தப்பட் விமர்சனம்

பலர் பார்க்க, தன் மனைவியைப் பொதுவெளியில் அறைந்து விடுகிறான் ஒரு கணவன். அந்த மனைவி, கணவனிடம் விவாகரத்து கோருவதுதான் படத்தின் கதை. ‘தப்பட்’ என்றால் “அறை (slap)” என்று பொருள்.

‘ஆர்டிகிள் 15’ எனும் அதி அற்புதமான படத்தை இயக்கிய அனுபவ் சின்ஹாவின் படம். அதுவும் குடும்ப வன்முறையைப் (Domestic violence) பற்றிய படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடுதலாக இருந்தது. மாமியார் கொடுமை, வரதட்சணைக்காகத் துன்புறுத்தப்படுவது, வசை மாரி பொழிதல், கையை நீட்டி அடித்தல் என்ற பிசிக்கல் & வெர்பல் அப்யூஸ்கள் மட்டும் டொமஸ்டிக் வயலன்ஸில் வராது. அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது, குடும்ப நலனெனக் காரணம் காட்டி ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பறிப்பது போன்றவையும் டொமஸ்டிக் வயலன்ஸ்தான்.

நான் கார் ஓட்டக் கத்துக்கவா?” – டாப்சி.

முதலில் ஒழுங்கா பராத்தா போடக் கத்துக்க?” – டாப்சியின் கணவன்.

இந்த உதாசீனத்தை, காது கொடுத்துக் கேட்காத மேலாதிக்க ஆண் மனநிலையை டொமஸ்டிக் வயலன்ஸெனப் பார்வையாளர்கள் மனதில் பதிந்திருக்கவேண்டிய படம், தட்டையான ஒற்றைப் பரிமாணத்தில் தன் நோக்கைத் தொலைத்து விடுகிறது. படத்தின் தலைப்பே அதற்கு சாட்சி.

ஒரு பலவீனமான சூழ்நிலையில், தன்னை மறந்து அறைந்து விடுவது டொமஸ்டிக் வயலன்ஸில் வருமா? அதற்காக விவாகரத்து என்பது சரியா என்ற கேள்வி, சற்றே சிக்கலானது. To Err is Human. அதுவும் போதையில், தன் உழைப்பெல்லாம் வீணானதெனக் கோபத்தின் உச்சியில் இருக்கும் ஒருவன் பண்பட்டவனாக நடந்திருக்கவேண்டுமென எதிர்பார்ப்பது சாத்தியமில்லாத ஒன்று. கோபம் வராத ஆணோ, பெண்ணோ உண்டா? கோபத்தில் வார்த்தையை விடாத மனிதருண்டா?

ஆனால், ஆண்களின் பிரச்சனை, மிக இயல்பான மனநிலையிலேயே டொமஸ்டிக் வயலன்ஸைக் கை கொள்வதுதான். ‘உனக்கு கார் ஓட்டக் கத்துக்க ஆசையா? சரி கத்துக்கோ’ எனச் சொல்லாமல், ‘முதலில் பராத்தா செய்ய ஒழுங்கா கத்துக்கோ. அது தான் உனக்கான வேலை. இந்தியப் பெண்களுக்கான வேலை’ எனத் தெளிந்த மனநிலையில் அவனிடம் வெளிப்படும் மூர்க்கமே வன்முறை. படம், பின்னதைப் பேசாமல், முன்னதிலேயே கவனம் செலுத்திக் கடுப்பேற்றுகிறது. ‘தன்னை அறைஞ்சது நியாயமற்ற செயல்’ என டாப்சியின் மூலம் கிளிப்பிள்ளையைப் போல் சொல்லிக் கொண்டிருக்கும் இயக்குநர், திருமணப் பந்தத்தில் பெண்ணின் சுதந்திரமும் தனித்தன்மையும் பறிக்கப்படுகிறது என்ற கருத்திற்கும் படத்தில் சம உரிமை அளித்திருக்கலாம்.

காலம், ஓர் அருமருந்து. அனைவருமே வடுக்களோடு வாழப் பழகிட்டோம். நம்மாலே 100% நாம் நினைக்கிறப்படி இருக்கமுடியாது. இன்னொருவரிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்? மேலும் போன தலைமுறையை விட இந்தத் தலைமுறை ஆண்கள் பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது.’ தவறுகள் அம்மாக்களான எங்க மீதுதான்’ என அம்ரிதாவின் மாமியார் சொல்வார். அம்ரிதா அந்தத் தவறைச் செய்யமாட்டார் என நம்புவோமாக! வளர்ப்பையும் மீறி, ஜெனிட்டிக்கலி நிறைய manufacturing defect ஆண்களிடம் இருக்குமென்றே தோன்றுகிறது. விளக்கிப் புரிய வைக்க முடியாத பட்சத்தில், பெரிய முடிவுகளை நோக்கிப் போயிருக்கலாம்.

“A slap is unfair” என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஓர் ‘அறை’ சகலத்தையும் நொறுக்கிவிடும், முக்கியமாக ஒருவரின் அகத்தை. அதைப் புரிய வைத்தே ஆகவேண்டும். ஆனால், அதிலிருந்து மீள (heal), அம்ரிதா தேவையான நேரம் எடுத்துக் கொண்டு, அவளது கணவன் தவறுகளைப் புரிந்து சரி செய்துகொள்ள, ஒரே ஒரு வாய்ப்பாவது வழங்கப்பட்டிருக்கலாம் என்பது பழைய பஞ்சாங்கங்களின் ஆதங்கமாய் உள்ளது. 

இலக்கைத் தைக்காத திரைக்கதைக்குக் காரணம், நாயகியின் கதாபாத்திர வடிவமைப்பு. “காதல் இருந்ததால், கணவரின் வீட்டைப் பார்த்துக் கொண்டேன். அவர் அறைஞ்சதும், அந்தக் காதல் போயிடுச்சு. இப்போ எனக்கு மரியாதையும் மகிழ்ச்சியும் வேணும்” என்கிறார். ‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா?’ என தலையைப் பிய்த்துக் கொள்ளத் தோன்றியது. காதல் இருக்கும் பட்சத்தில் மரியாதையும் மகிழ்ச்சியும் அங்கே என்னத்துக்கு என்ற அரிய கருத்தை ஜீரணிக்கக் கொஞ்சம் சிரமமாகத்தான் உள்ளது. ஜீவனாம்சம் கேட்பதையும் நாயகி இழுக்காக நினைப்பதாக இயக்குநர் மிக் அழுத்தமாக வலியுறுத்துகிறார். ‘அது லவ். அதனால் ஜீவனாம்சம் கேட்கக்கூடாது’ என கன்னத்தில் போட்டுக் கொள்ளாத குறையாகச் சொல்கிறார் டாப்சி.

குற்றம் நம்பர் 1: மனைவியை அறைவது தப்பு;

குற்றம் நம்பர் 2: கணவன் மீது காதலோடு வாழ்ந்துவிட்டு, பின் அந்தக் காதல் போனதும், கணவனைப் பிரிய முடிவெடுத்து மனைவி விவாகரத்து வாங்கினால் ஜீவனாம்சம் கேட்பது தவறு.

என்று எளிமைப்படுத்தியுள்ளனர். ‘இதற்கு அந்தப் பருத்தி மூட்டை கோடோன்லயே இருந்திருக்கலாம்’ என்று தான் படத்தின் கருவை நினைத்துப் பரிதாபப்பட முடிந்தது.

படத்தில் ஒரு விதவைத் தாயும், அவரது பதிமூன்று வயது மகளும், நாயகியின் பக்கத்து வீட்டினராக வருகிறார்கள். அந்த மகள், தனது தாய்க்கு வரன் தேடும் பெரிய மனுஷி. “நீ எனக்குத் துணை தேடுறது இருக்கட்டும். நான் உனக்கு நல்ல பையன் பார்த்துட்டேன்” என்கிறார் அந்தம்மா. பதிமூன்று வயது பெண், தன் சக வயதினனுடன் பேசுவதை, ஒரு நட்பாகப் பார்க்க முடியாமல், ‘காதல்’ என முடிவு செய்து மகிழுகிறார் அந்தத் தாய். குழந்தைகளின் செயல்களை அவர்களது இயல்பெனப் பார்க்காமல், பேசினாலே காதல்தான் என நினைக்கும் அந்தத் தாயின் செயல், “சைல்ட் அப்யூஸ்”-இல் வராதா?

ஸ்வாதி எனும் பாத்திரத்தில் நய்லா க்ரெவால் நடித்துள்ளார். டாப்சியினுடைய சகோதரனின் காதலி. படத்தின் முதல் ஃப்ரேமே சுதந்திரப் பறவையான அவரது மகிழ்ச்சியில் இருந்தே படம் தொடங்குகிறது. ” நாம லவ் பண்றோம். சந்தோஷமாக இருக்கோம்” என சின்ன இடைவேளை விட்டு, “பெரும்பாலும்” எனச் சொல்லிவிட்டு, “பின்ன ஏன் கல்யாணம் பண்ணிக்கணும்? இப்படியே இருந்துடலாம்ல?” என்ற கேள்வியெழுப்புகிறார். பாசாங்கு இல்லாத பாத்திரம் என்றால், படத்திலேயே இவர்தான். தனக்குத் தவறெனப்படுவதை அந்த இடத்திலேயே கேள்வியெழுப்பத் தயங்காதவராக இருக்கிறார். ‘நான் இத்தனை நாள் சரியாக நடந்துக்காம உன்ன ரொம்ப டிஸ்-அப்பாயின்ட் பண்ணிட்டேன். என்னை ரீபூட் பண்ணிக்க ஒரு வாய்ப்புக் கொடு’ என காதலன் கேட்கும்பொழுது, அவனை அரவணைத்துக் கொள்ளுமளவு காதலுடன் இருக்கிறார். ‘டாப்சியா இந்தப் படத்துக்கு ஹீரோயின்? சுதந்திரப் பறவையான நான்தான் கதாநாயகி என ஏன் உங்க யாருக்கும் தோணலை?’ என தானேற்ற அழகான கதாபாத்திரத்தின் வாயிலாக முகத்தில் அறைகிறார் நய்லா.

பிற்சேர்க்கை: சமூக ஊடகங்களை அவதானித்த வகையில், பெண்களின் பார்வையில், இப்படம் பெண்களின் சுயமரியாதையை மிக அழுத்தமாகப் பதிந்துள்ளது என வியந்தோதப்படுகிறது. டாப்சியின் அவமானத்தைப் பெண்களால் மிக நெருக்கமாக உணர முடிவதால், அவர்களால் விவாகரத்து என்ற முடிவை நியாயமானதாகக் கருத முடிகிறது. ஆண்களின் பார்வையிலோ, ‘ஒரே ஒரு அறைக்கு விவாகரத்தா? ஆத்தீ..’ எனக் குழப்பத்தை விளைவித்துள்ளது. 

பின் குறிப்பு: இந்த விமர்சனம் ஓர் ஆணால் எழுதப்பட்டது.

நன்றி: http://ithutamil.com/

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: