நெய்தல்

நெய்தல்       #சிறுகதை     ப.தனஞ்ஜெயன்

கண்பார்வையை கூர்மைபடுத்தி ஒவ்வொரு நூலாக கோர்த்துக்கொண்டிருந்தார் கதிர்வேல்,அந்த கிராமத்தில் வேறு யாரும் இவருக்கு துணையாக நெசவு நெய்தல் தொழிலை செய்யவில்லை.தன் வீட்டில் இடது புறமாக தான் கட்டியிருந்த மாட்டு கொட்டகையில் தறியை அமைத்திருந்தார்.அதில் சிமெண்ட் பூச்சு எதுவும் இல்லை.சிறிய அளவில் ஆன பள்ளமும் மேற்புறம் மாட்டு கொட்டகையின் கழிகளில் இருந்து தொங்கி, தாங்கி கொண்டிருந்தது தறியை மேற்கூரையின் கழிகள்.அந்த தறியை சுற்றிலும் சாணியால் மொழுகி சுத்தமாக வைத்திருந்தார்.அதிலிருந்து தறிக்கு எந்த வித இடையூறும் இல்லாமல் பதினைந்து அடி தள்ளி இரண்டு பசுமாடுகளை கட்டி வைத்திருந்தார்.அடிக்கடி மாடு இடும் சாணத்தை எடுத்துவிடுவாள் கதிர்வேலின் மனைவி மடுகரையம்மா.
மடுகரையில் கதிர்வேலின் வீட்டிற்கு அவள் வந்ததால் அந்தப்பெயரே நிலைத்துவிட்டது அவளுக்கு,அவள் பெயர் ரஞ்சிதம்.
கதிர்வேலை கிராமத்தில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் தினை என்று அழைத்தார்கள்.

அந்த அளவிற்கு வறுமை, தினையை வாங்கி காயவைத்து அந்த மாவுப்பொருட்களில் உணவை உட்கொண்டார்கள் அவர்கள் குடும்பத்தினர்.
தன்னை நம்பியிருந்த தம்பியை அவர் எந்த சூழலிலும் விட வில்லை, தான் தறிநெய்த நேரம் போக தன்னுடைய இரண்டு ஏக்கர் நிலத்தில் கடுமையாக உழைப்பார்.கரும்பு பயிருட்டு வந்தார்.அது அவருடைய தறி தொழிலுக்கு ஏதுவாக இருந்தது.

குடும்பத்தில் வறுமை அதிகமாகிவிடவே கதர்வாரியத்தில் சிறிய தொகையோடு சேர்த்து மானியக்கடனுக்கு விண்ணபித்திருந்தார்.வாரத்தில் ஒரு நாள்மட்டும் விற்பனைக்காக தான் நெய்த கைத்தறி துணிகளை பாண்டெக்ஸ் கைத்தறி நிறுவனத்திடம் கொடுத்து பணம் பெற்று வறுவது வழக்கம்.அவர்களிடம் ரசீது வாங்கிகொண்டு வைத்திருந்தார்.இவர் நாள் முழுவதும் தறி அடித்தும் நூலுக்கும் போக சொற்ப பணமே கிடைத்தது,இருந்தாலும் இவரால் இந்தத்தொழிலை விடவேமுடியவில்லை.வயிற்றுக்கு சோறுபோடும் விவசாயமும் ,மானத்தை மறைத்துகாத்த தறித்தொழிலும் என்றுமே மேம்படவில்லை.துரதிருஷ்டவசமாக அவைஇரண்டும் தனியார் வசம் சென்று மீண்டும் வளத்தோடு சேர்ந்து மனித இனத்தின் அழிவையும் வளர்த்துகொண்டிருக்கிறது இன்றைய அரசாங்கம்.கதர் ஆடை அதிக அளவில் இன்று இல்லை.பாரம்பரிய நெல்மணிகளை குறித்து குரல்கொடுத்துவந்த விவசாயத்தின் கடைசிக்குரலாய் வாழ்ந்த நம்மாழ்வாரும் இறந்துவிட்ட பிறகு,இதையெல்லாம் யார் கையில் எடுப்பார்கள் என்று கதிர்வேல் வசிக்கும் ஏம்பலம் கிராமத்தில் உள்ள மனிதர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.கதிர்வேல் வீட்டுப்பக்கம் யாரவது வந்தால் அவர் தறிநெய்யும் அழகை பார்த்துவிட்டு எந்த சலனமும் இல்லாமல் நகர்ந்துவிடுவார்கள்.

தனது உறவினர் சிலர் புதுவை பகுதிக்கு உட்பட்ட மடுகரையை அடுத்து உள்ள சிறுவந்தாட்டில் கைத்தறிப்பட்டு மற்றும் நெசவுத்தொழிலில் ஈடுபட்டிருந்ததால்,அவர் அவங்கு சென்று சில நாட்கள் தங்கி அந்தத்தொழிலை செம்மையாக கற்றுக்கொண்டதாக அடிக்கடி சொல்வார்.

இவர்விண்ணப்பித்திருந்த கடன் தொகை ஐந்தாயிரத்திற்கான சோதனையை மேற்கொள்ள மூன்று ஆபிசர்கள் ஒரு அரசாங்க ஜீப்பில் வந்திறங்கி அவருடைய தறிக்கூடத்தை பார்வை இட்டார்கள்.ஒருவர் மூக்கு கண்ணாடி அணிந்து கையில் ஒரு பைலோடும் ,தன் கண்ணாடி மூக்கின் பாதியில் தொங்கி கொண்டிஇருந்தது,இவர் கண்ணாடியை மூக்கிற்க்கு போட்டிருந்தாரா அல்லது கண்ணுக்கு போட்டிருந்தாரா என்கிற அளவிற்கு கண்ணாடியை விட்டு வெளியே இருந்தது கண்கள்.மற்றொருவர் தான் அணிந்திருந்த சட்டைபட்டன்கள் கிழிந்துவிடும் அளவிற்கு பெரிய தொந்தி,அவர்கள் இருவரும் மாட்டுகொட்கையில் குனிந்து பார்வையிட்ட பிறகு,கதிர்வேல் நீங்க இப்படி மாட்டு கொட்டகையில் தறி வைத்து இருந்தால் கடன் கிடைக்காது என்றார்கள் வந்திருந்த இருவரும்.

உடனே கதிர்வேல் கொஞ்சம் பெரிய மனசு வைச்சு கடனை கொடுங்க,எப்படியாது அடைச்சுவிடுகிறேன் ஐயா என்று கெஞ்சினார்,ஒரு ஏழையால் இதைத்தான் செய்யமுடியும்.அதற்குள் ரஞ்சிதம் அவர்களுக்கு டீ போட்டு எடுத்துவந்தாள்,ஆனால் அவர்கள் அதைக்குடிக்க மறுத்துவிட்டார்கள்.அவரோடு வந்திருந்த ஜீப் ஓட்டுனர் ஜீப்பில் இருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து நீட்டினான்.அதைவாங்கி இருவரும் குடித்துக்கொண்டே,”கதிர்வேல் கொஞ்சம் செலவு ஆகும்” என்றனர்.

“அடுத்த முறை துணியை எடுத்துக்கொண்டு நகரத்திற்கு வரும்பொழுது ஆபிஸ் வாங்க” என்று சொல்லிவிட்டு கதர்வாரியம் என்று பெயரிட்டிருந்த அந்த பழைய ஜீப் அதிகமான கருப்பு நிற புகையை வெளியில் தள்ளிக்கொண்டே கிளம்பியது.அந்தவாரம் இரண்டு செட் கூடுதலான மடிப்புகளை நெய்து முடிக்க இரவு பகல் பாராது உழைத்தார்.
தான் விற்பனை செய்யும் இடத்தில் துணியைக்கொடுத்துவிட்டு கிடைத்த ஐநூறு ரூபாய் லாபத்தோடு அரசு அலுவலகத்தை அடைந்து ,அதிகாரிகளிடம் கொடுத்து கடனுக்கான ஏற்பாடுகளை செய்தார்.எப்படியோ மேலும் ஒரு ஐநூறு செலவு செய்து கடன் தொகையை பெற்றுவிட்டார்.

தன்னுடன் பிறந்த தம்பி முத்தையனின் உயர்கல்விக்காக அந்தப்பணத்தை கொஞ்சம் கொடுத்து உதவினார்.மீதம் உள்ளதில் நூலும் வாங்கிசெலவாகிவிட்டது.


முத்தையனும் ஆங்கில விரிவுரையாளராக அரசுப்பணியில் சேரும் வரை கதிர்வேல் உதவி வந்தார்.முத்தையனைக்கு திருமணம் நடந்து முடிந்தபிறகு அண்ணனை விட்டு தனிக்குடித்தனம் சென்றுவீட்டார்
முத்தைய வாத்தியார்.

அப்பொழுதும் மனம் தளராத கதிர்வேலின் தறிசப்தம் உரக்க கேட்டுக்கொண்டே இருந்தது.தன்னுடைய இருமகன் மற்றும் ஒரு மகளுக்கும் திருமணம் முடித்தார்.அனைத்தும் தறி நெய்தும் இரண்டு ஏக்கர் விவசாயத்தில் உழைத்தும் முடித்ததுதான்.அடிக்கடி அவரின் மகள் மலர்கொடி அப்பாவை பார்த்துவிட்டு செல்வது வழக்கமாய் இருந்தது.இரண்டு பிள்ளைகளும் திருமணத்திற்கு பிறகு சொத்துகளை பிரித்துக்கொண்டு தனித்தனி குடும்பமாக சென்றுவிட்டார்கள்.

நிலத்திலும் வேலை இல்லாமல் போகவே,தன்னுடைய தறியை குடும்பமாக நினைத்து அதன் சப்தத்தில் காலம் கழித்தார் கதிர்வேல்.பெரும்பாலான நேரங்களில் கோவனத்தோடுதான் தறியில் அமர்ந்திருப்பார்.விற்பனைக்கு செல்லும் போது மட்டும் வெள்ளைநிற வேட்டியும் சட்டையும் அணிவது வழக்கம்.ரஞ்சிதத்திற்கு உடல் நிலை சரியில்லாத போதும் இவரே அவளுக்கு பால் காய்ச்சிதருவது தன்னால் ஆன சமையலை செய்து கொடுப்பார்.ரஞ்சிதம் தறிக்கு உதவிய நேரம் போக, விவசாய வேலைக்கு சென்று ஏதும் மிஞ்சவில்லை.அனைத்தும் தறிநெய்யும் நூல் வாங்கவும்,சாப்பிட்டிற்குமே செலவாகிவிட்டது.இப்படியே வாழ்ந்து பழக்கமாகிப்போன ரஞ்சிதம் ஒரு சிலவருடங்களில் கதிர்வேலை விட்டு பிரிந்து உடல்நிலை சரியில்லாமல் இறந்துபோனாள்.


அப்பொழுது அவளுக்கு எழுபது வயதும்,கதிர்வேலுக்கு என்பத்தி ஒரு வயதும் ஆகியிருந்தது.

அவள் இறந்து ஒரிரு நாட்களிலேயே மீண்டும் தறிசப்தம் கேட்டது,எந்த சொந்தமும் உறவுகளும் திரும்பி பார்க்கவில்லை.எவ்வளவோ வாழ்வில் நடந்தாலும் தன் தம்பியின் மேலும் மகன்கள் மேலும் கோபம் கொள்ளாமல் தன் தறியின் சப்தத்தோடும் தாளத்தோடும் பேசிக்கொண்டே அவர் வேலையை செய்தார்.

வயது முதிர்வின் காரணமாக மாடுகளை கவனிக்க முடியாது போனதால்,தன் மகன்கள் வசம் தலா ஆளுக்கு ஒரு பசுவை பிரித்துகொடுத்தார்.மாடுகள் அந்தக் கொட்டகையை விட்டு சென்றபின் இடத்தை சுத்தப்படுத்தி அங்கே கட்டில் ஒன்றை போட்டு படுத்துக்கொண்டு,ஓரமாக விறகு அடுப்பினை எரிய வைத்து தனியாக உணவினை தயாரித்து பழக்கபடுத்திகொண்டார்.

தனிமை அவருக்கு மிகவும் பிடித்துபோனது.துன்பம் என்பது நிறைய பேர் வாழ்வில் இறுதிவரை பயணித்து சிரித்துகொண்டே இருக்கும்,அதைப்பார்த்து மனிதன் அழுதுகொண்டே இறப்பான்.எப்பொழுதுமே வயிற்றுக்கு முன் எந்த உறவும் நிலையாக கைகோர்த்து நிற்பதில்லை.தறி சப்தம் கேட்டுக்கொண்டிருக்கும்போதே அவர் இறந்தும் போனார்.அப்பொழுது அவரை சுற்றி அவரின் மகன்கள் ,மகள் மற்றும் ஆசையாக வளர்த்த தம்பி முத்தையன் உட்பட எந்த விதமான சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தனர்.ஆனால் அவர்கள் ஆழ்மனதில் அவர் அடித்த தறியின் சப்தம் அவர்கள் அனைவர் வாழ்விலும் கேட்டுக்கொண்டே இருந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: