கவிதைச்சாரல்! பகுதி 1

கவிதைச்சாரல்!

சருகு

அந்த தெருவில்
அப்படியொரு வீடு

பொன்னையா வீடு என்றால்
எல்லாரும் சொல்வார்கள்

பொங்கலுக்கு கூட புது சட்டை
போடாது

காவி நிற கதவு ..
கதவில் சின்ன சின்ன ஓட்டை..

உள்ளே சென்றால் ஓர் மனிதர்
மட்டும் தான்

அவரின் துணையாக சிலந்தி பூச்சிகளும்
குட்டி நாயும்..

கயிற்று கட்டில்
அதே பச்சை சிவப்பு கம்பளி

அடிப்பக்கம் மெலிந்த
தண்ணீர் சொம்பு

தேன்சிட்டு ஜூலை மின்னிதழ்! குறும்பா ஸ்பெஷல்!

பாதி எரிந்த மெழுகுவர்த்தி
பாதியில் இழந்த மனைவி
பார்க்க மறந்த பிள்ளைகள்
இவர்கள் புகைப்படங்களுடன்
எம்.ஜி.ஆர்

கட்டில் கீழே மருந்து சீட்டு
மருந்து வாங்க பணம் இருக்கு
வாங்க சொல்ல யார் இருக்கா

சத்தம் போடும் காத்தாடிதான்
தாத்தாக்கு தாலாட்டு

தூங்க போகும் வரைக்கும்
யாரும் வரல

இப்போ தூக்கி போக
சொந்தம் வருது

பாசமா கூட இருக்கலாம்….
பாழ் அடைஞ்ச இந்த
வீடா கூட இருக்கலாம்…

ரா.ஆனந்த்

 அஞ்சலகம்

கோயில் படம் வரைந்தால் 

கோயிலுக்கும்..

நீர் நெளிந்தோடினால்

ஆற்றங்கரைக்கும்

வயல்வெளி வரைந்தால்

களத்து மேட்டிற்கும் என்று

தகவல் சொன்ன..

முனுசாமி காலி செய்துவிட்டுப்போன 

பழுப்பேறிய வெண்சுண்ண

குட்டிச்சுவரொன்று 

மழை வெள்ளத்தில் கரைந்துபோக..

மற்றுமொரு அஞ்சலகத்திற்கான

குட்டிச்சுவர் வேண்டி

எந்த வீடு காலியாகுமென

ஏங்கித்தான்போகிறது..

ஊருக்கு தெரியாத அந்த காதல் மனது.

தேன்சிட்டு ஆகஸ்ட் மின்னிதழ் நகைச்சுவை ஸ்பெஷல்!

செம்பா மோகன்

ஏதோ ஒன்றில்லையென்று
வந்தவர்கள் …
ஒன்றுமே இல்லையென்று
உதறிப்போட்டுப் போகிறார்கள்…

வருமானம் தேடி வந்தவர்கள்
அவர்கள் கொண்டு செல்லும்
வெகுமானப் பெட்டிகளில்
வேதனையும் கண்ணீரும்…

அகலமான நான்கு வழிச்சாலைகளில்
கூனிக்குருகி நடக்கிறது
அவர்கள் எதிர்காலம்…

வயிற்றுப்பசிக்காய் இடம் மாறி வந்தவர்கள்…
வாழ்க்கைப் பசியோடு அவர்களின் பயணம்…

கைகொடுத்து தூக்கிவிட்டவர்கள்
எட்டி உதைக்கப்பட்டதில்
விழுந்த இடங்களில் வேர்கள் அறுபட்டு வேகமாக நடக்கிறார்கள்…

முகவரியை தக்கவைக்க
வந்தவர்கள்
முகங்களை தொலைத்துவிட்டுச் செல்கிறார்கள்…

வயிற்றுப்பசியை அடக்க வந்தவர்கள்…
வறுமையின் ருசியை
சுமந்து செல்கிறார்கள்…

அவர்கள் குடும்பம் குடும்பமாக பயணப்பட்டுப் போகிறார்கள்
அவர்களின் பாதச் சூட்டில்
தேசம் பல் குத்தி முகர்ந்து கொள்கிறது…

எந்தப் புலமுமில்லாமல்
எங்கே போகிறார்கள்
அவர்கள்
எங்கோ போகிறார்கள்
நம்பிக்கையை சிலுவையாய் சுமந்து

அனீஸ் அஹமத்

பப்பாளி மரத்தின்
யாரும் கவனிக்காத கனிந்த பழமொன்றை
காக்கை கொத்தி கீழே தள்ளியது
இன்னும் சில காக்கைகள் வந்தன
தின்றதுபோக மிச்சம் வைத்துவிட்டுச்சென்றன
பின் மைனாக்கள் வந்தன
அவையும் தின்றதுபோக
மிச்சம் வைத்துவிட்டுப் பறந்தன
பின் கற்றாழைக்குருவிகள் வந்தன
அவையும் புசித்ததுபோக
மிச்சம் வைத்துவிட்டுப்பறந்தன
பின் சிட்டுக்குருவிகள் வந்தன
அவையும் எடுத்துபோக
மிச்சம் வைத்துவிட்டு பறந்தன
பின் வண்டுகள் வந்தன
அவையும் தின்றதுபோக
மிச்சம் வைத்துவிட்டு அகன்றன
இப்போது சாரைசாரையாய்
எறும்புகள் வந்து
கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்துக்கொண்டு கடக்கின்றன
மனிதனுக்கு தப்பித்த ஒரு பப்பாளிப்பழம்
பசியாற்றுகிறது எண்ணிலா உயிர்க்கு
இத்தனை எடுத்ததுபோக
இன்னும் மிச்சமிருக்கிறது
பப்பாளிப்பழம்   கவிதைத் திருடன்

அந்திச் சூரியன்
புறப்படுவதற்கு முன்
ஒருமுறை
ஒத்திகைப் பார்க்கின்றன
கூடு அடையும் பறவைகள்
அந்த
ஆலமரத்தின் கிளைகளில்
தங்கள் நிழல்களை
தரையிறக்கியும் மேலெழுப்பியும்
வட்ட வட்டமாய்
பறந்தவாறே….!!

__ஜெ.பன்னீர் செல்வம்.. _

பாரியன்பன் கவிதைகள்!

    
ஒளிவு மறைவின்றி கைகளை 
விரித்தே வைத்திருக்கிறது
மரங்கள்.
 
உரியவரென்றாலும் 
அனுமதி பெற்று வரவும். 
தனிமையில் இருக்கிறது அறை.
 
எதுவும் செய்யவில்லை 
வேலி தாண்டிய காற்றை 
மரம்.
 .
தாயின் மடியிலிருந்து 
இறங்குவதில் 
குறியாய் இருக்கிறது 
நடைபழகும் குழந்தை.
 
குளத்தில் மிதக்கும் 
நிலவை
பேத்தி கேட்டாளென்று
சல்லடையோடு 
வந்திருக்கிறாள் பாட்டி.
   .
பூத்த காம்பில் 
மீண்டும் பூக்க செடிக்கு ஆசை
அதற்கு ஒருபோதும் 
அனுமதிப்பதில்லை இறைவன்.
 .
ஒளி விலகும் வானத்தில் 
முத்து முத்தாய் வேர்க்கிறது 
மின்மினிகள்.
 
நான் மரணித்தது 
தெரியாமல் 
என்னைச் சுற்றிச் சுற்றி 
வருகிறது 
என்னிறுதி மூச்சுக் காற்று.

 *பாரியன்பன் நாகராஜன் 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: