
அப்பா நாம எப்பப்பா நம்ம சொந்த ஊருக்குப் போவோம் ஜெகன் தந்தையிடம் கேட்டான்.
இப்ப நம்ம ஊருலே தண்ணி இல்லேடா.. அது இல்லாம நம்மலாளே வாழ முடியாது அதான் பத்து நானோ வருஷங்கள் முன்பே இங்கே வந்துட்டோம்.
அப்படீன்னா நம்ம ஊர்ல இப்ப யாருமே இல்லையா?
அப்படி சொல்ல முடியாது.. பல பேர் தண்ணியில்லாம வாழ பழகிட்டாங்க..
அப்ப அது உங்களாலெயும் என்னாலேயும் முடியாதா?
பழகிகிட்டா எல்லாமே முடியும்தான்…
அப்ப நாம போய் கொஞ்சநாள் நம்ம ஊர்ல தங்கிட்டு வரலாம்.
அதுக்கு இந்த க்ளுட்டோ கிரகத்துலே அனுமதி வாங்கனும்..
அனுமதிகேட்கறேன். ஒரு நல்ல நாளில் அவர்கள் புறப்பட்ட விண்கலம் சென்னை மெரினாவில் தரை இறங்கியது.
சுத்தமான கடற்கரை காற்று வீச கடற்கரை மனித நடமாட்டம் குறைவாக இருந்தது..
அப்பா… இந்தாங்க…
ஜெகன் ஒரு ஷாம்பெய்ன் பாட்டிலை எடுத்து கொடுக்க
எப்படிடா இது எங்கே?
நீங்க இங்கே தண்ணி கிடைக்காதுன்னு சொன்னதாலே கிளம்பும்போது எடுத்து வைச்சேன்..
அடேய் தப்பு பண்ணிட்டியே இங்கே தண்ணி அடிக்கிறது சட்டப்படி குற்றம் …
அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே இரு காவலர்கள் அவர்களை நெருங்கினார்கள்.
மது இல்லாத பூமியை உருவாக்கத்தான் மதுப்பிரியர்களை க்ளுட்டோ கிரகத்துக்கு கிரகம் கடத்தினோம்..அங்கிருந்து திரும்ப வந்து மது அருந்திய உங்கள் விசா ரத்து செய்யப்படுகிறது. உடனே கிளம்புங்கள்.
அவர்கள் விண்கலத்தில் ஏறி கிளம்ப ஜெகன் ஜன்னலை நோக்கினான் கீழே மது இல்லாத பூமி ஒளிர்ந்து கொண்டிருந்தது.
எஸ்.எஸ். பாபு. பஞ்செட்டி