சீர்காழி ( பெஸ்ட் பள்ளி எதிரில் இருவர் )
” இனி ஹாட் சம்மர் ஆரம்பம் உடம்பை குளிர்ச்சியா வெச்சுக்கனும்டா ……”
” எண்ணெய் தேய்ச்சி குளிச்சி , நுங்கு , தர்பூசணின்னு சாப்பிட்டு கூலா இருக்கனுமா மாப்ள ….?”
” அப்படி இல்லடா , ஓசியில கிடைக்குதுன்னு சரக்கை வாங்கி மூக்கு முட்ட குடிக்க கூடாது , அதிக காரம் உள்ள சைடிஷ் சாப்பிடக் கூடாதுடா …… “
” கையில காசு இல்லை , மாசக் கடைசின்னு சொல்ல இவ்வளவு பெரிய அட்வைஸ் பாடம் தேவை தானா மாப்ள ….?” ( அசடு வழிகிறார் )
– பி.கே. ராதா . சீர்காழி .
(வேலூர் தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டி பெரிய தெருவில் ஒரு வீட்டில் கணவன் மனைவி) “காவ்யா என்ன பண்றே?”
“இதோ வரேங்க!”
“எப்பப் பாரு போன்ல என்ன பண்றே?”
“போன்ல ‘சேட்’ பண்ணிக்கிட்டிருந்தேங்க!”
“இதே வேலைதானா? உன்னைச் சொல்லக் கூடாது! உன்னைப் பெத்தவங்களைத்தான் சொல்லணும்!”
“போதும் நிறுத்துங்க! எங்கப்பாதான் நம்ம ‘கல்யாணம்’ஆகும்போதே சொன்னாருல்ல!” “என்ன சொன்னாரு?”
“என் பொண்ணு ‘குனிஞ்ச தலை நிமிராதவன்னு’ சொன்னாரா? இல்லையா?” “அதுக்கு இப்படி ஓர் ‘அர்த்தம்’ இருக்குன்னு உனக்கும் உன் அப்பனுக்கும்தான்டி தெரியும்!”
முத்து ஆனந்த் வேலூர்
பெரியபாளையம் கூட்டுச்சாலையில் டாஸ்மாக்கில் இரு குடிமகன்கள்
என்ன மாப்ளே… ஒரே சோகமா இருக்கே..?
பாரெல்லாம் மூடிட்டாங்க! “கட்டிங்” கிடைக்க மாட்டேங்குதே மச்சான்!
சொல்றேன்னு கோச்சுக்காதே! இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி “கட்டிங்” கேட்டு பார் வாசல்ல நின்னுகிட்டிருப்பே..குவார்ட்டர் வாங்கி அடி மாப்ளே..!
“அதுக்கெல்லாம் வசதியில்லே மாப்ளே…! ஒரு கட்டிங்” கொடேன்..!
“உன்னையெல்லாம் “கொரானா” கொண்டுபோவ மாட்டேங்குதே… அப்படி துட்டு சேர்த்து என்னடா பண்ணப்போறே?
ஏம் பேசமாட்டே நீ கவர்மெண்ட் ஸ்டாஃபு! நான் கூலித்தொழிலாளி…
அட அட… அப்படியே நம்ம பிரதமர் மாதிரியே பேசறியே … சரி வந்து தொலை உன்னை விசாரிச்ச பாவத்துக்கு ஒரு கட்டிங்க் கொடுத்து அழறேன்..!
இருவரும் வண்டியில் கிளம்புகின்றனர்.
எஸ்.எஸ்.பாபு, பஞ்செட்டி.
பொன்னேரி மளிகைக் கடையில் வியாபாரியும் வாங்கவந்தவரும்…!
என்ன அண்ணாச்சி விலையெல்லாம் தூக்கலா இருக்கு…!
நான் என்ன பண்ணட்டும் எல்லா கம்பெனியும் விலையை ஏத்திட்டான்லே..!
கம்பெனிக்காரன் ஏத்தறானோ இல்லையோ மாசாமாசம் நீ ஏத்திப்புடறே இல்லாட்டி பெட்டிக்கடை வைச்சிருந்த நீ மளிகை கடை கட்ட முடியுமா?
உழைச்சு சம்பாதிக்கற காசுவே…? உம்மை மாதிரி தாலுக்கா ஆபீஸ்ல ஜோலி முடிக்கறேன்னு சொல்லி வாங்கற காசு இல்லே…!
என்ன அண்ணாச்சி! பேச்சு ஒருமாதிரி போவுது…!
ஒருமாதிரியும் இல்லே இருமாதிரியும் இல்லே உள்ளதை சொன்னேன்.
ஆமா இவருதான் “உள்ளப் புகுந்து “ பார்த்தாராக்கும்!
“அத வேற புகுந்து பாக்கணுமா?” எல்லோரும் பேசிக்கிட்டு திரியறாங்க வே,, பார்த்து நடந்து பொழைச்சிக்கப்பாரும் அப்புறம் பேப்பர்ல வந்து நாறிடப் போவுது…
உம்மகிட்டே போய் வாய் கொடுத்தேன் பாரு…! சரி சரி! சாமான்களை எடுத்து வை…!
சின்ன சாமி, நத்தம்.
(வேலூர் டோல்கேட் உழவர் சந்தையில் தோழிகள் இரண்டு பேர்)
“நீ உன் வீட்டுக்காரரை அடிக்கடி ‘பழம், பழம்’ன்னு சொல்றியே! உனக்கு அவர் மேல அவுவளவு அன்பா?!”
“அட அவ ஒருத்தி, அவரு ஒரு ‘பழம்’ விடாம எல்லாப் பழங்களையும் சாப்பிடுவாரு! அதனால அவருக்கு அப்படி ஒரு ‘பேரை’ வச்சேன்!”
“நா கூட ஒரு நிமிஷம் உன் புருஷன் புத்திசாலி,அறிவாளின்னு நினைச்சுத்தான் நீ ‘பழம்’ன்னு கூப்பிடறியோன்னு ‘தப்பா’ நினைச்சுட்டேன்!”
(அர்த்தம் புரிந்த தோழி செம கடுப்பாகிறார்!)
முத்து ஆனந்த் வேலூர்
பஞ்செட்டி பேருந்து நிறுத்தத்தில் இரு நண்பர்கள்!
டே மாப்ளே எப்படா ஊர்ல இருந்து வந்தே? கையை கொடு…
கை நீட்டுகிறார்.
இதைப்பார்த்துக்கொண்டிருந்த இன்னொருவர் டேய் டேய் கையை கொடுத்திட்டியா…
ஏண்டா என்ன ஆச்சு? இப்படி பதற்றரே?
முட்டாப் பசங்களா! உலகமெல்லாம் “கொரானா”ன்னு கை குலுக்க வேண்டாம்னு சொல்லிகிட்டிருக்காங்க நீங்க என்னடான்னா….!
ஐயையோ! மறந்துருச்சு மாப்ளே…! இப்ப என்ன பண்றது?
முதல்லே கையை சோப்பு போட்டு கழுவு….!
இப்போது கை கொடுத்தவர் இப்படி நடுத்தெருவுலே கை கழுவி விட்டுட்டியே மாப்ளே…! என
இருவரும் சிரித்தபடி செல்கின்றனர்.
எஸ்.எஸ்.பாபு. பஞ்செட்டி.