காமெடிக்கு மறு பெயர்…

ஹாலிவுட்டைக் கலக்கிய காமெடியன்களின் வரிசையில் தலையாய நபரை அறிவோம். த ஒன் அன் ஒன்லி சார்லி சாப்ளின். அடுத்து நின்றவர்கள் பாப் ஹோப், லாரல் ஹார்டி, நார்மன் விஸ்டம், ஜெர்ரி லூயிஸ்… கடைசிப் பெயரை எங்கோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கிறதா? நாகேஷ் தன் குரு இவர் என்பாரே அடிக்கடி, அவரேதான்! ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் நாகேஷ் அறிமுகக் காட்சி, அவரது ஓஹோ புரடக்ஷன்ஸ் மேஜையின் மீது இவர் படம் இருக்கும் ஷாட்டில்தான் ஆரம்பமாகும். இவரைத்தான் சார்லி சாப்ளினின் வாரிசு என்பார்கள். ஏன், அவரையே மிஞ்சிவிட்டார் என்பவர்களும் உண்டு. அந்தத் ‘தங்க விலை பவுனுக்கு 200 ரூபாய்’ காலத்திலேயே 1000 கோடிக்கு மேல் வசூலைக் குவித்தவர்.
காமெடி என்றாலேயே வசனம் என்றாகிவிட்ட இந்தக்கால ரசிகர்களுக்கு இவர் எந்த ஒரு வார்த்தையும் இன்றி நாலைந்து நிமிடத்துக்கு தனி ஒருவராகவே முழு ஆக்ஷனையும் தன் மேல் போட்டுக் கொண்டு, ஃப்ரேமுக்கு ஃப்ரேம் அரங்கத்தைக் குலுங்க வைப்பது அட, இப்படிக்கூட ஒரு பொற்காலம் இருந்ததா என்று அதிசயிக்க வைக்கும். இல்லாத டைப் ரைட்டரில் லெட்டர் அடிப்பது போல அவர் அபிநயிப்பதும் (‘Who’s minding the Store?’) அடுக்களைத் திண்டில் அமர்ந்து கொண்டு ஒரு முழு ஆர்கெஸ்ட்ராவை ஃப்ளூட், ட்ரம்ஸ், கிளாரினெட் என்று வாசித்து முடிப்பதும்(‘Cinderfella’) எக்ஸிகியூடிவ் மீட்டிங்கில் எம்.டி கத்துவது போல ஒலிக்கும் பின்னணி இசைக்கு நடிப்பதும் (‘The Errand Boy’) எவராலும், ஆம், எவராலும் மிமிக்ரி பண்ண முடியாத எவர் க்ரீன் காட்சிகள்! (links below)
அப்பா டேனி லூயிஸும் மேடைக் கலைஞர். அம்மாவோ ரேடியோவில் பியானோ வாசிப்பவர். ஆக, வயது ஐந்திலேயே மேடை ஏறிவிட்டார். பின்னால் ஒலிக்கும் கிராமபோனுக்கு நடிப்பார். விழுந்த கைதட்டல்களைப் பார்த்து சான்ஸ்கள் வந்தன. பின்னாள் பிரபல நடிகர் டீன் மார்டினும் இவரும் கூட்டணி அமைத்து நட் கிளப்களில் நிகழ்ச்சிகள்… பிராட்வே மேடைகளில் நடித்தபோது ஒரே நாளில் ஒன்பது ஷோக்கள்! தினம் ஒரு லட்சம் போட்டோக்களை ரசிகர்களுக்கு வீசினர். ‘படிப்படியாக’ என்றால் இவங்கதான். மேடையைத் தொடர்ந்து ரேடியோ நிகழ்ச்சிகள். அப்புறம் டி.வி. பின் ஹாலிவுட் படங்கள். 1949 இல் ‘My Friend Irma’ இல் தொடங்கி பல வெற்றிப் படங்கள்! படங்களில் டீன் பங்கு குறையவே பிரிய நேர்ந்தது. தனியே இன்னும் பிரபலம் அடைந்தார்கள். என்றாலும் ஜெர்ரியுடையது ஜெட் வேகம். இவரை வெச்சு காமெடி பண்ணின தயாரிப்பாளர்களுக்கு காசு கொட்டலாச்சு! பத்தே வருடத்தில் பாரமவுண்டில் 18 மில். டாலரும் லாபத்தில் 60%-ம் என்று அந்த நாளில் ஹாலிவுட்டின் உச்ச சம்பளம் இவருடையதே.
பாடலிலும் ‘அடி’யெடுத்து வைத்தார். ஒரு முறை நடிகை ஜூடி கார்லண்ட் வராததால் அவர் பாடலை இவர் பாட ‘Rock-a-bye’ என்ற அந்த ரிகார்ட் 40 லட்சம் விற்று ப்ரேக் செய்தது ரிகார்டை.
அறிமுகப்படுத்திய ஹால் வாலிஸின் காண்ட்ராக்ட் முடியும் வரை காத்திருந்தார். சொந்தக் கடையை ஆரம்பித்தார். முதல் படம் ‘Cinderfella’. புகழின் உச்சிக்குத் தள்ளிய படம். கிளைமாக்ஸில் அந்த 63 படிகளில் ஸ்டைலாக இறங்கிவந்து ஆடுவார் பாருங்க ஒரு பால் ரூம் டான்ஸ், இப்ப பார்த்தாலும் கிறங்க அடிக்கும். கடைசி ஷாட்டை, இவர் ஆடி முடித்ததும் மற்ற அனேகரும் சேர்ந்து கொண்டு ஆடுவதாக ஒரே ஷாட்டாக அமைத்திருப்பார்கள், அது போனஸ்.
அடுத்த வெற்றி ‘The Nutty Professor.’ பிற்பாடு எட்டி மர்ஃபி நடித்து ரீமேக்குக்கே பார்ட் 2 வந்த படம். தன் தந்தையைப் போலவே கோழையாகிவிடுவோமோ என்று மனம் குறுகும் புரபசர் டாக்டர் கெல்ப் (ஜெர்ரி) ஒரு மருந்தைக் கண்டு பிடிக்கிறார். டெஸ்ட் செய்ய, தானே அதை டேஸ்ட் செய்கிறார். எதையாவது கண்டுபிடித்து யாராவது அதைக் குடித்து மனிதன் பாதி மிருகம் பாதியாக மாறும் படங்கள் வந்த காலம் அது. மருந்தை அருந்திய ஜெர்ரி வலியில் துடிக்கிறார். முகம் அஷ்ட கோணலாகிறது. தசைகள் இழுத்துக் கொள்ள லேபரட்டரி மூலையில் ஒடுங்குகிறார். அடுத்த காட்சி காலேஜ் காம்பஸ். ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் எல்லார் முகத்திலும் அதிர்ச்சி. அபூர்வ வஸ்துவைப் பார்த்த மாதிரி புருவம் உயர..நடந்து வருகிறார், சூபர் ஆணழகராகிவிட்ட ஜெர்ரி. அப்புறம் என்ன, இவர் விரும்பி ஏங்கிய பெண்ணே தேடி வருகிறாள். திடீரென மருந்தின் வலிமை குறைய லேபுக்கு ஓடுவார் சரி செய்ய. கல்லூரி விழாவின் நடுவே சுய ரூபம் வெளிப்பட க்ளைமாக்ஸ்! அமெரிக்க நேஷனள் லைப்ரரியில் சேர்த்து வைக்கப்பட்டுள்ள முக்கியமான படங்களில் இது ஒன்று. மத்தவங்க நேசத்துக்கு ஆசைப்படற நாம முதல்ல நம்மை நேசிக்கக் கத்துக்கணும் என்ற பாடத்துடன் முடியும் படம் இது. சிவாஜி 9, கமல் 10 என்றால் இவர் 7. ‘The Family Jewels’ என்ற படத்தில் அந்தக் கோடீஸ்வர சிறுமி தன் ஆறு மாமன்களில் ஒருத்தரைத் தன் கார்டியனாக தேர்ந்தெடுக்க வேண்டும். ஆறும் படா கில்லாடிகள்! ஒவ்வொருவரிடமும் அவளை அழைத்துச் செல்லும் டிரைவராகவும் கப்பல் கேப்டன், பைலட், ஃபோட்டோகிராஃபர், சர்க்கஸ் கோமாளி என அந்த ஆறு மாமன்களுமாக ஜெர்ரி காமெடித் துகள் கிளப்பினார். புகழ் பரப்பினார்.
The Errand Boy’ என்ற படம் ட்ரீம் ஃபேக்டரியான ஹாலிவுட்டைச் சுற்றிப் பின்னப்பட்டது. முதலிலேயே சினிமா மாயை பற்றி ஒரு முன்னுரைக் காட்சி வரும். வேர்வை கொட்ட, புஜங்கள் முறுக்கேற ஹீரோ ஒரு மலையுச்சியிலிருந்து அந்தப் பாறையை கீழே தள்ள, பலத்த சப்தத்தோடு அது கீழே வீழும். அடுத்த ஷாட்டில் திரைக்குப் பின்னால் நடப்பதைக் காண்கிறோம். ‘ஒன் மோர் டேக்!’ என்றபடி கீழே நிற்கும் டைரக்டர், ‘பிடியுங்க!’ என்று மேலே எறிகிறார் அந்தப் ‘பாறை’யை!
படத்தின் கதை? கனவுகளுடன் ஹாலிவுட் வந்து சேரும் ஜெர்ரிக்கு ஸ்டூடியோவில் எடுபிடி வேலைதான் கிடைக்கிறது. செட் பிராப்பர்டீஸ் அறையில் இருக்கும் ஒரு பொம்மையிடம், “எங்க ஊரில சின்னப் பையனா இருந்தப்ப ஹாலிவுட் எவ்வளவோ தூரத்தில இருக்குதேன்னு நினைச்சேன், இப்ப இங்க இருக்கிறப்பவும் அதே தூரத்திலதான் அது இருக்கு!” என்று பேசும் காட்சியில் உருக வைக்கிறார். “உனக்குப் பிடிச்சதை நீ நம்பறே!” என்றொரு பதில் வரும் அந்தப் பொம்மையிடமிருந்து. உண்மைதானே? நாமெல்லோரும் அப்படித்தானே இருக்கிறோம்? இப்படி இவர் படங்களில் மெஸேஜுக்கு பஞ்சமில்லை.
பெஸ்ட் காமெடியனான ஜெர்ரி லூயிஸ் பெஸ்ட் டைரக்டர் அவார்டை எட்டுமுறை வாங்கிவிட்டார் ஐரோப்பாவில். இவர் இயக்கும் படம் அதை யார் எழுதினாலும் இவர் படமாகவே இருக்கும், பாரதிராஜாவை மாதிரி. சினிமாவை ஒரு விஷுவல் மீடியம் என்று இவர் அளவுக்கு யாராவது புரிந்து வைத்திருக்கிறார்களா என்றால் சந்தேகம்தான். ‘The Total Filmmaker’ என்று ஒரு விமரிசகர் சொல்கிறார் இவரை.
மறுபக்கம் இவர் ஒரு கலைவாணர் எனலாம். ‘டெலிதான்’ என்பார்கள் அதை. டெலிவிஷனில் மாரத்தான் போல தொடர்ந்து நடக்கும் நிகழ்ச்சி. 48 வருடமாக குறிப்பிட்ட தினத்தில் நடத்திவந்தார். தசைகள் செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் Muscular Dystropy Association -க்கு இரண்டு பில்லியன் டாலர் வரை சேர்த்திருக்கிறார். 1977 இல் இதற்காக நோபல் பரிசுக்கு இவரைப் பரிந்துரைத்தார் ஓர் அமெரிக்க காங்கிரஸ் மெம்பர்.
2008 -இல் மனித நேயத்துக்கான ஆஸ்கார் பரிசைப் பலத்த கரகோஷத்துக்கிடையே பெற்றார். மனம் உருகினார்: “யாருக்காச்சும் உதவறதுங்கிறது, ஏதாச்சும் செஞ்சு அதுக்கு அப்ளாஸ் வாங்கிக்கிறதுன்னு இதுவரை நான் நினைச்சதில்லே. இந்த அவார்ட் என் நெஞ்சைத் தொட்டுடுச்சு!”
நகைச்சுவையில் நலமாகும் டூர் நிகழ்ச்சிகளை ஐரோப்பா முழுக்க நடத்தியிருக்கிற இவரால் மறக்க முடியாதது ஜனாதிபதி கென்னடி, அவரின் நண்பரும்கூட, அளித்த பாராட்டுதான். “உலகத்தில் மூன்றே விஷயங்கள்தாம் நிஜம். கடவுள், மனிதனின் முட்டாள்தனம், சிரிப்பு. முதலிரண்டுக்கும் நம்மால் எதுவும் செய்ய முடியாது. எனவே, மூன்றாவதை நம்மால் எத்தனை முடியுமோ அத்தனை செய்யவேண்டும்.”
கான்சர், இருமுறை மாரடைப்பு, ஓபன் ஹார்ட் சர்ஜரி, ஓயாத முதுகுவலி என்று ஒரு புறம் சிரமித்தாலும் இடைவிடாமல் உதவிப் பணி நடத்தி பிரமிக்க வைத்தார்.
ரொம்ப ஆச்சரியப்படுகிற விஷயம் இன்றைய ஜாம்பவான்களான ஸ்டீவன் ஸ்பீல்பெர்கும் ஜார்ஜ் லூகாஸும் இவரின் மாணவர்கள் என்பது. கலிஃபோர்னியா யூனிவர்சிடியில் சினிமாவைச் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியராக இருந்திருக்கிறார். அந்த லெக்சர்களின் தொகுப்பு புத்தகமாக வந்துவிட்டது.
“அனேக குழந்தைங்க எதைச் செய்து திட்டு வாங்குமோ அதைச் செய்து துட்டு வாங்கறேன் நான்!” என்பார் ஜெர்ரி. இவர் படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது எல்லார் மனதிலும் எழும் உணர்வு அனேகமாக ஒன்றே. ‘சந்தோஷக் களிமண்ணில் வனையப் பட்டிருக்கும் இந்த உலகில் நாம் இத்தனை சீரியஸாக இருக்க வேண்டுமா? யோசித்துப் பார்த்தால் எல்லாமே ஒரு தமாஷ்தானே? வெறுப்புப் போர்வையை விட்டு வாரிச் சுருட்டிக் கொண்டு எழுவோம். வாய்விட்டுச் சிரிப்போம்!’
‘ஒரு முறையே பயணிக்கிறேன் நான் இவ்வுலகில்.ஏதேனும் நன்மை என்னால் இயலுமானால், எவரிடமேனும் அன்பு நான் செலுத்த முடியுமானால் செய்யட்டும் நான் அதை உடனே. ஒதுங்கவோ ஒத்திப்போடவோ வேண்டாம். ஏனெனில் ஏகிடேன் இவ்வழியே நான் இன்னொரு முறை!’ இந்த வரியை தன் வாழ்க்கை வரியாக்கிக் கொண்டவர்.
சிரிப்புக்கும் சோகத்துக்கும் இடையே இடைவெளி இல்லை என்பது இவர் கட்சி. சிந்திக்க வேண்டிய விஷயம்.
நன்றி: கே.பி,ஜனார்த்தனன் முகநூல் பதிவு.