கவிதைக்காதலி!
காதல்கவிஞர் வேலூர் முத்து ஆனந்த்
ஏறுமுகம்!
என்னையும் உன்னையும்
நெருங்க விடாமல் தடை வரும்போது
நம்அன்பு தவிக்கலாம்!
ஆயிரம் இன்னல்கள் களம் புகலாம்!
இன்பம் விடுமுறையில் செல்லலாம்
ஈதலுக்கு வழியில்லாமல் போகலாம்
உண்மையான துடிப்பு உறைந்து விடலாம்
ஊக்கம் கோபித்து ஒதுங்கலாம்
எண்ணங்கள் மறையலாம்
ஏக்கங்கள் ஊற்றெடுக்கலாம்
ஐயம் இறுக்கமாகக் கட்டி விடலாம்
ஆனால் –
ஒற்றுமை என்றைக்கும் ஒன்று சேர்க்கும்
ஓயாமல் பாயும் நம் *காதல் ஒவ்வொரு வினாடியும்
பலம் கொடுக்கும்
பலன் அளிக்கும்!
அன்பு விலகியிருக்கும்போதுதான்
ஆற்றல் அதிகரிக்கும்
இன்முகம் தரிசனம் வழங்கும்
ஈகை குணம்தான்
உன் உண்மையான பேரழகு
ஊரும் உலகமும் சுதந்திரம் பெறுகையில்
ஊட்டச் சத்துகள்
நம் *காதலுக்கும்கிடைக்கும்
எந்த வழி கிடைத்தாலும்
ஏறுமுகம்தான் நம் இருவருக்கும்!
ஐந்து விரல்களென்ன அப்பொழுது பத்து விரல்களும் இணையலாம்!
ஒன்பது கிரகங்களும் ஒதுங்கி நின்று
ஓசையின்றி நம் அன்பைப்
பார்த்துப் பார்த்து ரசிக்கும்!
கடமை!

ஊருக்கும் உலகுக்கும்
உபதேசங்கள் வழங்கும் முன்
நானும்நீயும்தான்
முதலில் கடைபிடித்துச் செயலாற்ற வேண்டும்!
விலகியிருந்தால்தான்
விதியை விரட்ட முடியும்
என்றால் –
அதைவிட வேறென்ன கடமை நமக்கு?!
இதென்ன சிறைக்கூடமா?!
பிணைவிடுதலைக்கு முயற்சி செய்ய!
நமக்கு நாமேகட்டுப்பாடுடன் இருந்தால்தானே
நாளை நாமும் காதலிக்கலாம்
நாட்டையும் காதலிக்கலாம்!
எங்கிருந்தாலும் வாழ்க என்றுநன்மைகளையும்
எங்கிருந்தாலும் ஒழிக என்றுதீமைகளையும்
நாம்செயலாக்கும் கொள்கைகள்தான் நம் வாழ்க்கையின் அர்த்தம்!
நாம் ஆசை ஆசையாய்க் காதலிக்க
வாழ்நாள் முழுவதும் போதாதுதான்!
ஆனால் -ஒரு நொடி அன்பில்கூட
உண்மை இருக்க வேண்டும்தானே!
எப்பொழுதும் இன்புற்றுரிருக்க வேண்டுமென்றால்
இப்பொழுதிருக்கும் இன்னல்களை
இனியும் தாமதியாது துரத்துவோம்!
பரிபூரணம்

புறத்தைத் தொட்டு விளையாடி
மகிழ்வது மட்டும்தான் *காதல்என்றில்லை!
அகத்தில் நினைத்தபடியே
இன்புற்று வாழ்வதும்
உண்மையான அன்புதான்
என் இனிய உயிர்க்காதல் அன்பே!
நீ அமைதியாக இருந்தாலும் சரி
ஆரவார அவதாரமெடுத்தாலும் சரி
நீ ஒருத்தி மட்டுமே
வாழும் இருப்பிடம் என் இதயம்!
பெற்றோரும் உற்றாரும் ஊரும் உலகமும்
முழுமூச்சாய் சுதந்திரம் பெறட்டும்
பிறகு சந்தித்த பின்
ஒவ்வொரு நொடியும் பிரியாமலிருப்போம்!
உண்மையான அன்பும்
உன்னதமான அன்பும்
என்ன சொன்னாலும் கேட்கும்
எது சொன்னாலும் செய்யும்!
எல்லோரும் வாழ்ந்தால்தானே
நானும்நீயும் கூட
நிம்மதியாய் சுவாசிக்க முடியும்!
உன்கன்னங்களிலும் இதழ்களிலும்
இடுகின்ற முத்தங்களுக்கு மட்டுமல்ல
கவிதைகளுக்கும் காதலுக்கும்கூட
விடுமுறையளித்து விட்டேன் எந்தக் கேள்வியும் கேட்காமல்
முகம் சுழிக்காமல் மனம் கோணாமல்
நீயும்நிச்சயமாய் ஒத்துழைப்பாய் என்ற *பரிபூரண நம்பிக்கையில்!