: மலர்மதி

“சார்… கிரைண்டிங் மெஷின் ஆப்பரேட்டர் கோவிந்தன் சரியா வேலைப் பார்க்கமாட்டேங்கிறான் சார். அரட்டை அடிச்சுக்கிட்டுத் திரிவதே அவன் வேலை. அவனால் மத்த தொழிலாளர்களும் கெட வாய்ப்புள்ளது சார். அவனை நீங்களும் ஒருமுறை அழைத்து ஒழுங்கா வேலைப் பார்க்கச் சொன்னாத்தான் சார் அவனுக்குக் கொஞ்சம் பயம் ஏற்படும்.” என்றான் சூப்பர்வைசர் சிவா.
“ஓ… அப்படியா?” என்ற மேனேஜர், இன்டர்காமில் தொடர்புகொண்டு கோவிந்தனை தன்னுடைய கேபினுக்கு வரவழைத்தார்.
பதறியடித்து வந்தான் கோவிந்தன்.
“கோவிந்தன். உங்களை நான் சில நாட்களாக கவனித்து வருகிறேன். வேலையில் சின்சியரா இருக்கீங்க. இன்னும் கூடுதல் கவனம் செலுத்துவீங்கன்னு நான் நம்பறேன். வாழ்த்துகள். கீப் இட் அப்.” என்று சொல்லி கை குலுக்க, குளிர்ந்து போனான் கோவிந்தன்.
அவன் அகன்றதும், எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த சூப்பர்வைசர் சிவா, “சார், நீங்க அவனைக் கண்டிச்சு அனுப்புவீங்கன்னு பார்த்தா, இப்படி அநியாயத்துக்குப் பாராட்டி அனுப்புறீங்க?” என்று கேட்டான்.
“இந்தப் போலி பாராட்டுத்தான் அவனைத் திருத்துவதற்க்கான ஆயுதம். அவனை இன்னும் சில நாட்கள் கவனியுங்க. மாற்றம் தெரியும்.” என்றார் மேனேஜர் புன்னகையுடன்.
ஒரே மாதத்தில் கோவிந்தன் முற்றிலும் மாறிவிட்டான். ஒழுங்கு மரியாதையுடன் அவன் வேலைப் பார்ப்பதைக் கண்ட சிவா, மேனேஜரின் யுக்தியைக் கண்டு மலைத்து நின்றான்.
@@@@@@@