குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?

*அதீதச் செல்லங்கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள் தம்முடைய உலகத்திற்குள் யாரையும் அனுமதிப்பதில்லை. யாருக்கும் முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஒரு கட்டத்தில் அவை பெற்றோரையும் புறக்கணிக்கின்றன.*

*அன்பு செலுத்துதல் என்பது வேறு, செல்லங்கொடுத்தல் என்பது வேறு என்பதே நமக்குத் தெரியவில்லை*.

*அரவணைப்பு, கட்டியணைத்தல், தொடர்பில் இருத்தல், தன் வேலையைத் தானே செய்ய ஊக்கப்படுத்துதல், உணர்வுகளை மதித்தல் இவையெல்லாம் அன்பு செலுத்துதலில் அடக்கம். இவை கட்டாயம் குழந்தைக்குத் தரப்பட வேண்டும்.*

*செல்லங்கொடுத்தல் என்பது குழந்தையால் செய்ய முடிகிற விஷயங்களையும் பெற்றோரே செய்வது,*

சதா புகழ்வது, கைகாட்டுகிற எல்லாவற்றையும் வாங்கித் தருவது, அடம்பிடித்தலை ஏற்பது, ஒழுக்கமீறலை ரசிப்பது. பெரும்பாலான பெற்றோர் முன்னதையும் பின்னதையும் குழப்பிக்கொள்கின்றனர்.

குழந்தைக்கு உட்காரத் தெரிந்ததும் உணவை ஊட்டிவிடுவதைப் பெற்றோர் நிறுத்திவிட வேண்டும்.

தட்டில் இருக்கும் சோற்றைச் சிந்திச் சிதறித் தனக்குத் தேவையானதைக் குழந்தையே அள்ளி உண்ணும்.

ஆனால், பாசக்காரப் பெற்றோர் பள்ளி செல்லும் குழந்தை களுக்கும் ஊட்டியே விடுகின்றனர்.

நடக்கத் தெரியும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு திரியக் கூடாது.

குறிப்பாக அப்பாக்கள், வளர்ந்த பிள்ளைகளையும் கைகளில் தூக்கி வைத்திருப்பதை வீதிகளில், கடைகளில் பார்க்க முடியும்.

இதன் பெயர் அன்பன்று. குழந்தை தன் வேலையைத் தானே செய்வதைப் பெற்றோர் தடுக்கின்றனர்.

தத்தித் தத்தி நடக்கும்போதே பெருக்குமாற்றை எடுத்து வீட்டைப் பெருக்க எத்தனிப்பதைப் பார்க்க முடியும்.

பெண் குழந்தை என்றால் இதெல்லாம் இப்பச் செய்ய வேண்டாம் என்கிறோம்.

ஆண் பிள்ளை என்றால் இதெல்லாம் நீ எப்பவுமே செய்யக் கூடாது என்று தடுக்கிறோம்.

*ஆனால் குழந்தைகள் பால் பேதமில்லாமல் எல்லா வேலைகளையும் செய்ய விருப்பம் காட்டுகின்றன*.

*ஆண் பெண் வித்தியாசமில்லாமல், இன்றைய குழந்தைகளுக்கு எந்த வேலையும் செய்யத் தெரியாது என்பதுதான் உண்மை.*

*துவைப்பது, வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்வது, சமைப்பது போன்ற அடிப்படை வேலைகளுக்கு நாம் அவர்களைப் பழக்கவில்லை*.

*வீட்டு வேலைகளைக் கற்பது பெண் குழந்தைகளின் சுமையாக இருந்த அவலம் தற்போது மாறிவருகிறது*.

இன்றைய இளைஞர்கள் பைப் கசிந்தால் சரிசெய்வது, ட்யூப் லைட்டை மாற்றுவது போன்ற சாதாரணப் பணிகளுக்குக்கூட app-ஐத் திறந்து ஆளைத் தேடுகின்றனர்.

*அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும் பிளம்பிங், எலக்ட்ரிக்கல் வேலைகளைக்கூட அவர்களுக்கு நாம் கற்பிக்கவில்லை.*

*வீட்டில் செய்வதற்கு எந்த வேலையும் இல்லாததால் அவர்கள் பிற்பகல் வரை உறங்குகின்றனர்.*

*நள்ளிரவு கடந்தும் செல்ஃபோனில் மூழ்கிக் கிடக்கின்றனர்.*

இதனால், சோம்பேறித் தலைமுறையாக இன்றைய இளைஞர்கள் தலையெடுத்ததன் காரணம் நமது செல்லங்கொடுத்தல்.

வீட்டில் என்ன வேலை என்றாலும் அம்மாவோ அப்பாவோதான் செய்ய வேண்டும்.

ஒரு நாள் மிக்ஸி போடும்போது ஹை வோல்டேஜ் ஆகி ஃப்யூஸ் போய்விட்டது.

டம்மென்ற சத்தத்தைக் கேட்டுக்கூட அவன் அறையை விட்டு வெளியே வரவில்லை.

ஒருமணி நேரம் கழித்து, உள்ளே இருந்து அவனது குரல் மட்டும் வந்தது, `அம்மா, ஏ.சி ஓடல’. நாள் முழுவதும் அந்த ஆன்ட்டிதான் மாறி மாறி போன் செய்து ஆள்களைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அந்த இளைஞன் படுத்தே கிடந்தான்.

அண்மையில் விசாரித்தபோது தெரிந்தது, அவனுக்கு மணமான சில மாதங்களிலேயே விவாகரத்தாகி அம்மா வீட்டில் இருக்கிறானாம்.

*செல்லங்கொடுத்து வளர்க்கப்படுகிறவர்களோடு வாழ்வது மிகவும் கடினம்.*

*சோம்பேறித்தனமும், தான் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் என்ற ஆதிக்க உணர்வும் அவர்களிடம் மேலோங்கி இருக்கும்.*

*இந்தியக் குடும்பங்களில் ஆண் பிள்ளைகள் செல்லத்தால் சீரழிக்கப்பட்டனர்*.

*இப்போது பெண் குழந்தைகளுக்கும் அது பரவிவருகிறது*.

நான் முன்பு ஒரு பத்திரிகையில் பணிபுரிந்த போது, கல்லூரி படிக்கும் மகள்களைக் கொண்ட தந்தை ஒருவர் சக ஊழியராக இருந்தார்.

மூத்த மகளை இன்ஜினீயரிங் சேர்ப்பதற்குப்பட்ட கடனை அவர் அடைத்து முடிக்கும் போது திருமணம் செய்துவைக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

மகள் பேரில் 30 பவுன் நகை சேர்த்து வைத்திருந்தார்.

ஆனால், அந்தப் பெண், தனக்கு நூறு பவுன் நகை போட வேண்டுமென்று தந்தையிடம் டிமாண்ட் செய்தாள்.

அதற்காக ஊரில் உள்ள சொத்தை விற்கச் சொல்லி அடம்பிடித்தாள்.

`அதை உன் தங்கைக்காக வைத்திருக்கிறேன்’ என அவர் சொன்ன போது, `அவளுக்கு இந்த வீடு இருக்குல்ல’ என்றாளாம்.

`எங்கள பத்தி அவ கொஞ்சம்கூட யோசிக்க மாட்டேங்கிறா’ என்று புலம்பினார்.

கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்துப் பழக்கப்படுத்தினால், ஒரு கட்டத்தில் பிள்ளைகள் உயிரையும் கேட்பார்கள். கொடுப்பீர்களா?

செல்லங்கொடுக்கும் பெற்றோர் நல்லொழுக்கத்தைவிடக் குழந்தைகளின் திறமைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

*ஒவ்வொரு குழந்தையும் தனிமனிதராக வளர்ந்தாக வேண்டும்.*

*எவ்வளவுதான் பொத்திப் பாதுகாத்து வளர்த்தாலும் ஒரு புள்ளியில் தன் வாழ்க்கையை, தன் தோல்விகளை, தன் பிரச்னைகளைத் தானே சமாளித்தாக வேண்டும்.*

*ஆனால், நமது அதீதப் பாதுகாப்பு வளர்ப்பு முறையால் அவை திக்கற்று நிற்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.*

*செல்லமாக வளரும் பிள்ளைகளால் வாழ்வின் உண்மைகளை ஏற்க முடியாது.*

குழந்தைகளைக் கைக்குள்ளிருந்து விடுதலை செய்யுங்கள்.

அவர்கள் சிரமப்படட்டும்.

எப்போதும் ஏ.சி போட்டு வைத்திருந்தால் வெயிலுக்கும் குளிருக்கும் எப்படி அவை பழகும்!

வெளியே கூட்டி வாருங்கள்.

வெறுங்காலில் நடக்கச் சொல்லுங்கள்.

பொதுப் போக்குவரத்தில் பயணிக்கட்டும்.

*துணிகளை மடிப்பது, இஸ்திரி போடுவது (வளர்ந்த பிள்ளைகளை) புத்தகங்களை அடுக்குவது, ஷெல்ஃபை க்ளீன் செய்வது போன்ற தம் வேலைகளைத் தாமே செய்யட்டும்.*

பொருள்களைக் கேட்டால் `நோ’ சொல்லுங்கள். அன்பைக் கேட்டால் அள்ளித் தாருங்கள்.

*குழந்தைகள்மீது பெற்றோர் எடுத்துக்கொள்ளும் உரிமைதான் செல்லங்கொடுத்தல்.*

*பிரதிபலனாக, தான் என்ன சொன்னாலும் கேட்டு நடக்க வேண்டுமென மூளையை கண்டிஷன் செய்யும் சுயநலனே அதில் நிறைந்திருக்கிறது*.

தானே உலகம் என்று வாழ்ந்தால் போதும் என நினைக்கின்றனர்.

*ஆனால், பெற்றோரின் காலத்திற்குப் பின்னரும் இந்தப் பூமியில் குழந்தை ஒரு தனிமனிதராக, சமூக விலங்காக வாழ்ந்தாக வேண்டும்.*

*கைகளிலிருந்து வெளியேறிக் கல்வி கற்கவும், பொருளீட்டவும், தனக்கெனத் துணையை அமைத்துக்கொள்ளவும், போகும் இடங்களில் நல்ல மனிதராக அறியப்படவும் வேண்டும்.*

*அந்தச் சமூக வாழ்க்கைக்கு வெகுமுன்னரே தயார்படுத்துங்கள்.*

*நிறைய மனிதர்களுடன் பழகி, கலந்து, வாழும் வாழ்க்கைதான் ஆரோக்கியமானது. அப்படியான வாழ்க்கைக்கு நல்லொழுக்கமே ஆதாரம். அதைக் கற்பியுங்கள்.*

*உங்களின் கண்டிப்புகளும் இல்லைகளும் அதைத் தன் காலில் நிற்கப் பழக்கட்டும்!*

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: