விடுதலை வீரர் வீர சாவர்கர்!

 

 ஆர். வேணுகோபாலன்.

சுதந்திரத்துக்காகப் போராடிய எந்தப் புரட்சியாளருக்கும் அளிக்கப்படாத இரட்டை ஆயுள் தண்டனைகள்; அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக, மொத்தம் 50 ஆண்டுகள் அந்தமானில் கழிக்க வேண்டும். தூக்குமேடைக்கு நேரே, கழிப்பறை வசதியுமில்லாத சிறையில் கடுங்காவல். தினமும் செக்கிழுத்தாக வேண்டும் இல்லாவிட்டால் சவுக்கடி! புழு, பூச்சி கலந்து கொடுக்கப்பட்ட சிறை உணவு; கை, கால்களில் விலங்கு மாட்டி, நாள் முழுக்க கடும்வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்ட கொடுமை. ஆண்டுக்கு ஒரே ஒரு கடிதம் குடும்பத்தாருக்கு எழுதலாம்; தணிக்கை செய்யப்பட்ட பிறகு! எழுதுவதற்கு பேனா, காகிதம் இல்லையென்பதால், சிறைச்சாலையின் சுவர்களில் நகத்தால் எழுதிவைத்த கவிதைகள்; புனைவுகள்! 11 ஆண்டுகளுக்குப் பின்னர், ரத்னகிரிக்கு மாற்றப்பட்டு மேலும் இரண்டரை ஆண்டுகள் கடுங்காவல் சிறை! இத்தனையும் தாங்கி முடித்தபின்னர், வெளிவந்து அந்தமான் சிறைச்சுவர்களில் எழுதிய அத்தனை கவிதைகளையும் மீண்டும் நினைவுகூர்ந்து எழுதி, புத்தகமாக வெளியிட்டு, அதுவும் தடை செய்யப்பட்டது.

அவர்தான் விநாயக் தாமோதர் சாவர்கர்! அவரைத்தான் ‘மன்னிப்புக் கடிதம்’ எழுதிய கோழையென்று அசிங்கப்படுத்திக் கொண்டு அலைகிறது ஒரு அறிவுகெட்ட கும்பல்! யார் அவர்கள்?

’காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ்,’ என்று உளறிவிட்டு, நீதிமன்றத்தில் போய் ‘நான் அப்படிச் சொல்லவில்லை,’ என்று பின்வாங்கிய ஒருவரை பிரதமராக்கத் துடிக்கின்ற கும்பல்.

சாவர்கர் சாலை என்ற பெயர்ப்பலகையை மசிபோட்டு அழித்து, முகமது அலி ஜின்னா சாலை என்று எழுதிய தேசத்தைத் துண்டாடுகிற பிரிவினைக் கும்பல்.

ஒரு முன்னாள் பிரதமரைக் கொன்ற வழக்கில் சிறையிலிருப்பவர்களை விடுவிக்க எண்ணற்ற கருணைமனுக்களை அரசாங்கத்துக்கு எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிற கும்பல்.

அரசியல் சட்டத்தை எரித்த வழக்கில், ‘வெறும் காகிதத்தை மட்டுமே எரித்தேன்,’ என்று சாமர்த்தியமாகப் பேசித் தப்பித்த தலைவரைப் போற்றுகிற கும்பல்.

’இனியொரு முறை விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட மாட்டேனேன்று உத்திரவாதம் அளித்துவிட்டு, உன்னிடமிருந்து பறிக்கப்பட்ட பாரிஸ்டர் பட்ட்த்தை வாங்கிக்கொண்டு போ,’ என்று மிரட்டிய பிரிட்டிஷாரிடம், ‘உன் கைகளில் இருப்பது வெறும் காகிதம்; என் தலையில் இருப்பது நான் கற்ற கல்வி,’ என்று சூளுரைத்தவர் சாவர்கர்.

சாதிய வேறுபாடுகளைக் களைவதற்காக சமபந்தி போஜனம் நடத்திய சாவர்கர்; வர்ணாசிரமத்தைப் போற்றுவதை நிறுத்துமாறு காந்தியோடு விவாதத்தில் ஈடுபட்ட சாவர்கர்; ’வீட்டில் மிருகங்களைச் செல்லப்பிராணிகளாக வளர்க்கிற உங்களுக்கு, மனிதர்கள் ஏன் மட்டமாகத் தெரிகிறார்கள்?’ என்று கேட்டு, ஒடுக்கப்பட்டோரை ஆலயப்பிரவேசம் செய்வித்த சாவர்கர். தீண்டாமையை நீக்குவதற்காகப் போராடிய சாவர்கர்.

புரட்சியாளர்; கவிஞர்; எழுத்தாளர்; அரசியல்வாதி; சீர்திருத்தவாதி என்ற பன்முகங்களைக் கொண்ட சாவர்கர். ’நீ ஐரோப்பாவில் பிறந்திருந்தால் ஒவ்வொரு இந்தியனின் வீட்டிலும் உனது படத்தை மாட்டி வைத்திருப்பார்கள்,’ என்று வெள்ளைக்காரனே பாராட்டிய சாவர்கர். அதே வெள்ளைக்காரனால், ‘அவர் அனுப்பிய மனுக்களில் வருத்தமோ பச்சாதாபமோ துளியுமில்லை,’ என்று பச்சைமசியில் எழுதப்பட்டும், தொடர்ந்து அவதூறுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்ற சாவர்கர்.

சொகுசு மாளிகைகளிலும், அரண்மனைகளிலும் கைது என்ற பெயரில், ராஜ உபசாரத்துடன், பத்திரிகைகள் நடத்தியவர்களையும், அன்றாடம் மகளுக்கு ‘Letters to my daughter’ என்று எழுதியவர்களையும்தான், இந்திய விடுதலையின் சிற்பிகளென்று கொண்டாடுகிற நாட்டில், சாவர்கர் போன்ற உண்மையான புரட்சியாளர்களை யார் கொண்டாடுவார்கள்? தற்போதைய சரித்திரம் திருத்தப்படும்வரை, அது நடக்கப்போவதில்லை.

ஆனால், சாவர்கர் இல்லாமல், இந்தியாவில் சரித்திரம் இல்லை! கருப்பு மையைப் பூசி ஒரு புரட்சியாளரின் புகழை மறைத்துவிட முடியாது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: