
மாளிகையின் பெயர் லெட்சுமி விலாசம்.
முதலில் கூரையில்லாத தர்பார் மண்டபம்.
ஜமீனின் 64 கிராமத்தைச் சேர்ந்த கணக்குப்பிள்ளைகள் இங்கு அமர்ந்து தான் வரவு , செலவு கணக்குப் பார்ப்பார்களாம்.
அடுத்து பெரிய கூடம்,அதில் பழைய புகைப்படங்கள்,இரும்பு லாக்கர்கள்,பழைய கட்டில், நாற்காலிகள் போன்ற பொருட்கள்..பழைய பெஞ்சு ஒன்று.
இங்கு தான் ஜமீனின் சில வாரிசுகள் குடியிருந்து வருகிறார்கள்.
மேலே விதவிதமான வெளிநாட்டு கண்ணாடி தொங்கும் சரவிளக்குகள்.
அருகில் நாடக அரங்கு மண்டபம்,.ஒரு காலத்தில் ஆயிரம் பேர்கள் புழங்கிய இடம், தற்பொழுது ஐந்து நபர்கள் மட்டுமே !எங்கு பார்த்தாலும் கட்டடச் சிதைவுகள்..
இது தான் இன்றைய உடையார்பாளையம் ஜமீன் அரண்மனை.
தமிழகத்தில் உள்ள பழைய பாளைய ஆட்சிகளுள் ஒன்று உடையார்பாளையம்.
இதன் ஆட்சியாளர்கள்,’காலாட்கள் தோழ உடையாளர்கள் ‘ எனப்பட்டனர்.
30 ஏக்கரில் பரந்து விரிந்த அரண்மனை.600 ஆண்டுகள் பழமை.
அகழி, கோட்டைச்சுற்றுச் சுவருடன் இருந்த அரண்மனையில்
64 அறைகள் இருந்துள்ளன.
வேங்கடப்ப உடையார் என்பரது ஆட்சிக்காலத்தில் இங்கே நாணயங்கள் அச்சிடப்பட்டு அவை ‘உடையார்பாளையம் புதுப்பணம் ‘ என வழங்கப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் இஸ்லாமியப் படையெடுப்புகளுக்கு அஞ்சி,
காஞ்சி காமாட்சி, வரதராஜர்,ஸ்ரீமுஷ்ணம் பூவராகவர்,சிதம்பரம் நடராஜர் முதலிய மூர்த்திகள், உடையார்பாளையம் ஜமீன் பாதுகாப்பில் வைத்துப் பாதுகாக்கப்பட்டதாம்.
உ.வே. சா, போன்ற தமிழறிஞர்கள்,
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரி அவர்களின் மகன் சுப்பையா சாஸ்திரி போன்ற இசைஞானிகள் உடையார்பாளையம் ஜமீனின் பராமரிப்பில் இருந்துள்ளனர்.
உ. வே. சா. வின் ‘ என் சரிதை’ என்ற அவரது வாழ்க்கை வரலாற்று நூலில் உடையார்பாளையம் ஜமீன் குறித்த
பல குறிப்புகள் வருகின்றன.
உடையார்பாளையம் ஜமீந்தார்கள் ஆட்சிக்காலத்தில் கோவில்களுக்கு
பல திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.
ஜமீன் அரண்மனையின் எதிரே உள்ள வீதியின் கடைசியில்
இவர்களது சிவாலயம் உள்ளது. இறைவன் ;பயறணீஸ்வரர்,
இறைவி ; சகுந்தலாம்பிகை.
மிகப்பெரிய கோபுரங்கள்,
13 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ள காண்டீப தீர்த்தம் போன்றவை காணக்கிடைக்காத காட்சி.
திருவாரூர் தியாகேசர் ஆலயத்திற்கு அடுத்து இங்கு தான் தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெறுமாம் !
திருக்குளத்தில் நீராழிமண்டபம் மற்றும் உடைமாற்றும் மண்டபமும் காணப்படுகிறது. இக்கோவிலும், குளமும் பல திரைப்படங்களில் காட்சியாக வந்துள்ளது.
உடையார்பாளையம் ஜமீனுக்கும்
காஞ்சி மகா பெரியவருக்கும் உள்ள தொடர்பு வரலாறு பூர்வமானது. 1928 மற்றும் 1939 ஆண்டுகளில்
மகா பெரியவா அவர்கள் சில நாட்கள் இங்கு தங்கியுள்ளதாக ஜமீன் வாரிசுகள் தெரிவிக்கின்றனர்.
மகா பெரியவா இங்குத் தங்கியிருந்த பொழுது காண்டீப தீர்த்தத்தில் படகில் பயணம் செய்து, நடுவில் உள்ள நீராழி மண்டபத்தில் தியானம் செய்வது வழக்கமாம். அவர்கள் பயணம் செய்த படகு இன்றும் ஆலயத்தில் வைத்து பாதுக்கப்படுகிறது.
ஜமீனில் இடம் பெற்றிருந்த ஒரு பழைய புகைப்படம் ,
அதில் ஆலய கோபுரம் ,காண்டீபதீர்த்தம் மற்றும் நீராழி மண்டபமும் இடம் பெற்றுள்ளது.
அதை உற்றுப் பார்த்தால், நீராழி மண்டபத்தில் மகா பெரியவா மான் தோலில் அமர்ந்து தியானம் செய்யும் அற்புதக் காட்சித் தெரியும் !
சுமார் 400 ஆண்டுகளுக்கு மேல்
கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயம் இவர்களது பராமரிப்பில் இருந்துள்ளது. கோபுர கலசம், சிங்கமுக கிணறு போன்றவை இவர்களது கொடையாம் !
டச்சுக்காரர்களால் கட்டப்பட்ட தரங்கம்பாடி கோட்டையை,
பல ஆண்டுகளுக்குமுன் அந்த நாடு இழந்தாலும் ,
கோட்டையை பராமரிக்க இன்றளவும் நிதி வழங்கி வருகின்றது.
அதற்கும் முந்தைய வரலாறுக் கொண்ட உடையார்பாளையம் அரண்மனை போன்றவை கண்முன்னே அழிந்து வருவது மிகுந்த வேதனை !
கண்ணில் பட்ட பதிவு
சிவராம கிருஷ்ணன் பக்கம்
யார் எழுதியது என்று தெரியவில்லை