என்றென்றும் டி.எம்.எஸ்.!

மதுரையில் கச்சேரி ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்தார் தமிழ்த்திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதர். அரங்கின் வெளியே அவரது புகழ்பெற்ற பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அது தனது பாடலின் ஒலிப்பேழை என நினைத்தபடி அரங்கில் நுழைந்தவருக்கு இன்ப அதிர்ச்சி. கூட்டத்தில் அந்தப் பாடலைப் பாடிக்கொண்டிருந்தவன் ஒடிசலான ஒரு சிறுவன். கச்சேரி முடிந்ததும் “அப்படியே என்னைப் போலவே பாடுறியே… சென்னைக்கு வா தம்பி உனக்கு எதிர்காலம் இருக்கு” என வாஞ்சையோடு சிறுவனை வாழ்த்திவிட்டுச் சென்றார் பாகவதர். அவர்தான் டி.எம்.சௌந்தரராஜன்!
நீண்ட முயற்சிகளுக்குப்பின்’கிருஷ்ண விஜயம்’ படத்தில் முதல் வாய்ப்பு. சுந்தரராவ் நட்கர்னி இயக்கத்தில் 1950-ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தில் “ராதே நீ என்னை விட்டுப் போகாதேடி” என்ற பாடல்தான் சினிமாவில் அவர் குரலில் ஒலித்த முதல்பாடல். (ஆனால் பாடல் பதிவுவானது 1946-ஆம் ஆண்டு. 4 ஆண்டு இடைவெளிக்குப்பின்னரே படம் வெளியானது). அன்றுமுதல் அரை நுாற்றாண்டுக்காலம் தமிழர்கள் அவரது குரலை ஒருநாளும் கேட்காமல் உறங்கிப்போயிருக்கமாட்டார்கள்.
‘மலைக்கள்ளன்’ படத்தில் நடிகர் எம்.ஜி.ஆருக்காக முதன்முதலாக பாடிய ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் டி.எம்.எஸ்ஸைக் கொண்டுசேர்த்தது. அதுமுதல் திரையுலகில் டி.எம்.எஸ் ராஜ்ஜியம்தான். திரையுலகில்11ஆயிரம் பாடல்கள், சில நுாறு மேடைகள், மூவாயிரம் பக்திப்பாடல்கள் என தன் சாதனையைப் பதிவுசெய்தார்.
திருச்சி வானொலி நிலையத்திற்கு டி.எம்.சௌந்தரராஜன் பக்திப்பாடல்கள் பாடுவதற்காக ஒருமுறை சென்றிருந்தார்
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் திருவரங்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னிடமிருந்த பாடலைக் காண்பித்து, ‘நன்றாக இருக்கிறதா? எனப் பார்த்து சொல்லுங்கள்’ என்றார். பாடலைப் படித்துப் பார்த்த டி.எம்.எஸ்ஸின் மனம் மலர்கிறது. அவருக்கு மிகவும் பிடித்த முருகப்பெருமானைப் பற்றியப் பாடல். விடுவாரா? அந்த இளைஞருடைய பாடலைத் தானே திருச்சி வானொலி நிலையத்தில் கொஞ்ச நேரம் முன் பாடினார். பாடலும் புகழ்பெற்றது. எழுதிய கவிஞரும் புகழ்பெற்றார் அவர்தான் கவிஞர் வாலி. ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்’என்ற பாடல்தான் அது.
கவிஞர் வாலியை”நீங்கள் இருக்கவேண்டிய இடம் திருச்சி அல்ல; சென்னை! உடனே புறப்பட்டு வாருங்கள். திரைப்படப்பாடல்கள் எழுதலாம்” என்று அழைப்பு விடுத்து விட்டு வந்தார் டி. எம். சௌந்தரராஜன்.கவிஞர் வாலியை இப்படி திரை உலகுக்கு அழைத்து வந்தது டி.எம்.எஸ். அந்த நன்றியை கடைசி வரையிலும் மறவாமல், ‘இப்போ நான் சாப்பிடுற சாப்பாடு டி.எம்.எஸ் போட்டது’ என்று சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நெகிழ்வார் வாலி!
மும்பையில் உள்ள தனது இன்னொரு மகனின் வீட்டில் நோய்வாய்ப்பட்டுக் கிடந்துள்ளார் வாலியின் தாய். “எனது சகோதரனின் வீட்டில் மும்பையில் இருக்கும் அம்மா உங்களைக் காண விருப்பப்படுகிறார்” என டி.எம்.எஸ்ஸிடம் கோரிக்கை வைத்தார் வாலி. உடனே புறப்பட்டு மும்பை சென்று அவரைப் பார்த்து அவருக்கு விருப்பமான இரு பாடல்களைப் பாடி விட்டு வந்தார் டி.எம்.எஸ். அதில்தான், தான் எத்தகையை சிறந்த மனிதாபிமானம் கொண்டவர் என்பதை மிகவும் உணர்வுபூர்வமான விதத்தில் நிரூபித்துள்ளார்.
டி.எம்.எஸ்ஸின் மூத்த மகன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, ‘பாகப்பிரிவினை’ படத்தில் பாட அழைத்துள்ளார்கள். மகனின் நிலைமை கண்டு அழுதுகொண்டிருந்த டி.எம்.எஸ்., பாடச் சென்றுள்ளார். வழக்கமாகப் பாடும்போது இரண்டு முறையாவது ஒத்திகை பார்ப்பார் டி.எம்.எஸ். அன்றைக்கு டியூனையும் பாடல் வரிகளையும் கேட்டுவிட்டு ஒத்திகை இல்லாமலே இசையமைப்பாளரிடம் பாடிக்காண்பித்தார். நேராக டேக்குக்குச் சென்றுவிட்டார். ஒரே டேக்கில் பாடலைத் துல்லியமாகப் பாடிவிட்டார். அன்று அவர் இருந்த நிலைக்குக் கச்சிதமாக இருந்தது அந்தப் பாடலின் வரிகள்…
“ஏன் பிறந்தாய் மகனே… ஏன் பிறந்தாயோ… இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர் பலர் இருக்க இங்கு வந்து ஏன் பிறந்தாய் தங்க மகனே” என்றபாடல் தான் அது.
பாடலைப் பாடிவிட்டு வீட்டுக்கு வந்தால், மகனின் உயிர் பிரிந்திருந்தது.
மகனின் நினைவு வரும் என்பதால் அந்தப் பாடலை மட்டும் எந்த மேடையிலும் பாடக்கூடாது என முடிவெடுத்து வைத்திருந்தார் டி.எம்.எஸ். எத்தனை பெரிய நபர் கேட்டாலும் பாடமாட்டார். வானொலியில் இந்தப் பாடல் ஒலித்தாலும் அணைத்துவிடுவார்.
1959-இல் அந்தப் பாடலைப் பாடிய டி.எம்.எஸ்., தனது நிலைப்பாட்டை ஒருவருடத்தில் மாற்றிக்கொண்டார், வாலியின் தாய்க்காக.
தன்னைப் பார்க்கவேண்டும் என்று விருப்பப்பட்ட வாலியின் தாய், “ஏன் பிறந்தாய் மகனே” பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டதும், துடிதுடித்துப் போய்விட்டார் டி.எம்.எஸ். ஆனாலும் சில நொடிகளில் அந்த முடிவை எடுத்தார். உடல்நலமில்லாமல் இருக்கும் இந்தத் தாயின் விருப்பத்தை உடனே நிறைவேற்றவேண்டும். தனது மனத்தை மாற்றிக்கொண்டு அவர் கேட்டபடியே உருக்கமாகப் பாடினார். “ஏன் பிறந்தாய் மகனே… ஏன் பிறந்தாயோ?”
பாண்டியன் சுந்தரம். நன்றி: படைப்பு முகநூல் குழுமம்