தேன்சிட்டு பல்சுவை மின்னிதழ் ஜூன்2020
அன்பார்ந்த வாசகப் பெருமக்களே! வணக்கம்! உலகம் முழுவதும் கொடூரமான கொரானோ வைரஸ் பாதிப்பில் பாதிக்கப்பட்டுள்ள போதும் தேன்சிட்டு வாசகர்கள் மனம் சோராமல் தேன்சிட்டு இதழை வாசித்து மகிழ்ந்து கருத்துக்களை அனுப்பி வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதே சமயம் தேன்சிட்டு இன்னும் கொஞ்சம் பொறுப்புணர்வோடு வாசகர்களை திருப்தி படுத்தும் அளவிற்கு இதழை தயாரித்து வழங்கவேண்டிய கடமையையும் இந்த கருத்துக்கள் எமக்கு உணர்த்துகிறது. அதற்கான முயற்சிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றோம்.
ஒவ்வொரு மாத இதழை தயாரிக்க ஆரம்பிக்கையிலும் இது முதல் இதழ் என்ற எண்ணத்தோடுதான் இதழை தயாரித்து மிகுந்த கவனத்தோடு உங்கள் முன் வைக்கிறோம்.எனவே தேன்சிட்டு என்றும் தேன் சிந்தும்.
கொரானாவோடு வாழப் பழகிக்கொள்ளுங்கள் என்று அரசாங்கம் கைவிரித்துவிட்ட வேளை இது. ஒவ்வொருவரும் சுய ஒழுக்கத்தையும் சுய சுகாதாரத்தையும் பின்பற்றினால் மட்டுமே இனிவரும் காலங்களில் நோய் தொற்று இல்லாமல் சுகாதாரமாக வாழமுடியும். எனவே நம்மையும் சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாக வைத்துக்கொள்வோம்.
ஏற்கனவே மூன்று மாத காலமாக பல்வேறு நிறுவனங்கள் இயங்காத நிலையில் தற்போது இயங்கத் துவங்கியுள்ள நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபடத்துவங்கிவிட்டன. கடுமையான பொருளாதார இழப்பை காரணம் காட்டி இந்த ஆட்குறைப்பில் நிறுவனங்கள் ஈடுபட்டாலும் தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லாத ஒரு பயங்கரமான நிலையை இந்த கொரானா கொண்டுவந்து வைத்துவிட்டது. இந்நிலையில் பொதுத்துறை நிறுவனங்கள் பலவற்றையும் தனியாருக்கு தாரைவார்த்துக் கொடுக்க அரசு தயாராகிவிட்டது. இது தொழிலாளர்களுக்கு பெரும் சிக்கலையே வரவைக்கும்.
2020 அமோகமாக இருக்கும் என்று சொன்ன ஜோஸ்யர்கள் காணாமல் போய்விட்டார்கள். 2020 ஆரம்பமே பெரும் பீதியை தந்துள்ளது. மீதி மாதங்களை கடக்க மக்களிடம் இப்போதுள்ள ஒரே பிடிமானம் நம்பிக்கை மட்டுமே! ஆம் எல்லோருக்கும் நம்பிக்கை ஒன்றே இப்போது துணைவன். நம்பிக்கையோடு இருப்போம்! காலங்கள் மாறும் கஷ்டங்கள் தீரும் என்று கனவு காண்பதோடு அதை மெய்ப்பிக்கவும் பாடுபடுவோம்! கண்டிப்பாக நமது கனவும் மெய்ப்படும்.
தேன்சிட்டு மற்றும் எழுத்தாளர் ப்ரணா சேர்ந்து நடத்தும் நகைச்சுவை சிறுகதைப் போட்டிக்கான உங்கள் கதைகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றது. இருப்பினும் பலர் எங்களை தொடர்பு கொண்டு கடுமையான கொரானோ பாதிப்பு சூழலில் நகைச்சுவை எழுத மனம் வரவில்லை! கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
வாசகர்களின் கோரிக்கையை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு இந்த போட்டிக்கான கால வரையறையை ஜூன் மாதம் 30ம் தேதி வரை நீட்டித்து உள்ளோம். வாசகர்கள் இந்த அவகாசத்தை பயன்படுத்தி படைப்புக்களை அனுப்பி பயன்பெறவும்.
இந்த இதழில் வழக்கமான பகுதிகளுடன் சிறுகதை சிறப்பிதழாக நிறைய சிறுகதைகளுடன் மலர்ந்துள்ளது. இது உங்களுக்கு பெருமகிழ்ச்சி அளிக்கும் என்று நினைக்கின்றேன். தொடர்ந்து தேன்சிட்டு மின்னிதழை வாசித்து உங்கள் கருத்துக்களை அனுப்பி ஆதரவு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொண்டு விடைபெறுகின்றேன்! நன்றி! அன்புடன்.
நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு
ஆசிரியர் , தேன்சிட்டு.
தேன்சிட்டு பல்சுவை மின்னிதழ். மலர் 2 இதழ்- 10
ஜூன் 2020
கதைகளில் வரும் இடங்கள், சம்பவங்கள், பெயர்கள் கற்பனையே! கதைகளை சுருக்கவும் மாற்றி அமைக்கவும் ஆசிரியருக்கு உரிமை உண்டு. தேன்சிட்டு மின்னிதழ் குழுமம் சார்ப்பாக வெளியிடுபவர். நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.
முகவரி: 73. நத்தம் கிராமம். பஞ்செட்டி அஞ்சல், பொன்னேரி வட்டம் 601204
அலைபேசி: 9444091441: இமெயில் thalir.ssb@gmail.com.