இந்திய கிரிக்கெட் நினைவலைகள்!

இந்திய கிரிக்கெட் நினைவலைகள்!

இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு. எனக்கு ஓரளவு கிரிக்கெட் அறிமுகம் ஆன 1986ல் இருந்து நான் பார்த்து ரசித்த கிரிக்கெட் போட்டிகள் பற்றி இந்த தொடரில் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். தகவல்கள் என் நினைவுகளில் இருந்து எடுப்பதால் துல்லியமாக இருக்காது. சில தகவல்களை கூகுளில் தேடி எடுத்து தருகிறேன்! நன்றி இனி தொடருக்குள் செல்வோம்!

இந்தியா- ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி, சேப்பாக்கம், சென்னை. 18-22 செப்டம்பர்-1986  “டை” ஆன இரண்டாவது போட்டி

இன்று இந்திய கிரிக்கெட் பெருமளவு வளர்ந்து பெரும் வணிகமாக மாறிவிட்டிருக்கிறது. ஆனால் அன்றைய கிரிக்கெட் மிகவும் அழகாக இருந்தது. எனக்கு நினைவு தெரிந்து 1986 சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிதான் நான் பார்த்த ஊகும் கேட்டு ரசித்த முதல் கிரிக்கெட் போட்டி. அந்த போட்டியின் சுவாரஸ்யம் என்னை கிரிக்கெட் ரசிகனாக மாற்றிவிட்டது.

 அது 1986ம் வருடம் செப்டம்பர் மாதம் காலாண்டு தேர்வுகள் முடிந்து   விடுமுறை விடப்பட்டிருந்த சமயம். நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாக நினைவு. பெரும்பேடு அரசு உயர்நிலைப்பள்ளியில் காலாண்டு தேர்வு எழுதிவிட்டு வயல் வரப்புகளில் நடந்து ஆசானபூதூருக்குச் செல்லும் சமயம் நண்பன் இளங்கோ என்ற ”செல்லா” தான் இந்த கிரிக்கெட் போட்டி நடப்பது பற்றி சொன்னான். நாளைக்கு  மெட்ராஸ்ல கிரிக்கெட் மேட்ச் நடக்க போவுது! ரேடியோவில வர்ணனை பண்ணப் போறாங்க! செம இண்ட்ரஸ்டா இருக்கும் கேட்டுப் பாரு!

மறுநாள் மாமாவிடம் அனுமதி வாங்கி ரேடியோவை ஆன் செய்த போது போட்டி துவங்கிவிட்டிருந்தது. கபில்தேவின் பந்துகளை பூனும் மார்ஷும் விளாசுவதை அப்துல் ஜப்பார், சிவராமகிருஷ்ணன், கூத்தபிரான் போன்றவர்கள் வர்ணனை செய்வதை கேட்பது அலாதி சுகம்.

அப்போதைய வயதில் பீல்டிங் கட்டுப்படுகள், விதிகள் ஏதும் தெரியாது. மொகிந்தர் அமர்நாத்துக்கு கண் தெரியாது. தடவுவான் என்று நண்பன் கூறியதை அப்படியே நம்பி வீட்டில் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருந்தேன்.

1986ல் நடந்த இந்த டெஸ்ட் மேட்ச்  உலக வரலாற்றில் இரண்டாவது முறையாக  டை ஆன டெஸ்ட் மேட்ச். அதற்கப்புறம் இதுவரை எந்த டெஸ்ட் மேட்சும் டை ஆனதா தெரியவில்லை.

 முதல் இன்னிங்க்ஸில் அப்போதை ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர வீரராக உருவெடுத்துவந்த டீன் ஜோன்ஸ் இரட்டை சதம் விளாச பூன் மற்றும் ஆலன் பார்டர் சதங்கள் எடுக்க 574 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா.

 அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ஸ்ரீகாந்த், ரவிசாஸ்திரி, அசாருதின் அரைசதம் அடிக்க கபில்தேவ் சதம் விளாச 397 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணியில் க்ரெக் மேத்யூஸ் ஐந்துவிக்கெட்கள் வீழ்த்தினார்.

இதற்கே மூன்றரை நாட்கள் ஓடிவிட ஆஸ்திரேலிய அணி நான்காவது நாளில் மதியம் மட்டும் விளையாடி 49 ஓவர்களில் 170 ரன்கள் அஞ்சு விக்கெட் இழந்து எடுத்து டிக்ளேர் செய்தது.

ஐந்தாவது நாள் ஆட்டத்தில் 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை துவக்கியது இந்திய அணி, முதல் இன்னிங்க்ஸில் சரியாக விளையாடாத கவாஸ்கர் சிறப்பாக ஆட அதிரடியாக ரன் குவித்த  ஸ்ரீகாந்த்  39 ரன்களில் விரைவில் நடையை கட்டினார். ஒன் டவுனாக வந்த மொகீந்தர் அமர்நாத் அரைசதம் கடக்க அவுட் ஆனார். அசாரூதின்  சந்திரகாந்த் பண்டிட் ஓரளவுக்கு ரன்கள் சேர்க்க வெற்றியை நெருங்கியது இந்தியா.

 அப்போதுதான் ஒரு டிவிஸ்ட் நடந்தது.மேத்யூஸின் வேகத்தில் பண்டிட் போல்டாகி செல்ல உள்ளே வந்த கபில்தேவ் ஒரே ரன்னில் ஆட்டமிழக்க ஆட்டத்தில் பதற்றம் ஏற்பட்டது. ஆனாலும் அப்போதைய ஹீரோ ரவிசாஸ்திரி சில பவுண்டரிகளும் சிக்ஸர்களும் விளாச வெற்றியை நெருங்கியது இந்தியா. அப்போது சேதன் சர்மா ஆட்டமிழக்க பின்னே வந்த கிரன் மோரே டக் அவுட் ஆக பவுலர்கள் சிவ்லால் யாதவ் மணிந்தர் சிங்குடன் போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ரவிசாஸ்திரிக்கு. சிவ்லால் யாதவ் எட்டு ரன்களில் ஆட்டமிழக்க மணிந்தர் சிங்கை வைத்து 346 ரன்கள் வரை கொண்டு வந்துவிட்டார் ரவிசாஸ்திரி  இன்னும் நான்கு ஓவர்கள் இருக்க 87வது ஓவரை மாத்யூஸ் வீச வருகிறார் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்துவிடுகிறார் சாஸ்திரி அடுத்த பந்தை சந்திக்கும் மணீந்தர் சிங் எல்.பி. டபிள்யூ ஆக ஒரு ரன்  எடுக்க முடியாமல் மேட்ச் டை ஆகிறது.

 வர்ணனையாளர்களுக்கு அப்போது “டை” என்று ஒன்றிருப்பதே தெரியவில்லை!  இது தோல்வியா? டிராவா என்று விவாதித்துக் கொண்டிருக்க அந்த ட்ராமா மேட்ச் முடிவில் “டை” என்று முடிவானது. வெற்றியை நெருங்கி கோட்டைவிட்டாலும் இந்திய வரலாற்றில் முதல் டை ஆன மேட்ச் என்ற சாதனை படைத்தது. மணீந்தர் சிங் அப்போது மிகத்திறமையான சுழல் பந்துவீச்சாளராக இருந்தாலும் மட்டை வீசுவதில் மிகவும் திறமையற்றவர். மேத்யூசின் முதல் பந்திலேயே அவர் அவுட்டானதால் இந்தியா வெற்றிவாய்ப்பை இழந்தது. இந்த போட்டியை நேரில் பார்க்காவிட்டாலும் வானொலியில் வர்ணனைகளை கேட்டு ரசித்தது. அப்போதைய நண்பர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தது நினைவில் இருக்கிறது. இந்த போட்டிக்கு பின் எனது கிரிக்கெட் ஆர்வம் வளர்ந்து நண்பர்களுடன் நானும் கிரிக்கெட் ஆட ஆரம்பித்தேன்.  இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் சுவாரஸ்யமான போட்டி இது. இப்போட்டி பற்றி உங்கள் நினைவலைகளை கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்!