ரிலீஸ்!

மலர்மதி
முன்னுக்கு வந்துக்கொண்டிருக்கும் இளம் கதாநாயகன் இளமதியன் தன் அடுத்த படத்தை எப்படியாவது தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் செய்துவிட வேண்டுமென இரவு பகல் பாராமல் உழைத்தான்.
“படம் குறிப்பிட்ட தேதிக்கு வெளிவராது, சென்சாரில் சிக்கல்!” என்றார் உதவி இயக்குநர்.
இடிந்துபோனான் இளமதியன்.
படம் வெளியிடுவதற்க்கான அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்தன.
நொந்து, நூலாகி வீடு திரும்பினான்.
வீட்டுக்குள் நுழைந்ததும், நுழையாததுமாக “வாங்க, மாப்பிள்ளை… கரெக்ட்டா தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் பண்ணிட்டீங்களே!” என வரவேற்றார் அவன் மாமனார்.
‘சை..! இவர் வேறு நேரம் காலம் தெரியாமல்…’ – மாமனாரை எரிச்சலுடன் பார்த்தான்.
“அழகான ஆண் குழந்தைக்கு நீங்க அப்பா ஆகிட்டீங்க!” என்று அவர் சொல்ல, மகிழ்ச்சியில் வானத்துக்கு எகிறினான் இளமதியன்.
எத்தனையோ படங்களை ரிலீஸ் பண்ணியிருக்கிறான் இளமதியன். ஆனால், வாழ்க்கையிலேயே உண்மையான ரிலீஸ் இதுதான் என்று எண்ணும்போது அவனுடைய மகிழ்ச்சி பன்மடங்கு பெருகியது.
@@@@@@