இந்திய கிரிக்கெட் நினைவலைகள்! -2

இந்திய கிரிக்கெட் நினைவலைகள்!

சுதந்திர தினக்கோப்பை- 1997-98- தாகா.

இரண்டுநாளாய் எதுவும் எழுதவில்லை! கிரிக்கெட் நினைவலைகளில் எதை எழுதலாம் என்று யோசித்தேன். 1987- 90 காலகட்டங்களில் நடந்த பல போட்டிகள் நினைவுக்கு வந்தாலும் 1997-98ல் சச்சின் தனது கேப்டன் பதவியை இழந்து மீண்டும் அசாருதின் கேப்டன் ஆனதும் வங்கதேச சுதந்திர தினவிழா கோப்பை கிரிக்கெட்டில் வெற்றிபெற்றது அப்போது பெரிதும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

அது டிரை சீரீஸ் போட்டி. இந்தியா-பாகிஸ்தான் வங்க தேசம் தொடரில் கலந்து கொண்டது இந்தியா லீக் போட்டியில் பாகிஸ்தானையும் வங்கதேசத்தையும் வென்று பைனலுக்கு வந்தது. பாகிஸ்தான் இந்தியாவிடம் தோற்று வங்கதேசத்தை வென்று பைனலுக்கு வந்தது. அப்போது இந்திய அணியில் சில புதுமுகங்கள் இடம்பெற்று இருந்தனர். அதில் குறிப்பிடதக்கவர் ரிஷிகேஷ் கனிட்கர். பைனல் நாயகன் இவர்தான். இவரை அப்போது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். ஆனால் உண்மையான வெற்றிக்கு காரணம் சச்சினின் அதிரடி 41 ரன்களும் கங்குலி- ராபின் சிங் பார்ட்னர் ஷிப்பும்தான்.  30 வயதைக் கடந்து அணியில் அறிமுகம் ஆன ராபின் சிங். இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசியதுடன் 83 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார். கங்குலி சிறப்பாக விளையாடி 124 ரன்கள் குவித்தார். ஆனாலும் ரிஷிகேஷ் கனிட்கர் கடைசி நேரத்தில் பதட்டம் அடையாமல் அப்போதைய பாகிஸ்தானின் சிறந்த லெக் ஸ்பின்னர் ஷக்லைன் முஸ்டாக்கின் பந்துவீச்சில் நான்கு ரன்களை விளாச ஒரு பந்து மீதம் இருக்கையில் த்ரில் வெற்றியை பெற்றது இந்தியா.

 அதுவும் முழுமையான 50 ஓவர் மேட்ச் அல்ல 48 ஓவர் மேட்ச். 48 ஓவரில் 314 ரன்களை சேஸ் செய்வது என்பது அப்போது பெரிய சாதனை. அதை அப்போதிருந்த வீரர்களை கொண்டு செய்தது பெரிய விஷயம்.

இந்தியா டாஸில் வென்று முதலில் பீல்ட் செய்தது. இந்திய அணியில் ஸ்ரீநாத்தை தவிர பெரிய பவுலர் கிடையாது, ஹர்வீந்தர் சிங் என்ற புதிய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் சுழல்பந்தில் ராகுல்சங்வி என்ற அறிமுக பந்துவீச்சாளர்.  பாகிஸ்தானில் உலகத்தரமான பேட்ஸ்மேன்கள் ஷாகித் அப்ரிடியும் சையத் அன்வரும் இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்கள். ஆனாலும் ஹர்வீந்தர் சிங்கிற்கு அதிர்ஷ்டம் அவ்வப்போது விக்கெட் எடுத்தார். ஆனாலும்  சையத் அன்வர் சதம் அடித்தார். அவருக்கு உறுதுணையாக ஆடிய இஜாஸ் அகமதும் சதம் விளாசினார். இதனால் 48 ஓவர்களில் பாகிஸ்தான் 314 ரன்கள் குவித்தது.

 இந்திய அணி ஆட்டத்தை துவக்கியது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார் சச்சின். பந்துகள் பவுண்டரி நோக்கி செல்ல அவருக்கு எப்படி போடுவது என்று நொந்து போயினர் பாகிஸ்தான் பவுலர்கள். மறுமுனையில் தாதா கங்குலியும் வேடிக்கைப்பார்த்து நிற்கும் படிதான் இருந்தது. ஐந்து ஓவர்களில் ஐம்பது ரன்களை கடந்தது இந்திய அணி. 9வது ஓவரில் அப்ரிடியின் பந்துவீச்சில் அசார் முகமதுவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் சச்சின் அப்போது ஸ்கோர் 71 சச்சின் 26 பந்துகளில் 41 ரன்கள் குவித்து இருந்தார். அவர் அவுட்டானதும் கோப்பை வென்றமாதிரி குதூகலித்தனர் பாகிஸ்தானியர்.

 வழக்கத்துக்கு மாறாக ராபின் சிங் ஒன் டவுனாக களம் இறக்கப்பட்டார். அவரும் கங்குலியும் சச்சின் கொடுத்த அடித்தளத்தை  கட்டிட்டமாக மாற்றத்துவங்கினர். இவர்களை பிரிக்க பாகிஸ்தான் பவுலர்கள் பிரயத்தனப்பட்டும் முடியவில்லை. ஒன்றிரண்டு ரன் அவுட் வாய்ப்புகள் இருந்தும் வீணாகின. படாத பாடுபட்டனர். ரன்கள் சீராக சென்றது. 38 ஓவர்களில் 250 ரன்களை கடந்தது இந்தியா. பாகிஸ்தான் களை இழந்து போனது. அப்போது வெற்றி இந்தியாவுக்கு அருகில் இருந்தது.39வது ஓவரின் முதல் பந்தில் ராபின் சிங் அவுட்டானார்.  உள்ளே வந்த அசாருதீன் ரன் அவுட் வாய்ப்பில் தப்பி பிழைத்தார். ஆனால் பந்துகளை வீணடித்தார்.

 கங்குலியும் தசைப்பிடிப்பில் அவதிப்பட்டார், அந்த சமயம் அசாருதின் ஷக்லைன் முஸ்தாக் பந்தில் ஆட்டமிழந்தார்.  உள்ளே சித்துவந்தார்.  அப்போது கங்குலியால் ஓட முடியாமல் பை-ரன்னராக அசாருதீன் வந்தார். பந்துகள் குறைந்து ரன்கள் எண்ணிக்கை கூட பாகிஸ்தானியர்கள் துல்லியமாக வீச ஆரம்பித்தனர். சவுரவ் கங்குலியும் 42வது ஓவரில் ஆட்டமிழக்க ஸ்கோர் 274 ரன்கள் அடுத்த ஓவரில் சித்துவும் ஆட்டமிழக்க இந்திய ரசிகர்கள் சோர்ந்தனர். உள்ளே புதியவர் கனிட்கரும் ஜடேஜாவும் பந்துகளை தட்டிவிட்டு ஒன்றிரண்டாக சேர்க்க ப்ரஷர் கூடியது. 46வது ஓவரில் ஜடேஜாவும் அதன்பின் வந்த மோங்கியாவும் 47வது ஓவரில் ஆட்டமிழக்க கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது

  உள்ளே  கனிட்கர் கடைசி ஓவரை வீச வருகிறார் ஷக்லைன். கனிட்கர் தேர்ட் மேன் திசையில் அடித்து ஒரு ரன். ஸ்ரீநாத்துக்கு அடுத்த பந்தை ஷக்லைன் வீச ஸ்ரீநாத் தூக்கி அடித்து இரண்டு ரன்களை பெறுகிறார். அடுத்த பந்து மிட் ஆனில் தூக்கி அடிக்கிறார் ஸ்ரீநாத் பீல்டர்கள் பந்தை பிடிக்க ஓடிவருகிறார்கள் யார் கையிலும் சிக்காமல் கீழேவிழுகின்றது பந்து அதற்குள் இரண்டு ரன்கள் கிடைத்து விடுகிறது. நான்காவது பந்தில் ஒரு ரன் ஸ்ரீநாத் அடிக்க கடைசி ரெண்டு பந்தில் மூன்று ரன்கள். அரங்கமே திக் திக்கென்றிருக்க ஸ்ரீநாத்- கனிட்கரிடம் ஏதோ பேசுகிறார். ஷக்லைனிடம் விக்கெட் கீப்பர் ரஷீத் லத்தீப் ஆலோசனை சொல்கிறார். ஐந்தாவது பந்து ஷக்லைன் வீச  தூக்கி அடிக்கிறார் கனிட்கர் மிட் ஆப் திசையில் பந்து பவுண்டரியை கடக்க  மைதானமே கரகோஷத்தில் அதிர்கிறது. இந்தியா வெற்றி பெற்றதை நம்ப முடியாமல் சோகத்துடன் மைதானத்தை விட்டு வெளியேறுகின்றனர் பாகிஸ்தான் வீரர்கள்.

   வெற்றிக்கோப்பையை அசாரூதின் வாங்குகிறார். சச்சினிடம் அந்த மைதானம் பற்றி வர்ணனையாளர் கேட்க இது பேட்ஸ்மேன்ஸ் பேரடைஸ் என்று புகழ்கின்றார். கங்குலியை பற்றி புகழ்ந்து பேசுகின்றார். எனக்குத் தெரிந்து இந்த தொடரின் போதுதான் கங்குலி ஓப்பனிங் ஆடினார் என்று நினைக்கிறேன். அப்புறம் கங்குலி- சச்சின் இணை பல சாதனைகளை படைத்தது. அதற்கடுத்த வந்த ஆஸ்திரேலிய தொடரிலும் கனிட்கர் சில அரைசதங்கள் விளாசினார்.

   ஆனால் அப்புறம் காணாமல் போனார். ஆனால் அப்போதைய ஊடகங்களில் ரிஷிகேஷ் கனிட்கர் ஓர் ஹீரோவாக கொண்டாடப்பட்டார். மிகவும் சுவாரஸ்யமான மேட்ச் இது.

  ஆனாலும் இதில் ஒரு சந்தேகம் எனக்கு வந்தது. பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்த மைதானம் 38வது ஓவரில் ராபின் சிங் அவுட்டானதும் எப்படி பவுலர்களுக்கு சாதகமாக மாறியது. அசாருதீன் –ஜடேஜா – மோங்கியா உள்ளிட்டவர்கள் ஆட தடுமாறியது போன்றவை சந்தேகத்தை கிளப்பின. போதிய வெளிச்சம் இல்லை. ஆட்டத்தை நிறுத்திவிடலாம் என்று அசாருதீன் கூறியதாகவும் அப்போது செய்திகள் பரவின. இதற்கெல்லாம் அப்புறம் கிளம்பிய சூதாட்ட ஊழலும் இந்திய வீர்ர்களின் டிஸ்மிஸும் பதில் கூறின.

மீண்டும் ஒரு சுவாரஸ்ய மேட்ச் நினைவலைகளோடு உங்களை சந்திக்கிறேன்! நன்றி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: