காதல் கவிஞர் வேலூர் முத்து ஆனந்த்

காதல் மனசு!
இப்பிறவியில் கண்ட உன்னை
எப்பிறவியிலும் நேசிக்க ஆசை!
உன் கவிதைகளைப் படித்துப் படித்து
உன் மீது உயிரையே வைத்த என்னை
கவிதையாக்கிப் படித்தவன் அல்லவா நீ!
ஒவ்வொரு முறை நாம் தழுவும் போதும்
முதல் முறையாகத் தோன்றும் உணர்வை
உன்னால் மட்டும் எப்படியடா வழங்க முடிகிறது?!
உன் இதழ்கள் சொல்வதற்கு முன்பே
உன் விழிகள் சொல்லும் உத்தரவை
நிறைவேற்றுகிறதே என் காதல் மனசு!
உன் கட்டளைகளுக்காகவே காத்திருக்கும்படி
அப்படி என்னடா மாயம் செய்து
என்னை மயக்கி வைத்திருக்கிறாய் நீ?!
உனக்கு எப்படி என்று தெரியவில்லையடா
ஆனால் – எனக்கு
உன்னைக் காதலிக்கவே நேரம் போதவில்லை!
என் கண்கள் பார்க்கும் திசைகள்
அத்தனையிலும் நீதான் காட்சியளிக்கிறாய்!
உன்னைப் பிரியாமல் இருக்கும்
வரம் ஒன்றை மட்டுமே
என் வாழ்க்கை கேட்கிறது!
உன் ஒரு புன்னகையில்கூட
ஊஞ்சலாட வைக்கும் அன்பு
அமுதமாய் வழிந்தோடுகிறது!
ஒவ்வொரு முறையும் நானும்
முயற்சித்துத் தோற்றுக் கொண்டுதான்
இருக்கிறேன்
உன்னைவிட அதிகமாய்
அன்பு செலுத்த முடியாமல்!
வளர்பிறை!

ஒரு வீணையை மீட்டுவதைப்போல்
உன்னால் மட்டும் எப்படி
அவ்வளவு அழகாய் ரசித்து ரசித்து
என்னைத் தொட முடிகிறது?!
எண்ணிக்கையிலடங்கா முத்தங்களை
எனக்கு வழங்கும் நீ
வள்ளல் வம்ச வாரிசு அன்பே!
என்னிடம் மட்டும்
இந்தப் பெருமையைச் சொல்ல
உனக்கு என்ன தயக்கம்?
ஏன் தயக்கமடா?
ஒரு வீரச் சக்ரவர்த்தி
வில்லை வளைப்பதுபோல்
என்னை வளைக்க
நீ எங்கிருந்து கற்றுக் கொண்டாய்?!
உன் முத்தங்கள்தான்
எனக்குக் கவிதைகள் என்று
நான் எப்பொழுதோ சொன்னதை
நினைவில் வைத்து
இப்பொழுதும் என் இதழ்களில்
ஏராளமான கவிதைகளை
தாராளமாக எழுதுகிறாய்!
இதுவரை என்னை
எதுவுமே கேட்க விடாமல்
நீயாகவே எனக்கு
எல்லாவற்றையும் வழங்கும்
ஓர் அதிசயப் பிறவியடா நீ!
உன் இதழ்கள் என் மேனியில்
அடிக்கடி வலம் வருவதாலோ என்னவோ
என் தங்க அங்கத்தின்
மிணுமிணுப்பும் பளபளப்பும்
அதிகரித்துக் கொண்டே போகிறது!
நிலவு என்று நீ
என்னை அடிக்கடி அழைத்தாலும்
எனக்கு என்றுமே
வளர்பிறை (மட்டும்) தான்!
தேன்சிட்டு அடுத்த இதழுக்கான உங்கள் படைப்புக்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 20-6-2020.
மலர்ச்சி!

மௌனமாக இருந்து
உனக்கும் சேர்த்து என்னைப் பேச வைப்பதே
உனக்கு எப்பொழுதும் வேலையாகப் போயிற்று!
ஓர் ஆசையைக்கூடச் சொல்ல விடாமல்
அதற்கு முன்பாகவே என் ஆசைகளை
முழுவதுமாய் நிறைவேற்றிவிடும்
உன் காதலின் அளவை
எப்பொழுதுமே என்னால் சொல்ல முடியாதடா!
எல்லோருக்கும் வாழ்க்கையில்
வசந்தம் வரும்
எப்பொழுதும் என் வாழ்வில் வசந்தம்
நீ (மட்டும்) தான் அன்பே!
கவிதை என்றால் எனக்கு மட்டுமல்ல
உனக்கும் எவ்வளவு ஆசை என்று
எனக்கும் தெரியும்!
அதனால்தான் நீ அடிக்கடி
படிக்க வேண்டுமென்று
நான் கவிதைப் புத்தகமாகவே மாறிவிட்டேன்!
நினைத்த போதெல்லாம்
நீ என்னை எடுத்துப் படித்தால் போதும்
அதைவிட வேறென்ன சுகம் வேண்டும் எனக்கு!
நீ தொடத் தொடத்தான்
என் மலர்ச்சி அதிகரிக்கிறது!
என் வாசத்தை நீ எப்பொழுதும்
சுவாசிக்க வேண்டுமென்ற ஆசை
எனக்கும் என் காதலுக்கும்
எந்த நாளும் கொஞ்சமும் குறையாதடா!
முத்து ஆனந்த் வேலூர்