எளிமை மனிதர்கள்!
வரதராஜன் ஐயா..
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகில் உள்ள ஆனைகுளம் கிராமத்தை சார்ந்தவர்..யார் இவர் .. இவரைப் பற்றி நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் .. இவர் ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன..
தொடர்ந்து கட்டுரையை வாசியுங்கள்
…
சாதாரண பேருந்து நடத்துனர் பணி தான் ஆனால் இவர் சமுதாயத்தில் மறைமுகமா ஏற்படுத்திய மாற்றங்கள் ஏராளம்..
சின்னவயதில் எங்கள் ஊர் அம்மன் கோவிலில் குழந்தைகளுக்கான நல்லொழுக்க வகுப்பு ஒன்று நடக்கும் அதில் சிறுவர்கள் நாங்கள் அனைவரும் ஒன்று கூடுவோம்..
அதில் குழந்தைகளை ஊக்கப்படுத்துவதற்காக பல்வேறு விஷயங்கள் கொடுப்பார்கள். அதற்கு வகுப்பு எடுக்க தொலைவிலிருந்து, தன் கையில் காசு இல்லாவிட்டாலும், பெட்ரோல் போடுவதற்கு பணம் இல்லாவிட்டாலும் BajajbM80 வாகனத்தில் ஒருவர் வருவார். வந்து குழந்தைகளுக்கு அருமையான கதைகள் சொல்வார். குழந்தைகளை ஊக்கப்படுத்தி புத்தகங்களை பரிசாக வழங்குவார்.. அவர் யாரும் அல்ல இந்தக் கட்டுரையின் கதாநாயகன் வரதராஜன் ஐயா அவர்கள்.
என் வாழ்க்கையில் முதல் முதலாக பரிசு வாங்கியது இவரின் கையால்தான். அன்று இவர் ஊக்கப்படுத்தி கொடுத்த ஒரு சிறிய புத்தக பரிசு எனக்குள் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது..
பொதுவாக நடத்துனர் என்றாலே எரிந்து விழுவார்கள், கோபப்படுவார்கள் பயணிகளை ஏசுவார்கள் இந்த கண்ணோட்டத்தில் தான் நாம் பார்த்திருப்போம்..
ஆனால் இவரோ எல்லாவற்றிலும் தனித்துவம் மிக்கவர். பள்ளி செல்லும் போது நாங்கள் செல்லும் பேருந்தில் இவர்தான் நடத்துனர். பேருந்தில் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் எங்களை எல்லாரையும் நின்று ஏற்றிச் செல்வார். அவ்வளவு கூட்டத்திற்கு இடையிலும் எங்களுக்கு பொது அறிவு கேள்விகளை கேட்டு. அந்தப் பேருந்து பயணத்தையே இனிமையாக மாற்றுவார்..
சாதாரணமான குக்கிராமங்களில் டீக்கடைகளில் அரசியல் சமுதாய சிந்தனைகள் என பல விஷயங்கள் பேசுவார்கள் ஆனால் ஐயா அவர்கள் தான் வேலைசெய்யும் பேருந்தை அறிவுக் களஞ்சியமாக மாற்றிவிடுவார்.. கிராமத்தில் வாழும் ஒரு வயதான தாத்தாவை கூட கலகல என சமுதாய சிந்தனையோடு பேச வைத்து விடுவார். ஐயாவிடம் ஒரு இரண்டு நிமிடம் பேசினாலே நமக்கு சமுதாயத்தைப் பற்றியும், மக்களைப் பற்றியும் மிகப்பெரிய அளவில் அக்கறைகளும் யோசனைகள் தோன்றும்.. தான் பணி செய்த காலத்தில் சமுதாயத்துக்காக நடத்துனராக இருந்துகொண்டே இவர் செய்த பணிகள் ஏராளம்.
பொதுவாக அன்று பொறியியல் பட்டப்படிப்பு படிப்பதற்கு நுழைவுத் தேர்வு உண்டு. தென்காசியில் ஒரு மிகப்பெரிய தனியார் பயிற்சி நிறுவனம் நுழைவுத் தேர்வுக்காக பயிற்சி கொடுத்தார்கள் .
அதில் சேருவதற்காக நானும் என்னுடைய நண்பனும் சென்றிருந்தோம் . சென்ற இடத்தில் நுழைவுத்தேர்வு பயிற்சியில் சேருவதற்கு குறைந்தபட்ச மாணவர்கள் மட்டுமே அனுமதி உண்டு, மேலும் அதில் சேர்வதற்கு 5000 ரூபாய் பணம் செலுத்த வேண்டும் அன்றே கடைசி தேதி.. என்று பயமுறுத்தி விட்டார்கள்.. காசு கட்டினால் மட்டுமே உங்களுக்கு பயிற்சி உண்டு என்று சொல்லிவிட்டார்கள் .( வழக்கமாக கல்விநிறுவனங்கள் வியாபார உத்தியாக பயன்படுத்தும் முறைதான் இது)
5000 ரூபாய் காசு இல்லாமல் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றேன்.. அன்றைய தினம் நான் ரோட்டில் நின்ற நேரத்தில் ஒருவர் கையில் மஞ்சள் பையுடன் வேர்த்து விறுவிறுத்து வந்தார். தனக்கு தெரிந்த “பையனுக்கு” காசு கொடுத்து இந்த நுழைவுத்தேர்வு பயிற்சியை தொடர்வதற்கு உதவி செய்வதற்காக வந்திருந்தார்..
அப்பொழுது அவரைப் பார்க்கும் பொழுது எனக்கு பிரம்மிப்பாக இருந்தது. யாரோ ஒருவருக்கு கல்வி கொடுப்பதற்காக தான் உழைத்த உழைப்பை செலவிடுவதை பார்த்து ஆச்சரியப்பட்டேன்.. கல்விக்காக இவர் செய்யும் செயலைக் கண்டு இவர் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு..
ஒருமுறை வரதராஜன் ஐயாவை பார்ப்பதற்காக சுரண்டை க்கு சென்றேன்.. என்னை அவருடைய அறைக்கு அழைத்துச் சென்றார். ஒரு சிறிய அறை, அந்த அறையில் ஏராளமான புத்தகங்கள், உடுத்துவதற்கு இரண்டு துணிகள் குளிப்பதற்கு ஒரு துண்டு, இவ்வளவுதான் ஐயாவின் வாழ்க்கை.. ஒரு மனிதன் வாழ்வதற்கு இவ்வளவு போதும் என்று எனக்கு எடுத்துக் காட்டினார். இதுவெல்லாம் இவர் மறைமுகமாக என் வாழ்க்கையில் உருவாக்கிய மிகப்பெரிய தாக்கங்கள்..
அத்தையே சிறப்புவாய்ந்த இந்த மாபெரும் மனிதர் இன்று உலகத்தை ஆட்டிப்படைக்கும் corona விற்கு இவர் செலுத்திய தொகை 1,50,000 ரூபாய் என்பதைப் பார்த்து மிரண்டு விட்டேன்..
என்ன மனிதன் இவர், இப்படி எல்லாம் ஒருவர் இருக்க முடியுமா என்று ஆச்சரியம் வருகிறது. வாழ்க்கையின் கடைசி காலத்திற்கு சேர்த்து வைத்திருந்த காசை இப்படி மொத்தமாக கொடுக்கிறாரே என்ற வியப்பும் தோன்றுகிறது..
சாதாரண ஒரு பணியில் இருந்து கொண்டு சமுதாயத்திற்காக இவ்வளவு பெரிய விஷயங்களை செய்ய முடியுமா என்பதை நினைக்கும் பொழுது பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகிறது..
சிறுவயதிலிருந்து எனக்குள் நல்ல சிந்தனைகளை நீங்கள் விதைத்ததில் விளைவு என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கி உள்ளது .அதற்கு நான் என்றுமே நன்றி சொல்வேன்..
மேலும் சுரண்டை வட்டாரத்து இளைஞர்களுக்கு மிகப்பெரிய வழிகாட்டி நீங்கள். நீங்கள் எப்பொழுதும் மிகவும் ஆரோக்கியமாக மனம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். எத்தகைய துரோகத்தையும் எத்தகைய விமர்சனங்களையும் தாங்கிக்கொண்டு இத்தகைய மகத்தான காரியங்களை தொடர்ந்து செய்வதற்கு வாழ்த்துக்கள் ஐயா..
உங்களை நினைத்து இளைஞர்கள் நாங்கள் பெருமை கொள்கிறோம் வாழ்த்துக்கள் ஐயா..செல்வ ராம ரத்னம் அவர்களின் முகநூல் பதிவு