என் கடன் பணி செய்து கிடப்பதே
ஜெயச்சந்துரு
நெய்வேலி
நம்பரை சரி பார்த்து டயல் செய்தாள் மதுமிதா..
“ஹலோ..வணக்கம் சார்.. நான் கலெக்டர் ஆபீஸ்ல இருந்து பேசுறேன்.. மிஸ்டர் கனகவேல் அய்யனார்தானே..”
“வணக்கம் மேடம்.. நாந்தான் கனகவேல்.. சொல்லுங்க…”
“சார் வீட்ல தான இருக்கீங்க? உங்களுக்கு ஃபீவர், காஃப், கோல்ட் அந்த மாதிரி சிம்ப்டஸ் ஏதாவது இருக்கா?”
“வீட்லதான் மேடம் இருக்கேன்.. எந்த பிரச்சினையும் இல்ல..நல்லா இருக்கேன்..”
“வீட்ல வேற யாருக்காவது சிம்ப்ட்டம்ஸ் ஏதாவது இருக்கா?”
“யாருக்கும் எந்த சிம்ப்ட்டமும் இல்ல மேடம்..”
“உங்க வீட்டு சுவத்துல ஸ்டிக்கர் ஒட்டி இருக்காங்களா?”
“ஒட்டி இருக்காங்க மேடம்”
“வீட்டுக்கு ஹெல்த் டிபார்ட்மெண்ட்ல இருந்து வந்து பார்க்கறாங்களா?”
“பாக்கறாங்க மேடம்..”
“ஓகே சார்.. உங்களுக்கு வேற ஏதாவது சந்தேகம் இருந்தா ஹெல்ப்லைன் நம்பர் காண்டாக்ட் பண்ணுங்க… தேங்க்யூ..”
“தேங்க்யூ..”
மதுமிதா பார்க்கும் வேலைக்கும் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவசரகால நடவடிக்கையாக அரசு தற்காலிகமாக அவளுக்கு இந்த பணியை ஒதுக்கியிருக்கிறது. நோய்த்தொற்று பாதித்த நாடுகளில் இருந்து நம் நாட்டுக்கு வந்த பயணிகளை, அவர்கள் மூலமாக நம் நாட்டில் தொற்று ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்காக அவர்களை வீட்டிலேயே இருக்கும்படி பனித்திருக்கிறது.. அவர்களை போன் மூலமாக டிராக் செய்யும் வேலை.. வேண்டாவெறுப்பாக செய்துகொண்டிருந்தாள்..
‘எல்லாம் என் தலையெழுத்து..’ அலுத்தப்படி அடுத்து எண்ணை தொடர்பு கொண்டாள்.. அதே கேள்விகள் அதே பதில்கள்..
அடுத்த எண்
அடுத்த எண்
அடுத்த எண்
போரடித்தது.. டீ குடித்தால் தேவலாம் போல இருந்தது.. போய் வந்தாள்..
அடுத்த எண்
ரிங் முடியும் தருவாயில் எடுக்கப்பட்டது..
“ஹலோ..வணக்கம் சார்.. நான் கலெக்டர் ஆபீஸ்ல இருந்து பேசுறேன்.. மிஸ்டர் பாலகுரு கந்தசாமிதானே?”
“ஹலோ.. க்கும்.. க்கும்.. ஹலோ.. யாரு?”
வண்டியில் போகும் சத்தம் கேட்டது..
“கலெக்டர் ஆஃபீஸில இருந்து..”
லொக்.. சொல்லுங்க.. லொக் லொக் ..
“சார் நீங்க இப்ப வீட்டுல தான் இருக்கணும்.. ஆனா வெளில எங்கயோ போற மாதிரி தெரியுது??”
“க்கும்.. ம்க்கும்.. ஆமாங்க.. லொக் லொக்.. மாமா செத்துட்டார்.. அங்கதான் போய்கிட்டு இருக்கேன்..”
“சார் உங்களுக்கு காஃப் இருக்கு.. இந்த நேரத்துல எங்கேயும் வெளியே போக கூடாது.. தயவு செஞ்சு வீட்டுக்கு போங்க”
தொடர்ச்சியான இருமலுக்கு பிறகு, “இங்க சிக்னல் வீக்கா இருக்கு.. ஒண்ணுமே கேக்கல.. நீங்க அப்புறமா பேசுங்க..” வைத்துவிட்டான்.
உடனே டீம் லீடரிம் சென்று விபரம் தெரிவித்து தன் இடத்திற்குத் திரும்பினாள்.. பதட்டமாக இருந்தது.. அன்றைய வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பினாள்
அடுத்த நாள் ஆபிசுக்குள் நுழையும்போதே டீம்லீடர் ஓடிவந்து கைகுலுக்கினார்.. மற்றவர்களும் கை கொடுத்துப் பாராட்டினார்கள்..
“நேத்து நீங்க கொடுத்த இன்ஃபர்மேஷன வெச்சி அங்க இருக்குற நம்ம டீம்க்கு இன்ஃபார்ம் பண்ணி அவன வழியிலேயே புடிச்சாச்சு.. ஹாஸ்பிடல் கொண்டு போயிட்டு டெஸ்ட் பண்ணதுல அவனுக்கு இன்ஃபெக்ஷன் பாசிட்டிவ்.. அவன் மட்டும் அங்க போயிருந்தா அவனால எத்தனை பேருக்கு பரவி இருக்கும்னே சொல்ல முடியாது.. உன்னால ஒரு மிகப்பெரிய கம்யூனிட்டி ஸ்ப்ரெட் தடுக்கப்பட்டுருக்கு.. வாழ்த்துக்கள்மா..”
பெருமையாக இருந்தது.. தான் செய்த வேலையின் பலன் அவளுக்கு இப்போதுதான் புரிந்தது.. புத்துணர்ச்சியோடு அடுத்த எண்ணை சரிபார்த்து டயல் செய்தாள்…
ஹலோ..வணக்கம் சார்.. நான் கலெக்டர் ஆபீஸ்ல இருந்து பேசுறேன்..
நன்றி தேன்சிட்டு இதழ்
ஆசிரியர் திரு நத்தம் சுரேஷ்பாபு
மற்றும் சிறுகதை ஆசிரியர் நெய்வேலி ஜெயந்த்
LikeLike