குடிசையில் வசிக்கும் எண்ணற்ற குடும்பங்களின் நிலை, அவர்களை முன்னேற்ற என்ன செய்யலாம் என்பது தொடர்பான உரையாடல் இல்லாமல் யாரும் அவரிடம் இருந்து விடைபெற முடியாது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட, கஜா புயலில் வீடுகளை இழந்தவர்களுக்கும், குடிசை வீடுகளில் சிரமப்படும் பெண்களின் நிலைமையை சரிசெய்ய என்ன திட்டங்களை வைத்துள்ளார் என்பது குறித்து பேசினார். 1950களில் சுதந்திர போராட்ட வீரர் வினோபா பாவே தொடங்கிய பூமிதான இயக்கத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை இன்றும் பின்பற்றுபவர்.

“மனிதனுக்கு வீடு அவசியம்”

”தன்மானத்தோடு வாழ்வதற்கு ஒரு மனிதனுக்கு வீடு அவசியம். ஒரு தரமான வீடு இருந்தால், அவனது வாழ்க்கையில் பாதி சிரமங்களை குறைத்துவிடலாம். நேரம், காலம் பார்க்காமல் உழைக்கும் மக்களுக்கு ஒரு காணி நிலம்கூட சொந்தமில்லாமல் இருப்பது சாபக்கேடு,” என வீடில்லா மக்களின் வலியை பற்றிய உரையாடலில் என்னிடம் பேசினார்.

கணவர் ஜெகநாதனோடு அவர் தொடங்கிய எண்ணற்ற சமூக பணிகளில் மிக முக்கியமான ஒன்று லாபிட்டி(Land for the Tillers’ Freedom). உழுபவனுக்கு நிலம் சொந்தம், என்பதை கொள்கையாகக் கொண்ட அமைப்பு லாபிட்டி. நாகப்பட்டினத்தில், கீழ்வெண்மணி கிராமத்தில், நில உரிமையாளர்களால், 44 தாழ்த்தப்பட்ட தொழிலாளர்கள் உயிருடன் கொளுத்தப்பட்ட சம்பவம் அவர் மனதை அதிகம் பாதித்தது. இந்த பாதிப்பின் விளைவாக உருவானதுதான் லாபிட்டி.

நில உரிமையாளர்களிடம் பேசி, குறைந்த விலைக்கு நிலங்களை பெற்று, வங்கிக்கடன் அல்லது நன்கொடை மூலமாக வாங்கி நிலமற்ற உழைப்பாளிக்குக் கொடுக்கும் இயக்கமாகச் செயல்பட்டது லாபிட்டி. நிலத்தை வாங்கும் ஏழை உழைப்பாளி, குறைந்த வட்டியை வங்கியில் செலுத்தி, நிலத்தை சொந்தமாக்கிக்கொள்வார்.

இந்தமுறையில், 1982 முதல் 1986 வரை சுமார் 175 நிலச்சுவான்தார்களிடம் இருந்து 5,000 ஏக்கர் நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி 5,000 குடும்பங்களுக்கு அளித்தவர். 1981ல் நாகப்பட்டினம் மாவட்டத்தில், கிராம வளர்ச்சித் திட்டத்தின்கீழ், 19 கிராமங்களில், 1112 ஏக்கர் நிலத்தை, வங்கிக்கடனில் பெற்று, 1112 குடும்பங்களுக்குப் பிரித்துக்கொடுத்தார்.

வட்டியை செலுத்திய மக்கள் அனைவரும், முதல் தலைமுறையாக தங்களுக்கென ஒரு ஏக்கர் நிலம் சொந்தமாக இருப்பதை நன்றியோடு இன்றும் நினைவுகூறுகிறார்கள்.

நன்றி: பி.பி.சி நியுஸ்!