“நான் என்னை ஹீரோவாக உணர்கிறேன்” – பொன்மகள் வந்தாள் | ஜோதிகா

ஓடிடி (OTT) பிளாட்ஃபாரத்தில் நேரடியாக வெளியாகும் முதல் இந்திய மெயின்ஸ்ட்ரீம் திரைப்படம் என்ற பெருமையைப் ‘பொன்மகள் வந்தாள்’ பெற்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பினைத் தூண்டியுள்ள இந்தப் படத்தைப் பற்றி ஜோதிகா, “இது ஒரு சமூக அக்கறையுள்ள கதை. த்ரில்லர் படம் என்பதால் என்ன சமூக அக்கறை என்பதை சொல்ல முடியாது. இந்தப் படத்தில்  5 இயக்குநர்களுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். கடந்த படத்தில் ரேவதி மேடம், ஊர்வசி மேடம் இந்தப் படத்தில் பார்த்திபன் சார், பாக்யராஜ் சார், தியாகராஜன் சார் ஆகியோருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். அனைவரிடமும் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அவர்கள் எப்படித் தங்களுடைய கதாபாத்திரத்துக்குத் தயார் செய்து கொள்கிறார்கள், நீளமான வசனத்தை எப்படி சரியாக உச்சரித்து நடிக்கிறார்கள் உள்ளிட்ட விஷயங்களை ஒரு நடிகையாகக் கற்றுக் கொண்டேன்.

இந்தப் படத்தில் 3 – 4 நீளமான வசனக் காட்சிகள் இருக்கிறது. 3 மாதத்துக்கு  முன்னாடியே படத்தின் ஸ்கிரிப்ட் புக்கை இயக்குநர் கொடுத்துவிட்டார். பார்த்திபன்  சாருடன் நின்று கொண்டு வசனம் பேசி நடிப்பதே சவால்தான்.  ஃப்ரெட்ரிக் எனக்கு நிறைய நேரம் கொடுத்திருந்தார். நான் நடித்த படங்களில் நிறைய முன் தயாரிப்பு செய்து நடித்த படம் இது தான். இந்தக் கதையை முதல் முறையைக் கேட்ட போதே கண்டிப்பாக நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். இதுவரை நான் நடித்த படங்களிலேயே அதிக உழைப்பைப் போட்டுள்ள படம் இது தான். ஏனென்றால், இந்தப் படத்தின் கதை எனது மனதுக்கு மிகவும் நெருக்கமானது.

இந்தப் படத்தில் வெண்பா என்ற வக்கீலாக நடித்துள்ளேன். உயர்நீதிமன்ற வக்கீலாகவோ, உச்சநீதிமன்ற வக்கீலாகவோ நடிக்கவில்லை. ஊட்டியில் ஒரு சின்ன நீதிமன்றத்தின் வக்கீலாக நடித்துள்ளேன். முதல் முறையாக வக்கீல் உடையணியும் போது ரொம்ப வலுவாக உணர்ந்தேன். இந்த மாதிரியான கதைக்களம் கொண்ட படங்களில் சண்டைக் காட்சிகளில் நடித்து ரசிகர்களை ஏமாற்ற முடியாது. வக்கீல் உடையணிந்து வசனங்கள் பேசி நடிக்க வேண்டும். வார்த்தைகளின் பலம் இதில் இருக்கும். வக்கீல் கதாபாத்திரத்துக்காக, 2டி ராஜசேகர் ஒரு வக்கீல் என்பதால் அவரிடம் நிறையப் பேசினேன். நிறைய படங்கள் பார்த்தேன். பொதுமக்கள் வக்கீலை எப்படிப் பார்க்கிறார்கள் உள்ளிட்ட சில கேள்விகளை இந்தப் படத்தில் முன்வைத்துள்ளேன். அது படத்தின் ஹைலைட்டாக இருக்கும்.

நான் ஒரு வட இந்தியப் பெண் என்று யாருமே யோசிப்பதில்லை. வசனங்களாக எழுதிக் கொடுக்கிறார்கள். 35 பக்கம் கொண்ட புத்தகத்தை தினமும் இயக்குநர் ஃப்ரெட்ரிக் கையில் பார்க்கலாம். காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணிவரை 2 பேர் பேசிக் கொண்டே இருப்பதைப் படமாக்கிக் கொண்டிருப்பார். அவ்வளவு வசனங்கள் பேசியிருக்கிறோம். பாக்யராஜ் சார், பார்த்திபன் சார் இருவரும் ஒரு முறை படித்துவிட்டு பேசிவிடுவார்கள். ஆனால், நான் 3 மாதங்களுக்கு முன்பே முழுக்கதையையும் வாங்கி என் வசனங்களை முழுமையாக மனப்பாடம் செய்து பேசியுள்ளேன். முக்கியமாக இந்தப் படத்துக்கு நானே டப்பிங் செய்துள்ளேன். படப்பிடிப்பு வந்து பேப்பர் பார்த்து என்னால் வசனம் பேசி நடித்திருக்க முடியாது.

இப்போது எப்படி சிவாஜி சார், பாக்யராஜ் படங்கள் குறித்து பேசுகிறோமோ அப்படி 20 ஆண்டுகள் கழித்து சில படங்கள் குறித்துப் பேச வேண்டும். அதை மனதில் கொண்டே படங்கள் ஒப்புக் கொள்கிறேன். சில படங்கள் வெற்றியடையும், சில படங்கள் வெற்றியடையாது.  ஆனால் எனது பயணம் இதே வெளியில் தொடர்ந்து கொண்டே இருக்கும்.  இப்போது நிறைய வலுவான கதைகள் வருகிறது. இந்தப் படத்துக்குப் பிறகும் கூட 3 கதைகள் தேர்வு செய்து வைத்துள்ளேன். என் படங்களைப் பெண்கள் பார்க்கும் போது பெருமையாக நினைக்க வேண்டும்.  பெண் கதாபாத்திரத்தை மையாக வைத்து நான் நடித்த படங்கள் அனைத்துமே ஆண்களால் எழுதப்பட்டது தான். நான் இப்போது எல்லாம் ஒரு ஹீரோவாக உணர்கிறேன். இந்தாண்டு எனக்கு 41 வயது ஆகிறது. 41 வயதில் ஹீரோவாக உணர்வது அரிதானது என நினைக்கிறேன்.

அனைத்துப் படங்களிலுமே என் கதாபாத்திரத்தைப் பார்த்து பெண்கள் பெருமையடைய வேண்டும் என நினைக்கிறேன்.  நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை ஹைலைட் பண்ணிப் படங்கள் பண்ணவேண்டும். நிறைய ரசிகர்கள்  படத்தைப் பார்ப்பார்கள். ஆகையால், சமூக அக்கறையுள்ள படங்களாகத் தேர்வு செய்து நடிக்கிறேன்.  கமர்ஷியல் படங்களில் பாட்டு, காதல் காட்சிகள் என்பதைத் தாண்டி வேறு எதுவும் பண்ண முடியாது. இந்த மாதிரி படங்களில் வித்தியாசமான களங்களில் நம்மைக் காண முடியும். நான் கமர்ஷியல் படங்களிலிருந்து வெளியே வந்துவிட்டேன். என்னால் முடிந்த அனைத்தையும் இப்போது தான் செய்து வருகிறேன். அந்த சுதந்திரம் இப்போது இருக்கிறது.

‘பொன்மகள் வந்தாள்’ மாதிரியான படங்கள் எனக்கு வருவதில் மகிழ்ச்சி. நான் எந்தவொரு இயக்குநரிடமும் இந்தமாதிரி படங்கள் பண்ண வேண்டும் என்று கேட்கவில்லை. தானாகவே அமைகிறது. கமர்ஷியல் படங்கள் நிறைய வரவில்லை. அப்படி வந்தால் கூட, என் பசங்களை வீட்டில் விட்டுவிட்டு பாட்டு பாட, நடனமாடப் போக விரும்பவில்லை.  நிஜ வாழ்க்கையில் இருப்பது போலவே பெண்கள் படங்களிலும் வலுவாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஏனென்றால் நிஜவாழ்க்கையில் நிறைய பணிகளைப் பெண்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்போது 2 குழந்தைகளுக்கு தாயாக அதிகமான பொறுப்புள்ள பெண்ணாக இருக்கிறேன். அவர்களுக்கு வெறும் அட்வைஸ் மட்டும் செய்யாமல், என் படங்கள் மூலமாக அவர்கள் நான் எப்படி எனத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். குடும்பப் பெண்ணாக வித்தியாசமான பரிமாணங்களில் காண முடியும். நிஜ வாழ்க்கையில் நான் எப்படியிருக்கிறேனோ, அப்படியே திரையிலும் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்” எனப் பகிர்ந்து கொண்டார். ____________________________________________________________________________________-_நன்றி: இது தமிழ் .காம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: