நன்றிக்கடன்!
சீ. குறிஞ்சிச் செல்வன்.

லட்சுமி அக்கா ஜாடையில் போய்க் கொண்டிருந்தாள் அவள்….வயசு முப்பத்தைந்து இருக்கும்…..
என்.எஸ்.பி. ரோட்டில் நின்றிருந்த கார்மேகத்திற்கு மனம் கிடந்து துடித்தது…அவளிடம் பேசவேண்டும் போல் ஆசையாய் இருந்தது…..
ஜன நெரிசல் கூட்டத்தை கிழித்துக் கொண்டு ஓட்டமாய் ஓடினான்….
லட்சுமி அக்காவை பார்த்து பேசி எவ்வளவோ வருஷங்கள் ஆகியிருந்தது….
அவளை நெருங்கினான்…
பழக்க தோஷத்தில் அ…க்கா…. என்று கூப்பிட்டான்….. மூச்சு வாங்கியது அவனுக்கு…..
இவனை தவிர்க்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல்
அவஸ்தைபட்டாள் , அவள் ……
திகைப்பை மறைக்க மிகவும் சிரமப்பட்டு புன்னகைத்து வைத்தாள்…..
“லட்சுமி அக்காதானே…நீங்க….”
தலை மட்டும் ஆடியது.
அவள் எதுவும் பேசவில்லை…
“இங்கே திருச்சி பக்கம் எப்போ வந்தீங்க?….”
“இப்பத்தான்”…..
“இன்னும் என்னென்ன கேட்கப் போகிறானோ?….”
— படபடப்பாய் இருந்தது அவளுக்கு….
“வா….தம்பி ஹோட்டலுக்கு போய் சாப்பிடலாம்…. “
சாதுர்யமாய் கார்மேகத்தை அழைத்தாள் லட்சுமி அக்கா…..
“இல்லக்கா….இருக்கட்டும்…..”
வா…கண்ணு… எங்க ஊருக்கு வந்திருக்க…சாப்பிடாமல் போகலாமா ….. அக்கா தானே கூப்பிடறேன்…..சிநேகமாய் அவன் கைப்பற்றினாள்….
முன்பென்றால் “ஜீலிர்” ரென்றிருந்திருக்கும் அந்தத் தீண்டல்…..
இப்போது அப்படி இருக்கவில்லை அவனுக்கு……
கார்மேகம் அவள் அழைப்பை மறுக்கவில்லை……
இருவரும் அருகில் இருந்த ஹோட்டல் நோக்கி நடந்தார்கள்…..
லட்சுமி அக்காவிடம் பேச நிறைய விஷயங்கள் இருந்தது அவனிடம்…
அக்காவின் புருஷன் மாயாண்டி மச்சான் அதீத குடியாலும், பெண்கள் ஆசையினாலும் சகலமும் தொலைத்து… ஊரில் இருந்த போதே
செத்துப்போனார்..
அது இருக்கும்
பத்து வருஷம்….
அப்போது கல்லூரிக்கு போய்க் கொண்டிருந்தான் இவன்…
அக்கா இப்போதும்….பூவும் பொட்டுமாய் தான் இருந்தாள் …
எதுவும் கேட்கவில்லை அவன்….
கொஞ்சம் பருத்து
சோகை பிடித்து நிறையவே உருமாறி இருந்தாள் லட்சுமி அக்கா….
முகத்தில் , கண்களில்
சோகத்தின் தடயம் எதுவும் தென்படவில்லை அவளிடம்……
எதுவும் கேட்டு சங்கடப்படுத்தக்கூடாது என்பதில்
உறுதியாய் இருந்தான் கார்மேகம்…..
அதேசமயம், அவன் எதுவும் கேட்டுவிடப்போகிறானோ என்று பயந்து கொண்டே தான் சாப்பிட்டாள் அவள்…..
இடையில் அவள் செல்போனுக்கு இரண்டு முறை அழைப்பு வந்தது, ..
கார்மேகத்தை பார்த்துக் கொண்டே பேசாமல் துண்டித்தாள்….
அவனுக்கு சங்கடமாய் இருந்தது…
அவளுக்கும் அவன் முன்னால்
அந்த நபரிடம் பேச. ஏனோ கூச்சமாய் இருந்தது…..
மின்னல் வேகத்தில் யோசித்தாள்.
இவனைப் பார்த்தாள்….
“தம்பி…. வயலூர் பஸ்ஸு குறிப்பிட்ட நேரத்துக்குதான் வரும்….. மணி ஆயிட்டு….வர்ற நேரம் தான்….வரட்டா….” எழுந்தாள்…
“நீ பொறுமையா சாப்பிடு தம்பி…. நான் பில்லு கொடுத்துட்டு போறேன்…..”
சட்டென்றெழுந்து அவசரமாய் கைக்கழுவி மறைந்தாள் லட்சுமி அக்கா….
நன்றாகவே பசித்தது….இருந்தும் இவனால் சாப்பிட முடியவில்லை…
பந்துமாதிரி சுருண்டு ஒரு துக்கம் தொண்டை அடைத்தது……
ஹோட்டல் விட்டு வெளியில் வந்தான் கார்மேகம் …..
ஒரு ஸ்வீட் ஸ்டால் எதிரே நின்று லட்சுமி அக்கா யாருடனோ செல்
ஃபோனில் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தாள்……
சில பொய்கள் சிற்சில சந்தர்பங்களில் நன்மைகளுக்கானவை…..
சொன்னவர் ஒன்றும் சாதாரண மனுஷர் இல்லை…. பொய்யாமொழி புலவர் என்று கொண்டாடுகிறார்கள் அவரை…..
இவன், வேறு பாதையை தேர்ந்தெடுத்து நடந்தான்…..
“சாப்பிட்ட சோற்றுக்கு நன்றி கடனாய் ஊரில் போய், அக்காவை
கண்டதை யாரிடமும் சொல்லி விடக்கூடாது….”
தனக்குள் சொல்லிக் கொண்டான் கார்மேகம்.
——————————————————————————————————————–
அவர் :இது மந்திரவாதி வீட்டு கல்யாணம்னு எப்படி சொல்றே?
இவர் : யாராவது மொய் எழுதாமல் போனால் ரத்தம் கக்கி சாவீங்கன்னு
எழுதி வைச்சுருக்காரே..!
இந்து குமரப்பன் விழுப்புரம்.