தீமையிலும் நன்மை தருமபுரி சி.சுரேஷ்
மணிக்கு வீட்டுச் சிறையில் அடைந்து கிடப்பது சிரமமாகவே இருந்தது
காரணம் வீட்டில் ஒரு நிமிடம் கூட அவன் இருந்ததில்லை
இப்பொழுது அவனுடன் யமஹா இரு சக்கர வண்டியும் வீட்டில் தூசி படிந்து நின்றுகொண்டிருந்தது
“பெட்ரோல் செலவு மிச்சம்” என பெற்றோர்கள் சிரித்த ார்கள்
மணியோ அவனை வீட்டில் கயிற்றில் கட்டி வைத்ததைப் போலவே ஒவ்வொரு நாளும் உணர்ந்தான்
கரோனா வைரஸ் மீது ஆத்திரம் கொண்டான் கண்ணுக்குத் தெரியாத கிருமியால் நான் சிறைப்பட்டு கிடக்கிறேனே என வருத்தப்பட்டான்
பெற்றோர்களை மீறி வெளியே செல்ல துணிவு இருந்தாலும் வெளியே இருக்கும் போலீஸ்காரர்களுக்கு பயப்பட வேண்டி இருக்கிறது
என்ன செய்வது பம்பரமாய் சுழன்று கொண்டிருந்த நான் ஓரிடத்தில் அடைக்கப்பட்டு விட்டேனே
மனம் ஒரு குரங்கு எண்ணங்களில் தாவும் மனப்பான்மை கொண்டது
எத்தனை நாட்கள்தான் பல்லாங்குழி விளையாடுவது, தாயம் விளையாடுவது, அவுட்டோர் கேம் கிரிக்கெட் விளையாடி எத்தனை நாட்கள் ஆயிற்று
வெளியே மைதானத்தில் காக்காய் ,குருவிகளைத் தவிர ஒரு கிரிக்கெட் நண்பனையும் காணமுடியவில்லை
தொடர்ந்து எத்தனை புத்தகங்கள்தான் படிக்க முடியும்
கண்கொட்டாமல் டிவி நிகழ்வுகளை தொடர்ந்து பார்ப்பதும் சலிப்பாகவே இருந்தது
இன்று புதுமையாக ஏதாவது ஒன்றை வீட்டில் செய்ய வேண்டும் யோசித்தான் என்ன செய்யலாம்
அவனின் அம்மா அவனிடம் “மணி நம்ம வீட்டு வாழை மரத்தில ரெண்டு வாழைக்காய் பறிச்சிட்டு வாடா “
“எதுக்கு அம்மா” என கேள்விக் குறியோடு அம்மாவை நோக்கி பார்த்தான்
“உனக்கு பிடிச்ச வாழைக்காய் பஜ்ஜி செய்யதான்”
சும்மாவே உண்டு, உறங்கி, சலிப்பாய் இருப்பதைவிட இன்றைக்கு நான் ஏன் பஜ்ஜி போடக்கூடாது என யோசித்தான்
“அம்மா இன்னைக்கு நான் பஜ்ஜி செய்கிறேன்”
“டேய் என்னடா சமையல்கட்டு பக்கமே வராத நீ சொல்றது புதுசா இருக்கு”
“என்னமா பண்றது தொடர்ந்து செய்யறதே செஞ்சா வாழ்க்கை ரொம்ப போர் அடிக்குது”
அவன் அம்மாவுக்கு ஒரே சந்தோஷம் காரணம் வீட்டில் இவன் ஒரே மகன் பெண்பிள்ளை கிடையாது கூடமாட வேலை செய்ய
” மணி உனக்கு ஒன்னும் தெரியாதுடா எண்ணெயில் தெரியாம கையை வச்சிராத நெருப்பு வேற”கரிசனை கொண்டாள்
“அம்மா நீ பயப்படாதே அது எப்படி செய்யணும்னு நான் யூடியூபில் பார்த்து படிச்சுட்டேன்”
“அப்போ இன்னைக்கு அசத்தப்போவது யாரு” அப்பாவின் சிரிப்பு வீட்டை அதிர வைத்தது
மீண்டும் அப்பா தொடர்ந்தார் “சூடான காப்பி, சுவையான பஜ்ஜி சூப்பர் காம்பினேஷன் அம்மாவும் மகனும் சேர்ந்து அசத்த போறாங்க பேஷ் பேஷ்”
கொஞ்சநேரத்தில் மணக்க மணக்க பில்டர் காபியும், நாக்கில் எச்சில் ஊற சூடான வாழைக்காய் பஜ்ஜியும் அப்பாவின் வாய்க்குள் இறங்கியது
“மணி அசத்திட்டடா இந்த சுவையான பஜ்ஜி எங்கேயும் நான் சாப்பிட்டது இல்லடா ” என்றார்
அப்பாவின் வார்த்தையால் மணியின் உள்ளத்திற்குள் குதூகலம் பிறந்தது
சமையல் மீது ஒரு நாட்டம் வந்தது தினம் இப்படி ஏதாவது ஒன்றை செய்து அசத்தி கொண்டே இருப்போம் என முடிவெடுத்தான்
அம்மாவிற்கு மனதிற்குள் ஒரே பெருமையாக இருந்தது என் மணி என் கஷ்டத்தை புரிஞ்சுகிட்டான் எனக்கு உதவி செய்யறான் என்று அவளுக்குள் நினைத்துக்கொண்டாள்
உண்மை அதுவல்ல அவனுடைய கஷ்டத்தை தீர்த்துக் கொள்வதற்காக சலிப்பை போக்கிக் கொள்வதற்காக இந்த காரியங்களில் இறங்கி இருக்கிறான்
ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக மணி ஏதாவது ஒன்றை செய்து வீட்டில் அப்பாவையயும், அம்மாவை அசத்தி கொண்டு இருந்தான்
இப்படியாய் சமையல் கலையில் தேர்ந்தவன் ஆனான்
கரோனா வைரஸ் அவனை வெளியே செல்ல அனுமதிக்காததால் யூடிபில் மூலமும் அம்மாவின் ஆலோசனையின் பேரிலும் அவன் சமையல் கலையில் வல்லவன் ஆனான்
அப்பா சிரித்துக் கொண்டே மணியைப் பார்த்து சொன்னார் “பரவாலடா உன் ங்கால மனைவிவரு கொடுத்து வச்சவ”
சமையல் அறைப் பக்கமே போகாத மணிக்கு இந்த அனுபவங்கள் புதுமையாகவும் இனிமையாகவும் இருந்தது
தொடர்ந்து சமையல்கள் செய்து அலுத்துப்போன அம்மாவுக்கு ஓய்வு கொடுத்தான்
சில தீமையான சூழல்களிலும் நாம் நன்மையான காரியங்களை கற்றுக்கொள்ள முடிகிறது என்பதை உணர்ந்தான்
யமஹாவில் ஊர் சுற்றிக் கொண்டு இருந்த மணி இப்பொழுது சமையலறையில் அசத்திக் கொண்டிருந்தான்
அவுட்டோர் கேம் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்த மணி வீட்டில் பல்லாங்குழி, தாயம் என எல்லாவற்றையுமே கற்றுக்கொண்டான்
சில நேரங்களில் இறுக்கமாய் இருக்கிற மனதை தளர்த்திக் கொள்ள இப்படிப்பட்ட காரியங்களை செய்ய வேண்டியது அவசியமாகிறது
அதன் வழியே சின்ன சின்ன சந்தோசங்கள் நம்மை மட்டுமல்ல நம் குடும்பத்தில் இருக்கிற ஒவ்வொருவரையும் அது சென்றடைகிறது என்பதை உணர ஆரம்பித்தான்
இப்பொழுதெல்லாம் வீட்டில் பலமணிநேரம் இருக்க கற்றுக் கொண்டான்
தூசி படிந்து இருந்த யமஹா வண்டியின் மீதிருந்த கவனம் குறைந்து போயிற்று
தீமையிலும் நன்மை என்று சொல்வார்களே அது இது தானோ
அம்மா மணியை பார்த்து சொன்னாள் “டேய் மணி இப்படியே போன நான் சமையல்கட்டில் செய்யவேண்டியது எல்லாத்தையுமே மறந்திடுவேன்”
” எங்களுக்காய் உழைக்கும் தெய்வமே கொஞ்சம் ஓய்வாய் இரு” என அம்மாவின் கன்னத்தை செல்லமாய் அன்புடன் கிள்ளினாள்
அம்மாவின் மனதிற்குள் தனக்கு ஓய்வு கொடுத்த மகன் மேல் தீராத பாசம் கொண்டாள்
தனக்கு உதவ ஒரு பெண்பிள்ளை இல்லையே எனும் எண்ணத்திலிருந்து விடுதலை கொண்டாள்
